பெண்ணியத்தின் புதியபோக்குகள் -- கௌரி அனந்தன்

.
   ( அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய  அனைத்துலக பெண்கள் தினவிழாவில், சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த படைப்பாளி கௌரி அனந்தன் நிகழ்த்திய உரை. )


ஆன்றோர்கள் சான்றோர்கள் நிறைந்த இந்த சபைக்கு என்னை சிறப்புரையாற்ற அழைத்தமைக்கு தெய்வீகனுக்கும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்துக்கும் முதலில் எனது நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.
இங்கே  எனக்கு  கொடுக்கப்பட்ட  தலைப்பு பெண்ணியத்தின் புதிய போக்குகள் என்பதாகும்.
" முதலில் பெண்ணியம் என்றால் என்ன...? " என்பதைப் பார்த்தோமானால்..
பெண்ணியம் என்ற வார்த்தைப் பிரயோகமானது, வெகுவாகவே மலினப்பட்டுப் போயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதன் உண்மையான அர்த்தமானது பல தரப்பினராலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுவாகவே, பெண்களின் சமூக நிலையை உயர்த்துவதை பிரதான நோக்காகக் கொண்ட கருத்தியல் பெண்ணிலைவாத கருத்தியல் என அழைக்கப்படுகிறது.




குடும்பம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஆண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும், அவர்கள் தாமாக முடிவெடுத்து அவர்கள் விருப்பப்படி  வாழ வேண்டும் என்பது இதன் மூலமாக வலியுறுத்தப்படுகிறது. எனினும் பெண்ணியம் என்பதற்கான ஒருபொதுவான வரைவிலக்கணம் இல்லை. ஏனெனில் அது காலத்துக்கு காலம் நாட்டுக்கு நாடு கருத்தியலுக்கு கருத்தியல் மாறுபட்டுச் செல்கிறது.
சென்ற நூற்றாண்டுவரை, பெண் என்பவள் ஆணின் உடைமை என்றும், அவனுக்கு ஆயுள் முழுவதும் சேவகம் செய்து அவனது சொல்லிற்குக் கட்டுப்பட்டிருக்கவேண்டியவள் என்றும் கருதப்பட்டது. சில படித்த மற்றும் பிரபுத்துவக் குடும்பங்களில் உள்ள பெண்களின் கருத்துகள் சில நேரங்களில் செவிமடுக்கப்படாலுமே அவளை ஒரு புத்திஜீவியாகவன்றி வெறும் போகப்பொருளாகவே பார்க்கும் சூழ்நிலையே பரவலாகக் காணப்பட்டது. அதனாலேயே பெரும்பாலான பெண்களுக்கு அன்றைய காலகட்டத்தில் கல்வி மறுக்கப்பட்டிருந்தது.


பெண்களின் ஆளுமையில் பாரியதொரு மாற்றத்தினை ஏற்படுத்திய காலகட்டமாக கடந்த நூற்றாண்டினைக் கருத முடியும். ஏனெனில் காலம் காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டுவந்த கல்வியறிவு சென்ற நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலேயே பெற்றுக்கொள்ளப்பட்டது.
பெண்விடுதலைக்கு அடிப்படையான கல்வி கற்கும் உரிமை பெறப்பட்ட  குறுகிய காலத்திலேயே சொத்துரிமை, குடும்ப வன்முறைகளிலிருந்து  தற்காத்துக்கொள்ளும் உரிமை, தக்க துணையினை தேர்ந்தெடுக்கும் உரிமை, தனது வாழ்க்கைப் பாதையினை யாரினது தலையீடுமின்றி தானே தீர்மானித்துக்கொள்ளும்  உரிமை போன்ற ஏனைய பல்வகை உரிமைகளையும் மீட்டெடுக்க அவர்கள் துணிச்சலுடன் களத்தில் இறங்கிவிட்டார்கள்.
இவை அனைத்துமே யாரோ தனி ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சிகர மாற்றம் என்பதைவிட  சமுதாயத்தில் பாதிக்கும் அதிகமாகவே காணப்படும் பெண் இனத்தின் கூட்டு விழிப்புணர்வு என்று சொல்லுவதே சாலப்பொருந்தும்.   இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  வீரியம் பெறத்தொடங்கிய  இந்த பெண்ணிய கூட்டு விழிப்புணர்வின்  வீச்சும்  வேகமும்  இந்த நூற்றாண்டின் குழந்தைகளான சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் அதீத வளர்ச்சியினைப்  பெற்றிருப்பதனை யாரும் மறுக்க முடியாது.
பெண்விடுதலை பற்றி பாரதியும்  காந்தியும் பெரியாரும் பேசியதைவிடவும்  அதிகமாகவே பெண்கள் பேசிவிட்டார்கள், போராடிவிட்டார்கள்.   ஆனால்,  அவற்றில் பெரும்பாலானவை வரலாற்றில்  பதியப்படாமல் காலவோட்டத்தில்  ஆயிரத்தில் ஒன்றாக இலட்சத்தில்  ஒன்றாக கோடியில் ஒன்றாக அமுங்கிப் போய்விட்டன. ஏனெனில்  போராடியவர்கள் யாரும் தமது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டும்  என  நினைத்து களத்தில் இறங்கவில்லை.


மாறாக பெண்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கில் அர்ப்பணிப்புடன் போராடினார்கள்.  ஆனால்,  தற்போது சமூகவலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்களின் இவ்வாறான ஒவ்வொரு போராட்டங்களும் காலவோட்டத்தின் ஏதோவொரு பக்கத்தில் பதியப்பட்டுக்கொண்டே வருகிறது.
சமூகவலைத்தளங்களின் ஆரம்பகட்டத்தினை எடுத்து நோகினோம் என்றால், அம்பை,  குட்டிரேவதி  போன்றோர்  எழுத்தாளர்களாக மட்டுமன்றி  பெண்ணிய செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்தியதில் Blogs  இற்குப் பெரும் பங்கு இருக்கிறது.
ஆனால்,  ஆரம்பத்தில் பெண்கள் வீட்டினை விட்டு வெளியே வரும்போது  எத்தகைய எதிர்ப்பு  மனோ நிலை காணப்பட்டதோ அதே போன்றுதான்  தற்போது பெண்கள் இவ்வாறு பொதுவெளிக்கு வருவது பலருக்கு  எரிச்சலையே   ஏற்படுத்தியிருந்தது. தேவையே இல்லாமல் அவர்கள் மீது  சேற்றினை வாரியிறைக்கத் தொடங்கியிருந்தார்கள்.
அதிலும் குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் மீது வைக்கப்படும் வசவுச் சொற்கள் அபரிமிதமானவை. அதிலும் பல சக ஆண் எழுத்தாளர்களால் வைக்கப்படுவதே  மிகவும்  வேதனைக்குரிய விடயமாக  இருக்கிறது.
இதற்கு மிகச் சிறந்த  உதாரணம் : எழுத்தாளர் ஜெயமோகனின் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள்.  இவரது பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால்  பெரும்பாலானவை பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை நல்லெண்ணத்துடன்  விமர்சிப்பதாக அல்லாமல் தனிப்பட்ட ரீதியில் ஒரு  பெண்ணாக மட்டந்தட்டுபவையாகவே  இருக்கும். சமீபத்தில் கூட சிங்கப்பூர்  பெண் எழுத்தாளர்களைக்  குறிவைத்து மிகவும் மோசமான முறையில்   எழுதப்பட்ட   பதிவுகளைக் காணலாம்.
நானும் கூட  எனது இரண்டாவது நாவலான பெயரிலியை அவருக்கு வழங்கியிருந்தேன்.   இன்னும் அதைப் பற்றி எந்தக் குறிப்பையும் காணவில்லை.  ஒருவேளை அடுத்த முறை வசை பாடுவதற்காகத் தனியே   எடுத்து வைத்திருக்கிறாரோ   தெரியவில்லை. அல்லது படிப்பதற்கே  அருகதையற்றது  என  எண்ணி  தூக்கிவீசியும் இருக்கலாம்.  அது  அவரது சுதந்திரம்.
ஆனால்,  நான் இங்கே சொல்ல வந்தது என்னவென்றால், சமூகவலைத்தளங்களின்  வருகைக்கு முன்னர் எனின் ஒரு பெண் படைப்பாளியினால்  இத்தகைய கடும் விமர்சனங்களை எதிர்கொள்வது  என்பது   மிகவும் சவாலான விடயமாகவே இருந்தது. அவரது   குடும்பமே   ஒன்று சேர்ந்து அதன் பின்னர் அவரை மேற்கொண்டு  எதுவும் எழுதவிடாமல்   செய்துவிடும்.


ஆனால் , இன்றைய  சூழ்நிலையில், சமூகவலைத் தளங்களின் வருகையின் பின்னர் இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் ஆதரவளிக்க முன்பின் பார்த்திராத எத்தனையோ நல்ல உள்ளங்கள் உதவிக்கரம்   நீட்டுகின்றன.
ஆனால்,  இந்த நெகிழ்ச்சிப் போக்கினையே தவறாகப் பயன்படுத்தி பிரபலம் தேடிக்கொள்ள நினைக்கும்  ஒரு  சில பெண்களும் இல்லாமலில்லை.
வெறுமனே ஆண்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதுதான் பெண்ணியம்  என்ற  ரீதியில்  இவர்களது கருத்துக்கள் அமைந்திருக்கும்.
உதாரணத்துக்கு ஒன்று சொல்லவேண்டும் என்றால்,  "எப்போது உனது கணவன் அதிகாலையில் எழுந்து  உன்னிடம் தேனீர் கேட்கவில்லையோ அன்று  நீ சமவுரிமையினைப் பெற்றுவிட்டாய்" என்பதாக  அவர்களது   பெண்ணிய  நிலைப்பாடு  இருக்கிறது.
இங்கு "காலையில் எழுவது தேனீருடன் தான் என்பது ஆணாதிக்கமல்ல. அதற்குள்  அன்பினை ஊற்றிக் கொடுத்து தன் முகத்தில் விழிக்கச் செய்யும்  பெண்ணினது  அன்பின் ஆதிக்கமாகவே   நான் கருதுகிறேன்.
அத்துடன் பொதுவாகவே பொதுவெளியில் இயங்கும் பல பெண்களைப் போலவே  இவர்களுக்கும்  ஆண்களிடமிருந்து பல அழைப்புகளும் தேவையில்லாத  கருத்தூட்டங்களும் வரும்போது  அவர்கள் அத்துடனேயே  அவர்களை  எதுவும் பேசாமல் தடை செய்ய முடியும்.  ஆனால்,  அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பொதுவெளியில் இட்டு அவமானப்படுத்த நினைக்கும் போது குறுகிய காலத்தில் பிரபலம் அடைய முடிந்தாலும் காலவோட்டத்தில் தகராறு பிடித்த பெண் என முத்திரை குத்தப்பட்டு பலரால் ஒதுக்கப்படும் நிலைக்கு ஆளாகக்கூடும்.
இங்கு நான் வலியுறுத்த விரும்பும் விடயம் என்னவென்றால் ஒரு பெண் பொதுவெளியில்  தன்னை பலம்மிக்கவளாகக் காட்டிக்கொள்வது வரவேற்கத்தக்கதே.  ஆனால்,  அந்தப் பலம் என்பது எதிராளியின் பலவீனத்தின் மீது அடித்துத் தான் எடுப்பேன் என்றால் ஏனையோர் நெருங்க அச்சப்படுவர்.   அது  ஒரு பெண்ணுக்கு  ஆரம்பத்தில் காவல் போல் தோன்றினாலுமே காலவோட்டத்தில் எதிராளி யார்...?  என்று சரிவர அறியாத சந்தர்ப்பங்களிலும் கூட பிரயோகிக்கப்படும் போது அது  அவருக்கு எதிராகவே வந்து முடியும்.
பெண்ணியம் என்பதன் அடிநாதமானது பெண்கள் சார்ந்தது என்பதற்கு அப்பால் முதலில் பொதுவான சராசரி மனித நேயத்தினைப் போற்றுவதாக  இருக்கவேண்டும்.
ஆண்கள் மீது இத்தகைய அதீத வெறுப்பினையும் உமிழும் பெண்களில் பெரும்பாலானோரின் மனதில், பெண்ணின் உரிமை என்பது ஆண்களின் சட்டைப் பைக்குள் தான் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
அதனாலேயே இத்தகைய பெண்ணிய விழிப்புணர்வுப் போராட்டங்கள் பல,   ஆண் வர்க்க எதிர்ப்பாக இலகுவில் திசை திருப்பப்பட்டுவிடுகின்றன. இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல,  மனித குலத்துக்கே எதிரானதும் கூட.   ஏனெனில் பெண்களுக்கு  எத்தகைய சுதந்திரமும் உரிமைகளும் உள்ளனவோ அதே சுதந்திரமும் உரிமைகளும் ஆண்களுக்கும் உண்டு. ஒரு சாராரின் உரிமைகளைப் பறித்தெடுத்து இன்னொருவருக்குப் பெற்றுக்கொடுக்க முடியாது.
ஒரு சில பெண்களின் இத்தகைய செயற்பாடுகளால், ஆண்கள் மட்டுமல்ல  பல திறமை மிக்க பெண்களே பெண்ணியம் என்ற வார்த்தையினைக்  கேட்டாலே காததூரம் ஓடிவிடும் நிலமை உருவாகியிருக்கிறது.
----0----
(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில், சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த படைப்பாளி கௌரி அனந்தன் நிகழ்த்திய உரை.)