.
"அரசு இதிலை ஏறேல்லையோ?" முன்னே நின்ற குமார் கத்தினான்.
"நிச்சயமாக" என்றபடி இராட்சத றோலர் கோஸ்டரை நோக்கி முன்னேறினார் அரசு.
“நிச்சயமாக” என்பது அரசு அடிக்கடி பாவிக்கும் ஒரு சொல். கூட்டத்தினிடையே நீந்தியபடி அவரைப் பின் தொடர்ந்தோம். இருதய வியாதி உள்ளவர்கள் இதில் ஏறக்கூடாது என்ற எச்சரிப்புப் பலகை வழமை போலவே இங்கும் வைக்கப்பட்டிருந்தது அரசுவுக்குச் சினத்தை கிளப்பியது.
“ஹாட் அட்டாக்காவது கத்தரிக்காயாவது” சொல்லிக்கொண்டே றோலர் கோஸ்டர் சவாரி புறப்படும் இடத்திற்கு போகும் படிகளிலேறியவரை நாங்கள் தொடர்ந்தோம்.
அரசுவுக்கு முன்பு ஏதோ இருதய வியாதி வந்திருக்க வேண்டும் அல்லது பரம்பரை வியாதியாயிருக்கக்கூடும். அவரோ அதைப்பற்றி சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
போகாதே போகாதே என்ற பாணியில் கீழே நின்றிருந்த மனைவி கமலத்தின் பேச்சையும் கேட்காமல் இதில் ஏறத் துணிந்த அரசுவை என்ன செய்வது என்று எவருக்கும் தெரியவில்லை. இருபது மீற்றருக்கு உயர்த்தி செங்குத்தாக கீழ் விழுத்தி பிறகு இரண்டு முறை தலை கீழாகத்தொங்கும் லூப் அடித்து கூட்டத்தை அலற வைக்கும் கோல்ட் கோஸ்டிலுள்ள பிசாசுகளில் ஒன்றுதான் இந்த றோலர் கோஸ்டர்.
இதற்கு சூறாவளி என்று பெயர் வேறு. நாங்கள் டிக்கெட் வரிசையில் நிற்கையில் தலை கீழாகத்தொங்கியபடி ஒரு கூட்டம் அலறியபடி கடந்து சென்றது.
அரசு எப்படி இந்தக்; கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார் என்று பஸ்சில் ஏறியபோதே எனக்கு வியப்பாக இருந்தது. அரசுவுக்கு குறைந்தது 60 ஐத் தொடும் வயதாவது இருக்க வேண்டும். அரசுவையும் கமலத்தையும் தவிர இந்தப் பயணத்தில் வந்த அனைவருக்கும் நாற்பதுக்குள்தான். நானும் மனைவியும்; இந்த பயணத்தில் தொத்திக் கொண்டது கடைசி நேரத்தில்;. 6 குடும்பங்களில் ஒரு குடும்பம் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனதால் அவர்களின் இடம் எமக்குக் கிடைத்தது. இந்த குருhப்பிலுள்ளவர்களில் குமாரைத்தவிர மற்றவர்களை எங்களுக்கு முன்பே தெரிந்திருக்கவில்லை. அவன் தான் இந்த பயண ஒருங்கமைப்பாளன்.
வாடகைக்கு எடுத்த பஸ் ஒன்றில் இரவு புறப்பட்டு அதிகாலையில் குயீன்ஸ்லாந்து எல்லையிலுள்ள எமது விடுதிக்கு வர 12 மணித்தியாலம் பிடித்தது.
எனது சீற்றுக்கு இடது புறமாக இருந்த அரசுவுக்கு இலக்கிய ஆர்வம் இருந்தமையால் நானும் அரசுவும் ஒரே சீட்டுக்கு இடம் மாறினோம.; இதனால் மனைவிமாருக்கும் கட்டாய இடமாற்றம் கிடைத்தது. அரசு நிற்பாடாமல் ஓடும் டீசல்; எஞ்சின் போல தொடர்ந்து பேசக்கூடியவர். இதனால் எனக்குக் பேச கிடைத்தது சொற்பமே. பேசும் போது அவரது பெரும்பாலான பற்களும் தெரிந்தன.
