வீணாக்கார் தம்முயிரை ! எம் .ஜெயராமசர்மா .... மெல்பேண் ....

.

              பிறப்பிக்கும் இறப்புக்கும் பெரும்போரே நடக்கிறது
                     பிறந்துவிட்ட யாவருமே இறந்துவிடல் நியதியன்றோ
              இறப்பதற்கு எவருமே ஏக்கமுடன் இருப்பதில்லை
                    இருந்துவிட வேண்டும் என்னும் ஏக்கமதேயிருக்கிறது
              வருந்தியமன் அழைத்தாலும் வரமாட்டேன் என்றழுத்தி
                      யமனுக்கே போக்குக்காட்டும் நாடகத்தை ஆடுகிறார்
              விருந்துண்டு நாள்முழுக்க மேதினியில் வாழ்வதற்கே
                      மருந்துண்டு மருந்துண்டு வாழ்நாளை பார்க்கின்றார் !

             எத்தனையே வைத்தியங்கள் அத்தனையும் பார்க்கின்றார்
                   சத்திர சிகிச்சையெலாம் தான்செய்து நிற்கின்றார்
            நித்திரையை வரவழைக்க  நிறையப்பணம் கொடுக்கின்றார்
                  அத்தனைக்கும் அவர்வசதி உச்சமதில் இருக்கிறது
            சொத்தெல்லாம் வித்தாலும் சுகம்பெறவே விளைகின்றார்
                  சத்தான உணவையெல்லாம் தானவரும் உண்ணுகிறார்
            மொத்தமுள்ள வைத்தியரை குத்தகைக்கே எடுக்கின்றார்
                  முழுமையாய் வாழ்வதற்கே முழுக்கவனம் செலுத்துகிறார் !

             வசதியுடன் வாழ்வோரும் வழிதெரியா வாழ்வோரும் 
                 நீண்டகாலம் வாழ்வதற்கே நினைக்கின்றார் நாளெல்லாம் 
             மரணபயம் யாவருக்கும் மனம்முழுக்க இருப்பதனால்
                   தினமுமவர் மனம்முழுக்க இறைவனையே எண்ணுகிறார் 
              பயபக்தி கொண்டதனால் பலதுமவர் செய்கின்றார்
                    பலகடவுள் வழிபாட்டை பாங்குடனே ஆற்றுகின்றார் 
               மனம்முழுக்க வாழ்வுபற்றி பலவற்றை நிரப்பியதால்
                      வாழ்நாளை இழந்துவிட மனமவர்க்கு மறுக்கிறது ! 

            இப்படியே பலபேரும் இருக்கின்ற உலகினிலே
                 எப்படியும் வாழலாம் எனநினைக்கும் நினைப்பினால்
            தப்பான வழிசென்று தன்வாழ்வின் பயனறியா
                 தற்கொலையை தேர்ந்தெடுத்து தாமழிந்து நிற்கின்றார்
            ஒருகணத்தில் உதிக்கின்ற உணர்வதனால் தமைமறந்து 
                  உலகமே தமக்கெதிரி எனநினைத்து வெறுப்படைந்து
            தமக்குள்ளே முடிவெடுத்து தன்வாழ்வை முடிக்கின்ற
                தரமில்லா மக்களுக்கு தன்னுணர்வை ஊட்டவேண்டும் !

          அவசரமாய் அவசரமாய் அவரெடுக்கும் முடிவாலே
               அவசரமாய் அவசரமாய் அவர்வாழ்வே முடிகிறது 
          பதட்டமுடன் செயற்படுதல் பார்த்தவுடன் வெறுப்படைதல்
               கிடைக்கின்ற வாய்ப்பினையும் கீழெனவே நினைத்துவிடல் 
          தாழ்வுமனப் பான்மையினை தமதாக்கிக் கொண்டுவிடல்
                புத்திமதி சொல்வாரை புறமொதுக்கி நின்றுவிடல்
           எப்பவுமே தப்பிதமாய் எக்கணமும் இருந்துவிடல்
                அத்தனையும் அவர்வாழ்வை அழித்துவிடக் காரணமே !

         மண்ணிலே நல்லவண்ணம் வாழவந்த வாழ்க்கையினை
              எண்ணியே மக்களெலாம் எத்தனையோ செய்கின்றார்
         புண்ணியங்கள் மனமெண்ணி பொறுப்புடனே நடக்கின்றார் 
                கண்ணெனவே வாழ்க்கையினை காத்திடவே எண்ணுகிறார் 
          மண்ணைவிட்டு ஓடிவிட மனமெவர்க்கும்  இருப்பதில்லை 
                 மகிழ்வுடனே வாழ்வதற்கு வகைகள்பல தேடுகிறார் 
          உண்மையினை உணராமல் உயிரைமாய்த்துக் கொள்ளுகின்றார் 
                 மெள்ளநின்று உணர்ந்துவிட்டால் வீணாக்கார் தம்முயிரை !

No comments: