உலகச் செய்திகள்


குகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியில் வர  4 மாதங்கள் ஆகும்

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடக்கப் போகும் சவுதி அரேபியா!!!

ஜப்பானில் கடும் மழைக்கு பலியானோர் 38 ஆக உயர்வு

வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

தாய்லாந்து படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை


குகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியில் வர  4 மாதங்கள் ஆகும்

04/07/2018 தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால், குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் அந்த சிறுவர்கள் நீருக்கடியில் நீந்தக் கற்கவேண்டும் அல்லது நீர் வடியும் வரை சில மாதங்கள் அங்கேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் சிறுவர்களும் கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டிருக்கும் குகையில் இருந்து வெளியே வரும் மீட்புக் குழுவின் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர்.

மீட்புப் பணிக் குழுவினர் உயரும் நீர் மட்டத்தில் போராடி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு உணவும் மருந்தும் கொண்டு சென்றனர். இன்னும் நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு அங்கேயே உணவு வசதிகள் செய்யப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளனர்
அந்த குழுவின் தலைமை பயிற்சியாளர், அந்த சிறுவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தொழில்முறை கால்பந்து வீரர்களாக வேண்டும் என்று விரும்பியதாகவும், அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
"அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் இந்த பணி இன்னும் நிறைவு பெறவில்லை" என சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
"எங்களது பணி, சிறுவர்களை தேடுவது, மீட்பது மற்றும் அழைத்து வருவது. இதுவரை நாங்கள் அவர்களை கண்டறிந்துள்ளோம். அடுத்த பணி அவர்களை குகையில் இருந்து வெளியே கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புவது" என ஆளுநர் தெரிவித்தார்.
குகையிலிருந்து நீரை வற்ற வைத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளே அனுப்பி சிறுவர்களின் உடல் நலத்தை சோதனை செய்யப்போவதாக தெரிவித்த ஆளுநர், சிறுவர்களின் உடல் நலம் அவர்களை வெளியே கொண்டு வரும் அளவிற்கு வலிமையாக இருந்தால் குகையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள் என தெரிவித்தார். நன்றி வீரகேசரி 


அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடக்கப் போகும் சவுதி அரேபியா!!!


04/07/2018 அமெரிக்காவின் கோரிக்கையை அடுத்து சந்தையை சமம் செய்ய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ஆம் திகதியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இவ்வாறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது.
இதனை கட்டுக்குள் கொண்டு வர சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ட்ரம்ப் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சவுதி அரேபியா நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 
அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
இந்த தகவலை ட்ரம்ப் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியா சர்வதேச அளவில் தேவையை சமம் செய்ய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் என அறிவித்துள்ளது.
கூடுதல் உற்பத்தி திறனை பயன்படுத்த தயராகி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி இரண்டு மில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 
ஜப்பானில் கடும் மழைக்கு பலியானோர் 38 ஆக உயர்வு


07/07/2018 ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடந்த இருநாட்களாக தொடர் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. 
மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீர்நிலைகளை மீறி கடந்து பல பகுதிகளை குளம்போல் சூழ்ந்துள்ளது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன.
சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 16 அடி உயரம்வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கியும், மண்சரிவுக்குள் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை இன்று 38 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன சுமார் 50 பேரை தேடும் பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் மீட்பு குழுவினரின் ஹெலிகொப்டர் சேவையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டு கூரைகளின்மேல் அமர்ந்தவாறு காத்திருப்பதை காண முடிவதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.  நன்றி வீரகேசரி 

வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

07/07/2018 கனடாவில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் தொடர்கின்றது.
மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
  இந்நிலையில், கனடாவில் சுட்டெரிக்கு வெயிலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
மேலும், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
குறிப்பாக மாண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனடாவின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 


தாய்லாந்து படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

06/07/2018 தாய்லாந்து நாட்டில் படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்துள்ள நிலையில் இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என தெரியவந்துள்ளது. 
தாய்லாந்து நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று மாலை 105 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மீட்புப்பணிகளில் தாய்லாந்து கடற்படை வீரர்களும் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த 21 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று பிற்பகல் தெரிவித்திருந்தன.
தற்போது இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும். உயிரிழந்தவர்கள் அனைவரும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்பதும் தெரியவந்துள்ளது.  நன்றி 


பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை

06/07/2018 பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்பிற்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
லண்டனில் உள்ள நான்கு ஆடம்பர தொடர்மாடிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
நவாஸ்செரீப்பின் மகள் மர்யம் செரீப்பிற்கு ஏழு வருட சிறைத்தண்டiiயை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டுகளிற்காகவும் விசாரiணைகளிற்கு ஒத்துழைக்காததற்காவும் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியுடன் தற்போது லண்டனில் தங்கியிருக்கும் செரீவ் இந்த தீர்ப்பை அரசியல் நோக்கங்களை கொண்டது என வர்ணித்துள்ளார். நன்றி வீரகேசரி 

No comments: