தமிழ் சினிமா

மாநகரம்


Maanagaram தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும். அதிலும் குறும்படம் எடுக்கும் இளைஞர்கள் தமிழ் சினிமாவில் தலையை காட்டிய பிறகு தான் கோலிவுட் வேறு ஒரு தளத்தில் பயணிக்க தொடங்கியது. தற்போது முழுக்க முழுக்க இளைஞர்களே ஒன்றிணைந்து ஒரு தரமான கதைக்களத்துடன் களம் இறங்கியிருக்கும் படம் தான் மாநகரம்.

கதைக்களம்

Maanagaramசென்னைக்கு வேலைக்கு வரும் ஸ்ரீ, ஆரம்பத்திலேயே வேறு ஒருவரை(சந்தீப்) தாக்க வரும் கும்பலிடம் தெரியாமல் மாட்டி, அந்த கும்பலிடம் தன் பணம், சான்றிதழ் அனைத்தையும் இழக்கின்றார்.
அதே நேரம் சந்தீப் தன் காதலிக்காக ஒருவரை தாக்க, போலிஸில் மாட்டுகிறார். போலிஸ் அவருடைய சித்தப்பா என்பதால் வெளியே விட, தாக்கப்பட்ட கும்பல் சந்தீப்பை தாக்க திட்டம் போடுகின்றது.
இதற்கிடையில் சென்னையையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒரு டானின் பையனை தெரியாமல் ஒரு கும்பல் கடத்துகின்றது. இந்த மூன்று கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றது. இவர்கள் என்ன ஆனார்கள் என்பதை ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

படத்தை பற்றிய அலசல்

சில வருடங்களுக்கு முன் நேரம் என்ற படத்தை பார்த்திருப்போம், கிட்டத்தட்ட அதேபாணி திரைக்கதை தான் இந்த மாநகரம். நான் லீனியராக திரைக்கதையை நகர்த்தி ஒரு கட்டத்தில் அனைத்தையும் இணைத்து ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கின்றது மாநகரம்.
ஸ்ரீ, சந்தீப், சார்லீ, ரெஜினா, முனிஷ்காந்த், இன்னும் பெயர் தெரியாத பல நடிகர்கள் அத்தனை யதார்த்தமாக நடித்துள்ளனர். அதிலும் குழந்தையை கடத்த முனிஷ்காந்தை தேர்ந்தெடுக்கும் ஒரு கும்பல், தவறான குழந்தையை அவர் கடத்திவிட்டு கிளைமேக்ஸ் வரை அவர் படும்பாடு திரையரங்கே சிரிப்பு சத்தத்தில் அதிர்கின்றது.
படத்தின் நிறைய இடத்தில் சிம்பாளிக் ஷாட் எட்டிப்பார்க்கின்றது. போகிற போக்கில் இயக்குனர் பல விஷயங்களை சொல்லிவிட்டார். BPO உங்கள் பேஷனா என்று ரெஜினா, ஸ்ரீயிடம் கேட்க, இன்ஜினியரிங் சான்றிதழை காட்டுவது, இன்ஜினியரிங் படித்தவர்கள் எல்லாருமே படித்த வேலையில் இல்லை என்பது ஒரு நொடியில் சொல்லிவிடுகின்றது.
அதேபோல் கிளைமேக்ஸில் ஸ்ரீ அனைவரையும் அடித்துவிட்டு எழுந்து நிற்கும் போது அவருக்கு பின்னால், கதம் கதம் போஸ்டர் இருப்பது எல்லாம் செம்ம ஐடியா சார். மேலும் ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடித்தவன் என ஒருவன் கர்வமாக சொல்ல, அடுத்த காட்சியிலேயே அவனுடைய (சென்ஸார்) இடத்தில் சந்தீப் ஆசிட் அடிப்பது என பல காட்சிகள் ரசிக்க வைக்கும்.
ஆனால், படம் ஆரம்பித்து ஒரு கட்டத்திற்கு மேல்... அட என்ன தான்பா சொல்ல வறீங்க, என்றும் சில குரல்கள் எழுகின்றது. இருந்தாலும் கிளைமேக்ஸில் அத்தனை முடிச்சுகளையும் ஒன்று சேர்க்கும் இடம் லோகேஷை தமிழ் சினிமாவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கலாம்.

க்ளாப்ஸ்

திரைக்கதை, ஒரு இடத்தில் கூட நம்மை நகரவிடவில்லை.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்துமே செம்ம ஸ்ட்ராங்காக உள்ளது. டெக்னிக்கல் டீமை தனியாகவே பாராட்டலாம்.
மேலும், பெயர் தெரியாதவர்கள் கூட உதவி செய்வார்கள் என்பது போல் படத்தில் பலரின் பெயரை சொல்லவே மாட்டார்கள்.
படத்தின் வசனங்கள் குறிப்பாக சென்னையில் இருந்துக்கொண்டே நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டே சென்னையை திட்டுபவர்களுக்கு செம்ம சவுக்கடி.

பல்ப்ஸ்

ஒரு சிலருக்கு (மசால பட விரும்பிகள்) மட்டும் கதை எங்கு போகின்றது என தெரியாமல் முழிக்க வாய்ப்புள்ளது.
மொத்தத்தில் மாநகரத்தை அனைவரும் தவிர்க்காமல் ஒரு விசிட் அடித்து விடுங்கள்.

நன்றி cineulagam.