கவி விதை - 25 - மீளா அடிமை -- விழி மைந்தன் --

.


சந்திரன் ஒளியில் அவளைக் கண்டான் அவன்.

சரணம் அடைந்தான். மனதினுள் மரணம் அடைந்தான். புதிதாக ஜனனம் அடைந்தான். ரொம்பச் சலனம் அடைந்தான்.
அன்று முழுநிலவு. திருவாரூர் தியாகேசப் பெருமானின் கோவில் வீதியிலிருந்த நூற்றுக்கால் மண்டபத்தில் அவள் நடன அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது.

நடனம் பார்க்க வந்தவர் சிலர். அவளைப் பார்க்க வந்தவர் பலர்!

ஆயிரம் பிறை கண்ட முதியவர்களும், அவள் போல் அழகியின் நடனத்தைக் கண்டதில்லை என்று சொன்னார்கள்.

சேலைப் பழித்தன; கொலை நெடு வேலைப் பழித்தன அவள் கண்கள்.

வானில் நின்றது முழு நிலா. அவள் நுதலோ சின்னப் பிறை நிலா!

கன்னங்கள் பொன்னென மின்னின.

தேறலும் கருப்பஞ்சாறும் சேர்த்துப் பிளிற்றின செக்கச் சிவந்த இதழ்கள்.

அவள் புன்னகை கண்டு பொறாமை கொண்டன அவள் அணிந்திருந்த பொன்னகைகள்!



தங்க நிறத் தாமரை மொட்டுகளின் பாரம் தாங்காமல் சிற்றிடை பரிதவித்தது.

மேகம் போல் கறுத்துப் பளபளத்த கருங்கூந்தல் மின்னல் இடையைக் கடந்தது. கடந்த கூந்தலைத் தொடர்ந்து பார்த்தவர்கள் கண்வழி நெஞ்சில் இடி இடித்தது!

அவள் தளிச்சேரிப் பெண். தேவதாசி.

தேவதாசி என்றால் தேவனுக்கு அதாவது இறைவனுக்கு அடிமை. தேவதாசிப் பெண் பெருமானுக்கு அடிமை பெயரளவில். ஊருக்கெல்லாம் அடிமை உடலளவில்!

ஆண்டவனுக்கு நிவேதித்த பிரசாதத்தை ஆண்டவனா தின்கிறான்? அய்யரும், கோயில் மணியமும், ஊர்த் தலைவர்களும், இன்னும் போனவர் வந்தவர்களும் வயிறு புடைக்கத் தின்று விட்டு வந்து நடனத்தைக் கண்டார்கள். கண்டவர்கள் அவளை விழிகளால் தின்றார்கள்.

அவன் பெயர் விக்கிரமவேள். குறுநில மன்னரான பெரிய வேளாரின் மகன். முதிரா இளைஞன். பேரரசரின் சைனியத்தில் ஆயிரவர் தலைவன் பதவி அடைந்திருந்தான்.

கண்டதுமே மனத்தைக் கொண்டு விட்டாள் அவள். பாசக் கயிறாகப் பார்வையை வீசினான். அவன் உயிர்தான் போய்க் கொண்டிருந்தது. அவள் கவனிப்பதாகவே காணோம்!

சின்னதொரு இடைவேளை வந்தது. தண்ணீர் பருகவென மண்டபத்தின் ஓரத்திற்கு அவள் வந்தாள்.

முரட்டுப் போர்வீரன் ஒருவன் - கள்வெறியோடு நடனத்தைக் காண வந்தவன், வேறு வெறியும் சேர, அவள் மென்கரம் பற்றி வெடுக்கென இழுத்தான்.

அவள் அலறினாள்.

அவையோர் அதிகம் அக்கறைப் படவில்லை. அவள் குலமகளா என்ன, கொதிப்பதற்கு? 'இன்றில்லா விட்டால் நாளைக்கு இது நடப்பது தானே ' என்று நின்றார்கள். வெற்றிலையை மென்றார்கள்.

அவளுக்குள்ளும் ஒரு இதயம் இருந்தது பற்றி அக்கறைப் படவில்லை யாரும். விக்கிரம வேள் தவிர.

ஒரு நொடியில் முரட்டு வீரனை அணுகி விட்டான் விக்கிரம வேளான்.

ஒரு இழுப்பு. ஒரு குத்து. ஒரு உதை.

மொட்டைத் தடியனின் முப்பத்திரண்டு பற்களும் வெவ்வேறிடங்களில் போய் விழுந்தன. அவனும் விழுந்தான்.

தளிச்சேரிப் பெண் - மந்தாகினி - கரம் கூப்பினாள். தலையசைத்தான்.

நடனம் தொடர்ந்தது.

ஆனால் இப்போது, அவன் நின்ற திசை நோக்கி நெடும் பகழி பொழிந்தன அவள் நீள்விழிகள்.

நிலவின் குளிர்மையும், மலரின் மென்மையும், நெடுவேலின் கூர்மையும் அவள் கடைக்கண் பார்வையிலே கண்டான்.

அவள் கடைக்கண் பார்வையுடன் அவன் நேர்ப்பார்வை கலந்த போது, செக்கச் சிவந்த இதழ் திறந்து முத்துப் பல் ஒளிவீச மோகனப் புன்னகை பூத்தாள் அவள்.

பாதி ஜாம நேரத்தில் விக்கிரம வேள் பயித்தியமாகி விட்டான்!

ஐயோ!

கவனிக்காமல் சென்றாலே ஆண்கள் பித்துப் பிடித்துப் பின்னால் போகச்செய்யும் இந்தப் பேரழகி என்னைக் கவனிப்பது, தன்னம் தனியாக வரினும் யாரும் எதிர்த்து நிற்றற்கரிய தேவி ஜெயலக்ஷ்மி ஒரு படையொடும் வந்து போர்க்களத்தில் புகுந்தது போலன்றோ இருக்கிறது?

போர்க்களத்தில் பகைவர் வெட்கும்படி போர் செய்யவல்ல என்னை, கேவலம் ஒரு புன்னகையால் புரட்டிப் போட்டு விட்டாளே!

வானத்து நிலவையும் இந்த மங்கையின் முகத்தையும் வேறுபடுத்தி அறிய முடியாமலன்றோ, இரவு வானின் விண்மீன்கள் நிலையிற் குழம்பி அங்குமிங்கும் அலைகின்றன!

நடனம் முடிந்தது. விக்கிரம வேள் வீடு சென்று பஞ்சணையில் விழுந்தான். ஆனால் தூங்கவில்லை.

கருப்பு வில்லை வளைத்த மதனவேள் நெருப்பைப் பொழிந்து அவன் நெஞ்சை எரித்தான்.

அவளும் தூங்கவில்லை.

விக்கிரம வேள்!

தலையணைக்கும் கேளாத மென் குரலில் அவன் பெயரைச் சொல்லிப்பார்த்தாள். சொல்லிய நா இனித்தது. நினைத்த நெஞ்சம் இனித்தது.

கண்களோ மூட மறுத்தன.

என்னைக் காத்தவரே!

உங்கள் ஜெயஸ்ரீ பொருந்திய விரிந்த மார்பில் நான் தொடுத்த கண் அம்புகள் என்னையே கெடுப்பதை நான் அப்போது அறியவில்லை. இந்த நடுநிசியில், அம்புகளை வாங்கிய நெஞ்சம் மறந்து விட்டதோ என்னமோ? ஆனால், விட்ட கண்கள் விழித்திருக்கின்றன.

தளிச்சேரிப் பெண்ணுக்கு அளிப்பீர்களா வாழ்வு?

இரவு முடியா இரவானது.

மறுநாள் காலை - கன்னத்தில் வெட்கச் சிவப்புடன் சூரியன் எழுந்த போது விக்கிரம வேள் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.

மந்தாகினியின் வீட்டுக்குப் போனான்.

தூரத்திலே கண்டு இதயம் கலந்த அவர்கள் பக்கத்திலே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட போது, உலகம் தோன்றியதே இந்த ஒரு சந்திப்புக்காகத் தான் என்று சொல்லும்படி இருந்தது.

பேசிக்கொண்ட போது, போர்முரசும் வேய்ங்குழலும் சேர்ந்த புதுவகைப் பல்லியம் போலத் தொனித்தது.
வெகு சீக்கிரத்தில் அவர்கள் வேறொரு சுருதிக்குச் சென்றனர்.

