மூலிகை பேசுகிறது - செம்பருத்தி

.

கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம்
       கிடைத்தோர்க்கு நலமென கொடுத்திடும் ஓர்வரம்
அழகென பூத்திடும் அருமருந்து செம்பருத்தி
        ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி
அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும்
      அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும்
விழாக்கால வேள்வியிலும் வைத்திடும் பூவாகும்
      விடியாத நோய்களுக்கும் வெளிச்சமென தீர்வாகும்

விதையில்லா பதியத்தால் விளைந்திடும் செடியாகும்
       வேர்இலை பூக்களால் வரும்நோயும் பொடியாகும்
சிதையாமல் பூவிதழை சுடும்பாலில் நனைத்திடு
        சிவந்திடும் பாலினை தினந்தோறும் அருந்திடு
பதைத்திடும் பதட்டத்தை பக்குவமாய் குறைத்திடும்
        பலமூட்டி  இரத்தத்தை   பயன்பெற  செய்திடும்
வதைத்திடும்  இதயத்தின்  வலிகளை  மாற்றிடும்
        வளமான வாழ்விற்கு வழிதனை காட்டிடும்

செந்நிற வண்ணத்தில் சிரித்திடும் பூவாகும்
         சீனர்களும் போற்றிடும் சிறப்பான மருந்தாகும்
வந்திடும் வெள்ளைநோய் வஞ்சியர்க்கு நலமாகும்
         வையகம் முழுக்கவே வளர்ந்திடும் குலமாகும்
தந்திடும் வைத்தியம் தரணிக்கு பயனாகும்
         தாவர வகைகளில் தரமான மருந்தாகும்
சிந்தனை செய்திடு செம்பருத்தி வளர்த்திடு
         செழிப்புடன் ஆரோக்கியம் ஜகத்தினில் நிறுத்திடு.

                                               -ப.கண்ணன்சேகர், திமிரி.

No comments: