அஞ்சலிக்குறிப்பு: பேச்சாற்றல், எழுத்தாற்றல், மனிதநேயம் மிக்க 'தேசபந்து' தெ.ஈஸ்வரன் அய்யா முருகபூபதி


-->
" நீ விரும்பும் பட்டயக்கணக்காளர் படிப்புக்கு எத்தனை வருடங்கள் தேவை?"
தமிழ்நாட்டில் படித்துவிட்டு, இலங்கைவரும் அந்த இளைஞரிடம் அவரின் தந்தை கேட்கிறார்.
" குறைந்தது நான்குவருடங்கள் வேண்டும். அதன்பின்னர் ஒரு பட்டயக்கணக்காளரிடம் தொழில் பயிற்சியில் ஈடுபடவேண்டும்" மகன் பதில் சொல்கிறார்.
" அதன்பிறகுதான், உனக்கென்று ஒரு நிரந்தரமான தொழில் கிடைக்குமென்றால், மாதம் எவ்வளவு சம்பளம் வரும்....?"
" சுமார் ஐந்தாயிரம் வரலாம்." மகன் அன்றைய சம்பள நிலவரத்தை சொல்கிறார். ( காலம் 1964 ஆம் ஆண்டு)
" மாதம் ஐந்தாயிரமா..? உனக்கு நாளொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபா வருமானம் தரக்கூடிய தொழில் ஒன்றை சொல்லித்தருகின்றேன். மாதம் ஐந்தாயிரமா..? அல்லது நாளொன்றுக்கு ஐந்தாயிரமா..? எது வேண்டும் என்பதை   நீயே தீர்மானித்துக்கொள்" என்கிறார் வர்த்தகத்துறையில் பழுத்த அனுபவமும் அதில் இருக்கும் நெளிவு சுழிவுகளையும் நன்கறிந்த அந்தத்தந்தை.
"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்பார்களே! அந்தத்தனயன் தனது பட்டயக்கணக்காளர் கனவை ஒருபுறம் வைத்துவிட்டு, தந்தை காண்பித்த வழிக்கு வருகின்றார். ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடுகிறார். கடுமையாக உழைக்கிறார். காலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார். தானும் முன்னேறி தன்னைச்சுற்றியிருப்பவர்களையும் முன்னேற்றிவிடுகிறார்.




நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கிறார். தான் கற்றதையும் பெற்றதையும் புத்திக்கொள்முதலாக்கி கிடைத்த அனுபவங்களை எழுதுகிறார். அவரிடமிருந்து சிறுகதைளும் பிறக்கின்றன. பேச்சாளராகின்றார்.  வெகுஜன அமைப்புகளில் அங்கம் வகிக்கின்றார். உதவிக்கரம் நாடி வருபவர்களை இனம்கண்டு கைகொடுக்கின்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்க பலமாகத்திகழுகின்றார்.  ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றார்.
இறைநம்பிக்கையினால் இலங்கைத்தலைநகரில் சில ஆலயங்களில் அறங்காவலராகின்றார்.
அயல்நாடொன்றின் தூதுவராக இராஜதந்திரியாகின்றார்.
இவ்வாறு பன்முக ஆளுமையுடன் தானும் இயங்கி மற்றவர்களையும் இயங்கவைத்தவர்தான் அண்மையில் மறைந்த தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரன் அவர்கள்.
கொழும்பில் ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற வர்த்தக நிறுவனத்தை அரைநூற்றாண்டுக்கு முன்னர் தமது தந்தையின் நேரடி வழிகாட்டலில் தொடங்கிய ஈஸ்வரன் அவர்கள்,  ஈழத்து இலக்கியவாதிகளினதும் நல்ல நண்பர். வியாபாரிகளுக்கு இலக்கியம் தெரியுமா? எனக்கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களும் மனிதர்கள்தான். அவர்களிடமும் இலக்கிய ஞானமும் இருக்கும் கலையுணர்வும் இருக்கும் என்பதை அவ்வாறு வாழ்ந்தே நிரூபித்து காண்பித்தவர்தான் ஈஸ்வரன்.
நூல் வெளியீடுகளுக்கு வந்து முதல் பிரதி, சிறப்பு பிரதிகள் வாங்கும் பிரமுகர்களை பார்த்திருக்கின்றோம். அவர்களில் எத்தனைபேர் வீடு திரும்பியதும் குறிப்பிட்ட நூலை வாசித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லியிருக்கிறார்கள்....?
ஈஸ்வரன் அவர்கள் பிரமுகராகவும் புரவலராகவும் அறியப்பட்டவராதலால் நூல் வெளியீடுகளுக்கும் அழைக்கப்பட்டவர். தம்மை கௌரவித்து அழைத்தவர்களுக்கு அவர் தரும் கௌரவம் என்ன தெரியுமா..?
குறிப்பிட்ட நூலை முழுமையாக படித்துவிட்டு கருத்துச்சொல்வதுடன் நில்லாமல், தான் நூலில்  ரசித்தவற்றை தன்னை சந்திக்கவரும் அன்பர்களிடத்திலும் பகிர்ந்துகொள்ளும் இயல்பையும் கொண்டிருந்தவர்.

உரையாடலின்போது எந்த பந்தாவும் இல்லாமல் அவ்விடத்தில் சுவாரஸ்ய செறிவை ஏற்படுத்தி, குதூகலப்படுத்துவார்.
நீர்கொழும்பில் இந்து இளைஞர் மன்றத்தில் நான் செயலாளராக இருந்த காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு  வருகை தரும் பேச்சாளர்களை  எமது ஊருக்கும் அழைப்பதற்கு எமக்கு ஆலோசனைகள் தந்தவர்கள்தான் ஈஸ்வரனும் அவரது தந்தையார் தெய்வநாயகம் பிள்ளை அவர்களும்.
ஒரு சமயம் இளம்பிறை மணிமாறனை நாம் அழைத்துவருவதற்காக இவர்களின் கொழும்பு,  புதுச்செட்டித்தெரு இல்லத்திற்கு சென்றிருந்தோம். தங்கள் வாகனங்களையும் தந்து உதவி தாங்களும் உடன் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
 இவ்வாறு சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத்தான் இந்த தந்தையும் தனயனும் உதவுகிறார்கள் என்றுதான் முதலில் கருதியிருந்தேன். ஆனால், அவர்களில் குறிப்பாக ஈஸ்வரன் அவர்களுக்கு கலை, இலக்கிய உணர்வும் இருந்தமையால், அத்தகைய அமைப்புகளுக்கும் உதவினார்.  எத்தகைய பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் தமிழ் ஊடகவியலாளர்களை  நேசித்தார்.
அதனால்தான் ஈஸ்வரன் மறைந்தவேளையில் அவரது இறுதி நிகழ்வில் வர்த்தகர்களும் பொதுமக்களும் மட்டுமன்றி கலை, இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், அமைப்புச்செயலாளர் ந. சோமகாந்தன் ஆகியோருடன் ஈஸ்வரன் அவர்களை சந்தித்த தருணங்கள்  மறக்கமுடியாதவை. சங்கத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு  உறுதுணையாக இருந்தவர்.
பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளை 1982 இறுதி முதல் 1983 தொடக்கத்திலும்  நடத்தியபோது தமிழகப்பேச்சாளர்களை அழைத்திருந்தோம். வந்தவர்களில் தொ.மு.சி. ரகுநாதனும் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணனும் இடதுசாரிகள். அத்துடன் பாரதி இயல் ஆய்வாளர்கள். அவர்களையும் தங்கள் ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பேசவைக்கவேண்டும் என்று ஈஸ்வரன் பெரிதும் விரும்பினார்.
கோயிலில் வந்து பேசுங்கள் என்று அவர்களை அழைப்பதற்கு எமக்கு தயக்கம் வந்தது. தயக்கத்தை ஈஸ்வரனிடம் சொன்னோம்.
" தமிழகப்பேச்சாளர்களைப்பற்றி தயக்கம் கொள்ளாதீர்கள். அவர்கள் எந்தத்தலைப்பிலும் பேசும் ஆற்றல் மிக்கவர்கள். தயங்காமல் அழைத்துவாருங்கள்." என்றார் ஈஸ்வரன்.
அவர்களும் வந்தார்கள். கோயில் மண்டபத்திற்கு வந்தபின்னர் என்ன பேசுவது..? என்ற தயக்கம் அவர்களுக்கும் முதலில் வந்தது. ஈஸ்வரனே அருகில் வந்து பாரதியியல் ஆய்வாளர்களுக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்" என்று மெதுவாகச்சொன்னார்.
ரகுநாதனும், ராமகிருஷ்ணனும் அன்றைய நிகழ்வில் சுவாமி விவேகானந்தர், அவரது சிஷ்யை  நிவேதிதா தேவி பற்றியெல்லாம்  உரையாற்றி அசத்திவிட்டார்கள்.
வர்த்தகத்துறையில் எத்தகைய நிலைமைகளையும் சமாளிக்கத்தெரிந்திருந்த ஈஸ்வரன் அவர்களுக்கு இலக்கியவாதிகளுக்கு உரிய நேரத்தில் சரியான ஆலோசனைகளையும் வழங்கத்தக்க திறன் இருக்கிறது என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
அவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எமது நண்பர் இளங்கோ நவரத்தினத்தின் நல்ல நண்பருமாவார். இளங்கோவின் புதல்வி ரேவதியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தின் சிறப்பு விருந்தினராகவும் மெல்பனுக்கு வருகை தந்திருப்பவர்.
இந்த நட்புறவினால், இலங்கையில் 2009 இல் போர் முற்றுப்பெற்றதையடுத்து வன்னிப்பிரதேசத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக சிறுகைத்தொழில்களை அறிமுகப்படுத்தி உதவுவதற்கு இளங்கோ ஊடாக முன்வந்தவர்.
எனினும் அந்தப்பிரதேச தமிழ் அரசியல்வாதிகளின் தலையீட்டால் அந்த முயற்சி பலிதமாகவில்லை.
" போர் முடிந்துவிட்டது என நம்பி வந்தேன். போர் வேறு ஒரு உருவத்தில் இன்னமும் நீடிக்கிறது" என்று மனம்நொந்து திரும்பிச்சென்றிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம்,  ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் தலைமையில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு முன்வந்தபோது தமிழகத்திலிருந்தும் புலம் பெயர்ந்த  குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மத்தியிலிருந்தும் அவதூறான பிரசாரம் கட்டி எழுப்பப்பட்டது. அதனால் நாம் எதிர்பார்த்த நிதியுதவியை வெளிநாடுகளில் திரட்ட முடியவில்லை.
அவ்வேளையில் உதவிக்கரம் நீட்டியவர் ஈஸ்வரன். தமது புதுச்செட்டித்தெரு இல்லத்திற்கு எமது குழுவினரை அழைத்து உற்சாகமூட்டி  உபசரித்துவிட்டு, கணிசமான தொகையும் வழங்கி மாநாட்டின் பேராளராகவும் இணந்து ஆதரவு வழங்கினார்.
நான்கு நாட்கள் மாநாடு சிறப்பாக நடந்து, இறுதி நாள் நிகழ்ச்சிகள் இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் ஈஸ்வரன்தான் பிரதம அதிதி. மாநாட்டிற்காக  உழைத்த அனைவரையும் அவர் வாழ்த்தி உற்சாகமூட்டினார்.
அதற்கு முன்னர் அவரது கிராண்ட் பாஸ் வீதி  தலைமை அலுவலகத்திற்கு என்னை அழைத்திருந்தார். சென்றதும், வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் பேராளர்களுக்காக தமது நிறுவனத்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உயர்ந்த ரக தேயிலைப்பொதிகள் தரவிருப்பதாகச்சொன்னார். அவ்வாறே வழங்கினார். தமிழ்நாட்டிலிருந்து நாமக்கல் கு. சின்னப்ப பாரதி, தோப்பில் முகம்மது மீரான்,  மகாகவி இதழின் ஆசிரியர் வதிலை பிரபா, உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட பேராளர்களுக்கும் அவரது அன்பு பரிசாக அவற்றை வழங்கினோம்.
"இதய சுத்தியுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நற்பணிக்கும் தடைகள் எதிர்ப்புகள் வருவது சகஜம். அதற்காக சோர்ந்துவிடக்கூடாது. செயல்தான் முக்கியம். " என்று எம்மை ஊக்கப்படுத்தியவர் ஈஸ்வரன்.
2002 ஆம் ஆண்டு இலக்கிய சகோதரி திருமதி ஜெயந்தி விநோதன் இல்லத்தில் எனக்கும் மனைவி மாலதிக்கும் இலக்கிய நண்பர்கள் வரவேற்பு விருந்துபசாரம் வழங்கியபோது ஈஸ்வரனும் கலந்துகொண்டு வாழ்த்தினார். அந்த நிகழ்வில் தினகரன் முன்னாள் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன், மல்லிகை ஜீவா, பத்திரிகையாளர்கள் வீ. தனபாலசிங்கம், ராஜஶ்ரீகாந்தன், நிலாம், தேவகௌரி,  அன்னலட்சுமி இராஜதுரை,  கலைவாதி கலீல், மற்றும்  பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், புரவலர் ஹாசிம் உமர், ஈழவேந்தன் எழுத்தாளர்கள் சோமகாந்தன், புலோலியூர் க. சதாசிவம், தெளிவத்தை ஜோசப், வன்னியகுலம், வதிரி சி. ரவீந்திரன் உட்பட பல கலை இலக்கியவாதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வாறு கலை, இலக்கியவாதிகளின் இன்ப - துன்ப நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்கேற்று உறவாடியவர் ஈஸ்வரன்.
நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கைகளையெல்லாம் பார்த்துவிட்டு, தாம் மேற்கொள்ளும் மனிதாபிமான பணிகள் பற்றியும் அவற்றின்  கட்டமைப்பு பற்றியும் விளக்கியிருக்கிறார்.
அவரிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருந்தன. அதில் சில:  " காலத்தை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கலை.  மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அதனை முதலில் நன்கு புரிந்துகொண்டு, காலத்தில் செய்யவேண்டியதை தாமதமின்றி செய்து முடித்துவிடல் வேண்டும். "
இலங்கையில் பல கலை, இலக்கிய அமைப்புகளுக்கும்  தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி வழங்கியிருக்கும் பரோபகாரியை நாம் இழந்திருக்கின்றோம்.
இதழ்களில் அவர் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டு ஈஸ்வரனின் கதைகள் என்ற பெயரில் சென்னை வானதி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர். அதனால் நெஞ்சங்களில் குடியிருக்கிறார்.  ஈஸ்வரன் அய்யாவுக்கு எமது இதய அஞ்சலி.
---0---







No comments: