ரோஹிங்கியா: உலகம் அறிந்திராத இனப்படுகொலை – ஆவணப்படம்

.


மியான்மரில் தங்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறையில் இருந்து தப்புவதற்காக வங்கதேசத்தின் எல்லையை கடக்க முயன்ற ரோஹிங்க்யா மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மியான்மர் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறது. தாக்குதல் குறித்த காணொளிகளை ஆய்வு செய்த பின்னர் அதை வெளியிட இருப்பதாக ஐரோப்பிய ரோஹிங்கியா சங்கம் (European Rohingya Council) அறிவித்துள்ளது.


முன்னதாக ஆகஸ்டு, 27 அன்று ரோஹிங்கியா ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் 12 மியான்மர் பாதுகாப்புப் படையினர் பலியானார்கள். இராணுவத்தின் பதில் தாக்குதலில் 130 ரோஹிங்கியா முசுலீம்கள் கொல்லப்பட்டார்கள். அதில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்றாலும் அனைவரும் ஆயுதக்குழுவை சேர்ந்தவர்களே என்று மியான்மர் நட்டு ஆலோசகரான ஆங் சான் சூ கீ கூறியுள்ளார். இவர்தான் மேற்குலகால் சமாதானப் புறவாக பீற்றப்பட்டு நோபல் பரிசு வழங்கப் பட்டவர்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அவர்கள் குடியேறியதாக கூறும் மியான்மர் அரசு அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் மறுக்கிறது. ஆனால் அவர்கள் பூர்வகுடிகளா அகதிகளா என்பதையும் தாண்டி உலகின் மிகவும் கொடுமைப்படுத்தபடும் சிறுபான்மை இனமாக ரோஹிங்கியா முமசுலீம்கள் இன்று அறியப்படுகின்றனர்.
பர்மா என்று முன்பு அறியப்பட்ட மியான்மர் சற்றேறக்குறைய 5.1 கோடி மக்களைக் கொண்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கும் பர்மா இனக்குழுதான் இராணுவத்தையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் அவர்களைத் தவிர 135 -க்கும் அதிகமான இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் தங்களது சொந்த கலாச்சாரத்துடன் அந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.
மியான்மர் அரசின் நடவடிக்கைகளால் நிலங்களை இழந்துள்ள அவர்களில் பலர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இது ஒரு நீண்ட கால முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்.
மியான்மரை ஆளும் பெரும்பான்மை பர்மிய இனத்திற்கும் மியான்மரின் சிறும்பான்மை இனங்களுக்கும் இடையிலான மோதல்களானது உலகின் தொடர்ந்து நடந்து வரும் நீண்டகால மோதல்களுள் ஒன்றாகும்.
அவர்களில் ஒரு இனம் தான் ரோஹிங்கியா முசுலீம்கள். அவர்கள் மியான்மரின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனாலே அவர்கள் எல்லாவற்றிலும் மிக மோசமான பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்றனர். எண்ணிக்கையில் தோராயமாக பத்து அல்லது இருபது இலட்சத்திற்குள் இருக்கும் ரோஹிங்கியா இனத்தவர் நாட்டின் வடக்கில் ரக்கினே மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
இந்த ஆவணப்படத்தில், ரோஹிங்கிய மக்களைச் சூழ்ந்துள்ள சூழ்நிலையை ஆய்வு செய்ய அல்-ஜசீராவின் அரபு நிருபர் சலாம் ஹிந்தவி மியான்மருக்கு செல்கிறார்.

ஆங் சான் சூ கீ,
மியான்மர் பலப்பத்தாண்டுகளாக இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளியாட்களை மியான்மர் அரசு எளிதில் அனுமதிக்காததால் நாட்டில் உள்ள குறிப்பிட்டப் பகுதிகளை அணுகுவதற்கு ஹிந்தவிக்கு பெரும் சிக்கல்கள் உள்ளன.
“மக்கள் வடக்கு மவுங்டாவிற்கு (Maungdaw) [பெரும்பான்மை ரோஹிங்ய மக்கள் வாழும் நகரம்] செல்வதை இராணுவமும் அரசாங்கமும் தடுக்கின்றன. ஏனெனில் மறைப்பதற்கு பயங்கரமான ஏதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்” என்று கூறும் மியான்மரைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் முன்னாள் இயக்குனரான டேவிட் மேத்திசன் தற்போது ஒரு சுயாதீன ஆய்வாளராகவும் பார்வையாளராகவும் இருக்கிறார்.
“செயற்கைக்கோள் படங்களும் அரசாங்கத்தின் சொந்த ஒப்புதல்களும் அங்கிருந்து வரும் நம்பகமான அறிக்கைகளும் அங்கு மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதைக் கூறுகின்றன. பொதுமக்களுக்கு எதிரான உரிமை மீறல்களின் அளவை மூடி மறைக்க அவர்கள் விரும்புகின்றனர்” என்று அவர் கூறுகிறார்.
ரக்கினே மாநிலத் தலைநகரான சிட்வேவில் 2012 -ம் ஆண்டு ஏற்பட்ட வன்முறை அலையில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் முகாம்களுக்கு செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
“ரக்கினே மக்களால் எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன” என்கிறார் ரோஹிங்கிய அகதிகளில் ஒருவரான சாண்டர் வின். “ஒரு நண்பரின் வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம், பின்னர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டோம். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக நான் இங்கு இருக்கிறேன்” என்றார்.
“எங்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது. எங்கள் வீடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. குளிர்காலத்தில் நாங்கள் தரையில் தூங்குகிறோம்… நோய்கள் வந்து எங்கள் குழந்தைகள் சாகின்றன.” என்று முகாம் மருத்துவர் என்றழைக்கப்படும் முஹம்மது யாசின் கூறுகிறார்.
அவர்கள் நடமாடுவதையும், திருமணம் செய்வதையும், கல்வியறிவு மற்றும் சுகாதார வசதிகளைப் பெறுவதையும் அரசாங்கம் தடுக்கிறது. ஹிந்துவி சந்தித்த அகதிகள் பல ஆண்டுகளாக அந்த முகாமில் இருப்பது போல் தெரிகிறது. மேலும் அந்த குழந்தைகள் வேறு எங்கும் வசித்ததில்லை போலவும் தோன்றுகின்றனர்.
ரோஹிங்கிய மக்களுடைய பிரச்சினைகளின் மையமானது மியான்மரின் குடியுரிமை சட்டங்களில் இருக்கிறது. அது முழுமையான தேசியத்தை அவர்களுக்கு மறுப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளையும் சேர்த்தே மறுக்கிறது. இது அவர்களுக்கெதிரான பரந்துபட்ட அதிகாரப்பூர்வ மற்றும் வெளிப்படையான பாரபட்சத்தைப் பிரதிபலிக்கிறது.
“ஒரு பௌத்தவாதியாக அவர்களுக்காக நான் வருந்துகிறேன்” என்கிறார் பௌத்த துறவியான யு பா பர் மவுன்ட் கா. “ஆனால் மியான்மரில் வாழ்கின்ற இந்த முஸ்லிம்களின் மனித உரிமைகளை மட்டும் நாம் பார்க்க முடியாது. அவர்கள் எங்களது குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடிமக்களாக வாழத் தகுதியற்றவர்கள்… அவர்களை நாங்கள் வெளியேற்றினால் மியான்மரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். உலகின் 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. எனவே அந்த நாடுகளின் தலைவர்கள் இந்த மக்களை தங்களது நாடுகளில் ஏற்றுக்கொண்டால் எங்களது நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் இருக்காது. இதை நாம் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.” என்று மேலும் அவர் கூறுகிறார்.
இந்த பாகுபாடு, பதட்டத்தை உருவாக்கியதுடன் 2016 -ம் ஆண்டு அக்டோபரில் பங்களாதேசுடனான எல்லையில் நடத்தப்பட்ட பல்வேறுத் தாக்குதல்களில் குறைந்தது 9 மியான்மர் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் “பயங்கரவாதிகளாக” அடையாளம் காணப்பட்டனர். அதே நேரத்தில் அவர்கள் ஒரு ஆயுதமேந்திய இசுலாமியக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்பட்டது.
அதன் எதிர்வினையாக வன்முறை உடனடியாக ஏற்பட்டது. மவுங்க்டாவில் இராணுவம் முற்றுகையைத் தொடங்கியது. பெருந்திரளான மக்கள் படுகொலைகள், சித்திரவதை, பாலியல் வன்முறைகளைப் பற்றிய அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய மக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் தேடினார்கள்.
இந்த அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதன் பின்னரும் கூட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. ரோஹிங்கிய மக்களை ஒட்டுமொத்தமாக இனவழிப்பு செய்வதுதான் மியான்மரின் தந்திரமாக இருக்கலாம் என்ற கருத்திற்கும் அது இட்டுச்சென்றது. ஒரு உண்மையறியும் குழுவொன்றை அனுப்பும் திட்டத்தை மியான்மருக்கு அது முன்வைத்தது. ஆனால் ஐ.நா ஆய்வில் பங்கு பெரும் அதிகாரிகள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்று அரசாங்கம் ஜூன் மாதத்தில் கூறியது.
முன்னால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூ கீ இப்போது நாட்டின் ஆலோசகர் பதவி வகிப்பதுடன் மியான்மர் அரசாங்கத்தின் தலைவராகவும் உள்ளார். ஆனால் அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரகராக இருந்த நாட்களிலிருந்தே ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்கிய மக்களின் நிலைமையை புறக்கணித்ததாக அவர் குற்றஞ்சாட்டப்படுகிறார்.
“நடந்து கொண்டிருக்கும் பாகுபாடுகள் குறித்து ஒப்பீட்டளவில் [ஆங் சான் சூ கீ] மெளனமாக இருக்கிறார்” என்று மேத்திசன் கூறுகிறார். “ஒரு தலைவராக அவரது குரல் தேவைப்படும் போது உண்மையில் அவர் வருவதில்லை.” என்று கூறுகிறார் அவர்.
http://www.vinavu.com

No comments: