.
பேச்சுக் கலை கொண்டோரின் ஆற்றல் பிறரை எளிதில் அவர்கள் கொள்கை, கோட்பாட்டினை ஏற்க வைத்திடும்.
திருவள்ளுவர் சிறந்த பேச்சிற்கான இலக்கணம் பற்றிக் கூறும் போது,
“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் ”
வேட்ப மொழிவதாம் சொல் ”
என்கிறார்.
அதாவது சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
அத்தகைய சொல்வன்மை பெற்றோர் உலக அளவில், தமிழக அளவில் ஏராளமானோர் உண்டு.
வின்ஸ்டன் சர்ச்சில், பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்தவர், சிறந்த பேச்சாளர். அவர் பேச்சுக் கலையின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்.
“Of all the talents bestowed upon men, none is so precious as the gift of oratoy. He who enjoys it wields a power more durable than that of a great king. He is an independent force in this world.”
“மனிதனுக்கு உள்ளத் திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்குரியது பேச்சாற்றல். அதை சரியாக கைவரப் பெற்றவர்கள் அரசனை விட அதிகாரம் பெற்றவர். அந்தக் கலைக்கற்றவர்கள் இந்த உலகில் ஒரு விடுதலை பெற்ற ஆற்றலாக இயங்கக்கூடியவர்கள்,” என்கிறார்.
அதே போன்று சர்வாதிகாரத்தோடு பல யூத மக்களைக் கொன்று குவித்த ஹிட்லர் மிகச்சிறந்த பேச்சாளர். அவரைப் பற்றி வரலாற்றில் நாம் அறிந்து கொள்ளும்போது, அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற அரசியல் தலைவர்களை விட ஹிட்லர் இளையவர். அவருக்கு 43 வயதாகும் போது அவர் வேந்தராக (Chancellor) பதவி ஏற்கின்றார். மற்றவர்கள் அவரை விட பல வயது மூத்தவர்களாக 50-60 வயது உடையவர்களாக இருந்தனர். அதே போன்று அனைவரும் தங்கள் பேச்சினை எழுதி வைத்துக்கொண்டு படிப்பர், ஆனால் ஹிட்லர் தன் பேச்சினை எப்போதும் மனப்பாடம் செய்து கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் தான் பேசுவார். அதே போன்று அவர் பேசும்போது தன் கைகளை உயர்த்தி, காற்றில் அரைந்து ஜெர்மனிய மக்களுக்கு யூத மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படச்செய்வார். அவர் பேசுவதில் ஒரு நாடகத் தன்மை இருக்கும். ஆனால் உலக அளவில் சிறந்த பேச்சாளராக இருந்தும் சரியான பாதையை தேர்ந்தெடுக்காது இனப்படுகொலைச் செய்ததை வரலாறு அவரின் கருப்பு பக்கங்களாகவே பதிந்து இருக்கின்றது.
அமெரிக்காவில் நிற வெறிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தன் உரைகள் மூலம் சமத்துவத்தை எடுத்துரைத்த மார்ட்டின் லூதர் கிங் (martin luther king) சிறந்த பேச்சாளர். கறுப்பின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் போராட்டங்கள் அவரின் சிறந்த உரைகள் மூலமே மக்களைச் சென்றடைந்தது. 1963 ஆம் ஆண்டு அவர் உரையாற்றிய “எனக்கொரு கனவு உள்ளது (i have a dream)” என்ற உரை மிகச் சிறந்த உரையாக இன்றளவும் போற்றப்படுகின்றது.
அவரைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் மார்ட்டின் லூதர் கனவை, பராக் ஒபாமா நிறைவேற்றினார். ஒரு முறை அல்ல இருமுறை தொடர்ந்து அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். அவர் சிறந்த பேச்சாளர். 2006 ஆம் ஆண்டு சிறந்த மக்கள் தொடர்பாளர் என்ற வரிசையில் முதலாவதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்து விளங்கிய அரசியல் தலைவர்கள், பேச்சாளர்கள். தமிழக அளவில், தமிழ்நாட்டு வரலாற்றில் பல ஆண்டுகளாக சிந்தனை இன்றி உழன்ற மக்களை சிந்திக்க வைத்து அறிவு வழி காட்டிய ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தான். ஏதென்ஸ் நகரில் சாக்ரடீஸ் எப்படி வீதி விதியாகச் சென்று இளைஞர்களை தன் கருத்துகள் மூலம் சிந்திக்க வைத்தாரோ, அதே போன்ற ஒரு மிகப் பெரிய சிந்தனை எழுச்சியை தமிழ்நாடு வீதிகளில் ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.
அவர் பேச்சில் இலக்கிய நயம் இருந்ததில்லை, கொச்சைச் தமிழில் தான் உரையாற்றுவார். ஆனால் அந்த கொச்சைத்தமிழ் தான் கொத்தடிமைகளாக இருந்த நம் மக்களை மீட்டது. தமிழ் நாட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கம், அவர் உருவாக்கிய இயக்கம்தான் பல அறிஞர்களை, தலைவர்களை, சிறந்த பேச்சாளர்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அதில் முதன்மையானவர் அமெரிக்காவின் ஹேல்ஸ் பல்கலைக்கழகம் அறிஞர் என பட்டமளித்துச் சிறப்பித்த பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அவர் பேசும்போது உலக வரலாறும், உவமைகளும் அவரின் உரையில் தவழும். அவரின் மிகப்பெரியச் சிறப்பு, ஒரு கூட்டத்தில் பேசியதை அதே நாளில் வேறொரு கூட்டத்தில் பேசினாலும் அதே கருத்துக்கள் இருக்காது, அதே உவமைகள் இருக்காது. அந்த அளவிற்கு மடை திறந்த வெள்ளம் போல உரையாற்றும் ஆற்றல் பெற்றவர். சென்னை கன்னிமரா நூலகத்தில் அவர் கைப்படாத நூல்கள் இல்லை எனும் அளவிற்கு சிறந்த வாசிப்பாளர். அந்த வாசிப்புதான் அவரின் தனித்துவமான உரைகளுக்குக் காரணம் என்றால் அது மிகை அல்ல.
அவரைத்தொடர்ந்து தமிழ் நாட்டில் அனைத்து திராவிட அரசியல் தலைவர்களும் சிறந்த உரையாற்றும் ஆற்றலை பெற்றிருந்தனர் என்பது தான் வரலாறு.
அந்த உரைகள் மூலம் பல தலைவர்கள் ஒரு தலைமுறையை மாற்றியிருக்கின்றனர். பகுத்தறியும் அறிவே சிறந்தது என உணர வைத்திருக்கின்றனர். ஆதிக்கத்திற்கு எதிராக தங்கள் உரையின் மூலம் மட்டுமே மக்களைத் திரட்டி போராட வைத்திருக்கின்றனர். உலகளவில் சமத்துவம் மலர்ந்திருக்கிறது.
பேச்சாற்றல் மிகச் சிறந்த கலை. அதை ஹிட்லர் போல் தவறான வரலாற்று கருப்புப் பக்கங்களுக்கு பயன்படுத்தாமல், தந்தை பெரியார் போன்று, மார்ட்டின் லூதர் போன்று, சாக்ரடீஸ் போன்று அடிமைத்தளத்திலிருந்து விடுபட பயன்படுத்துவதே மக்களுக்குச் செய்யும் நன்மை என்பதை உணர்ந்து பேச்சாற்றல் கலையை கற்போம்.
1 comment:
Good one. Better to have an author if he/she has written or a person's name, if its compiled from another post or print media.
Post a Comment