.
கம்பன் கழகத்திற்காக இசை வேள்வியை நடத்தியவர் சங்கீத உலகிலே 30 வருட அனுபவம் பெற்று இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை வகிக்கும் பாம்பே ஜெயஸ்ரீ இசை அரங்கை தன்வசமாக்கி ஒப்பற்ற சாஸ்திரிய சங்கீதத்தை வழங்கினார். இசைக் கலை என்பது அவர் அவர் ஆத்மாவில் இருந்து புறப்படுவது.
அவர் அவர் அருமையை அங்கு நாம் தரிசிக்கிறோம். சிலரோ இசை மூலம் உயர பறந்து எம்மையும் தம்முடன் அழைத்து சென்று இசையில் பல பரிமாணங்களையும் காட்டுவார். வேறு சிலரோ இசை என்ற ஆழ் கடலில் மூழ்கி நன் முத்துக்களை எடுத்து வரும் வல்லமை படைத்தவர். இசையால் இறைவனுடன் நனைய வைத்து கடும் பக்தி பிரவாகமான இசையையும் அனுபவிக்க வைப்பார் சிலர். இருந்த இடத்திலேயே அமைத்து உள்ளத்தை துள்ள வைக்கும் குதூகல சங்கீதத்தை வழங்குபவரையும் காணலாம்.
இந்த எந்த வகையிலும் சேராத ஒரு சங்கீத அனுபவத்தை அன்று நான் பெற்றேன். பாம்பே ஜெயஸ்ரீயின் சங்கீதம் தன்னுளேயே ஆழ்ந்து தானே அதில் மூழ்கி இசைத்தார். அவர் இராகம் பாடும் பொழுது எமது உள்ளம் தூய்மை அடைந்து நிர்மல மாக்கப்படுகிறது. இசையால் எம்மை வசமாக்கி எம்முள்ளே இருக்கும் ஆணவம், கோவம், வெறுப்பு என்ற சகல மலங்களையும் கொன்று விட்டாரோ என எண்ணத் தோன்றியது. ஆம் அவர் நடத்தியது இசை வேள்வியே..
அவருக்கு உறுதுணையாக மைசூர் ஸ்ரீ காந்த் வயலினையும் வாசித்து இசைக்கு மெருகூட்டினார். மனோஜ் சிவா மிருதங்கம், கிருஷ்ணா கடம் வாசித்தார்கள். தேர்ந்த ஒரு இசைக் குழு இசையின் உச்சத்தையே உணர வைத்தனர்.
மண்டபம் நிறைந்த கூட்டம். வந்த ரசிகர்கள் பலர் கர்நாடக சங்கீத கச்சேரிக்கு போகாதவர்கள். ஜெயஸ்ரீக்கு கர்நாடக இசை கலைஞர் தவிர, பிரபலமான சினிமா பாடகி என்ற அங்கீகாரமும் உண்டு. இவர் சினிமா பாடல்களால் மட்டும் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அல்ல,
அவரது
paadal "Life of Pi" என்ற படத்தின் மூலம் சிறந்த சங்கீதத்துக்கான
Oscars-Academy Awards போட்டிக்கான தெரிவில் இடம் பெற்ற ஒரே இந்திய மொழி பாடல் என்ற பெருமையை பெற்றது. சிலர் அவரது இசையை நேரில் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் கூடி இருந்தனர். இவர்களையும் கர்நாடக சங்கீதத்தில் இணைத்து அரங்கம் நிசப்தமாக இருக்க இசை வேள்வி தொடர்ந்தது. இராகம், தாளம், பல்லவி என கர்நாடக இசையின் பரந்த பரிமாணங்களையும் அள்ளி வழங்கினார் பாம்பே ஜெயஸ்ரீ.
இத்தனைக்கும் காரணமாக இருந்தது "அவுஸ்திரேலிய கம்பன் கழகம்" கட்டுக்கோப்பாக நிகழ்ச்சியை நடாத்தினார்கள். அன்றைய நாயகியான பாம்பே ஜெயஸ்ரீ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு "இசை பேர் அறிஞர்" விருதை சிட்னியின் இசை கலைஞர் அவருக்கு வழங்கினார்கள்.
இசை பேர் அறிஞர் என்றாலே அது "தமிழிசை சங்கத்தால்" சென்னையிலே ராஜா சார் அண்ணாமலை செட்டியார் அமைந்த அரங்கமான "அண்ணாமலை மன்றத்தில்"
பாரம்பரியமாக மாபெரும் கலைஞரை தேர்ந்து அவ்வருட இசைவிழாவிலே "இசை பேர் அறிஞர்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப் படுவார்கள். 30, 40 காலிலே தமிழுக்கு இசை பாடும் தகுதி கிடையாது என ஒரு சாரார் தமிழையும், தமிழ் இசையையும் ஒதுக்கி வைத்தனர். அந்த கால கட்டத்திலே தமிழுக்கும் இசைபாடும் திறம் உண்டு அதை சாதித்து காட்டுவோம் என பெரிய போராட்டமே நடந்தது. சங்கீத கலைஞர்களை தமிழ் பாடல்களையும் பாடுங்கள் என கேட்க வேண்டிய நிலை இருந்தது.
சங்கீத வித்துவான்கள் என்றால் தெலுங்கு கீர்த்தனைகளையே பாடுவார்கள். தமிழில் பாட முடியுமா? என்னவெல்லாம் சந்தேகத்தை கிளப்பி குழம்பிய காலம் அது. இந்த கால கட்டத்தில் தான் தமிழில் இசை பாடும் வல்லமையை உலகுக்கு உணர்த்த கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, டி கேசி, M M தண்டபாணி தேசிகர் போன்றோர் கடுமையாக உழைத்தனர். அவர்களுக்கு சகல உதவிகளையும் செய்ய முன் வந்தார் ராஜ சார் அண்ணாமலை செட்டியார். இன்றும் அந்த தமிழ் இசை இயக்கத்தின் சின்னமாக விளங்குவதே
"இசை பேர் அறிஞர்"
விருது.
கம்பன் கழகத்தினர் "இசை பேர் அறிஞர்" என்ற விருதை இங்கு வழங்கினார்கள் ஆனால் "இசை பேர் அறிஞர்"
என்பதற்கு என்றோ அர்த்தம் கற்பிக்கப் பட்டுவிட்டது. தமிழில் இசை பாடி தமிழை வளர்ப்பதற்காகவே "இசை பேர் அறிஞர்"
விருது. இது பற்றி இசை கலைஞர்கள் அறிவார்கள். இந்த விருதை பெற்ற பாம்பே ஜெயஸ்ரீயும் அறியாததல்ல. நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தமிழை வளர்க்கும் கம்பன் கழகம். அவர்கள் புலம் பெயர்ந்த நாட்டிலே தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் வளர்க்க பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். இங்கு பிறந்து வளரும் தமிழ் இளைஞருக்கு சிறந்த தமிழ் அறிவை புகட்டி "நாம் தமிழர்"
என தலை நிமிர்ந்து வாழ வைப்பது கம்பன் கழகம். அவர்கள் நடத்திய இசை வேள்வியில் அங்கொன்று இங்கொன்றாக தமிழ் பாடல் கேட்ட போதும் தெலுங்கு பாடலே முதலிடம் வகித்தது. கழகத்தினர் பாம்பே ஜெயஸ்ரீயிடம் தமிழிற்கு முக்கியத்துவம் கொடுப்பதே கழகத்தின் நோக்கம் என உணர்த்தவில்லையா?
இத்தகைய குறைகள் இனிமேல் "கம்பன் கழகம்"
நடத்தும் இசை வேள்விகளில் நடை பெற கூடாது என்ற எண்ணத்திலேயே இதை நான் இங்கு கூற கடமைப்பட்டுளேன்.
குறை கூறும் எண்ணம் அல்ல.
வாழ்க கம்பன் கழகம்.
No comments:
Post a Comment