"எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்" -- அஷ்ரப்பின் வாக்குமூலம்

-->
ஒரு படைப்பை பற்றிய மதிப்பீட்டில் அதன் ஆசிரியரின்   ஆளுமைக்கு இடம் இல்லை

                                                              முருகபூபதி




"கவிதை பூவுலகம், அரசியல் முள்ளுலகம். இரண்டும் எதிரெதிரானவை. அரசியல்வாதி கவிஞனாக இருப்பது அல்லது கவிஞன் அரசியல்வாதியாக இருப்பது, வினோதமான நிகழ்வு. நாடாளுபவனே ஏடாளுபவனாகவும் இருப்பது, வரலாற்றில் அபூர்வமாகவே நிகழுகிறது. சங்க காலத்தில் காவலர் சிலர் பாவலராகவும் இருந்திருக்கின்றனர். பின்னர் அமைச்சர் சேக்கிழார், அதிவீரராம பாண்டியன் என்று சிலர். உலக அளவில் மாவோவும் ஹோசிமினும், செனகல் நாட்டு அதிபராக இருந்த  செங்கோரும் இலக்கியவரலாற்றிலும் இடம்பெறுபவர்களாக இருந்தனர். நம் காலத்துச் சான்றுகள் தமிழகத்தில் கலைஞர்.  இலங்கையில் அஷ்ரப்.
அஷ்ரப் அடிப்படையில் ஒரு கவிஞர். எரிமலையாகக் கொந்தளிக்கும் இலங்கையின் சூழல் ஒரு கவிஞனை அரசியல்வாதியாக்கிவிட்டது. கவிஞரின் தொடக்க காலக் கவிதைகளிலிருந்து அண்மைக்காலக்கவிதைகள் வரை ஒன்றாகத்திரட்டித்தரும்  இந்தத்தொகுதி அவருடைய பரிமாணத்தையும் பரிணாமத்தையும் பார்க்க உதவுகிறது"
இவ்வாறு தமிழகத்தின் மூத்த கவிஞர் 'கவிக்கோ' அப்துல் ரகுமான், அஷ்ரப்பின் கவிதைகளின் முழுத்தொகுப்பான ' நான் எனும் நீ' என்ற நூல் பற்றி விதந்திருக்கிறார்.
புதிய வெளிச்சங்கள் வெளியீட்டகத்தால் இந் நூல் 1999 ஆம் ஆண்டு வெளியானது. " இக்கவிதையை  யாத்திட அவன் நாடியபோது தாளாக அமைந்த என் தாய்க்கும் கோலாக அமைந்த என் 






தந்தைக்கும் "  என்று பெற்றவர்களை விளித்து இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார் அஷ்ரப்.



இலங்கையில் தமிழ்ச்சூழலில் கவிஞர்கள் அரசியல்வாதிகளாவது அபூர்வம். சிங்களவர் மத்தியில் டி.பி. இலங்கரத்னா, டி.பி. தென்னக்கோன், குணதாச அமரசேகர,  சோமவீர சந்திரசிறி ஆகியோர் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் வளர்ந்து பின்னாளில் அரசியல் செயற்பாட்டாளர்களாக மாறியவர்கள்.
குணதாச அமரசேகர சிங்கள கடும்போக்காளராக அறியப்படுபவர். இவர் இலங்கை அரசியலில் இன்றும் சர்ச்சைக்குரியவர். இவருடைய "கருமக்காரயோ"  என்ற சர்ச்சைக்குரிய கதை திரைப்படமாகவும் வெளியானது.
டி.பி இலங்கரத்னாவின் பல நாவல்கள் சிங்கள இலக்கிய உலகில் இன்றும் பேசப்படுபவை. அவரது அம்ப            யஹலுவோ தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. டி.பி. தென்னக்கோன் கலாசார அமைச்சராகவும் பணியாற்றியவர். தேர்தலில் தோற்றபின்னர் தெருவில் நின்று  தான் எழுதிய கவிதைப்பிரசுரங்களை இராகத்துடன்  பாடியவர்.         " கவிகொல காரயா" என்ற பெயரும் பெற்றவர்.
இலங்கையில் கவிஞர்களாகவும்  அரசியல்வாதிகளாகவும் சில சிங்கள அன்பர்கள் இவ்வாறு  திகழ்ந்திருப்பது ஒரு புறமிருக்க, தமிழ்ச்சூழலில்  அஷ்ரப் அவர்களின் இலக்கியப்பிரவேசத்தையும்  அரசியல் வாழ்வையும் அவதானிக்கலாம்.  இலக்கியத்தில்  குறிப்பாக கவிதைத்துறை அவரது வாழ்வோடு  பின்னிப்பிணைந்திருந்தது.
அஷ்ரப் எழுதியிருக்கும் 180 இற்கும் மேற்பட்ட கவிதைகள்  "நான் எனும் நீ" யில்  இடம்பெற்றுள்ளன.  ஆழியில் எழுந்த அலைகள், வாழ்த்துக்களும் இரங்கலும், குழந்தைப்பாடல்கள், கவிதைக்கடிதங்கள், இசைப்பாடல்கள் முதலான தலைப்புகளில்  வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் அப்துல்ரகுமான் பதிவுசெய்துள்ள செய்தி சுவாரஸ்யமானது.
" அட்டாளைச்சேனையில் தேசிய மீலாத் விழா (19-06-1997) கவியரங்கத்திற்காகச் சென்றிருந்தேன். அமைச்சர் அஷ்ரப் என் தலைமையில் பாடுகிறார் என அறிந்தபோது, வியப்பு ஏற்பட்டது. கவிதை எழுதத்தெரியாவிட்டாலும்  அமைச்சராக இருப்பதனாலேயே கவியரங்கத்திற்கு  தலைமைதாங்கும் அமைச்சர்களைக்கண்டவன் நான். அதனால்தான் வியப்பு.
உண்மையில்   அமைச்சர் அஷ்ரப்பைத்தான் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். " கவிக்கோ தலைமைதாங்கும் கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்குவதா..?அவர் தலைமையில் பாடுவதற்கு வாயப்புக்கிடைத்தால் அதுவே எனக்குப்பெருமை." என்று அவர் கூறியதாகக்கேட்டபோது அஷ்ரப் அவர்கள் பணிவால் உயர்ந்த மனிதர் என்பதை அறிந்தேன்."
இந்நூலில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் கருத்துக்கள், கவிதையும் அரசியலும் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அவரது குறிப்புகள் அஷ்ரப்பிற்கு மட்டுமல்லாது அனைத்து படைப்பாளிகளுக்கும் பொருந்துவன. அதன் பொதுத்தன்மையிலிருக்கும் செறிவையும்  ஆழத்தையும் இங்கு சொல்லியாகவேண்டும். 

" ஆசிரியனின் அந்தஸ்தை கவனத்தில்கொள்ளாது, அவனது படைப்பை மதிப்பிடவேண்டும் என்பது இலக்கிய விமர்சனத்தின் அரிச்சுவடி. ஒரு படைப்பாளி ஒரு படைப்பை உருவாக்கியபின் அதன்மீதுள்ள ஆதிக்கத்தை இழந்துவிடுகிறான். அது வாசகனுக்கு உரியதாகின்றது. வாசகன் படைப்பாளியின்  ஆளுமையினால் பாதிக்கப்படாது, அந்தப்படைப்பை வாசித்து புரிந்துகொள்ளவும், மதிப்பிடவும் வேண்டும். இதையே ஆசிரியனின் மரணம் (Death of the author)   என பிரெஞ்சு விமர்சகர் றோலன் பார்த் அறிவித்தார். கடந்த இருபது - முப்பது ஆண்டுகளாக இலக்கிய விமர்சன உலகில் இக்கருத்து செல்வாக்குச்செலுத்தி வருகிறது. ஒரு படைப்பை பற்றிய மதிப்பீட்டில் அதன் ஆசிரியரின் ஆளுமைக்கு இடம் இல்லை என்பதே இக்கருத்தின் சாராம்சமாகும்"
அஷ்ரப்பினதும் ஏனைய அரசியல்வாதிகளினதும் அரசியலுக்கு அப்பால்,  முற்றாக வெளியே நிற்பவர்தான் நுஃமான். இதனை நன்கு தெரிந்திருப்பவர் அஷ்ரப். அவ்வாறிருந்தும் நுஃமானின் கருத்துக்களும் தமது நூலில்  இடம்பெறவேண்டும் என விரும்பியிருக்கிறார்.
கிழக்கிலங்கையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல கவிஞர்களை நன்கு இனம்கண்டு அவர்கள் மீதான மதிப்பீடுகளை முன்வைத்தவர் நுஃமான்.
நான் எனும் நீ  நூலில் நுஃமான் எழுதியிருக்கும் அணிந்துரையின் இறுதியில் இடம்பெறும்வரிகள், அஷ்ரப் எம்மத்தியில் இல்லாத சூழலிலும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிதே.
" சுதந்திரத்திற்குப்பின்னரான நமது அரசியல் இலங்கை மக்களை ஆழமாகப்பிளவுபடுத்தி இருக்கிறது. சுரண்டலையும் சமூக முரண்பாடுகளையும் வளர்த்து சமூக நீதியை சமத்துவத்தை புறந்தள்ளி இருக்கின்றது. இனமுரண்பாட்டையும் மோதலையும் உக்கிரப்படுத்தி இருக்கின்றது. நம் வாசற் படிகளை இரத்தத்தால் கறைபடுத்தி இருக்கின்றது. ஆனால்,  நமது கவிதையோ மனித ஆன்மாவின் குரல் என்ற வகையில் இவை எல்லாவற்றுக்கும் எதிராகவும் ஓங்கி ஒலிக்கின்றது. மனிதர்களை ஒன்றுபடுத்தவும், இன ஐக்கியத்தைப்பேணவும், சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றை வளர்க்கவும் சமூக நீதியை நிலைநிறுத்தவும், இரத்தக்கறையைத் துடைத்து, மனிதநேயத்தை அதன்மீது கம்பளமாய் விரிக்கவும் அது நம்மைத் தயார்படுத்துகிறது. நமது அரசியலுக்கும் நமது கவிதைக்கும் இடையிலான இந்த முரண்பாடு மறைந்து நமது அரசியல் நமது கவிதையின் குரலுக்குச் செவிசாய்க்கும் காலம் வரவேண்டும். நண்பர் அஷ்ரப் ஒரு கவிஞராயும் அரசியல்வாதியாயும் இருக்கிறார். அவரது கவிதைகளின் குரல் நமது அரசியல் எதிர்காலத்தைச் செப்பனிட உதவவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு"
நான் எனும் நீ - 1999  செப்டெம்பர் 26   ஆம் திகதி வெளிவருகிறது. சரியாக ஒருவருடம் நிறைவடைவதற்கு முன்பே  2000 செப்டெம்பர் 16 ஆம் திகதி அஷ்ரப் கொல்லப்படுகிறார்.
வாசல்படிகளை இரத்தக்கறைகள் முத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றன. அரசியல் சதுரங்கத்தில் நம்மவர் கவிதைகள் மூர்ச்சையாகிக்கிடக்கின்றன. இதுதான் நாம் கடந்துவரும் துன்பியல்காட்சிகள்.
அஷ்ரப் இந்த நூலை வெளியிட ஏறத்தாழ 16 வருடங்கள் காத்திருந்திருந்துள்ளார் என்பது அவருடைய நீண்ட முன்னுரையிலிருந்து  தெரிகிறது. ஒரு மனிதனின் வாக்குமூலம் என்ற தலைப்பில், தனது பள்ளிப்பருவகால கவிதைகள் தொடக்கம் கையெழுத்து இதழ்களில் எழுதிப்பயின்றது, கவியரங்கு மேடைகளில் தோன்றி கவிதைகள் பாடியது முதலான செய்திகளையும் சொல்கிறார்.
"எனது பிறப்பால் பலர் மகிழ்ந்திருப்பார்கள். எனது வாழ்வும் பலருக்கு மகிழ்ச்சியூட்டும். சிலருக்கு எரிச்சலாகவும் இருக்கலாம். எனினும்கூட எனது மரணத்தில் மானிடம் கலங்குமாக இருந்தால் அது எனக்கு கிடைக்கும் பேரதிர்ஷ்டமாகும். அந்த அதிர்ஷ்டத்தை பணமோ, பதவியோ, பட்டங்களோ தரமுடியாது. எழுத்துக்கள் மாத்திரமே என்னை என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும். ஆகவே மரணிக்கும்வரையில் எழுதவேண்டுமென்று ஆசிக்கின்றேன்"  எனவும் பதிந்துவைத்துள்ளார்.
தமது மரணம் பற்றி இந்த நீண்ட முன்னுரையில்  இரண்டு பந்திகளில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தான் சார்ந்திருக்கும்  அரசியலினால் மரணம் எந்தநேரத்திலும் தனது வாசல்படிகளை தட்டும் என்ற குருட்டுணர்வில் அவர் வாழ்ந்திருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. கவிஞராக இருந்தமையால் அந்த  மரண அச்சுறுத்தலையும் மறைபொருளாக கவித்துவமாக சொல்லியிருக்கிறார்.
தமது மனைவிக்கு நன்றி தெரிவிக்கும்போதும் அவரையறியாமலேயே  அந்தச் சொல் வந்துவிழுந்திருக்கிறதா...?
" எனது கவிதைப்பணிகளாலும் சிலவேளை எனது கவிதைகளாலும் எனது அரசியல் நடவடிக்கைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர் எனது அன்பு மனைவி ஃபேரியல் மாத்திரம்தான். எனது ஆளுமையைச்சீர்படுத்தியதிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு. எனது மனைவியின் பொறுமை இமய மலையையே வென்றுவிடும். அவர் மீது மரணம் வரை எனக்கிருக்கும் மாறாத தூய்மையான அன்பையும் இரக்கத்தையும் கூட இங்கு பதியவேண்டியது மானிடத்திற்குச் செய்யவேண்டிய பெரியதொரு கடமைப்பாடாகும்" என்று எழுதியிருக்கிறார்.
இந்த வரிகளை அஷ்ரப்பின் மரணத்தின்பின்னர் படிக்கும்போது நெகிழ்ந்துவிடுகின்றோம். நான் எனும் அகந்தைக்கு எதிராக குரல்கொடுத்து கவிதை யாத்து, நான் எனும் நீ என்ற தலைப்பில்  பெரியதொரு கவிதைத்தொகுப்பினை வரவாக்கிவிட்டுச்சென்றுள்ள அஷ்ரப் பற்றி,
"நீ விரும்பப்படுவாய்,  உன் மூச்சில் சமத்துவ நறுமணம் வீசட்டும்
உன்பேச்சில் சகோதரத்துவம் தழைக்கட்டும்
மறு உலகிலும் நீ விரும்பப்படுவாய் "
 என்று கவிஞர் வேதாந்தி மு.ஹ. ஷெய்கு இஸ்ஸதீன்,    1988 - 10- 23  ஆம் திகதி அஷ்ரப்புக்கு பிறந்த  தினக்கவிதை எழுதியிருக்கிறார்.
ஆம்!!! மறுஉலகிலும் விரும்பப்படுபவர்தான் எங்கள் அஷ்ரப்.
அவரது இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியதே!!!
இலக்கிய வாசகர்கள் அஷ்ரப்பின் இந்தக்கவிதை நூலைப்பற்றி மறுவாசிப்புச்செய்வதன்மூலம் இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு வந்திருந்தாலும், கவிஞனாகவே வாழ விரும்பிய மானுட நேசிப்பாளனை நினைவுகூரலாம்.
                           --00--








No comments: