திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
காடு  கழுவி  வரும்  கங்கையாளை  இசைத்தட்டுக்கு அழைத்துவந்த    கவிஞர்  முருகையன்
தனித்திருந்து  வாழும்  தவமுனியாக  அந்திம காலத்தை கடந்த  பேராளுமை
இளம்தலைமுறைக்கு  ஆதர்சமாக  விளங்கிய  கலை, இலக்கிய  கல்விமான்
     
                                                                     
இந்தப்பதிவை  எனது  வழக்கமான  திரும்பிப்பார்க்கின்றேன்  தொடரில்  எழுத  முன்வந்தபோது,   இதற்கு  எழுதமறந்த குறிப்புகள் எனவும்   தலைப்பிட்டிருக்கலாமோ   என்றும்  யோசித்தேன்.   எப்படி இருந்தாலும்   எழுதப்படுவதுதானே  முக்கியம்.
கடந்த    ஜூன் 27  ஆம்  திகதி  மல்லிகை ஜீவாவின்  பிறந்த  தினம். அவருக்காக   கொழும்பில்  நண்பர்  கவிஞர்  மேமன்கவி மட்டக்குளியவில்   ஒரு  சந்திப்பு  நிகழ்வும்  நடத்தினார்.
ஜீவாவுக்கு   மேமன்கவியின்  கைத்தொலைபேசி   ஊடாக வாழ்த்துத்தெரிவித்துவிட்டு,    ஜீவாவுடன்  எனக்கிருந்த  நீண்ட கால நட்புறவு   நினைவுகளில்  சஞ்சரித்தபோது,   மல்லிகைக்காக  எமது ஊரில்   அக்காலகட்டத்தில்  நடத்திய  இலக்கிய  நிகழ்வுகளும்  அதில் கலந்துகொண்டவர்களும்   மனக்கண்ணில்  தோன்றினார்கள்.



மல்லிகைஜீவா   பிறந்த  தினமான  ஜூன் 27  ஆம்  திகதியில்தான்  எங்கள்  மத்தியில்  வாழ்ந்த  மற்றும்  ஒரு  ஆளுமை   மறைந்திருக்கிறார்   என்பது  நினைவுப் பொறியில்  தட்டியது.   அந்த ஆளுமை   நீர்கொழும்பில்  31-08-1974  ஆம்  திகதி   நடந்த  மல்லிகை பத்தாவது  ஆண்டு மலர்  அறிமுகநிகழ்விலும்  கலந்துகொண்டு உரையாற்றியவர்.    அவர்தான்   கவிஞர்  முருகையன்.
ஏறக்குறைய  40  ஆண்டுகளுக்கு  முன்னர்  இலங்கை   வானொலியில் ஈழத்து   பாடல்கள்  வரிசையில்  அடிக்கடி  ஒலிபரப்பப்படும் இந்தப்பாடலைக்கேட்டு  ரசித்த  மூத்ததலைமுறை   நேயர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
 கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம்  குளிரவைக்கும்  கங்கையாளே!
நுவரெலியா  முதலான  உயரமலை
பயிலும்   கங்கையாளே...!
தவறாத   வளமுடைய....
தன்மை   பொழியும்   எங்கள்  கங்கையாளே...!
கங்கையாளே... கங்கையாளே......
கந்தளாயும்....மூதூரும்....
காத்து  வரவேற்கின்ற   கங்கையாளே....
வந்து  சேர்வாய்  திருமலைக்கே..
மாகடலில்    போயிறங்கும்  கங்கையாளே...!
கங்கையாளே... கங்கையாளே...
காடு  கழுவி  வரும்  கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம்   குளிரவைக்கும்   கங்கையாளே!


இலங்கை   வானொலியின்  தேசிய சேவையாக  இருக்கட்டும் வர்த்தக  சேவையாக  இருக்கட்டும்,  அவற்றில்  ஈழம்   என்ற   சொல் ஒலிபரப்பாகிவிடலாகாது  என்று  எழுதப்படாத  சட்டம்  இருந்த காலத்தில்,    ஈழத்தை  குளிரவைத்த  அந்த  வற்றாத ஜீவநதியைப் பற்றிய   இந்தப்பாடல்  வானொலியில்  ஒலிபரப்பாகி   எங்களையும் குளிரவைத்தது.   இதனை  இயற்றியவர்  கவிஞர்  முருகையன். பாடியவர்கள்:   எஸ்.கே. பரராஜசிங்கம், கோகிலா சிவராஜா. இசையமைத்தவர்   எம்.கே. ரொக்சாமி.
கங்கையாளே    இசைத்தட்டும்    வெளியானது.   தொலைக்காட்சி இல்லாத   அக்காலத்தில்  வானொலிதான்  எமக்கு  வரப்பிரசாதம். அடிக்கடி   அந்தப்பாடலைக்கேட்டு  ரசித்துள்ளேன்.   எனது  சேமிப்பில் இருந்த   கங்கையாளே   இசைத்தட்டும்  இடப்பெயர்வு  அமளிகளில் காணாமல்போனது.
முருகையன்,   பரராஜசிங்கம்  இன்றில்லை.   அன்று  தரமாக  ஒலித்த இலங்கை   வானொலிச்சேவை;  தரமும்     இன்றில்லை.   கங்கை  இன்றும்    ஓடிக்கொண்டிருக்கிறாள்.

எங்கும்   ஓடி    ஈழம்குளிரவைத்து   திருகோணமலைக்கடலில் கலக்கிறாள்.  அவள்  வடக்கிற்கு  வருவாள்  என்றுதான்  நாம் எதிர்பார்த்தோம்.   ஆனால்,  அதனை  அங்கு   திசை  திருப்புவதற்காக அமைக்கப்பட்ட  அமைச்சின்    அமைச்சரும்   ஒரு   தாக்குதலில் சிதறிப்போனார்.
கங்கையாள்   இன்றும்  எமது  காதுகளில்  ரீங்காரமிடுகிறாள்.
நான்  இலக்கியப்பிரதிகள்  எழுதப்புகுந்த  காலத்தில்  எனக்கு அறிமுகமானவர்    கவிஞர் முருகையன்.    அவரை  கொழும்பில்  கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் -  பாமன்கடை  கல்யாணி  வீதியில் அவர்   குடியிருந்த  மாடிவீட்டிலும்  அடிக்கடி  சந்திப்பேன்.
இந்த  இரண்டு  இடங்களும்  எனக்கு   திணைக்களமோ,   அல்லது சாதாரண  இல்லமோ   அல்ல.   அவை  கலைக்கூடங்கள்தான்.
திணைக்களத்தில்,   மூத்த  எழுத்தாளர்கள்  சு.வேலுப்பிள்ளை (சு.வே.) யோ. பெணடிக்ற்  பாலன்,   கவிஞர்  முருகையன்,  ஓவியர்  ரமணி ஆகியோரைச்சந்திப்பேன்.   பாமன்கடை  இல்லத்திற்குச் சென்றால், சுந்தா சுந்தரலிங்கம்  குடும்பத்தினர்,   மௌனகுரு -  சித்திரலேகா தம்பதியர்,    கவிஞர்கள்  முருகையன்,   சிவானந்தன் ஆகியோரைச்சந்திக்கலாம்.
அது   உற்சாகமான  காலம்.   அங்கு  நான்  சந்தித்த  ஆளுமைகள்  சிலர் இன்றில்லை.   சிலர்  இலங்கையிலும்  வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர்.   நீர்கொழும்பில்  ஏதும்  இலக்கியக்கூட்டங்கள் ஒழுங்குசெய்யும்பொழுது   இந்த  இரண்டு  இடங்களுக்கும்  வருவேன். அங்கிருப்பவர்கள்   எனக்கு  சிலரின்  பெயரைச்சொல்லி  அறிமுகம் தேடித்தருவார்கள்.