பஸ்சில் அதிக நேரம்; நித்திரை கொள்ளாமல் இருந்தவர்களுக்குப்; பரிசு கொடுத்தால் டிரைவர் முதலாம் இடத்தையும் அரசுவும் நானும் இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றிருப்போம். நானோ இடையே மனைவிமார் என்ன கதைக்கிறார்கள் என்று வலக்காதைக் கொடுத்துக் கேட்டேன். மனைவி வழமை போல பேச்சில் முன்னணியில் நின்றாள்;. கமலம் ஆவென்று கேட்டுக்கொண்டிருந்தாள். வெளியே கும்மிருட்டினிடையே இடைக்கிடை வெளிச்சப் பொட்டுகள் கடந்து சென்றன. பஸ்சினுள்ளே ஏசி சற்று அதிகமாகி மூக்கு நுனியைக்குளிர வைத்திருந்தது.
அரசுவும் நானும் புதுமைப்பித்தனிலிருந்து ஜெயமோகன்; வரை பிறகு இலங்கையர்கோனிலிருந்து சோபாசக்தி வரை அலசி ஆராய்ந்தபின் திரைப்படங்களுக்குத் தாவினோம். அரசு திடீர் திடீரென அதிரடி அபிப்பிராயங்களை சொன்னார்;. ஈழத்தில்; இந்திய திரை படங்களைத் தடை செய்திருக்க வேண்டுமென்றார். புலிகள் காலத்தில் அப்படித்தானே என்றேன். சரியோ பிழையோ என்று எவரும் சொல்ல முதல் அருகில் புலிகள் உறுமும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன்.
மனைவியின் குறட்டைச் சத்தம்தான்;. அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே நித்திரை கொள்ளும் ஆற்றல் கொண்டவள். அரசுவின் மனைவியும் பக்கப் பாட்டுக்கு சோடி சேர்ந்து கொண்டாள்;. நான் நித்திரை வந்து அரைக்கண்ணை மூடினேன். அதன் பின்னரும் சிறிது நேரம் அரசுவின் குரல் ஒரு மூக்கறையன்; பேசுவது போல எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.
அதிகாலைத் தூக்கம் முறியுமுன்னே பஸ் அந்த விடுதிக்கு வந்து விட்டது. விடுதியில் ஆறு குடும்பங்களுக்குமாக 3 அபார்ட்மென்டுகளை ஒழுங்கு செய்திருந்தான் குமார்;. இவ்விரண்டு குடும்பங்களாக ஒவ்வொன்றிலும் இரு இரட்டைப் படுக்கை அறை கொண்ட அபார்ட்மென்டுகளை பகிர்ந்து கொள்வதாகவே திட்டம்.
ஆனால் வந்து இறங்கியதும் அரசு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ஆண்களுக்கு ஒரு தனி அபார்ட்மென்ட் வேண்டும் என்பதுதான் அது. பெண்கள் முணு முணுத்தனர் சில ஆண்கள் வாய் அடைத்து நின்றனர் எனினும் பெரும்பான்மை ஆண்களின் ஆதரவுடன் அரசுவின் ஐடியா ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றைய இரு அபார்ட்மென்ட்களில் பெண்களும் பிள்ளைகளும் தங்கினர்.
“அரசு சொன்னது சரிதாண்டாப்பா. வருஷக் கணக்கா வண்டில் மாடு மாதிரி கட்டி
இழுக்கிறம்;. இந்தப் பத்து நாளாவது மனுஷன் நிம்மதியா இருப்பமடாப்பா.” இது வரதன்
அவன் சொல்லி வாய் மூடமுன்னம் கதவு தட்டப்பட்டது. சிவா போய் கதவைத் திறந்தான். வெளியே சிலம்போடு கண்ணகி நின்ற கோலத்தில் வரதனின் மனைவி கையில் ஆறு மாதக் குழந்தையுடன் நின்றிருந்தாள்.
"நீங்கள் இஞ்சை நின்றால் பிள்ளையை ஆர் பார்க்கிறது? இரண்டு பிள்ளைகளையும் என்னால் பாக்க ஏலாது."
"நிச்சயமாக. ஆணும் பெண்ணும் சரிபாதி அவர்க்கு வேண்டும் சமநீதி" என்று சொல்லிகொண்டே 'வரதன் பிள்ளையை வாங்கு" என்றார் அரசு.
அவள் பிள்ளையை வரதனிடம் கொடுத்து விட்டு உள்ளே ஒரு நோட்டம் விடத் தவறவில்லை. பெண்களுக்கே உரித்தான திறமை.
இதற்குள் குமார் நேரமாகிவிட்டது கேளிக்கைப் பூங்காவுக்குப் போக ஆயத்தமாகுங்கள் என்று அவசரபடுத்தினான். குளித்து முடிக்காதவர்கள் எழுந்து பாத்ருhமுக்குப் போனார்கள்.
அரசுவின் திட்டத்தின் நோக்கம் அன்று இரவுதான் எனக்கு விளங்கியது. பகல் முழுவதும் இடங்கள் பார்க்க என்று சுற்றி அலைந்துவிட்டு வியர்வையில் நனைந்தபடி விடுதியின் ஏசிஐ தேடி ஓடினோம். அரசு முன்னரே சென்று சில ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கிச்சன் மேசையில்; பியர் மற்றும் விஸ்கி போத்தல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சிவா இறைச்சி வெட்டிகொண்டிருக்க முரளி வெங்காயம் நறுக்கிகொண்டிருந்தான். மச்சம் சமைப்பது ஆண்களின் வேலை என்பதுதான் ஒப்பந்தம். இதையெல்லம் முன் கூட்டியே தீர்மானித்து தேவையான பாத்திரம் சரக்கு தூள் அரிசி எல்லாவற்றையும்; குமார் கொண்டு வந்திருந்தான். பெண்கள் மரக்கறி வைப்பதென ஒழுங்கு.
"றைஸ் குக்கரைப் போடு மச்சான். இந்த பத்து நாளும் பச்சிலர்ஸ் மாதிரி என்ஜோய் பண்ண வேணுமடாப்பா" என்றான் குமார்.
"இஞ்சை போத்தில் கொண்டு வந்தது மேலிடத்திற்குத்; தெரியக்கூடாது சரியோ" வரதன் பயப்பிட்டான். உண்மையில் பெண்களெல்லாரும் மேல் மாடியில்தான் தங்கியிருந்தனர்.
"இவன் மேலிடத்திற்;குப் பயந்து பயந்தே மேலே போய் சேர்ந்து விடுவான்."
"கதவை லொக் பண்ணியாச்சு பயப்படாதே"
"உளவு பாக்க எண்டு பிள்ளைகளை அனுப்புவாளவை"
அப்போதுதான் குளித்துவிட்டு வந்த அரசு ஸ்கொட்சை கிளாஸில்; நிரப்பி ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கொண்டு வந்தார். அது அதிகம் போலத் தோன்றியது எனக்கு. நான் பியர் ஐ எடுக்கலாமா என்று யோசித்துகொண்டிருந்தேன்;. அவருடன் இலக்கியம் எதுவும் பேசக் கூடாதென்று நினைத்தேன்;. எல்லாருக்கும் போரடித்துவிடும். அதுவும் இந்த போதையில் கைகலப்பும் வரக்கூடும்.
"என்ன இன்னும் ஒருவரும் ட்ரிங்ஸ் எடுக்கேல்லையா" கேட்டபடி கதிரையில் அமர்ந்தார் அரசு.
"அரசுதானே எப்பவும் ஒப்பினிங் பட்ஸ்மன்."
"நிச்சயமாக."
"அரசு பாட்டு ஒண்டை எடுத்து விடும்"
"இல்லை மச்சான் தொண்டை அவ்வாளவு சரியில்லை". அரசு வயது வேறுபாடு பாராது மச்சான் போட்டது அவரியல்பா அல்லது உள்ளே போன ஸ்கொட்ச்சின் வேலையா தெரியவில்லை.
"பாடச் சொன்னால் புலவனும் பாடான்".
"புலவன்தான் பாடான். அரசு பாடினாலென்ன?"
அந்த இரவுதான் எல்லாருடனும் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. புதியவர்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்துவதிலுள்ள தயக்கங்களை போத்தல் இல்லாமலாக்கிவிட்டது. இடம் கலகலப்பாகி நேரம் போனது தெரியவில்லை. சில மணி நேரத்தின் பின்;; வாசல் கதவு தட்டப்பட்டது.
"எல்லாத்தையும் ஒளி எல்லாத்தையும் ஒளி " சொல்லிகொண்டே வரதன் போத்தல்களை கிச்சன் அலுமாரிக்குள் ஒளித்து வைத்துவிட்டான்.
அரசு தனது கிளாஸ் உடன் அறைக்குள் போய் விட்டார். இவர்களெல்லாரும் லைசென்ஸ் இல்லாத குடிகாரராகவிருந்தது ஆச்சரியத்தையளித்தது. அதிகமாகக் குடித்து லைசென்ஸ் பறிக்கப்பட்டவர்களாயிருக்கக்கூடும்.
குமார் கதவைத்திறந்தான். நானும் போய்ப் பார்த்தேன். வெளியே சமைத்த பருப்புக் கறிச் சட்டியுடன் குமாரின் மனைவி மீனாவும் கமலமும் நின்றிருந்தனர்.
"சிவா எங்கடை இறைச்சி கறியையும் சோறையும் கொண்டா. தாய்க்குலத்திற்கு கொடுத்து விடுவம்." என்றான் குமார்.
கறிகளின் பண்ட மாற்று நடந்தது.
அரசுவின் மனைவி குமாரிடம் தனியே ஏதோ பேசினாள். நான் உள்ளெ வந்து விட்டென். சில நிடங்களில் குமார் உள்ளெ வந்து கதவை பூட்டிக் கொண்டான். இப்போது எல்லோர் கைகளிலும் போத்தல். அரசு மட்டும் ஸ்கொட்ச் கிளாஸ் வைத்திருந்தார்.
"யார் வந்தது" அறையிலிருந்து வந்து கொண்டே கேட்டார் அரசு
"அம்மாவும் சின்னம்மாவும்" என்றான் குமார் கிண்டலாக.
"இருவருமே இப்போ இல்லை. ஒருவர் மேலே மற்றவர் உள்ளே.”
பிறகு பேச்சு தமிழக அரசியலை நோக்கித்திரும்பியது.
"முதல்வர் பதவிக்குத் தேவையான முதல் தகுதி என்னவென்று தெரியுமா உனக்கு?"
"ஊழல் செய்யவேணும் சொத்துக் குவிக்க வேணும். எம்பிமாரையெல்லாம் விலைக்கு வாங்க வேணும்".
கேள்வியையும் கேட்டு பதிலையும் ஒரு ராகத்தில் பாடினார் அரசு.
குமார் பியர் ஐ உறிஞ்சிக்கொண்டே இறைச்சிகறியைக் கிண்ணத்தில் போட்டுக் கொண்டு வந்தான். இதற்கிடையில் இரண்டாவது கிளாசை முடித்த அரசு மூன்றாவது கிளாஸை நிரப்பப் போனார்.
"அரசு உமக்குத்தானே ஹார்ட் ப்ரொப்ளம் இருக்கெண்டனீர். பிறகேனப்பா கனக்க எடுக்கிறீர்.? இனி நிப்பாட்டும்" என்றான் குமார்.
கமலம் குமாரிடம் என்ன சொல்லியிருப்பாள் என்று எனக்குப் புரிந்து விட்டது.
"டேய் குமார் உனக்கு நாப்பது வயது. எனக்கு எத்தினை சொல்லு பாப்பம். நீ எனக்குப் புத்தி சொல்ல வாறியோ? “
" வயதிலை ஒண்டுமில்லையப்பா. உமக்கு நான் சொல்லுறது விளங்குதில்லை. ஹொலிடெ எண்டு வந்து பிரச்சினையிலை மாட்டுப் படக்கூடாது"
" ஹொலிடெ எண்டு வந்தா எஞ்ஜொய் பண்ண வேணும். சும்ம பருப்பையும் சாம்பாரையும் சாப்பிட்டிட்டுப் பஜனை பாடிட்டுப் படுக்கவா இஞ்சை வந்தம்"?
" அரசு இதுகளை மருந்து மாதிரி குடிக்கவேணும். இதுகளை குடிச்சு பிறகு மருந்து எடுக்கிற மாதிரி வரப்படாது". சிவா சுளுவாக சொன்னான்.
" மருந்தும் மயிரும். எல்லா மருந்தையும் கண்டு வந்தவனடா இந்த அரசு. நீ எனக்குச் சொல்ல வாறியோ"
"குமார் விடடாப்பா அந்தாளை"
"கொஞ்சமா எடுக்கட்டும் இண்டைக்கு"
இந்த விதண்டா வாதத்தில் சலிச்சுப் போன வரதனும் முரளியும் சமாதானத்துக்கு முயற்சித்தனர்.
அரசுவுக்கு இப்பொ கௌரவப் பிரச்சினையாகி விட்டது.
"நான் எடுக்கேலை மச்சான் நீங்க குடியுங்க"
"அரசு இந்தாரும் லாஸ்ட் ஷொட். இதோடை எல்லாரும் சாப்பிடுவம்"
"வேண்டாம் மச்சான். நான் படுக்கப் போறன். நீங்க என்ஞோய் பண்ணுங்க".
அரசு கிச்சனுக்குப் போய் சாப்பாட்டுப் பிளேட்டை எடுத்தார். ஒரு அருமையான இரவு பாழாய்ப்போய் விட்டது.
"ஹொலிடே வாறாங்களாம் ஹொலிடே. இவ்வளவு காசு செலவழிச்சு எண்டாப்பா வரவெணும்"
எவரும் வாயைத்திறக்கவில்லை. அரசு கேமை மாத்தி விட்டார்.
எல்லாரும் குடியை நிறுத்திவிட்டு சாப்பிடத்தொடங்கினர். பிள்ளைக்குப் பால் கொடுத்து நித்திரையாக்குவதற்காக வரதன் வெளியே போனான். படுக்கைக்கு ஆயத்தம் பண்ணூம் படலம் தொடங்கியது. நான் உடுப்புகளை எடுத்துவர அறைக்குப் போனேன். உள்ளே அரசு படுத்திருந்தார்.
குமாரும் நானும் சிவாவும் வெளியே படுக்கை விரிப்பை போட்டுப் படுத்தோம். ஏனையோர் அறைகளுக்குள் படுத்தனர்.
முதல் நாள் வெய்யிலுக்குள் அலைந்து களைத்ததில் காலையில் எழும்பவே அலுப்பாகவிருந்தது. குமார் எனக்கு முன்னரே எழுந்துவிட்டான்.
"குட் மோர்ணிங்" என்றபடியே குளிப்பதற்காக பாத்ருhமைநோக்கிப் போனார் அரசு. அவர் முகத்தில் நேற்றிருந்த இறுக்கத்தைக் காணவில்லை.
ஷவர் தீறக்கப்படும் சத்தம் வரும் வரை காத்திருந்த குமார் கிச்சனுக்கு ஓடிப்போய் நேற்றிரவு குடித்த ஸ்கொட்ச் போத்திலை கொண்டு வந்தான். திரவ மட்டம் கால்வாசிக்குக் கீழே போயிருந்தது.
"பாத்தியே மச்சான் மனுஷன் சாமத்திலை எழும்பி அரைப் போத்திலை விழுங்கிப் போட்டுது."
"எங்களை நித்திரையாக்கிப் போட்டு தான் விஷயத்தைக் கொண்டு போட்டுது"
உள்ளே அரசு ஷவரில் குளித்தபடியே பாடுவது கேட்டது.
குளித்துவிட்டு கட்டைக் காற்சட்டை அணிந்தவாறே வெளியே வந்தார் அரசு.
"என்ன அரசு நல்ல பிரெஷ் ஆக இருக்கிறீர்" என்றான் சிவா.
'நிச்சயமாக' என்றபடி தலைத்துவட்டியபடியே வெளியே வந்தார் அரசு. அவர் முகம் பளிச்சென்று இருந்தது.
குமார் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.