மூலிகை பேசுகின்றன - 2. -நெல்லிக்கனி

.

கடையெழு வள்ளல்களில் கருணைமிகு தொண்டைமான்
       கனிவோடு அவ்வைக்குத் தந்தது நெல்லிக்கனி!
மடையிலா வெள்ளமென மானிடரின் நலமதை
       மாறாமல் மலர்த்திடும் மருத்துவ தேன்கனி
தடையிலா உயிர்ச்சத்து தந்திடும் தினந்தோறும்
       தாயினும் மேலாகத் தன்னிகர் கொண்டிடும்!
விடையிலா மூப்பினை விரட்டியே அடித்திட
       வைரமாய் ஒளிர்ந்திட வைட்டமின் தந்திடும்!

ஊணோடு சேர்த்திட உயரிய அறுசுவை
       உள்ளங்கை நெல்லியென உடலுக்கு நலமூட்டும்!
தேனோடு ஊறிய தித்திக்கும் நெல்லியால்
       தேகத்தை சீராக்கி தீர்க்கமாய் வளமூட்டும்!
வானோரின் அமுதென வைத்தியம் போற்றிட
       வளமான ஆரோக்கியம் வழங்கியே பலமூட்டும்!
வீனென நினைத்தே வீசிடும் கொட்டையால்
       வைத்திடும் தேனீர் வைத்திய சுகமூட்டும்!

தினமொரு நெல்லியை தொடர்ந்துநீ உண்டிட
       தீர்ந்திடும் மலச்சிக்கல் தெரிந்திடு பலனாகும்!
பணமேதும் இல்லாது பறந்திடும் புற்றுநோய்
       பயன்படுத்து நெல்லியை பக்குவமாய் குணமாகும்!
உணவோடு நாள்தோறும் ஊறுகாய் சேர்த்திட
       உடலுக்குள் கல்லீரல் ஒழுங்கெனப் பணியாற்றும்!
மனதினில் உறுதியாய் மனைக்கொரு நெல்லிமரம்
        மண்மீது வைத்திட மாறாது வளம்சேர்க்கும்!

ப.கண்ணன்சேகர். திமிரி