.
எனையழைத்து ஒருபறவை பேசும்
இதயத்தின் கனத்தையெல்லாம்
இதமாகச்
செவியறையில் பூசும்
குரலொலியில் மனவெளியைத்
தூண்டிலென ஆவலுடன் தூவும்
குரலினிமை குழலினிமை
கொஞ்சும்மொழித் தேனாக மேவும்
துயில்கின்ற மனமானோ
துள்ளலுடன் கனவாடை கலையும்
கனவாடை கலைந்தாலும்
கவிவாடை தானாக விளையும்
பொருள்புரியா மொழிகேட்டு
புலர்காலை ஏக்கமுடன் விடியும்
புள்ளினத்தின் மனமறியாப்
பொங்குமனம் கவியெழுதி வடியும்
(அதிகாலையில் ஒருபறவையொலிகேட்டு எழுதியது.
தொடங்கியது 26.02.2017 முடித்தது 1.03.2017)