இடும்பை - ஆதவன் தீட்சண்யா

.
த்தம் எப்போதும் உறைவதுமில்லைஉலர்வதுமில்லை
உறைவதற்கோ உலர்வதற்கோ அவகாசமேயற்று
ஓயாது பீறிட்டோடும் அது
எப்படித்தான் உறையும் ஈரம்தான் உலரும்?

கூற்றுவராகிய கொற்றவர் ஆணையால்
இடையறாது சீறும் வேட்டுகள்
இப்பூமியை சூடான ரத்தத்திற்குள்மூழ்கடிக்கின்றன
காடு மலை கடல் வயலென
எங்கெங்கிருந்தும் உறிஞ்சி துப்பப்படும் ரத்தம்
வானத்தின் நிறத்தையும் மாற்றிவிட்டிருக்கிறது

நீதிபோல் புனைந்த நிறைபொய்யின் சுத்திகொண்டு  
ஓங்கிப் பிளக்கப்பட்ட நம் உச்சந்தலையிருந்து
கொப்பளித்துப் பாயும் குருதியின் அடர்த்தியால்
அசையமாட்டாது திணறும் ஆற்றின் கரைகளில்
நாச்சுழற்றி அலையும் காட்டேரிகளைக் கண்டு
திகிலடைந்து நடுங்குகின்றன தெய்வங்களும்  

ரத்தக்கவுல் எங்கும் வீசுகிறது
நாலாபக்கமும் சுழன்றுவரும் காற்று
ரத்தத்தின் செவ்வரியைப் படர்த்திப்போகிறது
நம்கூரைகளின்மீது
பிசுபிசுக்கும் ரத்தத்திற்குள்ளாக நடக்கப்பழகியிருக்கிறோம் நாம்
பின்தொடரத்தான் மிஞ்சுமோ ஓருயிர்

நன்றி http://aadhavanvisai.blogspot.com.au

No comments: