உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம்
கச்சதீவு அந்தோனியார் திருவிழா பெப்ரவரியில்
இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும்
வரலாற்று சிறப்புமிக்க மேம்பாலம் ஜனாதிபதி, பிரதமரால் திறந்து வைப்பு
காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புக்கு 6.9 பில். நிதி
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம்
10/01/2018 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது நினைவு தினம் இன்று யாழில் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள
நினைவத்தூபியில் இன்று காலை 9.30 மணிக்கு இந் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 1974 ஆம் ஆண்டு யாழில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்
போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள
இவ் நினைவத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
சித்தார்த்தன், மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான
எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி உட்பட பலரும்
கலந்துகொண்டிருந்தனர். நன்றி வீரகேசரி
கச்சதீவு அந்தோனியார் திருவிழா பெப்ரவரியில்
09/01/2018 வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த
திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள
நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து
கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்
மாவட்ட அரச அதிபர் தலைமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…
கச்சதீவில் இம்முறை இரு நாட்டில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து
கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த முறை இலங்கையில்
இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு ஏற்ற வகையில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
திருவிழாவுக்கான ஒழுங்குகளுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர்
ஏற்றுள்ளனர். அதே போன்று ஏனைய துறையினர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி
தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக
தற்காலிக மலசலகூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து
குறிகட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியிலிருந்து நண்பகல் ஒரு
மணிவரை நடைபெறும். அதே போன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5
மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை நடைபெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக
300 ரூபா அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி
கட்டணமாக 225 ரூபா அறவிடப்படவுள்ளது.
அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது.
பயணிகள் பாதுகாப்பு அங்கி அணியவேண்டும் என்பது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள்
பலப்படுத்தப்பட்டுள்ளன. 200 பொலிஸார் சேவையில் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு
சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.
கச்சதீவு ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்
வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது .
இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி
தெய்வேந்திரம், கடற்படை மற்றும் நெடுந்தீவு பங்குத் தந்தை, பொலிஸ்
உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், தனியார் மற்றும் இலங்கை
போக்குவரத்து சபையினர் இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தமை
குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும்
09/01/2018 இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப் பாட்டை
கொண்டிருக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின்
மீதும் சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கையிழந்தே காணப்படுகின்றனர் என்று
கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது கிளிநொச்சி கந்தசுவாமி
ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு
போராட் டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடிய
பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப் பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதற்காக நான் இங்கு
வந்துள்ளேன். கடந்த முறை வந்தபோது இருந்த அதே நிலைமை தான் இன்றும்
தொடர்கிறது. எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவையிலும் தொடர்ந்தும் நான் குரல் கொடுத்து வருகின்றேன். மேலும்
இலங்கையின் பிரச்சினை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை
கடைப்பிடிக்கும் என்றார். நன்றி வீரகேசரி
வரலாற்று சிறப்புமிக்க மேம்பாலம் ஜனாதிபதி, பிரதமரால் திறந்து வைப்பு
08/01/2018 வரலாற்று சிறப்புமிக்க 534 மீற்றர் நீளமுடைய இராஜகிரிய சந்தியில்
நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க ஆகியுாரால் இன்று காலை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக
திறந்துவைக்கப்பட்டது.
நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இராஜகிரிய
பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில்
இராஜகிரிய சந்தியில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுவந்த நிலையில்
குறித்த மேம்பாலம் இன்று காலை மக்கள் பாவனைக்காக திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய
திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு
அதன் நிர்மாணப்பணிகளை 11 மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய ஜனாதிபதி
ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல்
நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்கான மொத்த செலவு 4,700
மில்லியன் ரூபாய்களாகும்.
நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 534
மீற்றர்களாக காணப்படுவதுடன் 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும்
இது கொண்டுள்ளது.
இதனுடன் இணைந்ததாக இதனைச் சூழவுள்ள பல வீதிகளும் அபிவிருத்தி
செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்டி நோக்கிப் பயணிப்பதற்கான மாற்றுவழிப்
பாதையும், புத்கமுவ நோக்கி பயணிப்பதற்கான மூன்று வாகன ஓடுபாதைகளைக் கொண்ட
வீதியும் இதனூடாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
உயர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொறியியல் நியமங்களுக்கு அமைவாக
நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் இரும்பின்மீது கொங்றீட் பரவி
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மேம்பாலமாகவும் இலங்கையில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக அலங்காரமான மேம்பாலமாகவும் வரலாற்றில்
இடம்பெறுகின்றது.
நாளொன்றிக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையான வாகனங்கள்
பயணிக்கும் இராஜகிரிய சந்தி நாட்டில் அதிக வாகன நெருக்கடி காணப்படும்
சந்தியாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறு அதிக வாகன நெருக்கடி காணப்படும் சந்தர்ப்பங்களில்
அப்பாதையினூடாக பயணிக்கும் வாகனங்களின் வேகம் மணிக்கு இரண்டு
கிலோமீற்றர்கள் அளவில் மிக குறைவாக காணப்படுவதுடன் இந்த மேம்பாலம் திறந்து
வைக்கப்பட்டதன் பின்னர் இராஜகிரிய பிரதேசத்தை சுற்றியுள்ள பாதைகளில்
காணப்படும் அதிக வாகன நெருக்கடி இல்லாது போவதனூடாக வாகனங்களின் வேகம்
தற்போதைய வேகத்தைப் போல் 8 மடங்காக அதிகரிக்கலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
பேண்தகு அபிவிருத்தியின் பயன்களை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்து, ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் தற்போதைய அரசாங்கத்தினால்
செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுள் வீதி அபிவிருத்தியுடன்
இணைந்ததாக இடம்பெறும் மேலும் ஒரு விசேட செயற்திட்டமாகவும் நாட்டின்
பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தின்
விசேட சந்தர்ப்பமாகவும் இதனைக் குறிப்பிடலாம். நன்றி வீரகேசரி
காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புக்கு 6.9 பில். நிதி
12/01/2018 காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக
45.27 மில்லியன் அமெரிக்க டொலர்களை (6.9 பில்லியன்) இந்தியா வழங்கவுள்ளது.
இந்த நிதி உதவியில் பிராந்திய மற்றும் வணிக துறைமுகமாக காங்கேசன்துறை
பரிணமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியுதவிக்கான உடன்படிக்கை இரு நாட்டு பிரதிநிதிகளினால் புது
டெல்லியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என இந்தியத் தூதரகம்
உறுதிப்படுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment