இலங்கைச் செய்திகள்


காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

யாழ் படகு கவிழ்ந்து உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகின 

யாழ் படகு விபத்து : மாணவர்கள் 6 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்.!

ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார் ஃபிரான்ஸிஸ் அடம்ஸன்

 தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை










காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

30/08/2017 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று முல்லைத்தீவில் இன்றுடன் 176 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பிரதான பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பான குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கபட்டுவரும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நிறைவடைந்தது. "தடுப்பில் உள்ள எங்களது பிள்ளைகளை தா" காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கு", இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில்  வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.








யாழ் படகு கவிழ்ந்து உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகின

28/08/2017 யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உயிரிழந்த 6 மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

உரும்பிராயைச் சேரந்த 18 வயதுடைய நந்தன் ரஜீவன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய நாகசிலோஜன் சின்னதம்பி, கொக்குவிலைச் சேர்ந்த 20 வயதுடைய தனுரதன், நல்லூரைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஷ், சண்டிலிப்பாயைச்  சேர்ந்த 18 வயதுடைய தனுசன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.



















யாழ் படகு விபத்து : மாணவர்கள் 6 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது

29/08/2017 யாழ்ப்பாணம் - மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்.பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளன.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது,
நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய  7 மாணவர்கள்,  அதில் ஒரு மாணவனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக குறித்த கடற்கரைப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.
குறித்த சமயம் அம் மாணவர்கள் மது அருந்தியிருந்ததால் அதிக மதுமயக்கத்தில் இருந்தனர்.  இந்நிலையில், மாணவர்கள் 7 பேரும் கடற்கரைப் பகுதியில் இருந்த படகொன்றையெடுத்து கடலுக்கள் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அது பயணத்திற்கு ஏற்ற தரத்தைக் கொண்டிராத வள்ளத்திலேயே மாணவர்கள் ஏறி கடலுக்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மணவர்கள்  6 பேரின் மரணத்திற்கு,  அவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமையும், குறித்த மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையுமே காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, படகில் ஏறி கடலில் பயணித்த 7 மாணவர்களில் ஒரு மாணவர் மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,
உரும்பிராயைச் சேரந்த 18 வயதுடைய நந்தன் ரஜீவன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய நாகசிலோஜன் சின்னதம்பி, கொக்குவிலைச் சேர்ந்த 20 வயதுடைய தனுரதன், நல்லூரைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஷ், சண்டிலிப்பாயைச்  சேர்ந்த 18 வயதுடைய தனுசன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி









கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்.!

28/08/2017 ‘வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான பூகோள போக்கு’ என்ற கருப்பொருளில் இடம்பெறும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இலங்கை இராணுவத்தினால் பூகோள பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான உரையாடலை ஏற்படுத்துவதற்காக 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு மாநாடு, உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இம்முறையும் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்கள், பகுப்பாய்வாளர்கள், ஆலோசகர்கள், பாதுகாப்புத்துறை முன்னோடிகள் என சுமார் 800 பேர்கள் பங்குபற்றுகின்றனர். 9 அமர்வுகளாக நடைபெறும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான பூகோள போக்கு என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. மேலும் அரசாட்சி மற்றும் அரச பாதுகாப்புக்கெதிராக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சர்வதேச தொடர்புகளுடன் துரிதமாக பரவிவரும் தீவிரவாத வன்முறை மற்றும் நவீன பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

7வது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகள், இராணுவப் பிரதிநிதிகள் மற்றும் 35 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றுகின்றனர்.

நன்றி வீரகேசரி










ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார் ஃபிரான்ஸிஸ் அடம்ஸன்

02/09/2017 அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் வர்த்தக திணைக்கள செயலாளருமான ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ்  சின்னையாவை சந்தித்துள்ளார்.

கடற்படை தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஃபிரான்ஸிஸ் அடம்ஸனை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக பூரண மரியாதையுடன் வரவேற்றனர்.
புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அடம்ஸன் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டதன் பின்னர் இரு தரப்பினரும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக சுமுகமான விவாதங்களில் ஈடுப்பட்டனர்.

இச் சந்திப்பில் அவுஸ்திரேலியவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஆளுநர் பிரைஸ் ஹட்சின்ஸனும் கலந்து கொண்டார்.
குறித்த சந்திப்பை பதிவு செய்வதற்காக இரு தரப்பினரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.


நன்றி வீரகேசரி











 தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்

01/09/2017 தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச சிவில் விமான சேவை அதிகார சபையின் தரத்திலான நிழற்படங்களை தங்கள் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.
குறித்த நிழற்படங்களை எடுப்பதற்காக நாடு முழுவதும் 1700 புகைப்பட்ட நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும், கிராம உத்தியோகத்தர்களிடமும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என வியானி குணதிலக்க மேலும் குறிப்பிட்டார்.
அதற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் குறித்த புகைப்பட நிலையங்களுக்கு தங்கள் முத்திரையுடனாக பதிவு சான்றிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் பாவனையில் இருந்து வந்த தேசிய அடையாள அட்டைகை்குப் பதிலாக இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை பாவனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் நபருடைய புகைப்படம், சுயவிபரம், கைவிரல் அடையாளம், இரத்த வகை ஆகியன உள்ளடக்கப்படவுள்ளன.   நன்றி வீரகேசரி 












இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை

01/09/2017 இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் டெல்லியிலிருந்து இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் இலங்கையில் வந்துளனர்.

இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவை,  இந்திய இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும்  அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.  நன்றி வீரகேசரி




No comments: