தமிழ் சினிமா


தரமணி


சினிமா என்றாலே காதலை மையப்படுத்தி தான் படங்கள் எடுக்கப்படும். பல படங்கள் இதை பிரதிபலித்ததுண்டு. ஆனாலும் இதிலிருந்து சற்று விலகி வந்துள்ள படம் தான் இந்த தரமணி.
தரமணி தரமானது தானா, மணி ஓசை போல் புரியவைக்கும் சேதி என்ன என பார்க்கலாம்.

கதைக்களம்

Taramaniஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ இந்திய பெண். தான், தன்னுடன் தன் அம்மா, ஒரு சிறுவயது மகன் என தனிக்குடும்பமாக வாழ்கிறார். இவருக்கு பின்னாலும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கிறது. ஐடி நிறுவனத்தில் ஒரு மனிதவள அதிகாரியாக (HR) சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில சோகங்கள் இவருக்கு பின்னாலும் இருக்கிறது.
அடை மழைக்காக சாலையோரம் ஒதுங்கும் ஆண்ட்ரியா சட்டென பின்னால் இருப்பவரை பார்த்து மிரள்கிறார். அந்த வழிபோக்கன் தான் நம்ம ஹீரோ. பின் என்ன இருவரும் பேசிக்கொள்வதிலேயே பின்னால் என்ன நடக்கப்போகிறது என கணித்து விடலாம். கதையின் நாயகனாக வசந்த் இவரின் பின்னாலும் ஒரு தனி ட்ராக்.
இருவரும் ஒரு கட்டத்தில் நண்பர்களாக, பின் காதலர்கள் ஆகிறார்கள். சீக்கிரம் வந்த காதல் சட்டென விரிசலாகிறது. ஆண்டிரியா ஒரு பாதையில் செல்ல, ஹீரோ தவறான பாதையில் செல்கிறார். முன் பின் அறிமுகமில்லாத இவர்கள் எதற்காக சந்தித்தார்கள், ஏன் பிரிந்தார்கள், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை.
இதற்கிடையில் அஞ்சலி வேறு. அவர் ஒருவரை காதலித்து விட்டு, வெளிநாடு சென்றதும் மாறிவிட்டார். இவர் இப்படி மாறக்காரணம் என்ன என்பதையும் இப்படம் காட்டியிருக்கிறது.

படம் பற்றிய அலசல்

ஆண்ட்ரியா இக்கதைக்கு பொருத்தமானவர் என அவரது நடிப்பே சொல்கிறது. அவருக்கே உரிய ஸ்டைல், தனக்கென ஒரு கொள்கை என சுற்றும் இவர் ஆண்களின் மாற்று பார்வையில் பரிதவிக்கும் பெண்களில் ஒருவர்.
சூழலை எதிர்கொள்ளும் விதம், தைரியம் இருந்தாலும் தன் மகன் தான் தனக்கு உலகம் என நினைப்பவர். இக்கதையில் நடிப்பதற்கே இவருக்கு தனி தைரியம் இருந்திருக்கிறது.
வசந்த் அறிமுக நாயகனாக நடித்திருந்தாலும், திறமையை காட்ட இது ஒரு நல்ல சான்ஸ். காட்டியிருக்கிறார். படம் முழுக்க ஒரு இயல்பான நடிப்பு.
அஞ்சலி ஒரு ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தாலும், இவரால் கதையில் ஒரு ஸ்ட்ராங்க் ஃபிளாஷ் பேக் சுழல்கிறது. இவரின் நடிப்பும் எதார்த்தம்.
இயக்குனர் ராம் சற்று வித்தியாசமாக ஆண் என்னும் போர்வையில் சிலர் பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா காதலில் வெற்றியானாலும், தோல்வியானாலும் அதற்கேற்ப படங்களில் பாடல்களை கொடுத்து கவர்ந்து விடுவார். அது இப்படத்திலும் தொடர்கிறது.
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இப்படம் மூலம் மீண்டும் நம் எண்ணங்களில் தான் இருப்பதை தன் வரிகள் மூலம் காட்டியிருக்கிறார்.

க்ளாப்ஸ்

ஆண்ட்ரியாவின் நடிப்பு கதைக்கு மெருகூட்டுவதை சொல்லாமல் இருக்க முடியாது.
இயக்குனர் பார்வையில் குழந்தைகளுக்கான விசயம் இதில் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
ஒளிப்பதிவு, யுவனின் பாடல்கள் என உள்ளிருக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.
இருப்பதை இருப்பதாக கேமிராவில் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

பல்ப்ஸ்

அடுத்தடுத்து பாடல்கள் தொடர்ந்து வருவது ஒரு மாதிரி இருக்கிறது.
படத்தின் நீளம் எதிர்ப்பார்ப்பை தளரவைப்பதாக தெரிகிறது.
யுவன் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும் ஏதோ ஒன்று குறைவதாக தோன்றுகிறது.
மொத்தத்தில் இயக்குனர் சொன்னது போல தான். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடுவது மாதிரி தான். தரமணி தரம் குறையாமல் படம் காட்டியிருக்கிறது.
ஆபாச படம் என பலர் நினைத்தாலும், தரமணி வயது வந்தோர்க்கு மட்டுமே என்பதை தான் தெளிவாக்கியிருக்கிறது.
Cast:
Direction:
Ram
Production:
  
நன்றி  CineUlagam


No comments: