உலகச் செய்திகள்


இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவராக தமிழர் நியமனம்!

அழகியின் அசிங்கமான வேலை!

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் பலி : 23 பேர் படுகாயம்!!!




இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவராக தமிழர் நியமனம்!

10/01/2018 இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் பதவி, தமிழராகிய கே.சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய இஸ்ரோ தலைவராகிய கிரண் குமாரின் பதவிக் காலம் எதிர்வரும் பதினான்காம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. அவரது பதவியே தற்போது சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ துறையில் தேர்ச்சி பெற்றிருக்கும் சிவன், தற்போது திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஒரே விண்ணோடத்தில் 104 செய்மதிகளை அனுப்பி இந்தியா சாதனை புரிந்தது. இந்தச் சாதனையின் பெரும்பங்கு சிவனுடையதே! தொழில்நுட்ப ரீதியாகவும் செய்மதிகளை நிலைநிறுத்துவதிலும் சிவனின் அனுபவம் மற்றும் அறிவு பேருதவி புரிந்ததாக இஸ்ரோவின் உயரதிகாரிகள் பலரும் கூறியிருந்தனர்.
இது தவிர, மீள் பயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடிய உந்து வாகனத்தை உருவாக்கும் திட்டத்துக்கு அடிப்படை சிவனின் கருத்துருவாக்கமே!
“என்னை விடச் சிறந்த ஜாம்பவான்கள் பணிபுரிந்த நாற்காலியில் அமரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததையிட்டு மகிழ்கிறேன். இஸ்ரோவை அடுத்த வட்டப் பாதைக்கு (அடுத்த கட்டத்துக்கு) எடுத்துச் செல்வதே எனது குறிக்கோளாக இருக்கும்” என்று கூறியுள்ளார் சிவன்! நன்றி வீரகேசரி 







அழகியின் அசிங்கமான வேலை!

09/01/2018 இந்திய மதிப்பில் சுமார் மூன்றேகால் கோடி ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகக் கடத்தி வந்த இளம் விமானப் பணிப்பெண்ணை டெல்லி பொலிஸார் கைது செய்தனர். இவரைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிக்கொண்ட ‘ஹவாலா’ எனும் உண்டியல் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து நேற்று (8) அதிகாலை ஹொங்கொங் புறப்படவிருந்த ஜெட் எயார்வேஸுக்குச் சொந்தமான விமானத்தை, நிர்வாகிகள் சிலர் சோதனையிட்டனர். அப்போது, தேவ்ஷி குல்ஷேஸ்த்ரா என்ற இந்தப் பெண்ணின் பையில், அலுமினியத் தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் எண்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களில் விமானப் பணிப்பெண்ணாக ஏழு முறை வெளிநாடுகளுக்குப் பயணமான தேவ்ஷி மொத்தமாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.
அவரது வீட்டில் இந்திய நாணயத்தாளில் மூன்று இலட்ச ரூபாயும் 1,600 அமெரிக்க டொலர்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி












பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் பலி : 23 பேர் படுகாயம்!!!
10/01/2018 பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 5 பொலிஸார் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பலூஸ்சிஸ்தான் மாகாண முதலமைச்சர் சனாவுல்லா ஜெரி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குவெட்டா நகரிலுள்ள சட்டமன்றத்தில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் ஜெரி தனது பதவியைத் திடீரெனத் ராஜினாமாச் செய்ததால் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமன்றம் கூடுமென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால் குவெட்டாவிலுள்ள சட்டமன்றக் கட்டடத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இந்நிலையில் மேற்படி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிஸாரின் ட்ரக் வண்டியை இலக்குவைத்து தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.  இதன்போது 5 பொலிஸாரும் 2 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் பதவி விலகிய சிறிதுநேரத்தில் இந்தத் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி





No comments: