நினைவுகளில் நீ................ செ.பாஸ்கரன்

.


சென்றுவிடு
செய்திகளாய் காதில் வந்து விழும்
ஒற்றைப் பனை உதிர்த்துவிட்ட
காகோலையைப் போல்
மூப்பு வந்து பாலை மறந்த
கன்றுக்குட்டியைப்போல்
பார்வையில் மட்டுமல்ல
காற்றில் கூட கேட்கமுடியாத
நீண்ட தூரத்திற்கு சென்றுவிடு

செல்வதும் மறைவதும்
வானத்துச் சந்திரனுக்கு மட்டுமல்ல
உனக்கும் உள்ள உரிமைதான்
மனத்தைக் குத்தும் நினைவுகளை
அறுத்தெறி
மண்ணில் புதைந்த காலடிகளைத்
தேடுவதை நிறுத்து
கடல் காற்றில் தெறித்து விழுந்த
கண்ணீரைக் கரையவிடு
நீ நிமிர்ந்து நிற்பாய்
அவன் பின்னால் நடந்தது போதும்
முன்னேறு
காலச் சக்கரங்கள் உனக்காய் நிற்காது
உருட்டித் தள்ளுவது உன்னால் முடியும்
ஏதோ ஒரு மூலையில் வலியிருக்கும்
பாம்பு செட்டை விலக்குவதுபோல
தூக்கிப் போடு
காலத்தின் ஒத்தடத்தில் கரைந்துபோகும்

சென்றுவிடு 

No comments: