சிங்கள மொழியில் இதுவரை சுமார் 1300 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களுள் சாதனை புரிந்த படங்களில் ஒன்றாக எதத்சூரியா அதத்சூரியா விளங்குகிறது.
தமிழில் ஏவி. எம், எஸ். எஸ் வாசன், கே. பாலாஜி போன்ற ஏராளமான தயாரிப்பாளர்கள் வேற்று மொழியில் வந்த படங்களை தழுவியே தமிழில் வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்கள். அதனை அவர்கள் குறையாக எண்ணியதில்லை. ரசிகர்களும் அப்படங்களை நிராகரித்ததில்லை.
இதே பாணியை சிங்களத்திலும் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பின்பற்றினார்கள். ஒரு படத்திற்கு மிகத்தேவை திரைக்கதை. அதில் கோட்டை விட எவரும் தயாராக இல்லை. ஒரு மொழியில் வெற்றி பெற்றால் மறு மொழியிலும் வெற்றி பெறும் என்பது திரையுலகின் சாஸ்த்;திரம். அது இன்றளவும் தொடர்கிறது என்பது சாஸ்வதம்.
தமிழ் ஹிந்திப் படங்களை தழுவித்தானே உங்களுடைய படங்கள் சிங்களத்தில் வருகின்றன? என்று ஒரு தடவை லெனின் மொறயஸிடம் கேட்கப்பட்டது. உண்மைத்தான் ஆனால் நாங்கள் பிரேமுக்கு பிரேம் அப்பட்டமாக கொப்பி பண்ணுவதில்லை. மூலப்படத்தின் கதைக்கருவையும், சில காட்சிகளை மட்டுமே எடுககிறோம். மற்றும் படி புதிதாக காட்சிகள் சிங்களத்திற்கு ஏற்றாற்போன்று சம்பவங்களை எனது திரைக்கதை மூலம் உருவாக்குகிறேன். அவை சிங்கள ரசிகர்களை கவருகின்றன. படங்களும் வெற்றி பெறுகின்றன.
தயாரிப்பாளர் படத்திற்கு முதலீடு செய்யும் போது இலாபத்திற்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார். இது இயற்கை. அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களும் செயற்பட வேண்டியுள்ளது. ஆனாலும் படத்திற்கு படம் நாங்கள் வழங்கியுள்ள உழைப்பை அவதானிக்க வேண்டும் என்று லெனின் மொறயஸ் தெரிவித்தார். லெனினுடைய இந்தக் கருத்தை அவருடன் பணியாற்றிய எஸ். ஏ. அழகேசன் ஆமோதிக்கிறார்.
ஆரம்பம் தொட்டே நான் லெனின் அண்ணனுடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர் எடுக்கப் போகும் படத்தின் கதையை என்னிடம் சொல்வார். அவருடன் சேர்ந்து சிங்களப் படத்திற்கான என்னுடைய திரைக்கதையை அமைப்பேன். அதுமட்டுமன்றி சிங்கள வசனங்களையும் எழுதிக் கொடுப்பேன். ஒரு தமிழனாக சிங்கள வசனங்களை எழுதிக் கொடுத்தது நானாக மட்டும் தான் இருக்கவேண்டும். ஆனால் படத்தில் என்னுடைய பெயர் வராது. கதை வசனம் ஆரியரத்னகஹாவிட்ட என்ற பெயர்தான் வரும். அவருடைய பெயருடன் என்னுடைய பெயரையும் இணைத்துக் காட்டியிருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை.
சிங்கள இனத்தை சாராத ஒருவர் நடிக்கலாம் பாடலாம் இசையமைக்கலாம் டைரக்ட் செய்யலாம் ஆனால் வசனம் எழுதமுடியாது. ஆனால் தமிழனாக நான் அதனையும் செய்து காட்டினேன். இந்த உண்மை அன்றைய திரையுலகில் எல்லோருக்கும் தெரியும் என்கிறார் அழகேசன்.
1973ம் ஆண்டில் லெனின் ஒரு நட்சத்திர டைரக்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் காட்சிகள் அரங்கேறின. இந்த ஆண்டு லெனின் இயக்கத்தில் இரண்டு படங்கள் வெளிவந்து வெற்றி கண்டன. இரண்டிலும் கதாநாயகன் காமினி பொன்சேகா. வேறு எவரும் செய்ய முடியாத காரியத்தை லெனின் செய்தார். நட்சத்திர நடிகனான காமினியை நடிக்க வைத்து இரண்டு படங்களை ஒரே ஆண்டில் வெளியிட்டு திரையுலகை வியப்பில் ஆழ்த்தினார். இன்று வரை இதனை எவரும் செய்ததாக தெரியவில்லை.
ஹொந்தம வெலாவ (நல்ல நேரம்) என்ற பெயரில் நீல்ரூபசிங்கவின் தயாரிப்பில் 73ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் படம் வெளியானது. தொடர்ந்து சினிமாஸ் கே. குணரத்தினம் ஹொந்தய் நரகய் (நல்லது கெட்டது) என்ற பெயரில் படம் தயாரித்தார். இந்தப் படம் 73ம் ஆணடு ஒக்டோபர் மாதம் திரைக்கு வந்தது.
எந்த இயக்குனரை போட்டு படம் எடுத்தால் படம் வெற்றி பெறும் என்பதை துல்லியமாக கணித்து படங்களை தயாரித்து வசூலை வாரியவர் கே. குணரத்தினம். லெஸ்டர் Nஐம்ஸ் பீரிஸின் டைரக்ஷனில் சந்தேசிய, டைடஸ் தொட்டவத்தவின் இயக்கத்தில் சண்டியா, எம். மஸ்தான் இயக்கத்தில் சூரசௌரயா என்று படங்களை எடுத்து வெற்றி கண்டவர். 1973ம் ஆண்டு லெனின்தான் ஜெயிக்கும் குதிரை என்பதை நன்கு உணர்ந்து அவரை டைரக்டராகப் போட்டு படத்தை வெளியிட்டு ஜெயித்தார்.
அந்த காலகட்டத்தில் காமினி பொன்சேகா நடிக்கும் பெரும்பாலான படங்கள் கொழும்பு மருதானை காமினி திரையரங்கில்தான் காண்பிக்கப்படும். ஹொந்தம வெலாவ, ஹொந்தய் நரகய் இரண்டும் இரண்டு மாத இடைவெளியில் அடுத்துடுத்து காமினி திரையரங்கில் வெளியாகி பரபரப்பை ஊட்டின. இதன் மூலம் லெனின் வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
தயாரிப்பாளர் மாரசிங்க சிங்ககிரி படம் ஒன்றை தயாரிக்கிறேன் நீங்கள் தான் டைரக்ட் செய்ய வேண்டும் என்று லெனினை அணுகிய படம் தான் பட்டணத்தில் பூதம். இந்தப் படத்தை தெரிவு செய்ய காரணம் இருந்தது.
பட்டணத்தில் பூதம் பல தந்திர காட்சிகளை கொண்ட படம். தனது ஒளிப்பதிவு திறமைகளுக்கு சவாலாக இருக்கும் என்று கருதியே லெனின் இந்தப் படத்தை சிங்களத்தில் திரைக்கதை அமைத்து ஒளிப்பதிவு செய்து இயக்கினார். காமினி, ஸ்வர்ணா காவிட்ட ஜோடியாக நடித்தார்கள். தான் ஆசைப்பட்டவாறு தந்திரக் காட்சிகளில் தனது திறமையை காட்டினார் லெனின். படத்தின் பெயர் என்ன பபோ பில்லா எனவா (குழந்தாய் பூதம் வருகிறது) 1974இல் வெளியானது.
லெனின் தொடர் வெற்றிகளைத் தருவதை கண்டு புதிய தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை டைரக்ட் செய்யும் படி கேட்டு அவரை அணுகினார்கள். அவர்களில் ஒருவர் எச். எம். ஆர் ஜெயூந்தர.
இவருக்காக 1975 ஆம் ஆண்டு தனது புதிய படத்தை ஆரம்பித்தார் லெனின். இதே கால கட்டத்தில் ரூபசிங்க சகோதரர்களும் தங்களின் புதிய படத்திற்கு லெனினை நெருங்கினார்கள்.
லெனினின் படம் என்றால் கால்ஷீட் கொடுப்பதற்கு காமினி பொன்சேகாவுக்கு எந்த மறுப்பும் இல்லையே. இரண்டு படங்களுக்கும் காமினி மாலினி ஜோடியாக ஒப்பந்தமானார்கள்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த குகநாதன் சென்னை சென்று திரையுலகில் நுழைந்து சிறந்த கதாசிரியராக திகழ்ந்து கொண்டிருந்தார். புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த குமரிக்கோட்டம் படத்திற்கு குகநாதன் தான் மூலக்கதை எழுதியிருந்தார். அந்தக் கதையை சற்று மாற்றி சிங்கள ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் திரைக்கதை அமைத்தார் லெனின்.
படத்திற்கு சூரையா சூரையாமை (வல்லவன் வல்லவன் தான்) என்று பெயரிடப்பட்டது.
இந்தப் படத்தில் மாலினி பொன்சேகாவிற்கு இரட்டை வேடம். பணத்திமிர் பிடித்த செல்வந்தர் வீட்டுப் பெண் ஆகவும் கசிப்பு விற்கும் சேரி புறப் பெண் ஆகவும் மாலினி நடித்திருந்தார்.
படத்தில் பல்கலைக்கழக மாணவனாக காமினி நடித்திருந்தது சற்று சொதப்பலாக காணப்பட்டது. அவருக்கு பதில் விஜயகுமாரனை துங்கா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருதினார்கள்.
1975 ஆம் ஆண்டளவில் உலக அணி சேரா மகாநாட்டுக்காக கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் பண்டாரநாயகா ஞாபகார்த்த மகாநாடு மண்டபம் கட்டப்பட்டிருந்தது.
வழக்கம் போல் லெனின் அத்தனையும் விட்டு வைக்கவில்லை. காமினி மாலினி தோன்றும் ஒரு டூயட் பாடல் காட்சியை அழகாக அங்கு படமாக்கினார். இந்தப் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ஜோ அபேவிக்கிரமாவுக்கு ஒரு குணச்சித்திர வேடத்தை வழங்கி இருந்தார் லெனின். அதேபோல் புதிதாக அறிமுகமாகி இருந்த ரெக்ஸ் கொடிபிலிக்கு வில்லன் வேடம் கிடைத்தது.
வெற்றி படங்களையே தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருந்த சரத் ரூபசிங்க நீல் ரூபசிங்க சகோதரர்கள் 1975 ஆம் ஆண்டு தங்களது புதிய படத்தயாரிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டார்கள். படத்திற்கு லஸ் சன கெல்ல (அழகிய பெண்) என்று பெயரிடப்பட்டது.
படத்தின் தலைப்புக்கு ஏற்றாற் போல் ஓர் அழகிய பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று நீல் விரும்பினார். அதிலும் அப்போது நடிக்கும் நடிகைகளைthavirththu ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று அபிப்பிராயப்பட்டார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் லெனினிடம் இந்த விஷயம் சொல்லப்பட்டது. லெனின் அதனை வரவேற்றார். அது மட்டும் அன்றி புது முகத்தை தேடும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபடலானார்.
ஒரு நாள் ஒரு மெல்லிய இளம் பெண் தன தாயுடன்
????? விஜயா ஸ்டுடியோவுக்கு வந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த அந்த பெண்ணை பார்த்த நீல் ரூபசிங்க அதிருப்தியுடன் அவர்களை போகும்படி கூறிவிட்டார்.
ஆனால் லெனின் அந்தப் பெண்ணின் கண்களை பார்த்து இவர் சிறந்த நடிகையாக வரக் கூடியவர் என்று தீர்மானித்து விட்டார். ஆம் லெனினின் கேமரா கண்கள் அந்தப் பெண்ணை சரியாக எடை போட்டு விட்டன. இவரை சிறந்த நடிகையாக உருவாக்கி காட்டுகிறேன் என்று திடசங்கம் பூண்ட லெனின் அந்த நடிகைக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தார். ஆங்கிலப் படங்களுக்கு அலைத்தட்டுச் சென்று நடிப்புக்கு கலையை விளக்கினார்.
ஆறு மாத காலத்தில் அந்தப் பெண்ணின் முகத்திலும் உடலிலும் சினிமாவுக்குத் தேவையான பூரிப்பும், கவர்ச்சியும் குடிபுகுந்து விட்டன. தான் அன்று மறுத்த பெண்ணா இவர் என்று நீல் ரூபசிங்க ஆச்சரியப்பட்டு தனது படத்திற்கு அவரையே ஒப்பந்தம் செய்தார். அந்த நடிகைதான் கீதா குமாரசிங்க.
லெனின் புது நடிகையை கண்டு பிடித்து விட்டார் என்று செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தவுடன் ஏனைய கதாநாய நடிகைகள் கலங்கினார்கள்.
தங்கள் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்று ஆதங்கப்பட்டார்கள்.
தொடரும் ........
No comments:
Post a Comment