இலங்கைச் செய்திகள்


50 வெளிநாட்டு பயணங்கள் குறித்து யோஷித்தவிடம் விசாரணை செய்வதற்கு கடற்படை தீர்மானம்

 வடக்கில் காணிகளை விடுவிக்கும் அரசு   முல்லைத்தீவில் அபகரிக்கின்றது  :ஜெனிவாவில் வடக்கு மனித உரிமை அமைப்பு தெரிவிப்பு

பசில் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு இலங்கையர்கள் மீட்பு

பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு
50 வெளிநாட்டு பயணங்கள் குறித்து யோஷித்தவிடம் விசாரணை செய்வதற்கு கடற்படை தீர்மானம்

02/07/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் கடற்படை வீரருமான யோஷித்த ராஜபக்ஷவிடம் அனுமதியின்றி மேற்கொண்ட 50 வெளிநாட்டு பயணங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடற்படை தீர்மானித்துள்ளது. 
தற்போது யோஷித்த ராஜபக்ஷவிடம்  நிதி குற்றப்புலணாய்வு பிரிவினரின் விசாரணைகள்  முன்னெடுக்கப்படுகின்றன. அவை நிறைவடைந்ததும் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை  அறிவித்துள்ளது. இது குறித்து கடற்படை பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலி  வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தாவது,
முன்னாள்  ஜனாதிபதியின் மகன் யோஷித்த ராஜபக்ஷ தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மேற்கொண்ட மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்.
லெப்டினன் கொமாண்டர் வெலகெதர விவகாரத்தில் மாத்திரம் இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் யோஷித்தவின் விவாகாரத்தில் மாத்திரம் ஏன் மாற்றுப்போக்கை கடைப்பிடிக்கின்றீர்கள் என்பதே சகல ஊடகங்களினதும் கேள்வியாக உள்ளது. இவ்விருவரின் குற்றச் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள் உள்ளது. எனவே விசாரணை முறைகளும் வேறுபடுகின்றன.
எவ்வாறயினும் முப்படைகளின் தலைவர் என்ற வகையில் லெப்டினன் கொமாண்டர் வெலகெதர தொடர்பிலான முடிவுகளை ஜனாதிபதினாலேயே எடுக்கப்படும்.  ஆனால் யோஷித்த ராஜபக்ஷ மீதான விசாரணைகள் முன்னரும் இடம்பெற்றது.
இந்நிலையிலேயே கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி யோஷித்த சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் அதனையடுத்து பெப்ரவரி  28 ஆம் திகதி அவர் கடற்படையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டார். 
கடந்த காலங்களில் அவர்  கடற்படையில் சேவையாற்றிய போது 74 தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாகவும். அவற்றில் 24 தடவைகள் மாத்திரமே கட்டளை தளபதியின் அனுமதியுடன் சென்றுள்ளார் என்றும் தெரியந்துள்ளது.  மேலும் 50 பயணங்களை அனுமதிபெறாமல் சென்றுள்ளமை தொடர்பிலேயே அவர் மீது கடற்படை விசாரணைகளை  முன்னெடுக்கப்பட்டுத்திருந்தது.
இதனிடையே இவர் நிதிகுற்ற புலணாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதனால் கடற்படை விசாரணைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன .எனவே அவர் மீதான நிதிக்குற்றப்புலணாய்வு பிரிவினரின் விசாரணைகள் முற்றுப்பெற்றதன் பின்னர் கடற்படையின் விசாரணைகளுக்கு யோஷித்த முகம் கொடுக்க வேண்டும் என்றார்.  நன்றி வீரகேசரி 
வடக்கில் காணிகளை விடுவிக்கும் அரசு   முல்லைத்தீவில் அபகரிக்கின்றது  :ஜெனிவாவில் வடக்கு மனித உரிமை அமைப்பு தெரிவிப்பு

01/07/2016 அரசாங்கம் வடக்கில் காணிகளை விடுவித்துவிட்டு முல்லைத்தீவு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றது. அத்துடன்  வடக்கில் இராணுவத்தினரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றது  என்று வடக்கு மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி  தெரிவித்தார்.  
ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நேற்று  நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  
வடக்கு மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி உரையாற்றுகையில், 
வடக்கில் இராணுவத்தினர் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோதும் இன்னும் நல்லாட்சி இடம்பெறவில்லை. விசேடமாக வடக்கில் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு அதிகரித்து காணப்படுகிறது. 
வடக்கில் இராணுவத்தினர் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். சிறுவர் பள்ளிக்கூடங்களை பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களே நடத்தி வருகின்றனர். எனவே நல்லாட்சியிலும் வடக்கு மக்களுக்கு நல்லது நடக்கவில்லை. 
இவ்வாறான நிலையில் எவ்வாறு நீதியான பொறிமுறையை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியும். ஏ. 9 வீதியில் இராணுவத்தினர் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. 
அதுமட்டுமன்றி சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக கூறிவருகின்றனர். நீதி விசாரணையை எதிர்பார்க்க முடியாத நிலைமை காணப்படுகிறது. மேலும் காணி விடுவிப்பிலும் மோசமான நிலைமையே காணப்படுகிறது. 
அதாவது வடக்கில் காணிகளை விடுவித்துவிட்டு முல்லைத்தீவு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் நிலைமை காணப்படுகிறது. இந்த விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் கூட மிக பெரிய அளவில் வருவதில்லை என்றார்.   நன்றி வீரகேசரி பசில் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

01/07/2016 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (01) பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை கடந்த ஜுன் 17 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பசில் ராஷபக்ஷ ஆஜராகியிருந்த நிலையில், அவர் மீண்டும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு இலங்கையர்கள் மீட்பு

02/07/2016 பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். 
பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 
பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 


பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு

01/07/2016 நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உயர்மட்டக்கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உபதலைவர், பேராசிரியர் மொஹான் டி சில்வா ஆகியோர் பங்கேற்றிருந்த உயர்மட்டக் கூட்டத்திலேயே மேற்படி தீர்வு எட்டப்பட்டடுள்ளது. 
இந்த கூட்டத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசியர்  நாசிம், ருகுணு பல்கலைக்கழக உபவேந்தர், பேராதனை பல்கலைக்கழக பதில் உபவேந்தர்,  யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் திருமதி. வசந்தி அரசரட்னம், கலாநிதி எம்.இஷட்.எம். நபீர், ருகுணு பல்கலைக்கழக பேராசிரியர்களான மபாசியா, கலாநிதி கதீஜா அலி மற்றும் விரிவுரையாளர்கள் முஸ்லிம் மஜ்லிசின் பிரதிநிதிகள், மானிய ஆணைக்குழுவின் உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 
முன்னதாக  சில மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் தாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் எடுத்துரைத்திருந்த போது, அவரின் ஏற்பாட்டுக்கிணங்க பாராளுமன்றத்தில் மாணவர்களின் பிரதிநிதிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தின் தொடர்ச்சியாகவே அம்மாணவ பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் மீண்டும் ஆராயப்பட்டு தீர்வுகாணப்பட்டுள்ளன.  
கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர, ருகுணு, பேராதனை, ரஜரட்ட. தென்கிழக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம், ஊவா வெல்லஸ்ஸ, மொரட்டுவ  ஆகியவற்றில் கற்கும் முஸ்லிம் மாணவர்களின் பிரதிநிதிகள், தத்தமது பல்கலைக்கழகத்தில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஐவேளை தொழுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் வகையில், பிரத்தியேக தொழுகை அறை ஒன்று இன்மை, வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆத் தொழுவதற்கு வசதியாக 12மணி முதல் 2மணி வரை பரீட்சைகளோ, பாடநெறிகளோ நடாத்தப்படுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும், அதற்கான பொதுவான சுற்றறிக்கை ஒன்றைத் தயாரித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானிய ஆணைக்குழுவினால் அனுப்பிவைக்கவேண்டும், முஸ்லிம்கள் கொண்டாடும் பெருநாள் தினத்துக்கு முன்பும், பெருநாள் தினத்துக்கு அடுத்த நாளும் பரீட்சைகளோ, பாடநெறிகளோ நடத்த வேண்டாம், முஸ்லிம் மாணவர்கள் அதிகமுள்ள பல்கலைக்கழகங்களில் ஜும்ஆத் தொழுகையை பல்கலைக்கழகங்களில் நடத்துவதற்கு உரிய வசதிகள் பெற்றுக்கொடுத்தல், பேராதனை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபு, இஸ்லாமிய கற்கை நெறிகளில் ஏற்பட்டுள்ள தளர்வுகள் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது. 
களனி, ஜெயவர்தனபுர பலகலைக்கழகங்களில் விஞ்ஞான பாடநெறிகளில் கல்வி கற்கும் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் விரிவுரைகள் சிங்களத்தில் நடைபெறுவதால், மொழி ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பரீட்சைகளின் போதும் சில பாடவினாத்தாள்கள்  ஆங்கிலத்துடன் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது போன்று, தமிழ் பேசும் மாணவர்களின் மொழி கருதி தமிழ் மொழிபெயர்ப்பும் இடம்பெறுவதன் மூலமே, உண்மையான திறமைகளை அறிய முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்ட போது, பொருத்தமான தீர்வு வழங்கப்படுமென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உபதலைவர் உறுதியளித்தார்.
முஸ்லிம் மாணவிகளில் குறிப்பாக, மருத்துவ மாணவிகளின் உடைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அங்கு சுட்டிக்காட்டப்பட்ட போது, சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, இதற்கு சுமுகத் தீர்வு எட்டமுடியும் என்ற கருத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு முன்வைத்தார்.
இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, மாணவர்களின் கஷ்டங்களை  சுமுகமாகத் தீர்க்க உதவிய அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துவைக்க முடியும் என்ற முன்மாதிரியை இன்றைய கலந்துரையாடல் எடுத்துரைத்துள்ளது. இவ்வாறான கலந்துரையாடல்களே மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நல்லுறவு ஏற்பட வழிவகுக்கும் எனவும், இனஐக்கியத்தை மேம்படுத்த இவ்வாறான முயற்சிகள் பெரிதும் பயன்படும் எனவும் குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரி 


பிள்ளையானுக்கு பிணை மறுப்புE

30/06/2016முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21.7.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக இன்று முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் 21.7.2016 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. 
இதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோர் எதிர்வரும் 21.7.2016 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கடந்த 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நல்லிரவு ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி