விடுதலை கேட்டவருக்கு வீட்டுச் சிறை சொந்த மண்ணில் பேரறிவாளன் - து .ராஜ

.

ந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாவதற்கு முன்னரே, ஏன் தலைமைச் செயலகத்தில் அரசாணை வெளியாவதற்கு முன்பாகவே வேலூர் சிறை நிர்வாகத்துக்கும், ஜோலார்பேட்டை வீட்டுக்கும் பேரறிவாளனின் பரோல் குறித்து அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 24-ந் தேதி மாலையில் முறைப்படி அரசாணை வெளியானது.  

""வேலூர் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் டீம் பாதுகாப்பு தர வேலூர் மத்திய சிறையில் இருந்து இரவு 8.45 மணிக்கு பேரறிவாளனை அழைத்துக்கொண்டு ஜோலார்பேட்டையை நோக்கி புறப்பட்டது. ஒரு மாத பரோல் தகவல் முன்கூட்டியே தெரிந்தால், தமிழுணர்வாளர்கள் சிறை வளாகம் முன் திரண்டுவிடுவார்கள் என்பதால்தான் இந்த திடீர் வேகம்'' என்றனர் அரசு அதிகாரிகள் நம்மிடம். அத்துடன், "நீட் தேர்வு விவகாரத்தில் ஏமாற்றிய தமிழக அரசு மீது மக்களுக்கு இருந்த கோபத்தைத் தணிக்க, பரோல் அரசாணையில் கவனம் செலுத்தப்பட்டது' என்றனர்.




பரோல் தகவல் முன்கூட்டியே கிடைத்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் கிருஷ்ணகிரியில் உள்ள  மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த  பேரறிவாளனின் அப்பா குயில்தாசனை கார் மூலம் ஜோலார்பேட்டை வீட்டுக்கு அழைத்து வந்தனர். பேரறிவாளனின் சகோதரிகள் குடும்பத்தோடு சகோதரனை வரவேற்க வீட்டுக்கு வந்திருந்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் பேரறிவாளன் வீட்டுக்கு பாதுகாப்பு தரப்பட்டது.  

24ந் தேதி இரவு 11.30 மணிக்கு பேரறிவாளன் வந்த வாகனம் ஜோலார்பேட்டையில் உள்ள கே.கே.தங்கவேல் தெரு முனையில் வந்து நின்றது. வேனை விட்டு இறங்கிய பேரறிவாளனுக்கு இனம்புரியாத உணர்வு. வீட்டின் அமைப்பு உள்பட எல்லாமும் மாறியிருந்ததைக் கண்டார். சகோதரிகள் வரவேற்க, அற்புதம் அம்மாள் அரவணைத்து, "நிலைப்படியில் தலை இடிக்காதபடி, குனிஞ்சுவாப்பா' எனப் பேரறிவாளனை அழைத்துச் சென்றார்.

உள்ளே  கட்டிலில் படுத்திருந்த தனது தந்தை குயில்தாசனைப் பார்த்து கண் கலங்கிய பேரறிவாளன் பின்னர் இயல்பு நிலைக்கு வந்தபிறகு, சொந்தபந்தங்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். 26 வருட இடைவெளியில் ஊர், தெரு, வீடு, சொந்தபந்தம், நண்பர்கள் என எல்லாத் தரப்பிலும் மாற்றங்கள்.

மறுநாள் ஊரெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமென்றால் பேரறிவாளன் வீட்டில் அவர் பரோலில் வந்ததுதான் பெருங்கொண்டாட்டம். நண்பர்கள் பற்றி பேரறிவாளன் விசாரிக்க... "ஒவ்வொருத்தரும் வேலையில இருக்காங்கப்பா' என்ற அற்புதம் அம்மாள், அறிவின் பால்ய நண்பரான வெங்கடபாபுவை வீட்டுக்கு வரவைத்தார். கட்டிப்பிடித்து, "எப்படிடா இருக்க' என நலம் விசாரித்தவர், நினைவில் இருந்த சில பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் பற்றியும் நலம் விசாரித்தார்.

திருச்சி, சேலம், நாமக்கல், கோவை என மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து திராவிட இயக்கங்களின் தோழர்கள் -தமிழுணர்வாளர்கள் பேரறிவாளன் வீட்டுக்கு வந்தபடி இருந்தார்கள். வீட்டுக்கு வருபவர்களின் முகவரிகளை குறித்துக்கொண்டு அனுமதித்தது காவல்துறை. விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர். "இன்று பரோலில் வெளியே வந்தவர், நிரந்தரமாக விடுதலையாகி வெளியே வரவேண்டும்' என்றார், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த சேலம் மாவட்ட தலைவர் சக்திவேல். அவரைப் போலவே நாமக்கல்லில் இருந்து வந்திருந்த வைரவேல், ஈரோடு ரத்தினசாமி ஆகியோரிடமிருந்தும் அதே உணர்வு வெளிப்பட்டது.

நிரந்தர விடுதலை விரைந்து கிடைத்து, மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார் அற்புதம் அம்மாள். ""ஒரு தாயா நான் ஆசைப்படுகிறேன், அறிவோ, "உனக்கு வேற வேலையே இல்லையாம்மா போம்மா'ன்னு விரக்தியா சொல்றான்'' என்றார் நம்மிடம்.

மகனை பார்த்த நெகிழ்ச்சியில் உள்ள குயில்தாசனிடம் பேசியபோது, ""வீட்டுக்குள்ள வந்ததும் என்னைப் பார்த்து கட்டிப்பிடிச்சி முத்தம் தந்து "எப்படிப்பா இருக்க'ன்னு கேட்டதும், என் நோயெல்லாம் பறந்து போனமாதிரி உணர்ந்தேன். விரைவில் முழுவிடுதலை கிடைக்கும்னு நம்பிக்கையிருக்கு. 98-ல் பேரறிவாளன் விடுதலைக்காக நக்கீரன் ஆசிரியரும் போராட்டத்தில் வந்து கலந்துக்கிட்டிருக்கார்'' என பழைய நினைவுகளில் மூழ்கினார்.  

பேரறிவாளனின் வீடு 20க்கு 60 அடி அளவுள்ளது. இதுதான் இனி ஒரு மாதத்துக்கு பேரறிவாளன் இருக்க வேண்டிய இடம். வீட்டுக்கு வெளியே 30 மீட்டர் தூரத்தை தாண்டி பேரறிவாளன் எங்கும் செல்லக்கூடாது. பத்திரிகையாளர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது என நிபந்தனைகள் உள்ளன. கிட்டத்தட்ட வீட்டுச்சிறை போலத்தான். ஆனாலும், இத்தனை ஆண்டுகாலமாக மன உறுதி குலையாமல் சட்டரீதியாகப் போராடும் பேரறிவாளனும் அவரது தாயாரும் முழு விடுதலைக்கான சட்ட முயற்சிகளில் இருந்து தளரவில்லை. இந்நிலையில், வேலூர் சிறையில் நளினியும் பரோலுக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

No comments: