.
அவுஸ்திரரேலிய மெல்பேண் தமிழ்ச் சமூக வானொலிவானமுதம் “தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு அகவு பத்து.


அவுஸ்திரேலியா மெல்பேணில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினால் (Whittlesea Tamil Association) ஆரம்பிக்கப்பட்ட சமூக வானொலியான வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை தனது பத்தாண்டுச் சேவையைப் பூர்த்தி செய்து பதினோராவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பண்பலை வரிசை PVFM 88.6 ஊடாகத் தனது கன்னி ஒலிபரப்பினை வானலையில் தவழவிட்டது.
கடந்த பத்து ஆண்டுகளாகச் சிறுவர் முதல் பெரியோர்வரை அனைவரையும் கவரும் வண்ணம் சகல நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டு வருகின்றது என்பது வானமுதத்தின் ஒரு சிறப்பாகும். ஆரம்பத்தில் ஒரு மணித்தியாலமாக ஆரம்பித்த ஒலிபரப்புச் சேவை தற்பொழுது நான்கு மணித்தியாலங்களாக ஒலிபரப்பினை விஸ்தரித்துள்ளைமை அதன் வளர்ச்சிக்கு சான்று பகிர்கின்றது.


வாரம் தோறும் பிரதி செவ்வாய் தோறும் மாலை ஆறு மணிமுதல் இரவு பத்து மணிவரை தகுதி வாய்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்களால் நிகழ்ச்சிகளை ஆண், பெண் குரல்களில் ஒலிபரப்பி வருவதைக் காணலாம். திருக்குறள், இறைவணக்கப் பாடல்கள், நற்சிந்தனை, செவ்வாய் மலர், ஒலிச்சரம், உள்ளூர்த் தகவல்கள், சிறுவர் அரங்கம், சிறுவர் மலர், தாயக நினைவுகள், பரியார் முற்றம், இசையும் கதையும், காற்றில் தவழும் கண்ணதாசன், கவிதையும் கானமும், கதம்பமாலை, இராகபந்தம், என்றென்றும் காதல், முதியோர் அரங்கம், கலந்துரையாடல், செய்திகள், அரசியல் ஆய்வு, சமூக அறிவித்தல்கள், இரவின் மடியில் எனப் பல்வேறுபட்ட வயதினரையும் கவரும் வண்ணம் நிகழ்ச்சிகள் அலங்கரிக்கின்றது.
விற்றிசீ தமிழ்ச் சங்கத்தினால் ஆண்டு தோறும் வானமுதத்தின் வண்ணத் தமிழ் மாலை  என மேடை நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. வண்ணத்தமிழ் மாலை நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதியில் எமது தாயக உறவுகளின் வளர்ச்சிக்கு அனுப்பி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை 24 மணி நேரம் ஒலிபரப்புச் சேவை இன்பத்தமிழ் வானொலி ஊடாக அவுஸ்திரேலிய மற்றய மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கும் சகலரும் கேட்கும் வகையில் இணையத்தளத்தின் ஊடாகவும் ஒலிபரப்பாகி வருகின்றது.
இந்த ஆண்டு தனது பத்து ஆண்டினைக் கடந்து பதினோராவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த சிறப்பு நிகழ்ச்சிக்கு உலகப் புகழ் மிக்க தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளரான பி.எச்.அப்துல் ஹமீத், கனடா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரான இளையபாரதி, இலண்டன் FATV வானொலி அறிவிப்பாளரான நடா மோகன், நியூசிலாந்து அரசியல் ஆய்வாளர் சிற்சபேசன் ஆகியோர், மற்றும் அவுஸ்திரேலிய அரச வானொலி SBS, 24 மணி நேர வானொலி இன்பத்தமிழ் வானொலி, சமூக வானொலிகளான வானிசை, சங்கநாதம், தமிழோசை 3ZZZ, தமிழ்க்குரல் 3CR, ஆகியவற்றின் ஆதரவு மிக்க ஊக்க மாத்திரைகளாக தமது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார்கள். அவுஸ்திரேலிய இணையத்தளப் பத்திரிகைகளான தமிழ்முரசு, அக்கினிக்குஞ்சு பத்திரிகைகள் செய்திகளைப் பிரசுரித்திருந்தனர்.
பத்தாவது ஆண்டினைக் கொண்டாடும் முகமாக இந்த வருடம் சர்வதேச ரீதியாக சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடாத்துகின்றது. போட்டியின் முடிவுத் திகதி புரட்டாதி மாதம் 5ம் திகதி ஆகும். போட்டியின் விபரங்கள் யாவும் இலங்கை, இந்திய பத்திரிகைகள், மற்றும் இணையத்தள பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன. வானமுதத்தின் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம்.
புலம் பெயர் மண்ணில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தன்னாலான பணிகளைச் செய்து வருவதையிட்டு மனம் மகிழ்கின்றது. அனைத்து அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்களது தன்னலமற்ற சேவை மனப்பாங்கினால் மட்டுமே இது சாத்தியமாகின்றது என்பது தான் உண்மை ஆகும்.
சமூக வானொலிகளோடு கை கோர்த்து ஒற்றுமையாகப் பயணிக்கும் வானமுதம் தமிழ் வானொலிச் சேவை மென்மேலும் வளர்ந்து பார் போற்றும் வண்ணம் வானளாவ வளரவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் துணையோடு வாழ்க. வளர்க.
வானமுதம் ஒலிபரப்புச் சேவையினைப் பிரதி செவ்வாய் மாலை மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை
1. FM 88.6
2. www.pvfm.org.au / live streaming
3. இன்பத்தமிழ் வானொலி ஊடாகக் கேட்டு மகிழலாம்.
நேயர்களே வானமுதம் முகநூலிலும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். மிக விரைவில் ” வானமுதம் “மிழ் ஒலிபரப்பின் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தொடர்புகளுக்கு அஞ்சல் முகவரி
Vaanamutham ,       P.O.Box 93, Thomastown.
Victoria - 3074. Australia.
மின்னஞ்சல் முகவரி
vaanamutham@hotmail.com
வாழ்க தமிழ் வளர்க நம் தாய் மொழி
நவரத்தினம் அல்லமதேவன்

வானமுதம். மெல்பேண். அவுஸ்திரேலியா.