இலங்கையில் பாரதி --- அங்கம் 19 - முருகபூபதி

.
பாரதியார் எமது இலங்கையை சிங்களத்தீவு என்று வர்ணித்துவிட்டதாக வருந்திய தமிழ்த்தேசியவாதிகள் பற்றி அறிவோம். பாரதிக்கு இலங்கையின் தொன்மையான வரலாறு தெரியாதமையால்தான் அவ்வாறு அவர் எழுதியிருப்பதாக ஒருசாராரும், இலங்கையில் பெரும்பான்மையினராக சிங்கள மக்கள் வாழ்வதனால்தான் அவர் அவ்வாறு எழுதிவிட்டார் என்று மற்றும் ஒரு சாராரும், அவர் எப்படித்தான் எழுதினாலும் இலங்கை சிங்களத்தீவாகிவிடாது, மூவினங்களும் வாழும் தேசம் என்று இன்னும் ஒருசாராரும் பேசிவருகின்றனர்.
ருஷ்யப்புரட்சியை பாரதி வரவேற்றுப் பாடியதனால் அவரை அங்கு பலரும் படித்தனர், அவருடைய படைப்புகளை மொழிபெயர்த்தனர். பிஜித்தீவில் கரும்புத்தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து கூலி அடிமைகளாக அழைத்துச்செல்லப்பட்ட  தமிழர்களின் அவலத்தை பாரதியார், கேட்டிருப்பாய் காற்றே என்ற கவிதையில் கண்ணீருடன் சொல்லியிருப்பார்.




அதற்காக பிஜியில் வாழ்ந்தவர்கள் அவரை கொண்டாடியதாக ஆதாரங்கள் இல்லை. ஆனால்,  ருஷ்யாவில் ஜார் மன்னனின் வீழ்ச்சியையும் அங்கு நடந்த எழுச்சிப்போராட்டத்தையும் யுகப்புரட்சி என்று பாடியதனால் அங்கு வாழ்ந்த பலர் பாரதியை மேலும் மேலும் அறிந்துகொள்ள முயன்றனர்.
அங்கிருந்த நூலகங்களில் ருஷ்யமொழியில் பெயர்க்கப்பட்ட பாரதியின் கவிதைகள், கட்டுரைகள் இடம்பெற்றன. அவற்றைப் படித்த ஒரு கட்டிடத்தொழிலாளி தனது வேலையைத்துறந்துவிட்டு தமிழகம் வந்து அறிஞர் மு. வரதராசனிடம் தமிழ் கற்றார். அத்துடன் தமிழக இலக்கியங்களைப்பயின்றார்.




அவர்தான் பின்னாளில் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான சோவியத் அறிஞர் கலாநிதி வித்தாலி ஃபுர்னிக்கா.  தமிழகப்பித்தன்  என்ற புனைபெயரிலும் அறியப்பட்டவர்.
இவருக்கு இலங்கையிலும் தமிழகத்திலும் பல இலக்கிய நண்பர்கள் உருவானார்கள். ஜெயகாந்தனின் பல படைப்புகளை  ருஷ்யமொழியில் பெயர்த்திருக்கும் விதாலி ஃபுர்னிக்காவை தமிழ் இலக்கியத்தின்பால் வரச்செய்தவர் பாரதியே. பாரதி நூற்றாண்டு காலத்தில் மாஸ்கோவில் அமைக்கப்பட்ட குழுவின் நிருவாகச்செயலாளராகவும்  சிறப்பாக இயங்கியவர்தான் விதாலி ஃபுர்னிக்கா.


இலங்கையில் பாரதி தொடரை எழுதுபவரின் அருமை நண்பர். இவர் பற்றி ஜெயகாந்தன் நட்பில் பூத்த மலர் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
சோவியத் ஆராய்ச்சியுலகில் பாரதி என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த கட்டுரையின் தொடக்கம் இவ்வாறு அமைந்திருந்தது.
" இந்திய மகாகவியான சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தின நூற்றாண்டில் பாரதி பற்றிய சோவியத் யூனியனில் வெளிவந்துள்ள அவரது படைப்புக்களையும் பரிசீலிப்பது முற்றிலும் பொருத்தமேயாகும். மாஸ்கோவிலும் லெனின்கிராடிலும் உள்ள மேற்கல்வி நிலையங்களில் திராவிடவியல் அறிஞர்களைப் பயிற்றுவிக்கும் முறையான வகுப்புக்களைப் புகுத்தியதன் காரணமாகவே, பாரதி பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சியும் சாத்தியமாயிற்று" ( ஆதாரம் - சோவியத் நாடு இதழ்)
இக்கட்டுரை வெளியான இதழில் சோவியத் ஓவியர் மிகையீல் பெதரோவ் என்பவர் வரைந்த மகாகவி பாரதி ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அந்தவகையில் பாரதி அங்கிருந்த கல்வியாளர்கள், அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், படைப்பாளிகளிடம் மட்டுமன்றி ஓவியர்களிடத்திலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது புலனாகிறது.
பாரதியால் சிங்களத்தீவு என வர்ணிக்கப்பட்ட  நமது இலங்கையிலும் பாரதியின் சிந்தனைகள் சிங்கள மக்களிடம் பரவியிருந்தது என்பதற்கு ஆதாரமான சில தகவல் குறிப்புகளை இங்கு தருகின்றோம்.
கண்டியில் கல்ஹின்னையில் பிறந்து கல்வியில் முன்னேறி ஊடகவியலாளராகவும் பின்னர் சட்டத்தரணியாகவும்  தன்னை வளர்த்துக்கொண்ட  எஸ். எம். ஹனிபா பன்னூலாசிரியருமாவார்.
1927  இல் பிறந்த இவர் 2009 ஆம் ஆண்டில் மறைந்தார். கண்டி கல்ஹின்னையில் தமிழ் மன்றம் என்ற அமைப்பின் ஊடாக பல நூல்களை வெளியிட்டிருக்கும் ஹனிபா, பாரதியிடத்தில் மிகுந்த பற்றுள்ளவர். தினகரனிலும்  Observer  இலும் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கை வானொலியிலும் நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர்.
இலங்கையில் பாரதி நூற்றாண்டு காலப்பகுதியில் சிங்கள மக்கள் எளிதாகப்புரிந்துகொள்வதற்காக ஒரு சிறிய நூலை எழுதி தமது நண்பர் கே.ஜி. அமரதாசவிடம் வழங்கி அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.


பாரதியை சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவர் சிறுவயதில் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்திருந்தமையினால் தோன்றியிருக்கிறது.
அவர் பிறந்து வாழ்ந்த கண்டி கல்ஹின்ன பிரதேசம் சிங்கள மக்கள் செறிந்து வாழும் இடமாகும். அங்கு தமிழ்மன்றத்தை உருவாக்கி நீண்ட காலம் இயங்கச்செய்து, பல நூல்களையும் வெளியிட்டிருக்கும் ஹனிபா அவர்கள், பாரதி நூற்றாண்டு காலம் அறிந்து செய்த சேவை முன்னுதாரணமிக்கது.
பாரதியின் பக்தராகவே வாழ்ந்திருக்கும் அவர், கல்ஹின்னையில் ஆரம்ப வகுப்பு படிக்கும்வேளையில், நான்காம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் படித்த பாரதியின் கவிதை: "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்." வகுப்பு ஆசிரியர் அதனை அந்த சிறுவயதில்  அவரை மனப்பாடம் செய்யுமாறு தூண்டியதால், பாரதியை தொடர்ந்து கருத்தூன்றி பயின்றிருக்கிறார்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கருத்தியலும் அவருடைய மனதில் வித்தாகியது. உலகமெலாம் பரவச்செய்யும் அதேசமயம் அருகே வாழும் சிங்களச்சகோதரர்களுக்கும் பாரதியின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறவேண்டும் என்ற எண்ணக்கருவும் தோன்றியிருக்கிறது.
பாரதியை தொடர்ந்து பயின்று, எழுத்தாளராகியதும் பாரதி தொடர்பான கட்டுரைகளை வீரகேசரி, தினகரன்,  சிங்கப்பூர் தமிழ் முரசு முதலானவற்றில் எழுதினார்.
பாரதி நூற்றாண்டின்போதாவது " சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம் " என்று பாடிய பாரதியைப்பற்றி சிங்களம் தெரிந்தவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு பாரதியை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் பாரதியின் சுருக்கமான வரலாற்றை   முதலில்  தமிழில் எழுதியதாகவும் பின்னர் அதனை தமது நண்பரும் தமிழ் அபிமானியும் மொழிபெயர்ப்பாளருமான  கே.ஜி.அமரதாசவிடம் வழங்கி சிங்களத்தில் மொழிபெயர்த்ததாகவும் பதிவுசெய்திருக்கிறார்.
இவ்விடத்தில் கே.ஜி. அமரதாச பற்றிய சிறிய அறிமுகத்தையும் தரவேண்டியிருக்கிறது. இவர் இலங்கை கலாசார திணைக்களத்தின் உயர் அதிகாரியாகவும் சாகித்திய மண்டல அமைப்பின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர்.
கொழும்பில் வெளியான அனைத்து தமிழ் தினசரிகளையும் அவர் ஒழுங்காகப் படித்தார். ஈழத்து இலக்கியவாதிகளுடன் நெருக்கமான நட்புறவைப்பேணியவர்.


பேராசிரியர் கைலாசபதி மறைந்தபோது, அவர் நினைவாக ஆயுபோவன் சகோதரரே என்ற தலைப்பில் அவருக்கு பிரியாவிடை வழங்கும்   அஞ்சலிக்கவிதையை வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியவர்.
மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலத்திலேயே தமிழ்மொழியை சுயமாகக்கற்றவர். லேக்ஹவுஸ் வெளியீட்டுப்பிரிவில் பல வருடங்கள் பணியாற்றியவர். ஆரம்பத்தில் ஆனந்தவிகடன், கல்கி போன்ற தமிழக இதழ்களை விரும்பிப்படித்திருக்கும் அமரதாச, ஈழத்து இலக்கிய சிற்றேடுகளையும்  ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கியங்களையும் மண்வாசனை கமழும் பிரதேச இலக்கியப்படைப்புகளையும் ஆர்வமுடன் படித்து, பல தமிழ் எழுத்தாளர்களின் நண்பரானார்.
சரளமாக தமிழில் பேசும் இயல்பும் இவருக்கிருந்தமையால் பல தமிழ் எழுத்தாளர்கள் அவர் கொழும்பில் பணியாற்றிய கலாசார திணைக்களத்திற்கு அடிக்கடி சென்றனர்.
சில சிங்கள இலக்கியப்பிரதிகளையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அதேசமயம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியிலான கவிதைகளை சிங்களத்திற்கும் வரவாக்கியிருக்கிறார். இவ்வாறு பிறமொழி இலக்கியங்களை தமது தாய்மொழியாம் சிங்களத்திற்குத்  தந்துள்ள தாம்,  சகோதர மொழியான தமிழ் இலக்கியங்களையும்  சிங்கள மக்களுக்கு  தரவேண்டும் என்பதில் பெருமைப்படுவதாகவும் சொன்னவர்.
இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய மற்றும் ஒரு தமிழ் இலக்கிய அபிமானியான ரத்ன நாணயக்காரவும் அமரதாசவும் இணைந்து பாரதியின் சில கவிதைகளை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தனர்.
காலி  ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் மாணவரான ரத்ன நாணயக்கார, தாம் பாரதியின் கவிதைகளில் பேரார்வம் கொள்வதற்கு மூல காரணம் தமிழகப்பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் என்று குறிப்பிட்டுள்ளார்.
1974 இல் ' எதர சிட லியன பெம் கவி" என்ற நூலை எழுதியிருக்கும் ரத்னநாணயக்கார, பாப்லே நெருடா, மாயகவஸ்கி ஆகியோரின் கவிதைகளை சிங்களத்திற்கு தந்திருப்பவர். அத்துடன் இஸ்ரேலிய, செக்கஸ்லவாக்கிய, ருஷ்ய சிறுகதைகளையும் சிங்களத்தில் மொழிபெயர்த்திருப்பவர்.

சிங்கள திரைப்படச்சுவடிகள், தொலைக்காட்சி நாடக வசனச்சுவடிகளும் எழுதியிருக்கும் ரத்னநாணயக்கார, தொலைதூரத்திலிருந்து எமக்கு கிடைத்தவற்றை மொழிபெயர்த்திருப்பதுபோன்று அயலில் வாழும் தமிழ் இலக்கியத்தை சிங்களத்தில் தருவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கு சிறந்த முறையில் ஆக்கப்பட்ட தமிழ் - சிங்கள பேரகராதி  எம் வசம் இல்லாதிருந்ததுதான் அடிப்படைக்காரணம்  எனவும் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ( ஆதாரம்: வீரகேசரி வாரவெளியீடு டிசம்பர் 1982)
கே.ஜி. அமரதாசவும் ரத்ன நாணயக்காரவும் மொழிபெயர்த்திருந்த பாரதியின் கவிதைகள் சிங்களத்தில் பாரதி பத்ய என்ற பெயரில் வெளியானது. இதனை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்டது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், " இனங்களின் சமத்துவமே தேசிய ஐக்கியத்தின் அடிப்படை" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முன்னுரையில், " நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம். இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் - இந்தப்பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்" என்ற பாரதியின் வரிகளை வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், " தனது மக்களின் அபிலாஷைகளை தேவைகளை, ஏக்கங்களை, இலட்சியங்களை, மனச்சாட்சியைப் பிரதிபலிக்கும் ஒரு மகாகவி,  மனித குலம் முழுமையினதும் பொது அபிலாஷைகளின் தேவைகளின் ஏக்கங்களின் இலட்சியங்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாக மலரும்போதுதான் அவன் உலக மகாகவியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். மகாகவி பாரதியும் இந்த நியதிக்குட்பட்டவரே" எனவும் எழுதியிருந்தார்.
இலங்கையில் சிங்கள மக்களிடத்திலும் பாரதியை அறிமுகப்படுத்தியதில் எஸ். எம். ஹனிபா, கே.ஜி. அமரதாச, ரத்ன நாணயக்கார மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆற்றிய பங்களிப்பு காலந்தோறும் போற்றுதலுக்குரியது.
(தொடரும்)


No comments: