ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் – 15 - - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

  தமிழ் பாரம்பரிய இலக்கிய வளர்ச்சியில் சிற்றிலக்கியமாக குறவஞ்சி பிரபலமானது. தலைவி தோழிகளுடன் பந்தாடும் சமயத்தில் பவனி வந்த தலைவனைக் கண்ட அவள் தன்னை இழக்கிறாள். அவனை நினைத்து நினைத்து ஏங்குவாள். அவனை அடையத் துடிப்பாள். அடைய முடியாமையால் பலவித மன உடல் உபாதைகட்கு ஆளாவாள். மன்மத பானங்கள் அவளைத் தாக்கும். பாலும் கசக்கும். குளிர் நிலவும் சுட்டெரிக்கும். அவள் நிலை காணப்பொறாத தோழி குறிபார்க்க குறத்தியை அழைத்துவருவாள். குறத்தியோ, தலைவன் அங்க அடையாளங்களைக் கூறுவாள். தலைவி பெயரைச் சொல்லும்படி கேட்க, குறத்தி பூடகமாக தலைவன் பெயரையும் சொல்லிவிடுவாள். தலைவி மனமகிழ்ந்து பரிசுகள் கொடுப்பாள்.


  தமிழிலே 30-க்கும் அதிகமான குறவஞ்சிகள் உண்டு. பாட்டுடைத் தலைவனாக இறைவன் இருந்தான். காலத்தின் ஓட்டத்திலே ஆண்டவனை பாடியவர்கள் ஆள்பவனையும் பாடினார்கள். இவ்வாறு ராஜராஜ சோழனையும் சரபோஜி மன்னனையும் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட குறவஞ்சிகள் உண்டு. அன்று கோவில்களிலும் அரசவைகளிலும் ஆடிய நர்த்தகிகள் இவற்றை ஆடிவந்தனர். குறவஞ்சியில் முக்கிய தலைவி, தோழி, குறத்தி போன்ற பெண்பாத்திரங்கள் சிருங்கார ரசம் நிறைந்த பரதம் ஆடுவதற்கு ஏற்றது. குறவஞ்சி நாட்டியத்தில் தலைவன் காட்சி செய்வதில்லை. கற்பனையிலேயே உருவகப் படுத்தப்படுவான். பரத நாட்டியத்தில் எவ்வாறு தலைவன் காட்சியில் தோன்றாமல் கற்பனையில் உருவகப்படுத்தப்பட்டு ஆடுவார்களோ அவ்வாறே குறவஞ்சியிலும் உருவகப்படுத்தப்படும்.


   சிருங்கார ரசம் தவிர வேறு எந்த ரசமோ அல்லது நாடகத்தன்மையோ அற்ற ஒரு தயாரிப்பினை நான் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன். ஆனால் அப்படியான நாட்டிய நாடகத்தைத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானேன். Bambalapiti Holy family convent தமிழ் பிரிவினர் மாவிட்டபுர குறவஞ்சியை எழுதி இசை அமைத்துவிட்டு தயாரித்துத்தரும்படி கோரினார்கள். நானோ சுகவீனம் உற்று இருந்தவேளை. அதை சாக்காகக் காட்டி தயாரிக்க முடியாது என்றேன். Convent தலைமை ஆசிரியை கன்னியாஸ்திரியோ சாமர்த்தியமாக உனது உடல்நிலை தேறும்வரை காத்திருப்போம் என்றார். காரணம் நான் St Bridget's Convent, Colombo ladies college–இல் எனது தயாரிப்பைப் பார்த்திருந்தார். வேறு வழி இல்லாது தயாரிப்பில் இறங்கினேன்.



  எப்பொழுதுமே ஒரே பாணியில் யாரவும் ஆடிவந்த குறவஞ்சிக்கு என் பாணியில் புது மெருகு கொடுத்தேன். நான் தயாரித்த Holy family convent மாவை குறவஞ்சி அபார வெற்றி அளித்தது. அதைத் தொடர்ந்து எனது மாணவியருடன் நல்லைக் குறவஞ்சியைத் தயாரித்தேன். நல்லூர் கந்தன் மேலான எனது பக்தி பற்று உறவு நான் பார்த்த நல்லைக்குமரனது குறவஞ்சியாக உருவானது. அதற்கான விமர்சனம் நாட்டியம் எவ்வாறு அமைந்தது என்பதை ஓரளவு எடுத்துக்கூறுகிறது.

VIRAKESARI ILLUSTRATED WEEKLY – 30 APRIL 1978
-          கேசவமூர்த்தி
 நல்லைக் குறவஞ்சி (ஒரு பகுதி)

   கார்த்திகா அவர்கள் இம்முறையும் ஓர் பிரமிப்பான தயாரிப்பை எமக்கு அளித்துள்ளார்.


  பிற்காலத் தமிழ் இலக்கிய வகைகளில் குறவஞ்சி பாடல்களும் ஒன்று. குறவஞ்சி என்பது குறத்திப்பாட்டு. தலைவன் பவனி வருவது, தலைவியின் முடி முதல் அடி வரை வர்ணனை, அவள் பந்து பயிலுதல், தலைவன் மேல் காதல் கொள்ளுதல், நிலா, மன்மதனைப் பழித்தல், துயர் கூறல், குறிஞ்சிநில வர்ணனை, தலைவி குறத்தி சம்வாதம், குறி சொல்லல் என்பவற்றை வர்ணிக்கும் பாடல்களே குறவஞ்சியில் இடம்பெறுவன.  

    கலாக்ஷேத்திரத்து ருக்மணி அருண்டேலும் இதைக் கையாண்டுள்ளார். நாட்டியக் குருவான வழுவூரார் அவர்களும் குறவஞ்சியைத் தயாரித்துள்ளார். தென்னிந்திய நாட்டிய மேதைகள் அத்தனைப் பேரும் கையாண்ட குறவஞ்சியில் கேவலம் ஈழ நாட்டிய ஆசிரியை ஒருத்தி என்ன புதுமையை தான் புகுத்திவிட முடியும் என எம்மவர்கள் அங்கலாய்த்திருக்கலாம். ஆனால் இங்குதான் திருஷ்டி கலைஞனின் மேதைத் தனத்தையும் நாம் கண்டு வியப்புற முடிகிறது. கதை சொல்லும் உத்தியில் கார்த்திகாவின் கற்பனாமுத்திரை பளிச்சிடுகிறது.


  அவரின் ஏனைய நாட்டியங்கள் போலவே இதிலும் பாத்திர அறிமுகங்கள், சூழ்நிலை அறிமுகங்கள் பெருந்தொகையான நாட்டியக்காரர்களை லயம் தவறாமல் மேடையில் கட்டியாளும் திறமை ஆகியன அற்புதமாக இருந்தன. நல்லூரானின் ஆலய மணி ஒலிக்க, மேள வாத்தியங்கள் முழங்க, பஜனை கோஷ்டி பின்தொடர வரும் முத்துக்குமரனின் பவனியைத் தத்ரூபமாக மேடையில் காட்டிய கார்த்திகாவின் நாட்டிய அமைப்பும் கையாண்ட உத்திகளும், பவனியை உயர்ந்த தளத்திலும், பாவையரின் பந்தாட்டை அதே சமயம் கீழ்த்தளத்திலும் காட்டியதால் பார்வையாளருக்கு ஏற்படக்கூடிய மெய்மையானதொரு தாக்கத்தை பொதுவாக சினிமா யுக்திகளாலேயே காட்டமுடியும்.

   குறத்திகளை அறிமுகம் செய்யும்போது, வழக்கமாக பாடல்களினாலேயே அவர்கள் தம்மை அறிமுகப்படுத்துவதும், குறத்தி உடையுமே நாட்டிய அமைப்பாளர்களின் கைவந்த யுக்தி. அதனால் இங்கும் கார்த்திகா அவர்களையெல்லாம் மிஞ்சிவிட்டார். காட்டுப்பறவைகளின் குரல் ஒலியின் பின்னணியுடனும் ஒலி அமைப்பின் ஒத்துழைப்புடனும் காட்டுப் பிரதேசத்தை எம்முன் நிறுத்தி அங்கு வந்த இரு குறத்திகள் மானுடனும் முயலுடனும் விளையாடுவதும், முயல் குட்டி ஒன்றுக்கு உணவூட்டுவதும் குறத்திகளின் வாழ்க்கைப் பின்புலத்தை அற்புதமாக படம்பிடித்துக் காட்டுகின்றன.

   தலைவி, மன்மதனையும், நிலவையும் பழிக்கும் கட்டத்தில் மன்மதன், நிலா, தாரகைகள் யாவும் மேற்தளத்தில் நாட்டிய ரூபத்தில் நிதர்சனமாகக் காட்சியளித்தமையும் புதுமையே.

   ஆக்கபூர்வமான கலைப்படைப்புகளை முற்றாக ஆதரித்து கலைஞருக்கு அத்தியாவசியமான உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் எமது ரசிகர்கள் இன்னும் முன்வரவில்லை. அரும்பாடுபட்டுத் தயாரித்த ஓர் ஆக்கப்படைப்பை ஒரு காட்சியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைமை பெரும் பரிதாபத்துக்குரியது. இன்று சிங்கள நாடக நாட்டிய உலகில் ஒரு தயாரிப்பாளரது ஆக்கம் ஒரே நாளில் இரண்டு காட்சிகள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து பல மேடைகளில் ஏறுகின்றது. ஆனால் எமது நிலையோ மிக வெட்கக் கேடானது.