புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா
இராஜங்க அமைச்சர் விவகாரம் தொடர்பில் பிரதமரின் அதிரடி உத்தரவு!!!
இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு
முல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்
விஜயகலாவின் கருத்துக்கு அவரது கட்சியும் கண்டனம்
இராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!!
விஜயகலாவை கைதுசெய்யக் கோரி மூன்று முறைப்பாடுகள்
விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை
அரசாங்கத்திற்கு இடைஞ்சலின்றி அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம்
விஜயகலாவின் அதிரடி தீர்மானம்
மக்களுக்காகவே பதவி துறந்தேன் - விஜயகலா
விஜயகலாவை விசாரிக்க குழு நியமனம்
விஜயகலாவை விசாரிக்க நால்வர் கொண்ட ஒழுக்காற்று குழு
மஹிந்த ராஜபக்ஷவின் 112 கோடி விவகாரம் : நியூயோர்க் டைம்ஸிடம் ஆதாரங்களை கோரி கடிதம்
"விஜயகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"
வேலணை வேணியன் காலமானார்
புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா
02/07/2018 வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்? தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும்.
எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இதனை தடுப்பதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது? ஒன்றுமில்லை. சில காணிகளை மக்களிடம் மீளவும் கொடுத்ததை தவிர இந்த அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவலின் படி யாழ்.மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது?
வடகிழக்கில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளையும் கூட வழங்கவேண்டாம் என ஜனாதிபதி தடுக்கிறார். மண்ணின் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி போராடியதற்காக முன்னாள் போராளிகள் மனிதர்கள் இல்லையா? எதற்காக அவர் களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை கிடைக்கவிடாது ஜனாதிபதி தடுக்கிறார் என்றால் அவர் தெற்கில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மட்டுமே.
அதேபோல் முன்னய ஆட்சியாளர்கள் வடகிழக்கு மக்களுக்கு என்ன செய்தார்களோ அதனயே ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த ஆட்சியாளர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றார். நன்றி வீரகேசரி
இராஜங்க அமைச்சர் விவகாரம் தொடர்பில் பிரதமரின் அதிரடி உத்தரவு!!!
03/07/2018 தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை செய்யுமாறு பிரதமர் சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் ஆட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்று மீள உருவாக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட முடியாது எனவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவுறுத்தியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு
03/07/2018 இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பினர் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆகவே விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளது என கூறியே அவருக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினர் பொலிஸ் தலைமையகத்தில் இன்றைய தினம் முறைப்பாடொன்றினை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
முல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்
03/07/2018 முல்லைத்தீவு நாயாறு செம்மலை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் மூலம் விகாரை அமைப்பதற்கு பொதுமக்களது காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாயாறு பாலத்துக்கு அண்மையாக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை அடாத்தாக பிடித்து அப்பகுதியில் பல நூறு ஆண்டுகளாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் விகாரை ஒன்றை அமைத்து அந்த இடத்தை சொந்தமாக்குவதற்கும் அப்பகுதியில் மேலதிக காணிகளை அபகரிப்பதற்குமாக தொல்பொருள் திணைக்களம் ஊடக நில அளவைத் திணைக்களத்தால் இந்த அளவீட்டு நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே இப்பகுதிகளில் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக 21 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை இயற்கை ஒதுக்கிடங்களாக பிரகடனப்படுத்தி சுவீகரிக்கும் அரசினது முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கான காணி சுவீகரிப்பும் சத்தமின்றி முன்னெடுக்கப்படவிருந்தது.
இந்நிலையில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மாகாண அமைச்சர் சிவநேசன் உறுப்பினர்களான ரவிகரன் ,புவனேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள்,பொதுமக்கள், பொது அமைப்பினை சேர்ந்தவர்களென பலரும் திரண்டு இந்த நில அளவீட்டுக்கு எதிராக எதிர்ப்பினை குறித்த இடத்துக்கு சென்று நிலசுவீகரிப்பிற்கென வந்திருந்த நிலஅளவை திணைக்களத்தினரை முற்றுகையிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு கோஷமிட்டதோடு நில அளவீட்டை மேற்கொள்ள விடாது தடுத்து நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரதாபன் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தொல்பொருள் திணைக்களத்தால் அளவீட்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையாலேயே நில அளவீட்டு திணைக்களத்தினர் அளவீட்டை மேற்கொண்டதாகவும் அதற்கான அறிவிப்பை தாம் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
இருத்தபோதிலும் அங்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரான பாராளுமனற உறுப்பினர் சிவமோகன் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் மேற்கொள்ளப்படும் இந்த அளவீட்டை அனுமதிக்க முடியாது என பிரதேச செயலாளரிடம் தெரிவித்ததுடன் அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும்போது இந்த காணி சுவீகரிப்பு குறித்து கலந்துரையாடி முடிவெடுக்கலாம் எனவும் அதுவரை அளவீட்டை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அடுத்த முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும்வரை இந்த அளவீட்டு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பிரதேச செயலாளர் மக்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டது .
இந்த காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
விஜயகலாவின் கருத்துக்கு அவரது கட்சியும் கண்டனம்
03/07/2018 விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டமையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் இப்பிரச்சாரம் தொடர்பில் அவரே உத்தியோகப்பூர்வ விளக்கத்தினை வழங்குவார் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தலைதோங்க வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளமையானது தற்போது நாட்டில் பாரிய மாறுப்பட்ட கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இவரது கருத்துக்களை ஐ.தே.க. வன்மையாக கண்டிக்கின்றது.
விஜகலா மகேஸ்வரன் இந்தக் கருத்தினை எந்த நோக்கத்துக்காக குறிப்பிட்டார் என்ற விடயம் யாரும் அறியாததே. ஆகவே அவரே இது தொடர்பான விளக்கத்தை வழங்க வேண்டும். அதன் பின்னர் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கத்தில் ஆளுங்கட்சியாக செயற்பட்டு தூய்மையான ஆட்சியினை முன்னெடுத்து செல்கின்றது. தெற்கில் ஹிட்டலரையும், வடக்கில் பிரபாகரனையும் உருவாக்கும் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது என்றார். நன்றி வீரகேசரி
இராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!!
03/07/2018 நாட்டினுள் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மீது பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றில் சபாநாயர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பாராளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதோடு அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது.
இதன் காரணமாக தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் பாராளுமன்ற அமர்வை நாளை காலை வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
விஜயகலாவை கைதுசெய்யக் கோரி மூன்று முறைப்பாடுகள்
03/07/2018 தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்துக்கு நேற்யை தினம் மூன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அலுவலகத்தில் இம் மூன்று முறைப்பாடுகளும் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பொலிஸ் மா அதிபர் அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுப்பார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்துகொண்டுள்ளதால் அவரை உடன் கைது செய்யுமாறு சிங்ஹல ராவய அமைப்பு முறைப்பாடு ஊடாக பொலிஸ் மா அதிபரைக் கோரியுள்ளது.
அத்துடன் பிவித்துரு ஹெலஉறுமய சார்பிலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை மீறும், பயங்கரவாத தடைச் சட்டம், தண்டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புரிந்துள்ளதாக கூறி அவரை உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உண்மையை கண்டறியும் அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடளித்துள்ளது.
நேற்று காலை கோட்டையில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு சென்ற சிங்ஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் உள்ளிட்ட தேரர்கள், பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடளித்தனர்.
மூன்று நாட்களுக்குள் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டமாக தாம் நீதிமன்றை நாடவுள்ளதாக முறைப்பாடளித்த பின்னர் மாகல்கந்தே சுதத்த தேரர் கூறினார்.
இதேவேளை சட்டத்தரணிகளை உள்ளடக்கிய உண்மையை கண்டறியும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்த தலைமையில் பொலிஸ் தலைமையகம் சென்ற சட்டத்தரணிகள் குழுவும் நேற்று பொலிஸ் மா அதிபருக்கு விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் முறைப்பாடு செய்தது.
அத்த முறைப்பாட்டில் , இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்தை மீறியுள்ளதாகவும் நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் , தண்டனை சட்டக் கோவையின் 114, 115 ஆம் அத்தியாயங்களின் கீழும் விஜயகலா மகேஸ்வரன் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவரின் கூற்றானது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் பிரகாரமும் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் சாதாரண ஒருவர் இக்குற்றங்களை செய்தால் பொலிஸார் எவ்வாறான கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களோ அதனை விஜயகலா மகேஸ்வரனின் விடயத்திலும் நடை முறைப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார். நன்றி வீரகேசரி
விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை
03/07/2018 விசாரணைகள் முடியும் வரை விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் விசாரணைகள் நிறைவடையும் வரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை குறித்த அமைச்சு பதவியில் இருந்து இடைநீக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அரசாங்கத்திற்கு இடைஞ்சலின்றி அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம்
05/07/2018 சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் எனது தவறை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு அமைய நான் தெரிவித்த கருத்து முரணானது.
விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. எனக்கு கட்சித் தலைவரோ அல்லது அரசாங்கமோ அறிவிக்க முன்னர் இது குறித்து முடிவை எடுத்துள்ளேன்.
என்னுடன் கட்சியின் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்ட போது, எனக்குத் தெரியும் நான் எந்த இடத்தில் பிழைவிட்டுள்ளேன் என்று. இந்த அரசாங்கத்தில் நான் பொறுப்புள்ள அமைச்சராக இருந்துகொண்டு நான் இப்படியொரு கருத்தை தெரிவித்த வேளை நான் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் எனக்குத் தெரியும்.
அந்தவகையில் நான் உடனடியாக கட்சியின் தலைவருக்கு கூறியிருந்தேன் நான் என்னுடைய பொறுப்பிலிருந்து மீறிவிட்டேன். ஆகையால் நீங்கள் நடவடிக்கை எடுத்து விசாரணை செய்யும் வரையும் நான் தற்காலிகமாக எனது பொறுப்பிலிருந்து உடனடியாக இராஜிநாமா செய்கின்றேன் என்று.
இந்நிலையில் எனது கட்சியின் தலைமைப்பீடம் நான் உடனடியான இராஜிநாமா செய்வதற்கு இடமளிக்கவில்லை.
இதனால் நான் உடனடியாக கொழும்புக்கு சென்று கட்சித் தலைவருடன் நேரடியாக தொடர்பு கொண்டேன். நேரடியாகவும் எனது நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளேன்.
நான் இன்றோ அல்லது நாளைக்கோ அதற்குரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலேற்படுத்தா வண்ணம் அவர்கள் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு நானும் என் சார்பில் பொறுப்பான முடிவை எடுத்துள்ளேன். அந்த முடிவுக்கு இணங்க இந்த அரசாங்கம் எங்களையும் இதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
விஜயகலாவின் அதிரடி தீர்மானம்
05/07/2018 சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வகையில் இன்று மாலை 5.30 மணியளவில் குறித்த கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மக்களுக்காகவே பதவி துறந்தேன் - விஜயகலா
06/07/2018 வடக்கில் மக்களின் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிப பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களை தாங்க முடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆறு வயது சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொணர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால் தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன்.
மக்களின் துன்ப துயரங்களை பறைசாற்றாது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இதனால் தான் வடபகுதி மக்களின் துன்பங்களை எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றியிருந்தேன். இந்த கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இவ் விடயம் தொடர்பில் கட்சி தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்பு கொண்டு எனது கருத்து குறித்து கலந்துரையாடினார். இதன்போது எனது நிலைப்பாட்டினை அவருக்கு விளக்கி கூறினேன். எனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் வேண்டு மானால் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதற்கு நான் தயாராகவுள்ளதாக பிரதமரிடம் எடுத்துக்கூறினேன். ஆனால்அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன்பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை பிரதமரை சந்தித்து கலந்துரையாடியதுடன் வடக்கில் குறி
ப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறை கள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மக்களின் துன்பங்களை பொறுக்க முடியாமையால்தான் அவ்வாறு உரையாற்றியதாக விளக்கமளித்தேன். தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சு பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்றும் பிரதமரிடம் எடுத்து கூறினேன்.
இதற்கிணங்கவே எனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளேன். என்னை தெரிவு செய்த மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானதாகும். மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்ற போது நாம் எதனையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால் தான் மக்களின் துன்பங்களை எடுத்துக்கூற முயன்றேன். இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப்பதவியை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமா செய்துள்ளேன்.
எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன். வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் துன்பப்படும் போது நாம் பேசாதிருக்க முடியாது.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வ றான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். ஆறு வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது. மக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் பெருமை கொள்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
விஜயகலாவை விசாரிக்க குழு நியமனம்
06/07/2018 விஜயகலா மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக சிரேஸ்ட அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை ஐக்கியதேசிய கட்சி நியமித்துள்ளது.
ஐக்கியதேசிய கட்சியால் நியதிக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் தலதா அத்துக்கோறள,அகிலவிராஜ் காரியவசம், ஹபீர் ஹாசிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விடுதலைப்புலிகளிற்கு மீண்டும் புத்துயுர் வழங்கவேண்டும் என விஜயகலா யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்வதற்காக ஐக்கியதேசிய கட்சி இந்த குழுவை நியமித்துள்ளது. நன்றி வீரகேசரி
விஜயகலாவை விசாரிக்க நால்வர் கொண்ட ஒழுக்காற்று குழு
07/07/2018 சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் கொண்ட ஒழுக்காற்று விசாரணை குழுவை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
விஜயகலா மகேஷ்வரன் யாழ்பாணத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் விடுதலைப் புலிகள் பற்றிய கருத்தினை முன்வைத்திருந்தார்.
அது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியாகின. அது மாத்திரமன்றி அரசியலமைப்பிற்கு முரணான வகையில் விஜயகலா மகேஷ்வரன் கருத்து தெரிவித்துள்ளதாக பாராளுமன்றத்திலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விஜயகலா மகேஷ்வரனை அலரிமாளிகைக்கு அழைத்து விளக்கம் கோரியிருந்தார். இதன் பின்னர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் தற்போது அவர் பதவி விலகியிருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும். எனவே இவ் விசாரணையை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயளாலர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை விஜயகலா மகேஷ்வரனிடம் ஒழுக்காற்று குழு விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
மஹிந்த ராஜபக்ஷவின் 112 கோடி விவகாரம் : நியூயோர்க் டைம்ஸிடம் ஆதாரங்களை கோரி கடிதம்
07/07/2018 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா 112 கோடி ரூபா கொடுத்த விவகாரம் குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ஐக்கிய தேசிய கட்சி ஆதாரங்களை கோரியுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதே வேளை மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா நிதி வழங்கியமை தொடர்பாக வெளியிட்ட செய்தியின் மூலங்களை தருமாறு நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் உத்தியோகப்பூர்வமாக கோரப்பட்டுள்ளது.
குறித்த நிதி பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் செய்தி தொடர்பான மூலங்கள் மிகவும் அவசியமாகின்றது என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு 7.6 பில்லியன் டொலர்களை சீனா வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் உதவி கோரியுள்ளது. நன்றி வீரகேசரி
"விஜயகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"
08/07/2018 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள பகிரங்க தகவல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் விளக்கவுரையாற்ற வேண்டும் என பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்கம் அவசியம் என்ற விஜயகலா மகேஸ்வரனின் கூற்றை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.தே.கட்சி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்புவாய்ந்த கட்சி என்றவகையில் கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்கும் பொறுப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு கட்சியின் உறுப்பினர் தொகையை அதிகரிக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியிருக்கும் ஆவா குழுவினரின் செயற்பாடுகளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக ஒழிப்பதற்காக வட மாகாணத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ரொஸான் பெர்ணாந்து தலைமையில் 100 பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்கிய விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
வேலணை வேணியன் காலமானார்
08/07/2018 கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் அரசியல்வாதியுமான கவிஞர் வேலணை வேணியன் (கங்கை வேணியன்) இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.
No comments:
Post a Comment