கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 24 வது நாளாகவும் தொடர்கின்றது.!
முன்னாள் புலி உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்..!
பஷில் பிணையில் விடுதலை.!
அவுஸ்திரேலியாவிலுள்ள சந்தேக நபரை சர்வதேச பொலிஸார் மூலம் கைது செய்யவும் ; கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் நியமனம் 1029 பேருக்கு வழங்கி வைப்பு
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மெளன பேரணியில்...
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 24 வது நாளாகவும் தொடர்கின்றது.!
15/03/2017 கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த 20.02,2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு 24 வது நாளாகவும் இன்று திங்கட்கிழமை தொடர்கின்றது.
எனினும், இதுவரை அவர்களுக்கான தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை. நன்றி வீரகேசரி
முன்னாள் புலி உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்..!
15/03/2017 முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் வெள்ளவாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, விளக்கமறியலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவாய பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினுடாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, அண்மையில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரான பெண், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஒருவரும், இலங்கை இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பஷில் பிணையில் விடுதலை.!
15/03/2017 முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான இரண்டு கோடியே 90 இலட்சம் ரூபா நிதியை பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு இலட்சம் பஞ்சாங்க கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பஷில் ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலியாவிலுள்ள சந்தேக நபரை சர்வதேச பொலிஸார் மூலம் கைது செய்யவும் ; கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு
14/03/2017 பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஆறாவது சந்தேக நபரை சர்வதேச பொலிஸார் மூலம் கைது செய்யுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆறாவது சந்தேக நபரான கண்ணன் அல்லது அனோ ஜன் அல்லது வெற்றி என அழைக்கப்படுபவர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் இவரை விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச பொலிஸார் மூலம் கைது செய்வதற்கான அனுமதியினை பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த ஆறாவது சந்தேக நபரை சர்வதேச பொலிஸ் மூலம் கைது செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் தொடர்ந்தும் அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி மற்றும் அர்ச்சுனா ஆகியோர் கோரியிருந்தனர்.
இதற்கு பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அநுராதபுரத்திலேயே வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணைகளை முடி வுறுத்தி குறித்த நபர்களை வவுனியா சிறைச் சாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் கட்ட ளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஆசிரியர் நியமனம் 1029 பேருக்கு வழங்கி வைப்பு
13/03/2017 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய கலாசாலையில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வடமாகாண சபையால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த நியமனங்களை வழங்கி வைத்ததுடன் வடமாகாண சபையின் கல்வியமைச்சர் குருகுலராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக 1029 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மெளன பேரணியில்...
13/03/2017 மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் 21 ஆவது நாளாக இன்று தங்களது சத்தியாகிரக போரட்டத்தை மௌன போராட்டமாக தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் பட்டதாரிகள் நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கள் செய்ததை அடுத்து இன்றைய தினம் மெளனமான முறையில் இந்த கவனயீர்ப்பு பேரணியை நடத்தி வருகின்றனர்.
வேலையற்ற பட்டதாரிகளின் மெளன கவனயீர்ப்பு பேரணியானது இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பித்து, மட்டக்களப்பு பஸ் நிலையம் வரைக்கும் சென்று அங்கிருந்து வெள்ளை பாலத்தால் உப்புக் கராச்சி வழியாக, யங்சன் சென்று பிரதான வீதி வழியாக மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.
நன்றி வீரகேசரி