உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல்;

.
உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல்; கணினிகள் முடக்கத்தால் பெரும் பரபரப்பு
உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கணினிகள் முடங்கின. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.cyber attack-1
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 99 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கணினிகளில் சட்டவிரோதமாகவும், திருட்டுத்தனமாகவும் புகுந்து தாக்குதல் நடத்துகிற ‘தி ஷேடோ புரோக்கர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற ஹேக்கர்கள்தான் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய ‘டூல்’களை (கருவிகளை) திருடியதாகவும், அவற்றை இணையதளத்தில் ஏலம் மூலம் விற்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
‘பாஸ்வேர்டு’

ஆனால் பின்னர் அந்த கருவிகள் இலவசமாக கிடைத்ததாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கான ‘பாஸ்வேர்டு’ கடந்த மாதம் 8–ந் தேதி வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிற வகையில்தான் அந்த டூல்களை பயன்படுத்துவதற்கான பாஸ்வேர்டுகளை வெளியிட்டதாகவும் ஹேக்கர்கள் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில், அந்த ‘டூல்’களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களால் ரஷியா, சீனா, உக்ரைன், தைவான் ஆகிய நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளின் கணினிகள் முடங்கின. இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இங்கிலாந்தில் சுகாதார சேவை பாதிப்பு

இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் தேசிய சுகாதார சேவை முடங்கிப்போய் விட்டது. 40 தேசிய சுகாதார சேவை அமைப்புகளும், சில மருத்துவ தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தான் உணர்ந்துள்ளதாக பி.பி.சி. கூறுகிறது.

இதன் காரணமாக அறுவை சிகிச்சைகள், நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளித்த அப்பாயிண்மெண்டுகள் ரத்தாகி உள்ளன.
ஸ்பெயின், ஜெர்மனி

ஸ்பெயின் நாட்டில் பிரசித்தி பெற்ற தொலை தொடர்பு நிறுவனம் டெலிபோனிகா, மின் நிறுவனம் இபெர்ட்ரோலா, கியாஸ் நேச்சுரல் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கணினிகளை மூடி விடுமாறு ஊழியர்களை அந்த நிறுவனங்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

ஜெர்மனியில் உள்ளூர் ரெயில் பயணத்துக்கான டிக்கெட்டுகளை வழங்கும் எந்திரங்கள், இத்தாலியில் பல்கலைக்கழக கணினி ஆய்வுக்கூடம் ஆகியவையும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
ரஷியாவுக்கு மோசமான பாதிப்பு
பிற எந்த நாடுகளையும் விட ரஷியாதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாம். இதை ரஷிய உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.

தனது நாட்டில் கணினிகள் இணைய தாக்குதலுக்கு ஆளானது குறித்து சீனா முறைப்படி எதுவும் கூறாவிட்டாலும், அதுவும் பாதிப்புக்குள்ளாகி இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. அங்கு பல்கலைக்கழக கணினி ஆய்வுக்கூடம் ஒன்றின் கணினிகள் முடக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் தெரிவித்தன.

இப்படி உலகமெங்கும் 75 ஆயிரம் புகார்கள் எழுந்துள்ளனவாம்.

ஆனால் வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான காஸ்பர்ஸ்கை, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டு தாக்குதல்கள் நடந்திருப்பதை பதிவு செய்துள்ளதாக கூறுகிறது.
மீண்டும் செயல்பட வைக்க பணம்

இணைய தாக்குதல் நடத்தி முடக்கிய ஒவ்வொரு கணினியையும் மீண்டும் செயல்பட வைப்பதற்கு 300 டாலர் முதல் 600 டாலர் வரையில் (சுமார் ரூ.19 ஆயிரத்து 500 முதல் ரூ.39 ஆயிரம் வரையில்) பிட்காயின்களை (இணையவழி பணம்) செலுத்துமாறு கணினி திரையில் தோன்றிய ‘வானாகிரை புரோகிராம்’ கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மேல்வேர் டெக் பிளாக்’ என்னும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், இணையவழி தாக்குதல் வைரஸ் பரவுவதை தான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வழிமுறையை கண்டறிந்ததாக தெரிவித்தார்.

கணினிகளை முடக்கும் வைரஸ்களில் இருந்து காக்கும் வழிமுறைகளை தனது என்ஜினீயர்கள் உருவாக்கி இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு உதவி வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் இந்த பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
nantri Thenee

No comments: