அன்னையின் காத்திருப்பு - செ.பாஸ்கரன்

.

கருப்பையில் சுமந்து
கனகமுலை தந்து
காகம் குருவி பறவாது
காத்தெடுத்த கருணை வடிவம்.
அவளுக்காய்
நாம் ஒதுக்கிய சிறு பொழுது
அன்னையர் தினம்.
பத்துமாதம் தொடர்ந்து
வயிற்றில் சுமந்தவளுக்கு
நாம் கொடுப்பது
வருடத்தில் ஒருநாள்.
வார்த்தைகளை கற்றுத்தந்தவள்
நம் வரவுக்காய்
காத்திருக்கும் திருநாள்
முதியோர் இல்லங்களில்
விழித்திருக்கும்
பெரியவர்களின் பெருநாள்
வாசற் கதவைப் பார்த்துப் பார்த்து
ஏமார்ந்து போன அன்னையர்கள்
ஏராளம்
இன்னும் இருக்கிறார்கள்


உடல் அசைவற்றுக் கிடந்தாலும்
உள்ளம் அசைபோடுவது
பிள்ளைகளின் நினைவை மட்டும்தான்
பணம் தேடித் திரியும் வாழ்வில்
பாசத்தைத் தரக் காத்திருக்கும்
அன்புத் தெய்வம்
அம்மா மட்டும் தான்
இந்த ஒரு நாளிலாவது
அவள் தோற்றுப் போகாது இருக்கட்டும்.
பிள்ளை முகம் பார்த்து
பேசிச் சிரிக்கட்டும்
உன் சுவாசத்தின் வாசத்தை
அவள் நாசிகள் உணரட்டும்
மரணத்தைக் கூட
வென்றிடுவாள்  

No comments: