ரஜனிக்கு ஒரு மடல் ப . தெய்வீகன்

.
அன்புள்ள ரஜினி அவர்களுக்கு
"தலைவா தலைவா" என்று உங்கள் படம் வெளியாகும்போதெல்லாம் கட் - அவுட்டுக்கு பாலூற்றும் 'உயிரிலும் மேலான' ரசிகர்களை கொண்ட தமிழினத்தில் பிறந்த ஈனப்பிறவி ஒன்று எழுதிக்கொள்வது.
நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வரப்போவதாக அண்மையில் வெளியான செய்தி கிட்டத்தட்ட உங்களது அடுத்த படத்துக்கான அறிவிப்புபோலவே ஏக பரபரப்புடன் எல்லா திசையிலும் அதிரத்தொடங்கியது. நானும் ஏதோ நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் "எந்திரன் - 2" படத்தின் கிளைமக்ஸ் காட்சியைத்தான் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்போகிறார்களோ என்று நினைத்தேன். ஆனால், கிட்டத்தட்ட அதேபோன்றதொரு ஸ்டண்ட் விளையாட்டை காட்டுவதற்காக லைக்கா நிறுவனத்தின் வீடுகளை கையளிப்பதற்குத்தான் யாழ்ப்பாணத்துக்கு வருகிறீர்கள் என்று பின்னர் அறிந்துகொண்டேன். பரவாயில்லை. நீங்கள் ஒரு நடிகர். எல்லா விடயத்திலும் அதை கைக்கொள்வதில் எங்களுக்கெல்லாம் பரம திருப்தி. அவை உங்கள் சம்பந்தப்பட்ட விடயம். நாங்கள் தலையிடமாட்டோம்.
ஆனால், திடீரென்று பயணத்தை ரத்து செய்யப்போவதாக நீங்கள் அறிவித்த கையோடு உங்கள் கைச்சாத்திடப்பட்ட கடிதம் ஒன்றை ஊடகங்களில் காணப்பெற்றேன். "சிவாஜி" படத்தில் நீங்கள் அமெரிக்காவிருந்து வந்து ஆஸ்பத்திரி கட்டுவதற்கு முயுற்சிக்கும்போது லஞ்சம் கேட்க நீங்கள் கொடுப்பீர்களே ஒரு ஜெர்க் மூவ்மென்ற். அதுபோல ஷாக் ஆகிவிட்டேன். ஆனால், பயணம் ரத்தானதைவிட நீங்கள் அந்த கடிதத்தில் எழுதியிருக்கும் விடயங்கள்தான் நான் இந்த கடிதத்தை எழுதுவதற்கே காரணம்.



புனிதப்போர் நடந்த ஈழத்தை பார்வையிட விரும்புவதாக கூறுகிறீர்கள், ஈழத்துக்கு மக்களை பார்க்க விரும்பியதாக சொல்கிறீர்கள். போனபோக்கில் எதை எதையோ எல்லாம் அந்த கடிதத்தில் எழுதி உருகியுள்ளீர்கள்.
எனக்கு பயங்கர ஆச்சரியம். அதைவிட ஆத்திரம்தான் அதிகம்.
இங்கிலாந்திலிருந்து டேவிட் கமரூன்கூட வந்து பார்த்துவிட்டுப்போன ஈழத்தை பக்கத்திலிருந்த "படையப்பா" நீங்கள் கண்டு தரிசிக்க வாய்ப்பு வரவில்லையே என்பதெல்லாம் ஆச்சரியமில்லை. ஏனென்றால் நீங்கள் பக்கா அரசியல் அங்கிடுதத்தி!
நேற்று அரசியலுக்கு வந்த தீபாவின் புருஷன்கூட கட்சி தொடங்கிவிட்ட தமிழக அரசியலுக்குள் இன்றுவரைக்கும் உங்களால் எந்த ஆணியும் பிடுங்க முடியாலிருப்பதை கண்டுகூட ஆச்சரியமில்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு பக்கா வியாபாரி!
உங்களை தமது ஆதர்ஷமாகக்கொண்டு தொழிலுக்கு வந்த நடிகர் லோரன்ஸ் போன்றவர்களே மக்களுக்காக வீதியில் இறங்கி - பணத்தை கொடுத்து - ஏதோ நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றபோது நீங்கள் மாத்திரம் தொடர்ந்து உலக தமிழர்கள் அனைவரையும் ஓயாது சுரண்டி சேமித்து வருகிறீர்களே. அதுகூட ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவ்வளவுக்கு நம்மாக்கள் கேணைப்பயல்கள்!
ஒக்கனேக்கல் குடிநீர்த்திட்ட விவகாரத்தில் கர்நாடாகவுக்கு எதிராக ஒரு கருத்தை கூறிவிட்டு பிறகு அங்கு உங்களது "குசேலன்" படத்தை ஓட்டவேண்டும் என்பதற்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டு குப்புற விழுந்தபோது உங்கள் அரசியல் அம்மணம் அவ்வளவும் முழுதாக தெரிந்த பின்னரும் உங்களை தமிழகம் இன்னமும் "சுப்பர் ஸ்டார் சுப்பர் ஸ்டார்" என்று கொண்டாடி வருகிறதே, அதுகூட எனக்கு ஆச்சரியமில்லை. ஏனென்றால், அரசியலில் நீங்கள் சோவின் கைப்பிள்ளை.
என்னுடைய மிகப்பெரிய ஆச்சரியமும் ஆத்திரமும் என்னென்றால் -
உங்கள் கடிதத்தில் - யாழ்ப்பாணம் சென்று மாவீரர்கள் சுவாசித்த காற்றை நீங்களும் சுவாசிக்க விரும்பியதாக விட்டீர்களே பாருங்கள் ஒரு வாணம். உங்களுக்கு யார் சார் இதெல்லாம் சொல்லித்தந்தது. அப்படிப்பட்ட அவதாரங்கள் எல்லாம் உங்களது அண்டை நாட்டில் இருந்துள்ளார்கள் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? உங்களது ஆஸ்தான ஆலோசகர் சோவும் போய் சேர்ந்துவிட்ட இந்த நிலையில் இப்படியொரு கடிதத்தை எழுத உங்களால் எப்படி முடிந்தது?
வேண்டாம் பாஸ். விட்டுவிடுங்கள். அவர்களை மாத்திரம் விட்டுவிடுங்கள். எங்கள் மண்ணிலேயே அவர்களை வைத்து அரசியல் செய்பவர்களின் அலப்பறை தாங்கமுடியாமல் மக்கள் அந்த சுத்திகரிப்பை நடத்துவதற்கு தற்போது வீதிக்கு வந்துவிட்டார்கள். நீங்களும் அந்த பழி பாவத்தில் கலந்துவிடாதீர்கள்.
உங்களது வழக்கமான மிளகாய்களுக்காக எங்கள் மண்டைகள் எப்போது வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறதே, பிறகு ஏன் இதுபோன்ற ரிஸ்க்!
"தீ" படத்துக்கு பின்னர் இலங்கை பக்கம் ஏறெடுத்துக்கூட பார்க்காமல் - எந்த கூச்சமும் இல்லாமல் - இவ்வளவு காலமும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களிடமும் உங்கள் படங்களை ஓட்டி ஓட்டி பணத்தை உறிஞ்சியபோதெல்லாம் ஞாபகத்துக்கு வராத இந்த மாவீரர்களையும் மக்களையும் இப்போததான் உங்கள் ராகவேந்திர சுவாமிகள் கனவில் காட்டினாரா?
ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன் பாஸ்!
ஈழத்தமிழன் ஒருவன் உங்கள் மண்ணுக்கு வந்து கோடிகோடியாக கொட்டிக்கொடுத்து உங்களை வைத்து படம் எடுத்தால்தான் எங்கள் மண்ணுக்கு வருவீர்கள் என்ற கேவலமான நிலையிலுள்ள நீங்கள், எங்கள் மண்ணுக்கு மாத்திரமல்ல எங்கள் மண்ணிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்து வாடுகிறார்களே அவர்களின் முகாம்களுக்குக்கூட போய் விடாதீர்கள்.
வேதனை! அவமானம்!! வெட்கம்!!
பிறகுறிப்பு - உங்களிடம் ஈழதமிழர்களாகிய நாங்கள் முன்வைக்கும் ஒரே ஒரு விண்ணப்பம். உங்களது அடுத்த படத்தில் திருமாவளவன், திருமுருகன் காந்தி போன்ற சாகாவரம் பெற்ற நடிகமணிகளுக்கு ஏதாவதொரு வேடம் கொடுத்து கரை சேர்த்துவிடுங்கள். எங்களுக்கு பிரச்சினையிராது.
கடைசியாக ஒருவேண்டுகோள்! லைக்காவை மறந்தாலும் வைகோவை மறந்துவிடாதீர்கள்.

நன்றி முகபுத்தகம்