கழுத்தில் நகை போடலாம்
கையில் நகை போடலாம்
கண்ட இடத்தில் எல்லாம்
காசால் நகை போடலாம்
எங்கு நகை போட்டாலும்
பொன் நகையை புறந்தள்ளி
புன் நகையே முன்னிற்கும் !
பட்டம் பல பெற்றிடுவார்
பதவி பல வகித்திடுவார்
திட்டம் போட்டுச் சொத்துக்களை
சேர்த்து நிற்பார் பலவழியில்
எத்தனைதான் பெற்றும் அவர்
புன்நகையை இழந்து நின்றால்
மொத்த உள்ள அவர்வாழ்வு
முழுமை அற்றே போகுமன்றோ !
சேதாரமில்லை செலவழிப்பு ஏதுமில்லை
ஆதாயம் என்று எண்ணி
அதிக பணம் இதற்குவேண்டாம்
நாள் முழுக்க உழைத்தாலும்
நல்ல சொத்துச் சேர்த்தாலும்
ஆள் முகத்தில் புன்னகையே
அவர் சொத்தாய் ஆகுமன்றோ !
பிறர் பார்க்கப் புன்னகையார்
அறம் பற்றி பலவற்றை
அடுக்கடுக்காய் எடுத்து உரைப்பார்
முகம் தன்னைக் கடுகடுப்பாய்
நாள் முழுக்க வைத்திருப்பார்
நிலமீது இவர் வாழ்வு
நிறைவாக இருக்க மாட்டா !
என்ன நகை போட்டாலும்
எம் அழகைக் காட்டுதற்கு
புன் நகையை விட்டுவிட்டால்
பொருந்தும் நகை ஏதுமுண்டா
நல்ல நகை புன்னகையை
நாம் என்றும் வைத்திருந்தால்
நாம் வாழும் வாழ்வெமக்கு
நன்றாக அமையும் அன்றோ !
No comments:
Post a Comment