மிருதங்கக் காரியான அவள் வீணை ஆனாள். உடலில் எழுந்து உயிரில் கலந்த தேனிசையை அவன் விரல்கள் மீட்டின.

அப்புறம்....

தேனில் விழுந்த வண்டெனத் திளைத்துக் கிடந்தான் விக்கிரம வேள் ... பல மாதங்களாய்.

அவனது தந்தை...பெரிய வேளார், கொஞ்சம் கோபப்பட்டார்.

'வயதுக் கோளாறு' என்று முதலில் கண்டும் காணாமல் விட்டாலும், 'இதே பயித்தியமாய்' அவன் இருத்தல் கண்டு, 'திருமணம் செய்து வைத்தால் கொஞ்சம் தெளியும்' என்று தீர்மானித்தார்.

அவர் தெரிந்தெடுத்த பெண்ணின் பெயர் ஸ்வர்ணாதேவி. இன்னொரு குறுநில மன்னன் மகள்.

"விக்கிரம வேளுக்குத் திருமணம்" என்னும் செய்தியைக் காற்று எடுத்துச் சென்று மந்தாகினியின் காதில் போட்டது.

தான் பிறந்த குலத்தின் தலைவிதி தெரிந்திருந்தும், அவளின் இளைய இதயம் அச்செய்தியை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

கண்ணீரில் கரைந்தாள்.

விக்கிரம வேள் திருமண ஏற்பாட்டைப் பெரிதாய் எடுக்கவில்லை. "தந்தையின் திருப்திக்குக் கட்டிக் கொள்வோம்" என்று இருந்து விட்டான். சிற்றரசர் குலத்தவர் பலதார மணம் செய்வதே பழக்கமாயிருந்த அந்த நாளில், கணிகையர் சகவாசத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இரண்டு வாரம் மந்தாகினி இல்லாமல் இருக்க வேண்டும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் தொடங்கலாம் என்பது அவன் கணக்கு.

விமரிசையாகத் திருமணம் நடந்து முடிந்தது. சொல்லி வைத்தாற்போல், இரண்டு வாரம் கழித்து மந்தாகினி வீட்டுப் பாதையில் மறுபடி சென்றது அவன் குதிரை.

அங்கு தான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மந்தாகினி கதவைத் திறக்க மறுத்து விட்டாள்!

அவள் ஊடலை உணர்த்த அவன் ஓயாது செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.

தளிச் சேரியின் மற்றைய நடனப் பெண்கள் நடுநடுங்கினர். வருகிற ஆடவன் எவனையும் - அவன் கையில் பொருளோடு வந்தால் - வரவேற்க வேண்டியது அவர்களுக்கிருந்த கடமை. தெரிவு செய்யும் சுதந்திரத்தை அவர்களுக்கு யாரும் கொடுக்கவில்லை. தன்னிலை அறியாது மந்தாகினி செய்யும் ஊடல் எங்கு போய் முடியுமோ என்று ஏங்கினர் அவர்கள்.

ஆனால், அவள் காதலின் அமுதத்தை அருந்தியிருந்த விக்கிரம வேள் , அன்பிலாக் காமம் என்கிற கள்ளைக் குடிக்க விரும்பவில்லை. விட்டு விட்டான். வெளியேறி வந்து விட்டான்.

தன் வீட்டுக்குள்ளேயே வேங்கையென அலைந்தான்.

ஒரு வெள்ளிக் கிழமை வந்தது. அன்று தியாகேசர் சந்நிதியில் தலைக்கோலியான மந்தாகினியின் நடனம் நடக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அவன் அனுமதி இன்றியே அவன் கால்கள் அவனை இழுத்துச் சென்றன கோவிலுக்கு.

நடனம் ஆட வந்த மந்தாகினியின் கண்கள் ஒரு கணம் அவன் கண்களைச் சந்தித்தன. மறு நொடி அவள் தலை குனிந்தாள். அவள் நீள் விழிகளில் நீர்க்குடங்கள் ததும்பி நின்றதாக விக்கிரம வேளுக்குத் தோன்றியது.

நடனமும் தொடங்கியது.

யாழ் இழைந்தது. குழல் குழைந்தது. வீணை மிழற்றியது. மிருதங்கம் "சந்தித்தோம் சந்திப்போம் நிதம் நிதம் சந்திப்போம்' என்று 'தீர்மானமாகச்' சொன்னது.

அந்தப் பேரழகி ஆடினாள்.

அன்றைக்கு அவள் எடுத்துக் கொண்டது சுந்தர மூர்த்தி தேவாரம்.

"பித்தா. பிறை சூடி. பெருமானே. அருளாளா. எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை! வைத்தாய் பெண்ணைத் தென்பால், வெண்ணை நல்லூர் அருட்டுறையுள், அத்தா! உனக்கு ஆளாய். இனி அல்லேன் எனலாமே?"

பரத இலக்கண அறிவும் தமிழறிவும் பெற்றவர்கள் ஒரு விசித்திரத்தைக் கவனித்தார்கள். "பெண்ணை" என்ற சொல்லுக்கு அவள் ஓடுகிற ஆற்றை, தென்பெண்ணை நதியை, அபிநயம் பிடிக்கவில்லை. மாறாகத் தன்னையே சுட்டிக் காட்டிக் கொண்டாள். "எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை! வைத்தாய் பெண்ணை...அத்தா! உனக்கு ஆளாய். இனி அல்லேன் எனலாமோ?" என்று திரும்பத் திரும்பப் பாடி உருகினாள்.

"என் இறைவனே. ஒரு நாளும் மறக்காமல், உன்னைத்தான் என்றும் மனதில் நினைக்கிறேன். இந்தச் சிறு பெண்ணை, உனக்கு ஆளாக என்றோ வைத்து விட்டாய். இனி நான் உன்னுடையவள் இல்லை என்று சொல்லி விலகிப் போவது நடக்கிற காரியமா?"

'இனி அல்லேன் எனலாமே...' என்று கூடவே இழைந்தது குழல்.

நடனம் முடிந்த போது அவர்கள் கண்கள் மறுபடியும் கலந்தன. அச்சமயம் அவர்கள் கண்கள் புனைந்துரைத்த காதற்கவிதைகளைக் காளிதாசன் கண்டிருந்தால் மேக தூதத்தில் சேர்த்திருப்பான். கம்பநாடன் கண்டிருந்தால் மிதிலைப்படலத்தில் கோத்திருப்பான்.

மந்தாகினி வீட்டுக்குப் போனாள். விக்கிரம வேள் அவளைத் தொடர்ந்து சென்றான். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். இந்த முறை மந்தாகினி அவனைத் தடுக்கவில்லை.

மறுபடியும் அவர்கள் வாழ்ந்தார்கள்.

பெரும் படையெடுப்பு ஒன்றுக்கு ஆயத்தம் செய்தது அவர்கள் தேசம். விக்கிரம வேள் மறக்குலத்து இளைஞன். மன்னனிடமிருந்து கட்டளை வந்து விட்டது அவனுக்கு - போர் முனைக்குப் புறப்படும்படி!

'வெற்றித் தேவியை முத்தமிட்டு விட்டு வந்து உன்னை முத்தமிடுகிறேன்" என்று மந்தாகினியிடம் சொல்லிப் புறப்பட்டான் அவன்.

மந்தாகினி அஞ்சினாள். அவன் உயிருக்கு அஞ்சினாள். அதைவிட மேலாகத், தன் உடலுக்கு அஞ்சினாள். அவள் தளிச்சேரிப்பெண். பொருளுடன் வரும் ஆடவன் எவனையும் வரவேற்க வேண்டியவள். குறைந்த பட்சம் நடனமாவது அவன் முன் ஆட வேண்டியவள். பெரும்பாலோர் நடனம் மட்டும் கண்டு போவதற்கு வருபவர்கள் அல்ல.

இருந்தாலும், அவனைத் தடுக்க அவள் யார்? அவன் போய் விட்டான்.

மந்தாகினி வீட்டின் முன் குதிரைகளும், ரதங்களும், வில் வண்டிகளும் வந்து தரிக்கத் தொடங்கின.

மந்தாகினி கோயிலில் நடனம் செய்வதைக் குறைத்தாள். ஆடை ஆபரணங்களை அணிவதைக் குறைத்தாள். வீட்டுக்கு வெளியே செல்வதைக் குறைத்தாள். 'நோய்' என்று சொல்லி அடிக்கடி வீழ்ந்து படுத்தாள். கொல்லைப்புறத்தில் தடுக்கி வீழ்ந்து காலை ஒடித்துக் கொண்டாள்.

இருந்தும்....

சிவநேசச் செட்டியார் என்று ஒருவர். மத்திம வயசும், பெரிய தொந்தியும், பெரிய செல்வமும், பெரிய குடும்பமும் உடையவர். பெரிய ரசிகராயுமிருந்தார்.

ஒவ்வொரு நாளும் வந்தார். ஒரேயொரு நடனம் என்று கேட்டார். இன்றில்லையெனில் நாளைக்கு வந்தார். பெரும் பொருள் கொண்டு வந்தார். நடனம் முடிந்ததும் எழுந்து போகாமல் பாயில் இருந்தார். அசட்டுச் சிரிப்புகள் சிரித்தார். அரசருக்கும் தமக்கும் இருந்த சிநேகிதம் பற்றியும் சொன்னார்.

பிறகு.....

சிவந்த காலை ஒன்று விடிந்த போது, விக்கிரமவேள் படையெடுப்பு முடிந்து திரும்பி வந்தான்.

வெற்றியுடனும், விஜய கோலாகலத்துடனும், வெளி நாடுகளில் வென்று கைப்பற்றிய நடைவயப் பரி, இரதம், ஒட்டகம், நவநிதிக் குவை இவற்றுடனும், 'இராசராசக் கேரளாந்தக விக்கிரம வேளான்' என்ற பட்டத்துடனும் வந்து சேர்ந்தான்.

வீட்டுக்குச் சென்று ஸ்நான பானங்களை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, தன் காதலியைத் தேடி ஓடி வந்தான்.

வீட்டு வாசலிலே வில்லு வண்டி ஒன்று நின்றது.

உள்ளுக்கிருந்து, அந்தக் காலை வேளையிலே சிவநேசச் செட்டியார் மீசையை முறுக்கிக் கொண்டு வெளியில் வந்து, தமது வில்லு வண்டியில் ஏறப் போனார்.

விக்கிரமவேளின் கண்களும், செட்டியாரின் கண்களும் ஒரு கணம் சந்தித்தன.

பசித்திருக்கின்ற பெரும் புலி தனது இரையை உற்றுப் பார்ப்பது போலச் செட்டியாரைப் பார்த்தான் விக்கிரமவேள்.

செட்டியார் கூழைக் கும்பிடு ஒன்று போட்டு விட்டு, தனது வில்லு வண்டியில் மெதுவாக ஏறி விரைவாக ஓடி விட்டார்.


விக்கிரமவேள் மறுபடியும் வீட்டு வாசலைப் பார்த்த போது, அங்கே அவள் நின்றாள். செட்டியாரை வழியனுப்ப வந்திருக்கலாம்.

பொன்னைப் பழிக்கிற, வான் மின்னைப் பழிக்கிற, ரதி தேவி தன்னைப் பழிக்கிற, பார்ப்பவர் கண்ணைப் பறிக்கிற அவளது முகம், ஒரு கணம் பகலவனைக் கண்ட பங்கஜமாய் விகசித்தது.

அடுத்த கணம், பயப் பாம்புகள் பாய்ந்தோடின அவள் முகத்தில்.

விக்கிரமவேள் நின்ற இடத்தில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான். அந்தப் பேதைப் பெண்ணின் மீது அவன் அச்சமயம் வீசிய பார்வையைப் போர்க்களத்தில் கண்டிருந்தால் எப்படிப்பட்ட வீரனான எதிரியும் காலோடு நீர் கழிந்திருப்பான். கோபத்தில் அவன் மீசை துடித்தது. கன்னங்கள், உதடுகள் துடித்தன. வஜ்ராயுதம் போன்ற கைகள் முறுக்கேறித் துடித்தன. கால ருத்திரன் போலக் கண்கள் கனல் வீசின.

அவள் மீது பொழிவதற்கு ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் அவன் நெஞ்சில் பொங்கி வந்தன. எதை முதலில் சொல்வது, எதைப் பிறகு சொல்வது, எதை விடுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

இறுதியில், அடிவயிற்றில் இருந்து பிறந்து, நெஞ்சில் திரண்டு, தொண்டையைப் பிளந்து, பூகம்பத்தின் பயங்கரத் த்வனி போல, அடிபட்ட வேங்கையின் உறுமல் போல, உருத்தெரியாத பெரும் கர்ஜனை ஒன்று மட்டும் அவன் வாயில் இருந்து வந்தது. அந்த ஓசை கேட்டுத் திக்குத் திகாந்தங்கள் எல்லாம் நடுநடுங்கின.

அடுத்த கணம் அவன் தனது குதிரையில் பாய்ந்து ஏறினான். குதிரையைத் திருப்பினான். ஊழிக் காற்றாய்க் குதிரை பறந்தது.

அவள் வாசலில் நின்று, மறையும் குதிரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள். முனி சாபம் பெற்ற அகலிகை போலாகிக் கல்லாய்ச் சமைந்து நின்றாள்.

அன்று மாலை, போர்க்களத்தில் வென்று வந்த விக்கிரம வேளானுக்குத் திருவாரூர் நகரத்தார் - ஐம்பெருங்குழுவினரும், எண் பேர் ஆயத்தினரும் - மகத்தான வரவேற்பு அளித்தார்கள். யானை குதிரை பல்லக்குப் பரிவட்டங்களுடன் பவனி வந்தான் விக்கிரம வேள். ஜெய கோஷங்கள் வானளாவின. ஊர்வலம் தியாகேசர் சந்நிதியில் வந்து முடிந்தது. அங்கே வேடிக்கை விநோதங்கள், நடன நாடகங்கள் நடந்தன. தலைக்கோலியான மந்தாகினியின் நடனமும் முக்கிய அம்சமாக இருந்தது. எழுந்து போய்விடுவது எண்பேராயத்திற்குச் செய்யும் அவமதிப்பு ஆகி விடும். பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தான் விக்கிரம வேள்.


குனிந்த தலை நிமிராமல் மேடையில் வந்து ஏறினாள் மந்தாகினி. நடனம் தொடங்கும் வரை அவன் பக்கம் பார்வையைச் செலுத்தவில்லை அவள். வினிகையைத் தொடங்கினாள்.

"மீளா அடிமை உமக்கே ஆளாய்ப், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆளாய் இருக்கும் அடியார், தங்கள் அல்லல் சொன்னக் கால்,
வாளா அங்கிருப்பீர் திருவாரூரீர். வாழ்ந்து போதீரே!"

மீளா அடிமை உமக்கே ஆளாய்....பிறரை வேண்டாதே....பிறரை வேண்டாதே....

இப்போது அவன் பக்கம் பார்த்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியென வழிந்தது.

அன்று மந்தாகினியின் நடனத்தைப் பார்த்தவர்கள் யாரும் அழாமல் இருக்கவில்லை. வெற்றிக் கோலாகலத்தின் மத்தியில், தண்டநாயகன் முன்னால் தலைக்கோலி ஆடும் நடனத்தைப் பார்த்து ஏன் அழுகிறோம் என்று அவர்களுக்குப் புரியவில்லை. இத்தனைக்கும், மந்தாகினியின் முக பாவத்திலோ அபிநயத்திலோ சோகம் அதிகம் இருக்கவில்லை. ஒரு கெஞ்சல் இருந்தது. அதைவிட அதிகமாக ஒரு உறுதி இருந்தது. ஒரு சத்தியம் இருந்தது. அது அழ வைத்தது.

விக்கிரம வேள் கல் போலச் சமைந்து அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது தெரியாதவனாக இருந்தான்.

நடனம் முடிந்தபோது, அவளை மன்னித்து விட்டதாக அவளிடம் போய்ச் சொல்லுவோமோ என்று அவனுக்குத் தோன்றியது. இல்லை, அது தேவையில்லை என்றும் தோன்றியது.

இறுதியில் அவன் எதுவும் சொல்லவில்லை. ரதம் கொண்டுவரச் செய்தான். அத்தனை பேர் முன்னிலையிலும் அவளைக்கையைப் பிடித்து அழைத்து வந்து ரதத்தில் ஏற்றினான். தானும் ஏறிக் கொண்டான். அவள் வீட்டுக்குப் போய் விட்டான்.

தெடர்ந்து அவர்கள் வாழ்ந்தார்கள். சில வருடங்கள் வாழ்ந்தார்கள். ஸ்வர்ணாதேவி மூலம் விக்கிரம வேளுக்குக் குழந்தைகள் பிறந்தன. மந்தாகினி வீட்டுக்கு இராஜ வைத்தியர் சில முறை வந்து சென்றார்.

மறுபடியும் ஒரு போர் வந்தது. பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றான் விக்கிரமவேள். வாரங்கள் மாதங்களும், மாதங்கள் வருடங்களுமாய்த் தோன்றின மந்தாகினிக்கு. வழி பார்த்து விழி பூத்திருந்தாள் அவள்.

சூரியன் உதிக்காத ஒரு காலையில், மந்தாகினியின் வீட்டு வாசலில் குதிரைக் குளம்படி சப்தித்தது. அந்த ஒலி ஏனோ இடியென மந்தாகினியின் இதயத்தில் எதிரொலித்தது. நடுங்கும் கைகளால் வாசல் கதவைத் திறந்தாள் அவள்.

வாசலில், விக்கிரம வேளின் அந்தரங்கத்துக்குரிய உயிர் நண்பனான போரூர்ப் பழையன் நின்றான். பூரண போர்க் கவசத்துடனும் சமர் முனைக்குச் சென்று வந்த அடையாளங்களுடனும் நின்றான். பழையன் காமலோலனல்ல. நண்பனுக்குத் துரோகம் செய்யக்கூடியவனுமல்ல. நண்பன் நகரில் இல்லாத வேளையில் அவன் பெண்ணிடம் வேட்கை கொண்டு வரக் கூடியவனல்ல அவன் என்பது மந்தாகினிக்குத் தெரிந்திருந்தது. சிற்றரசர் குலத்தில் பிறந்த அவனுக்கு இந்தத் தாசியின் வீட்டில் வேறு வேலை எதுவும் இருக்கவும் முடியாது.

மந்தாகினிக்குப் புரிந்தது. அவன் வந்திருப்பது காமத்தினால் அல்ல. கருணையினால்.

மந்தாகினி கண்களை நிமிர்த்திப் பழையனை ஏறிட்டுப் பார்த்தாள். பழையன் தலையை அசைத்தான். வார்த்தைகள் எதுவும் வேண்டியிருக்கவில்லை.

மந்தாகினியின் கண்களை இருள் கௌவியது. மலர்ந்து குலுங்கிய இளங்கொடி சுழல் காற்றில் துவண்டு வீழ்ந்ததென அங்கேயே மயங்கி வீழ்ந்தாள்.

அன்று மாலையில் விக்கிரம வேளின் அம்பு பாய்ந்த சடலத்தைத் திருவாரூருக்கு எடுத்து வந்தார்கள். மன்னரும் சாமந்தர்களும் தண்ட நாயகர்களும் பிரம்மராயர்களும் சிற்றரசர்களும் புலவர்களும் மேலும் நகரின் பிரமுகர்கள் பலரும் அவனது வீரத் திருவுடலுக்கு அஞ்சலி செய்தார்கள். மாரடித்து அழுத அவன் மனைவிக்குத் தேறுதல் சொன்னார்கள். மரியாதை செய்தார்கள். இணையற்ற வீரப்படைத்தலைவனுக்குரிய மரியாதைகளுடன் அவன் உடல் தீயிலே சங்கமித்தது. புலவர்கள் அவன் வீரத்தைக் காலத்தால் அழியாத தமிழ்க் கவிதையில் வடித்து வைத்தார்கள்.

ஸ்வர்ணாதேவி அழ வேண்டிய வேளைகளில் அழுதாள். அதாவது காடாற்றியவர்கள் திரும்பி வந்த போதும், எட்டுச் செலவின் போதும், அந்தியேட்டிக் கிரியைகளின் போதும், மன்னர் உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் அவளைத் துக்கம் விசாரிக்க வந்த போதும். பெரிதாகவே ஒப்பாரி வைத்து அழுதாள். மற்றைய வேளைகளில் அவள் அழுததாக யாரும் சொல்லவில்லை. மன்னரிடம் இருந்து அவளுக்கு இழப்பீடாகப் பெரும் செல்வம் கிடைத்தது. புது மாளிகையும், கால்நடைச் செல்வமும், பொன்னும், இருபது வேலி இறையிலி நிலமும், அந்நிலத்தை அவள் மட்டுமன்றி விக்கிரம வேளின் சந்ததிகளும் வழிவழியாக முற்றூட்டாக ஆண்டு அனுபவிக்க அனுமதியும், இதையெல்லாம் எழுதிய செப்புப் பட்டயமும், "கோட்டாற்றுத் துஞ்சிய விக்கிரம வேளார் மகாதேவியார்" என்ற பட்டமும் கிடைத்தன. அழுதழுது மூக்கை உறிஞ்சியவாறே அவற்றையெல்லாம் பெற்றுக் கொண்டாள். அவளது புது மாளிகையின் முகப்பில் விக்கிரம வேளின் கற்சிலை அந்நாட்டின் சிறந்த சிற்பிகளால் செதுக்கப் பட்டுத் திறந்து வைக்கப் பட்டது. விக்கிரம வேளின் மரணச் சடங்கு சந்தடிகள் ஓய்ந்த பிறகு, ஸ்வர்ணாதேவிக்குத் தன் வாழ்வில் சௌகரியங்கள் இன்னும் அதிகரித்தது தவிர வேறு மாற்றமேதும் தெரியவில்லை.

மந்தாகினி மரண வீட்டுக்குப் போகவில்லை. அவன் உடல் மீது வீழ்ந்து அழுவதற்கு மட்டுமல்ல, அருகில் செல்வதற்கே அவளுக்கு அனுமதி கிடையாது என்பது அவளுக்குத் தெரிந்தது தான். அவன் உடல் நெருப்பாகி நீறாகி விட்ட பிறகு, மயானத்தில் இருந்து எல்லோரும் திரும்பி விட்ட பிறகு, அவள் தலையில் கறுப்புப் போர்வையைப் போர்த்திக் கொண்டு மயானத்துக்குப் புறப்பட்டுப் போனாள். விடியும் வரை அவள் வீடு திரும்பவில்லை. காலையில் வீடு வந்து சேர்ந்த போது அவள் கண்களில் கண்ணீர் மீதி இருக்கவில்லை. ஆனால் காடாற்றச் சென்றவர்கள் சொன்னார்கள் - இரவு பெய்த தனி மழையொன்று அவன் சிதையை மட்டுமே நனைத்துச் சென்றது போல் விக்கிரம வேளின் சாம்பல் ஆறிக் குளிர்ந்திருந்ததாம்.

இதன் பிறகு மந்தாகினி நகரத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாள். அவளுடைய உடல் தனது பழைய அழகையும் கவர்ச்சியையும் இம்மி கூட இன்னும் இழந்து விடவில்லை. ஆனால் அவளது கூரிய கண்களின் நட்சத்திர ஒளி அணைந்து விட்டது. பரத நாட்டிய சாஸ்திரத்தின் அத்தனை பாவங்களையும் உப பாவங்களையும் க்ஷண நேரத்தில் எடுத்துக்காட்டவல்ல அவளது அழகிய முகம், கீழ்த்தரச் சிற்பி வடித்த சிலையின் வதனம் போல உணர்ச்சியற்றுப் போய் விட்டது. தனது தோழிகளிடமும், உறவுகளிடமும் அன்புடன் விடை பெற்றுக் கொண்டு அவள் வெளியேறிப் போய் விட்டாள். காவேரி நதி தீரத்தில், கூதிர் காலக் காற்றிலே பெருமூச்சு விடுகின்ற உயர்ந்த மரங்களுக்கு நடுவில், அவள் தனியே நடந்தாள்.

கூதிர் கால முடிவில், மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்து விட்டுச் சோகமயமாக நின்ற போது, வசந்தம் இன்னும் வந்திருக்காத போது, அவள் ஒரு முதிர்ந்த மரத்தின் அடியில் தன் உடலைப் படுத்திக் கொண்டு துயிலில் ஆழ்ந்தாள். அங்கே தான், அடையாளம் ஏதும் இடப்படாத, புற்கள் மூடி வளர்ந்த அந்தத் தாசியின் கல்லறை இன்றைக்கும் இருக்கிறது.

Inspiration from: Chillappathikaaram, Thirukkural, Sivakaamiyin Sapatham, Venkaiyin Mynthan, Lord of the Rings.

No comments: