பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video)
இஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது
ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு
'பிறிக்ஸிட்' விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு
பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video)
03/07/2016 ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத் நகரில் உள்ள கர்ராடா பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன்பாக இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 75 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த 130 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. நன்றி வீரகேசரி
இஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது
30/06/2016 இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பாக 13 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குறித்த தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் டெக்சியில் வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததனையடுத்து பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை தேடும் பணியில் இராணுவம் களமிறங்கியது.

இஸ்தான்புல் நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது 3 வெளிநாட்டவர்கள் உள்பட ஐ.எஸ். ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

நன்றி வீரகேசரி
ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு
28/06/2016 சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ் அமைப்பினர்,உலக நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள இவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தற்போது ஐ.எஸ். பிடியில் இருந்த முக்கிய நகரமான பலூஜாவை ஈராக் படையினர் மீட்டு உள்ளனர். பலூஜா நகரின் முக்கிய வைத்தியசாலைக்கு வெளியே, ஈராக் நாட்டு கொடியை அசைத்தவாறு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றினார் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி.


ஒரு வாரத்திற்கு முன்பு ஈராக் அரசு இதே போன்று, பலூஜா நகரை விடுவித்ததாக கூறியிருந்தது. ஆனால் வீதிகளில் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி
'பிறிக்ஸிட்' விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு
27/06/2016 பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த தீர்மானத்தால் உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் சுமார் மொத்தம் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 'பிறிக்ஸிட்' என்ற மேற்படி வாக்கெடுப்பின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களான மைக்ரோ சொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ், அமேஸன் ஸ்தாபகர் ஜெப் பெஸொஸ், பிரித்தானியாவின் மிகப் பெரிய செல்வந்தரான ஜெரால்ட் குரொஸ்வெனர் ஆகியோர் இந்த 'பிறிக்ஸிட்' வாக்கெடுப்பின் பெறுபேற்றையடுத்து முறையே 1.75 பில்லியன் ஸ்ரேலிங் பவுண், 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் மற்றும் 730 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் தொகையை இழந்துள்ளனர்.

அதேசமயம் ஐரோப்பாவின் மிகப் பெரிய செல்வந்தரான அமன்சியோ ஒர்ரேகா 4.4 ஸ்ரேலிங் பவுணையும் உலகின் மூன்றாவது செல்வந்தரான வரென் பவ்வெட் 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுணையும் இழந்துள்ளார்.
பிறிக்ஸிட்டால் பாதிக்கப்பட்ட செல்வந்தர்கள்
பில் கேட்ஸ்
சொத்து மதிப்பு: 61 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
அமன்சியோ ஒர்ரேகா
சொத்து மதிப்பு: 51 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 4.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
வரென் பவ்வெட்
சொத்து மதிப்பு: 48.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
ஜெப் பெஸொஸ்
சொத்து மதிப்பு: 45 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
ஜெரால்ட் குரொஸ்வெனொர்
சொத்து மதிப்பு: 9.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்
இழப்பு: 730 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்
நன்றி வீரகேசரி