இலங்கையில் பாரதி - அங்கம் 13 -- முருகபூபதி

.
                                             
மாணவர் மாத இதழாக 15-01-1971 முதல் கொழும்பிலிருந்து வெளிவரத்தொடங்கிய குமரன், பின்னர் படிப்படியாக கலை, இலக்கிய, அறிவியல் படைப்புகளையும் மாக்ஸீய சிந்தனைகளின் அடிப்படையில் கட்டுரைகளையும் வழங்கத்தொடங்கியது.
தமது குமரன் இதழுக்கெனவே ஒரு வாசகர் குழாமை உருவாக்கிய ஆசிரியர் செ. கணேசலிங்கன் ஈழத்து இலக்கிய உலகில் மூத்த படைப்பாளியாவார். பல நூல்களின் ஆசிரியர். இவற்றுள் நாவல்களே அதிகம்.
கைலாசபதியின் தோழரான கணேசலிங்கனும் அவரைப்போன்றே மாக்ஸீய சிந்தனையாளராவார். கணேசலிங்கனின் செவ்வானம் நாவலுக்கு நீண்ட முன்னுரை எழுதியிருக்கும் கைலாசபதி, அதனை மேலும் விரிவாக்கி தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலையும் எழுதினார். 
இந்த நாவலுக்கு  எதிர்வினையாற்றியவர் தமிழகத்தைச்சேர்ந்த இலக்கிய விமர்சனத்துறையில் மிகுந்த கவனிப்புப்பெற்ற வெங்கட் சாமிநாதன். " மாக்ஸீயக்கல்லறையிலிருந்து ஒரு குரல்"  என்ற எதிர்வினை விமர்சனத்தை இவர் நடை இதழில் எழுதி சர்ச்சையை உருவாக்கினார்.


பின்னாளில் குறிப்பிட்ட எதிர்வினை,  என்.கே. மகாலிங்கம் நடத்திய பூரணி காலாண்டிதழிலும் மறுபிரசுரம் கண்டது. அதற்கு எதிர்வினையாற்றி பேராசிரியர் எம். ஏ. நுஃமான் மல்லிகையில் நீண்ட தொடர் எழுதினார். அதற்கும் எதிர்விமர்சனம் வந்தது. மு.பொன்னம்பலமும்  தமது எதிர்வினையை மல்லிகையிலேயே  எழுதினார்.
இவ்வாறு தொடர்ச்சியான விமர்சன எதிர்வினைகளுக்கு வித்திட்ட கைலாசபதிக்கும் செ. கணேசலிங்கனுக்கும் இடையே புரிந்துணர்வுமிக்க  தோழமைக்கு அப்பால் பாரதி தொடர்பாக மாற்றுக்கருத்துக்களே  இருந்தன.
கைலாஸின் பார்வைக்கும் கணேசலிங்கனின் பாரதி தொடர்பான பார்வைக்கும் இடையே மாக்ஸீய வெளிச்சத்திலேயே வேறுபாடுகள் இருந்தன. அதன் எதிரொலியை குமரன் இதழ்களிலும் பார்க்க முடிந்தது. தனது பார்வைக்கு ஆதார சுருதி சேர்க்கும் கட்டுரைகளையும் குமரனில் கணேசலிங்கன்  வரவாக்கினார். கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் விஞ்ஞானபூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 56 ஆவது இதழுடன் தடைப்பட்டு, மீண்டும் பாரதி நூற்றாண்டு காலத்தில் 1982 நவம்பர் மாதம் முதல் வெளிவந்தது.


ஆயினும், 1983 ஜூன் மாதத்திற்குப்பின்னர் குமரன் வெளியாகவில்லை. 
கொழும்பில் இனவாத வன்செயல்கள் நிகழ்ந்த சமயம் வெள்ளவத்தையில் அமைந்திருந்த கணேசலிங்கனின் விஜயலக்ஷ்மி புத்தகசாலையும் தீக்கிரையானது.  குமரன் 57 ஆவது இதழில் ஆசிரியர் கணேசலிங்கன் பின்வருமாறு எழுதுகிறார்:
" மீண்டும் சிந்தனை அலைகளை எழுப்ப ' குமரன்' வெளிவருவது கண்டு மகிழ்ச்சி" - என்று இந்திய நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். இங்கும் தமிழ்நாட்டிலிருந்தும் நண்பர்கள் அடிக்கடி குமரன் பற்றி நலம் விசாரித்துக்கொண்டேயிருந்தனர். மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. குமரனின் வெற்றிடத்தை வேறு எந்த இதழாலும் நிரப்ப முடியவில்லை. நண்பர் பலரின் ஆர்வம் , உறுதி, கூட்டுழைப்பாகவே குமரன் மீண்டும் வெளிவருகிறான். புதிய உருவில், புதிய சிந்தனைகளை நிட்சயம் தருவான். பாரதி நூற்றாண்டு விழாக்கள், நூல்கள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் அளப்பில.
ஆயினும், முழுமையான பாரதியை விஞ்ஞானபூர்வமாக எவரும் காட்ட முனையவில்லை. " பாரதி - யார்" என்ற புலவர் இராசாமணி அவர்கள் தொடர்கட்டுரை இக்குறையைத்தீர்க்கும். பாரதியை முழுமையாகத் தரிசிக்க உதவும். பாரதி பற்றிப்பரப்பப்படும் பல பொய்மைகளை ஆராய்வாளர் பலர் அறிவர். ஆயினும் வெளியே கூற அச்சம். தம் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற பயம். ' அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும்' என்ற பாரதி வரிகள்தான் நினைவில் வருகிறது.
கணேசலிங்கனின் இக்கருத்துக்கள் தொடர்பாக ஈழத்து இலக்கியப்பரப்பில் சர்ச்சைகளும் தோன்றின. பாரதியைத்தரிசிப்போர், அவரைப்பல்வேறு கோணங்களில் நின்றே பார்க்கின்றனர். 
விமர்சகர் பேராசிரியர் செ. யோகராசா, ' பாரதியியலுக்கு கைலாசபதியின் பங்களிப்பு' தொடர்பாக ஆய்வுசெய்தபொழுது, மேற்சொன்ன தரிசனங்களை பின்வருமாறு வகைப்படுத்தினார்.
1.            பாரதியின் வேதாந்த நெறிக்கு    அழுத்தம் கொடுக்கும் போக்கு ( ராஜாஜி, பி. ஶ்ரீ. முதலானோர்.)
2. தேசியப்போக்கிற்கு அழுத்தம் கொடுக்கும் போக்கு ( பலரும்)
3.                        சமூகச்சீர்திருத்த நோக்கிற்கு அழுத்தம் கொடுக்கும் போக்கு ( திராவிடர் கழகத்தினர் - தி.மு.க.வினர்)
4.      பொதுவுடைமைக்கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் போக்கு ( ஜீவானந்தம், ஆர். கே. கண்ணன், தொ.மு. சி. ரகுநாதன்)
5.        பாரதியை ' மகாகவி' யாகக்காணுகின்ற போக்கு ( வ.ரா., பாரதிதாசன் முதலானோர்)
6.          கவிதா ரசனைக்கு முதன்மை கொடுக்கும் போக்கு ( கு.ப. ராஜகோபாலன், பெ. கோ. சுந்தரராசன் முதலானோர்)
இவ்விதம் பாரதியை ஆய்வுசெய்தவர்களின் போக்குகளில் எவரும் எச்சந்தர்ப்பத்திலும் பாரதியைக் குற்றக்கூண்டில் நிறுத்திவைத்து விசாரிக்கவில்லை. ஆனால், குமரன் இதழில் வெளியான ஆய்வுகள் பாரதியைக் கேள்விக்குட்படுத்தின. மறுவாசிப்பு செய்யத்தூண்டின.
குமரனில் இராசாமணியின்  'பாரதி -யார்' செ. கணேசலிங்கனின் 'பாரதி பற்றிய பொய்மைகள்', டாக்டர் ந. தெய்வசுந்தரத்தின்  'பாரதியும் இந்திய விடுதலைப்போரும்'  ஆகியன கவனிப்புக்குரிய பதிவுகள்.
  குமரனின்     60  இதழ்களையும் மீளாய்வுசெய்துள்ள செ. யோகநாதன், " பாரதி பற்றிய புதிய பாட்டாளி வர்க்கக்கண்ணோட்டத்தை முதன் முதலில் வைத்தவன் குமரனே( 57 - 59 இதழ்கள்) தமிழ்நாட்டில் பாரதி பற்றி நூறு நூல்கள் வந்தபோதும் இத்தகைய விஞ்ஞானப்பார்வையை எவரும் முன்வைக்கவில்லை." எனக்குறிப்பிட்டுள்ளார்.


குமரனின் விஞ்ஞானப்பார்வை யாது...? அது கூறும் பாரதி பற்றிய பொய்மைகள் யாவை...? என்பன தொடர்பாக ஆராயும்பொழுது, கணேசலிங்கனும் தெய்வசுந்தரமும் இராசாமணியும் முன்வைக்கும் குற்ற உரைகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
(அ) பாரதி இந்திய சுதந்திர போராட்ட காலத்திலே தேசிய முதலாளித்துவ சக்திகளுக்கு துணை நின்றவர்.
(ஆ) ஆன்மீகப்பிடிப்பு இருந்தமையால் தொழிலாளர் வர்க்க கண்ணோட்டம் பாரதியிடத்தே இருக்கவில்லை.
(இ) 1918 இல் அவர் ஆங்கிலேய அரசுக்கு உறுதிமொழிகள் வழங்கி அரசியல் வீழ்ச்சியுற்றார்.
(ஈ) மார்க்சிஸ - லெனினிஸ கருத்துக்களை கற்றிருக்கவில்லை. அதனால் விஞ்ஞான சோஷலிஸம் பற்றிய அறிவு அவரிடம் இருக்க வில்லை.
(உ) ருஷ்யப்புரட்சி பற்றிய   பாரதியின் பார்வை கூர்மையானது அல்ல, கோணலானது.
(ஊ) பாரதி சந்தர்ப்பவாதக்கவிஞன்.
பாரதியின் முழுக்கருத்துக்களையும் ஏற்கமுடியாது என்று வாதிடும், அதற்கான சான்றுகளையும் தரவுகளையும் வெளியிடும் ஆய்வாளர்கள் ஈழத்து இலக்கியப்பரப்பில் மாத்திரமல்ல தமிழகத்திலும் காணப்படுகின்றனர்.
மேற்குறித்த குற்றப்பத்திரங்களுக்கு எதிர்வினையாற்றும் ஆய்வாளர்களில் பலர் தமது கண்ணோட்டத்தில் மார்க்ஸீய சிந்தனைகளின் அடிப்படையிலும் பாரதியை இனம்காண்பித்துள்ளனர். 
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றி தென்னிலங்கையில் வெளியான குமரன் துணிகரமான கருத்தியல்களை பதிவுசெய்ததுடன், யாழ். குடாநாட்டிலிருந்து வெளியாகும் இலக்கியச்சிற்றேடுகள் இந்த விவகாரத்தைத் தொடவில்லை என்றும் குற்றம் சுமத்தியது.
பாரதி பற்றிய பொய்மைகளைப்பரப்புவோர் கூர்மையடைந்துவரும் தேசியஇனப்பிரச்சினையில் தமது உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க மறுத்துவிடுவதாகவும் - மௌனம் சாதிப்பதாகவும் குமரன் 57 ஆவது இதழில் சுட்டிக்காட்டியது.
குமரனில் 1971- 1983 காலப்பகுதியில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட செம்பதிப்பு சென்னையில் 2006 ஆம் ஆண்டில் செ.கணேசலிங்கனால் தொகுத்து வெளியிடப்பட்டது. 


தாயகம்
முற்போக்குச்சிந்தனைக்களத்தை அடியொற்றி மாறுபட்ட மார்க்ஸீய சிந்தாந்த கோட்பாடுகளை பிரதிபலிக்கும் இலக்கிய அமைப்புகள் மலிந்த இலங்கையில், யாழ்ப்பாணத்தில் இயங்கிய தேசிய  கலை இலக்கியப்பேரவையினால் வெளியிடப்பட்ட சிற்றேடு தாயகம். இதன் ஆசிரியர் க. தணிகாசலம். 
1974 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் அதன் முதல் இதழ் வெளியானது. 
" தாயகத்தின் உதயம், பிற்போக்கு வர்க்கத்தினதும் மார்க்கத்தினதும் எடுபிடிகளாகி கலையையும் தம்மையும் சிறுமைப்படுத்திக்கொள்ளும் பேர்வழிகளுக்கும் அவர்களின் எஜமான வர்க்கத்திற்கும் பீதியை ஏற்படுத்தக்கூடும். " - என்ற பிரகடனத்துடன் தோன்றிய தாயகமும்  ஏனைய சிற்றேடுகள் சந்தித்த சோதனைகளைக்கடந்தது. இந்தத்தொடரில் முன்னர் குறிப்பிட்டவாறு இலக்கியச்சிற்றேடுகள் தோன்றுவதும் மறைவதும் - மறைந்தவை மீண்டும் உதயமாவதும் பின்னர் மறைவதும் தொடர்கதையே. இதில் அதிசயிப்பதற்கு ஒன்றும் இல்லை. 
எவரேனும் புதிய இலக்கிய இதழை தொடங்கும்பொழுது எவ்வளவு காலத்திற்கு நடத்துவீர்கள்...? என்ற கேள்வியும் பொதுமைப்படுத்தப்பட்டதே.
தாயகமும் குமரனைப்போன்று பாரதி நூற்றாண்டு காலத்தில் மீண்டும் வரக்கூடிய சாத்தியம் இருந்தும், அதனை வெளியிடும் தேசிய கலை இலக்கியப்பேரவையானது, குறித்த நூற்றாண்டு காலத்தில் தொடர் ஆய்வரங்குகளை நடத்தியதில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, அதில் வெற்றியும் கண்டது.
தாயகமும் ஏனைய இதழ்கள்போன்று பாரதி நூற்றாண்டு சிறப்பிதழ் வெளியிடாமல், மீண்டும் வெளிவரும் சாத்தியம் 1983 ஏப்ரிலில் செயலுருப்பெற்றதால் அதன் பின்னர் வரவாகிய ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே நடந்த ஆய்வரங்குக் கட்டுரைகள் இடம்பெற்றன.
மீண்டும் உதயமான தாயகத்தில், அதனை வெளியிட்ட அமைப்பின் ஆய்வரங்குப் பணிபற்றி சொல்லப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: " நூற்றாண்டு விழாக்கள் வெறும் இறுதிச்சடங்குகளல்ல. தாம் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல், பொருளாதார, கலாசாரத்தாக்கங்களுக்கு எதிர்நின்று, தாம் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் கடமைகளை நிறைவேற்றும் தமது வாழ்க்கைப்போராட்ட அனுபவங்களை -- தத்தமது ஆளுமைகளுக்கேற்ப தந்து சென்றவர்களின் பல்வேறு அறிவியற் கருத்துக்களையும் கலை, இலக்கியப்படைப்புகளையுமே நாம் இங்கு நினைவு கூருகின்றோம். இத்தகைய அநுபவங்களை தொகுத்துச்செழுமைப்படுத்துவதன் மூலமே மனிதகுல வரலாறு வளர்ச்சியடைந்து வருகிறது" 
மீண்டும் வெளிவரத்தொடங்கிய தாயகம் ( 1983 ஏப்ரில்) இதழில் ஆய்வரங்குக் கட்டுரை வரிசையில் முதலாவதாக கைலாசபதியின் கட்டுரையே வந்திருக்கவேண்டும். ஆயினும் அவர் எதிர்பாராதவிதமாக 1982 டிசம்பரில் மறைந்துவிட்டமையால், அவருடைய ஆய்வுரை அச்சுக்கு கிடைக்கப்பெறவில்லை. எனினும் கவிஞர் இ. முருகையன் 24-02-1982 இல் நடந்த அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை காலமாற்றங்களும் பாரதியும் வெளியானது.           அதனைத்தொடர்ந்து, ' தேசிய இயக்க நெறிகளும் பாரதியும்' ( கே. செந்திவேல்) பொருளியற் சிந்தனைகளும் பாரதியும் ( அ. ஜெயரட்ணம்) பாரதியும் பெண் விடுதலையும், ( சித்திரலேகா மௌனகுரு) வர்க்கங்களும் பாரதியும் (ந. இரவீந்திரன்) கலைகளும் பாரதியும் ( சி. மௌனகுரு) கல்வியியற் சிந்தனைகளும் பாரதியும் ( சிவ. ராஜேந்திரன்) நவீனத்துவமும் பாரதியும் ( எம்.ஏ. நுஃமான்) பாரதியும் இலங்கையும் ( சி. தில்லைநாதன்) என்பன அடுத்தடுத்து வெளியான தாயகம் இதழ்களில் வரவாகின.
                                       குறிப்பிட்ட ஆய்வுரைகள் அனைத்தும் ஆய்வரங்குகள் நடைபெற்றதன்பின்னர், 'பாரதி ஆய்வுகள்' என்ற பெயரில் நூலுருவில் வெளியிடப்படும் எனவும் அதன் விலை எவ்வளவு வரும் என்று நிச்சயிக்கப்படாதுபோனாலும் பதினைந்து ரூபாய் டிக்கட்டுகளை ( நூலின் பெறுமதியாகக் கணித்து) தேசிய கலை இலக்கியப்பேரவையினர் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக அறிவித்திருந்தபோதிலும் அவர்கள் மேற்கொண்ட நல்ல முயற்சி 1984 ஆம்  ஆண்டில்தான் சாத்தியமானது.
ஆய்வுரைத்தொகுப்பின் பெயர்: பாரதி பன்முகப்பார்வை.
இதுவரையில் வெளியான இறுதி அங்கங்களில் குறிப்பிடப்பட்ட மல்லிகை( ஆசிரியர் டொமினிக்ஜீவா) குமரன் ( செ. கணேசலிங்கன்) தாயகம் ( ஆசிரியர் க. தணிகாசலம்) ஆகிய இதழ்கள் மூன்றும் ஈழத்து இலக்கிய உலகின் முற்போக்கு முகாமிலிருந்து வெளிவந்திருந்தபோதிலும், அடிப்படையில் இவற்றின் ஆசிரியர்கள் தம்மை இடதுசாரிகள் எனவும் மார்க்ஸீயவாதிகள் எனவுமே பிரகடனப்படுத்திக்கொண்டவர்கள்.
ஆனால், இவர்கள் மூவரிடத்திலும் இவர்களால் வெளியிடப்பட்ட இதழ்களிடத்திலும் பாரதி தொடர்பான பார்வைகளில் வேறுபாடுகளும் முரண்பாடுகளுமே தூக்கலாகத் தென்பட்டிருந்தன.
இவர்களிலிருந்து முற்றாக வேறுபட்டிருந்த வேறு சிலரும் இவர்களின் கருத்தியல்களை மறுத்தவர்களும் பாரதியின் தாக்கத்திற்குட்பட்டு தமது நிலைப்பாடுகளைத் தாம் வெளியிட்ட இதழ்களில் பதிவுசெய்திருக்கிறார்கள்.
அவர்கள் யார்...? அத்தகைய இதழ்கள் எவை...? அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்)