அவ்வாறு   வந்தவர்களின்  பட்டியல்  நீளமானது.   கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திற்கு   மதியவேளையில்  நான் செல்வதுண்டு.   அப்பொழுது  எமது  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்   முழுநேர  ஊழியராக  பணியாற்றி அலைந்திருக்கின்றேன்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் மதியஉணவு வேளைக்குப்பின்னர்  அங்கிருந்த   எழுத்தாளர்கள்  ஒரு மேசையைச்சுற்றியிருந்து  கார்ட்ஸ்  விளையாடுவார்கள்.   அடடா இதற்கும்   சேர்த்துத்தான்   அரசாங்கம்  இவர்களுக்கு  சம்பளம் கொடுக்கிறதோ என்றும் யோசித்தேன்.
ஒருநாள்   நேரடியாக  முருகையனிடம்  கேட்டும்விட்டேன்.
அதற்கு   அவர்  அந்த  அறையின்  ஒரு  திசையைக்காட்டி  "  அதற்கும் சேர்த்துத்தான்"   என்றார்.
அவர்   சுட்டிய  பக்கம்  பார்த்தேன்.   ஒருவர்  ஆசனத்தில்  அமர்ந்தவறே ஆழ்ந்த  உறக்கத்தில்  இருந்தார்.   எனக்கு  வந்த  சிரிப்பை அடக்கியவாறு   முருகையனை   ஏறிட்டுப்பார்த்தேன்.
" உண்ட களை   தொண்டருக்கும்   உண்டல்லவா? " என்றார்.
கிடைத்துள்ள  மதிய  உணவு  இடைவே ளையில்தான்   இவ்வாறு ஓய்வும்,  கார்ட்ஸ்  விளையாட  நேரமும்  கிடைக்கிறது  என்று சமாதானம்  சொன்னார்.
கவிஞர்  என்று  பரவலாக  இவர்  அறியப்பட்டாலும்   நாடக ஆசிரியராகத்தான்   தனது  எழுத்துவாழ்வைத் தொடங்கியவர்.
தனது  ஆரம்பகால  நாடக  முயற்சிகளை  அவர்  அக்கால  கட்டத்தின் விளையாட்டு   என்றே   சொல்லியிருப்பவர்.    நாடகத்திற்கு ஆங்கிலத்தில்  Play  என்றும்  பொருள்படும்  அல்லவா.
கல்லூரியில்   படிக்கின்ற  காலத்திலேயே  நாடகம்  எழுதத்தொடங்கிய முருகையன்,   பெண்வேடம்  தரித்தும்  நடித்துள்ளார்.
முருகையன்   தென்மராட்சியில்  கல்வயல்  என்ற  கிராமத்தில் இராமுப்பிள்ளை  என்ற  ஆசிரியரின்  மகனாகப் பிறந்து,  ஆரம்பக் கல்வியை   கல்வயல்  சைவப்பிரகாச  வித்தியாசாலையிலும்  பின்னர்  சாவகச்சேரி   இந்துக்  கல்லூரியிலும்  அதன் பின்னர்,    யாழ்.  இந்துக் கல்லூரியிலும்  கற்றவர்.    கொழும்பு   பல்கலைக்கழகத்தில்  பயின்று 1956   இல்   விஞ்ஞானப்  பட்டதாரியானார்.   பின்னர்  1961   இல்  இலண்டனில்    கலைமாணிப்   பட்டத்தையும்   1985  இல்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்    முதுமாணிப்   பட்டத்தையும்    பெற்றவர்.

நாடகம்,   பா  நாடகம்,  விமர்சனம  திறனாய்வு   முதலான  துறைகளில் பல   நூல்களை   எழுதியவர்.
நண்பர்   கவிஞர்  ஈழவாணன்  வெளியிட்ட  முருகையனின்  ஒரு  நூல் நீர்கொழும்பில்   அச்சானபொழுது  அதனை ஒப்புநோக்கியிருக்கின்றேன்.   ஒரு  நாள்  கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில்  அவர்  எனக்கு  காண்பித்த  ஒரு பெரியகோவை ( File)  பெறுமதியானது.   அதில்   பேராசிரியர் கைலாசபதியும்  இன்னும்  சிலரும்  எழுதிய  கடிதங்களைப் பார்த்தேன். இலக்கிய  விவாதங்கள்,  கருத்துப் பரிமாற்றங்கள்  அக்கடிதங்களில் காணப்பட்டன.
அதனை   யாராவது  தேடி  எடுத்து  ஆவணப்படுத்த  முடியுமா ?  என்பது தெரியவில்லை.

கடிதக்கலையின்   மகத்துவத்தை  அந்தக்கோவை  காண்பித்தது. பின்னாளில்   கடிதங்கள்   என்ற  எனது  நூல்  வெளிவந்தமைக்கு ஆதர்சமாகத்திகழ்ந்தது   முருகையன்  அன்று  காண்பித்த அந்தக்கடிதங்கள்   அடங்கிய  கோவை.
முருகையனின்   வாழ்வையும்  பணிகளையும்  உற்றுநோக்கியபொழுது   அண்மையில்  நான்  படித்த  ஒரு கட்டுரைதான்   நினைவுக்கு  வந்தது.
அதன்   தொடக்கம்  இவ்வாறு  அமைந்திருந்தது.
ஒரு   குறிப்பிட்ட  துறையில்  காலம்  முழுதும் அர்ப்பணிப்புணர்வோடு   செயலாற்றுகிறவர்களும்   அந்த ஈடுபாட்டுக்காக   எல்லா  விதமான  இழப்புகளுக்கும்  தயாரான மனநிலையில்   இருப்பவர்களும்  தம்  இருப்பின்  வழியாக  மெல்ல மெல்ல   திசைகாட்டிகளாக  பேசப்படுபவர்களும்  ஒரு  சூழலில் பெரிய   ஆளுமைகளாக  அறியப்படுகிறார்கள்.   ஒரு பண்பாட்டுச்சூழலில்   துறைதோறும்  வாழும்   அனைத்து ஆளுமைகளுக்கும்   முதல்  மரியாதை  கிடைத்தல்  வேண்டும். ஆனால் , எதார்த்த  வாழ்க்கையில்  அப்படி  நிகழ்வதில்லை. எனினும்   அந்த  அமைதியை  அல்லது  புறக்கணிப்பை ஆளுமைகள்  ஒருபோதும்  பொருட்படுத்துவதில்லை. அவர்களுடைய   கவனம்  எல்லாத்  தருணங்களிலும்  தத்தம் துறைசார்ந்தே   இயங்கும்  தன்மையுடையதாகவே செயல்படுகிறது. ( ரவிசுப்பிரமணியனின்  ஆளுமைகளின் தருணங்கள்  - நூல்)
முருகையன்   இறுதியாக  யாழ்ப்பாணம்  பல்கலைக்கழகத்தில் பதிவாளராக   பணியாற்றிய வேளையில்  அங்கு  பயின்ற  ஒரு மாணவருக்கு   எமது  கல்வி  நிதியம்  உதவியது.   அம்மாணவர் தொடர்பாக   முருகையனுடன்  கடிதத் தொடர்புமேற்கொண்டிருந்தேன்.   அவரும்  விபரமான  பதில்  தந்து உதவினார்.
நீடித்த போர்   நெருக்கடிச் சூழலினால்  கடிதப்போக்குவரத்தும் தடைப்பட்டது.   அதன்பின்னர்  முருகையனுடன்  எனக்கு  தொடர்பாடல் இருக்கவில்லை.   அவர்  பற்றி  யாழ்ப்பாணம்  சென்று திரும்புபவர்களிடம்   கேட்டுத்தெரிந்துகொள்வேன்.    இங்கிருந்து செல்லும்   இலக்கிய  நண்பர்களை  அவரே  தேடிச்சென்று  உரையாடி மகிழ்வதாக   அறிந்தேன்.   எனக்கு  2010  வரையில்  யாழ்ப்பாணம் சென்று   திரும்புவதற்கு  சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.  ஆனால்,  அதற்கு   முன்னரே  முருகையன்  கொழும்பில்  2009  ஆம்  ஆண்டு  ஜூன்   மாதம்  27  ஆம்  திகதி  மறைந்துவிட்டார்.
அவரை   யாழ்ப்பாணத்தில்  சந்தித்த  சிலர்  சொன்ன  தகவல்கள் நெஞ்சை  நெகிழவைத்தது.   ஒரு  பேராளுமையின்  அந்திமகாலம்  ஏன் அப்படி   இருந்தது  என்பது  வியப்புக்குரியது.


அவருக்கு   முன்னரே  அவரது  நம்பிக்கைக்கும்  அளப்பற்ற நேசிப்புக்குமுரிய   அருமைத்தம்பி  கவிஞர்  சிவானந்தனின்  மறைவு அவருக்கு   பெரிய  தாக்கத்தை   ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
இருவருமே   கருத்தொற்றுமையுள்ளவர்கள்.   இருவரும்  கவிதை, கவிதை  நாடகம்,  விமர்சனம்  எழுதியவர்கள்.   1970 களில்  எழுச்சியுற்ற புதுக்கவிதைக்கு   எதிரான  கருத்துக்கொண்டிருந்தவர்கள்.
கவிஞர்    ஈழவாணனின்  அக்னி   புதுக்கவிதை  இதழின்  அறிமுகவிழா பம்பலப்பிட்டி  சரஸ்வதி  மண்டபத்தில்  திருமதி  பாலம் லக்ஷ்மணன் தலைமையில்   நடந்தபொழுது,  அதில்  நுஃமான்,   சண்முகம் சிவலிங்கம்   ஆகியோருடன்  நானும்  உரையாற்றினேன்.   எனக்கு கவிதைத்துறையில்   ஈடுபாடு  இல்லையாயினும்  அக்னி  இதழ்களை நீர்கொழும்பில்   அச்சிட்டதன்  காரணத்தாலும்   ஈழவாணனின் வேண்டுகோளுக்காகவும்   அன்று  உரையாற்றநேர்ந்தது.
நுஃமானும்   சண்முகம்  சிவலிங்கமும்  மரபுக்  கவிதை,   புதுக்கவிதை, கவிதை   நாடகம்  முதலான  துறைகள்  தொடர்பாக  விரிவாக உரையாற்றியதுடன் -  தமக்கிடையில்  கடிதங்கள்  ஊடாக  நடந்த வாதப்பிரதிவாதங்கள்  பற்றியும்  பேசினார்கள்.   சிவானந்தன் சபையில்   இருந்து  செவிமடுத்தார்.   முருகையன்  அன்று  வரவில்லை.
நிகழ்ச்சி   முடிந்து  அன்று  இரவு  பஸ்தரிப்பில்  நின்று  நானும் சிவானந்தனும்  உரையாடியபொழுது  எதிர்பாராதவிதமாக முருகையன்  அங்கு  தோன்றினார்.   வேறு  ஒரு  வேலையிருந்தமையால்   வருவதற்கு  தாமதித்துவிட்டது  என்று சொன்ன   முருகையனுக்கு,  அன்றைய  நிகழ்வின்  உரைகளை சிவானந்தன்  சுருக்கமாக  எடுத்துரைத்தார்.
அவர்களின்   உரையாடலிலிருந்து  அவர்கள்  இருவருக்கும் புதுக்கவிதை   மீதான  எதிர்வினை  துலக்கமாகியது.   இவர்கள் மட்டுமல்ல    கி.வா. ஜெகந்நாதன்,   தொ.மு.சி. ரகுநாதன்  ஆகியோரும் புதுக்கவிதையை   எதிர்த்தவர்கள்தான்.


முருகையன்   பேராசிரியர்  கைலாசபதியுடன்  இணைந்து  கவிதை நயம்   என்ற  நூலையும்   எழுதியவர்.
எனது   ஆரம்ப காலச் சிறுகதைகளை  மல்லிகையில்  படித்துவிட்டு நீர்கொழும்பை  வந்து   பார்க்கவேண்டும்   என  விரும்பினார். அவ்வாறுதான்   அவர்  அங்குவந்து  மல்லிகை  நிகழ்வில் உரையாற்றினார்.   இவ்வாறு  எனது  வளர்ச்சியிலும்  நான் சம்பந்தப்பட்ட   இலக்கியப்பணிகளிலும்   அக்கறை  கொண்டிருந்த முருகையன்,  ஒரு  நாள்  பாமன்கடை   இல்லத்தில் என்னைச்சந்தித்தவேளையில்   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின் தேசிய  ஒருமைப்பாட்டு  மாநாட்டில்   வெளியிடப்படவிருந்த   புதுமை இலக்கியம்   மலருக்கு   என்னிடமிருந்து  ஒரு  சிறுகதை  கேட்டார். அவர்தான்   மலரின்  தொகுப்பாசிரியர்.
மலரை  யாழ்ப்பாணத்தில்  வரதர்  தமது  ஆனந்தா  அச்சகத்தில் பதிப்பித்தார்.   நான்   விழிப்பு   என்ற   கதையை   எழுதியிருந்தேன். அக்கதையும்   சேர்ந்த   சுமையின்  பங்காளிகள் சிறுகதைத்தொகுப்பிற்கு   அவர்  பணியாற்றிய  திணைக்களத்தில் ஓவியராக   இருந்த  ரமணிதான்  அட்டைப்படம்  வரைந்தார்.  அந்த நவீன  ஓவியத்தை  வியந்து  பாராட்டினார்.
குறுகிய   காலத்தில்  முதல்  தொகுதி  வெளியிடும்  துணிச்சலையும் பாராட்டினார்.    அதற்கு  சாகித்திய  விருது  கிடைத்ததும்,   ஒருநாள் தமது   திணைக்களத்தின்  இதர  ஊழியர்களுக்கும்  என்னை அறிமுகப்படுத்தி  வாழ்த்தினார்.
இவ்வாறு   இளம்தலைமுறையினரை  வாழ்த்தி  ஊக்குவித்தவர் முருகையன்.    அவருடன்  கொழும்பிலும்   யாழ்ப்பாணத்திலும்  நடந்த இலக்கியக்கூட்டங்களில்   உரையாற்றியுள்ளேன். இளம்தலைமுறையினருக்கு   இலக்கிய   இதழ்களிலும்  இலக்கிய மேடைகளிலும்   களம்  வழங்கவேண்டும்  என்று  முற்போக்கு எழுத்தாளர்   சங்கத்தின்  செயற்குழுக்கூட்டங்களில்   அவர் வலியுறுத்தவும்   தவறவில்லை  என்பதை  மற்றவர்கள்  சொல்லித்தான் அறிந்துகொண்டேன்.
அவர்   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தில்  இணைந்திருந்தாலும் அரசியல்   சித்தாந்தங்களினால்  மாற்றுச்சிந்தனை  கொண்டிருந்த தேசிய  கலை  இலக்கியப்பேரவையின்  தலைமைக்குழுவிலும் இணைந்திருந்தார்.   இன்றும்  அவர்  பெயரில்  கொழும்பில் இந்தப்பேரவை  நினைவரங்கு  மண்டபம்  இயக்கி  நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.
முருகையன்  அங்கதச்சுவையுடன்  எழுதும் -  பேசும் இயல்புகொண்டவர்.
அன்று  1975  இல்  நடந்த   மாநாட்டின்  இரண்டாம்  நாள் நிகழ்ச்சியின் இறுதியில்   முருகையன்  தலைமையில்தான்  கவியரங்கு  நடந்தது. முதல்  நாள்  நிகழ்ச்சியில்  பிரதமர்,  அரசியல்  கட்சித்தலைவர்களின் உரைகள்தான்   ஆக்கிரமித்திருந்தன.   மறுநாள்தான் படைப்பாளிகளுக்கும்   இலக்கிய விமர்சகர்களுக்கும்  பேசுவதற்கு அவகாசம்    கிடைத்தது.
" அரசியல்வாதிகள்   எமக்கு  வழிகாட்டமுடியாது.  முதல் நாள்தான் இலக்கியவாதிகளுக்கு   முன்னுரிமை   தரப்பட்டிருக்கவேண்டும் " என்ற   விமர்சனம்   எழுந்திருந்தது.   அதற்கு  ஏற்றவாறு  சண்முகம் சிவலிங்கம்   அந்தக்கவியரங்கில்  கருத்துக்களை  கவிதையில் இழையோடவிட்டார்.
இதுபற்றி   இன்றும்  சிலர்  பேசுகின்றனர்.
தலைமை   தாங்கிய  முருகையன்,   எதிர்நோக்கப்பட்ட தர்மசங்கடத்தை   சாமர்த்தியமாக  கடந்தார்.   நேரமும் போய்க்கொண்டிருந்தது.    கவியரங்கு  நிறைவு பெறும்பொழுது இரவாகிவிட்டது.
முருகையன்   தமது  இறுதியுரையில், "  நேரமும்  போச்சே... மானமும் போச்சே  "  என்று  பாடி  கலகலப்பூட்டினார்.


பாரதி  நூற்றாண்டு  காலத்தில்  தேசிய  கலை  இலக்கியப்பேரவை தமது  தாயகம்  இதழில்   தொடர்ச்சியாக  பாரதி  சம்பந்தப்பட்ட திறனாய்வுகளை  சில  இலக்கிய  ஆளுமைகளிடமிருந்து  பெற்று பிரசுரித்தது.   பின்னர்  அனைத்துக்கட்டுரைகளையும்   பாரதி பன்முகப்பார்வை   என்ற  நூலில்  தொகுத்து  வெளியிட்டது.
 பாரதி   நூற்றாண்டு  காலத்தில்  வெளியான  இந்த  நூல் பெறுமதியானது.   இன்றைக்கும்  பாரதி  தொடர்பாக  ஆய்வுசெய்ய முன்வரும்    இலக்கிய  மாணவர்களுக்கு  உசாத்துணையாக விளங்குவது.  அந்தத்   தொகுப்பில்  முதலாவது  கட்டுரை  முருகையன்  எழுதியது. கால   மாற்றங்களும்   பாரதியும்  என்ற   அவருடைய   கட்டுரையில் பாரதியின்   தீர்க்கதரிசனங்களை  விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பதிவுசெய்திருக்கிறார்.
அதிலும்  அவர்  அங்கதச்சுவையை  பகிர்ந்துள்ளார்.
கபிலர் ,  பரணர்,   ஒளவையார்  முதலான  புலவர்கள்  இன்று தமிழ்நாட்டின்  அண்ணாசாலைக்கு  வந்து  பார்த்தால்  எப்படி  இருக்கும்  ?  எனக் கேட்கிறார்.   அண்ணாசாலையில்  உள்ள கட்டிடங்களையும்   மேம்பாலங்களையும்  தியேட்டர்  வாசல்களிலுள்ள சினிமா   விளம்பர  பாணர்களையும்   கற்றவுற்றுகளையும்  பார்த்து வியப்பும்   திகைப்பும்  அடைவார்கள்  என்பது  நிச்சயம்.   ஒளவையார் படத்தை,  ஒளவையார்  பார்த்தால்  என்ன  நினைப்பார். "  திரைப்படம் காட்டியும்   திரவியம்  தேடு "   என்று   பாடியிருப்பாரோ  என்னவோ - என்று   முருகையன்  கேட்கிறார்.
இவ்வாறே   முருகையனும்  இன்று  எம்முன்னே  தோன்றி,   இன்றைய முகநூல்   கலாசாரம்   பார்த்துவிட்டு,  " முகநூலில்   அலட்டி, அம்பலமாகி    முகவரி  தேடு "  என்று  பாடியிருப்பாரோ.
முருகையன்  ஒரே  சமயத்தில்  விஞ்ஞான  மற்றும் கலைப்பட்டதாரியாக  விளங்கியவர்.  தாம்  தொடக்கத்தில்  கல்வி கற்ற   சாவகச்சேரி  இந்துக்கல்லூரியிலேயே  முதல்  நியமனம் பெற்று விஞ்ஞான  ஆசிரியராகப் பணியாற்றினார்.    கொழும்பில் அரசமொழித்திணைக்களத்தில்   மொழிபெயர்ப்பாளராகவும்   பின்னர் கல்விப்பாட   வெளியீட்டுத் திணைக்களத்தில் முதன்மைப்பணிப்பாளராகவும்   பணி   தொடர்ந்தவர்.
கோப்பாய்   ஆசிரியப்பயிற்சிக் கல்லூரியில்  விரிவுரையாளராகவும் பின்னாட்களில்   வடபகுதியில்  முல்லைத்தீவு,   வவுனியா, யாழ்ப்பாணம்   ஆகிய  மாவட்டங்களில்  கல்விப்பணிப்பாளராகவும் சேவையாற்றியவர்.    இறுதியாக  யாழ்.  பல்கலைக்கழகத்தில் பதிவாளராக  இருந்து   ஓய்வுபெற்றார்.   அரச மொழித்திணைக்களத்தில்    கலைச்சொல்லாக்கத்திற்கு  கடுமையாக உழைத்தவர்.
யாழ். பல்கலைக்கழகத்தில்   பணியாற்றிய  போர்  நெருக்கடி மிக்க அவ்வேளையிலும்    அவர்  அரிக்கேன்  விளக்கின்  வெளிச்சத்தில்  பா நாடகங்கள்   எழுதியிருக்கிறார்.   கலை,   இலக்கிய  செயற்பாடுகளில் கூட்டாக   இயங்குவதில்  தோன்றும்  இடர்பாடுகள்  தொடர்பான அனுபவம்   மிக்கவர்களில்  முருகையனும்  இணைந்திருந்தவர்.
பாடசாலைகளில்   மாணவர்களை  ஊக்குவிப்பதற்காக  நடத்தப்பட்ட நாடகங்களில்   1950  களில்  நடித்திருக்கும்  முருகையன்,  பிற்காலத்தில் பல்கலைக்கழக   மட்டத்தில்   நாடகமும்  அரங்கியலும்  என்ற பாடத்திட்டம்   அறிமுகமான  காலத்திலும்  சில  முன்னணி இயக்குநர்களுக்காக   பிரதிகள்  எழுதிக்கொடுத்திருக்கிறார். அரங்காற்றுகையில்   இயக்குநரின்  பார்வைக்கு  ஏற்ப  பாக்களை இயற்றித்தந்திருக்கிறார்.    இதுபோன்ற  பல  அரிய  தகவல்களை அவருடன்   நெருங்கி  இயங்கியவர்களின்  பதிவுகளிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.
இவ்வாறு   கூட்டியக்கத்தில்  இணைந்திருந்த  முருகையன், அந்திமகாலத்தில் "  தனித்திருந்து   வாழும்   தவமுனியாக ஏகாந்தத்தில்    சஞ்சரித்தார் "  என்ற   செய்தி  மனதை   உருக்குகிறது. நான்  அவரை  இறுதியாக  1986  இறுதியில்  யாழ்ப்பாணத்தில்  நடந்த சோமகாந்தனின்  ஆகுதி  கதைத்தொகுதி    வெளியீட்டில்தான் கண்டேன்.    எப்பொழுதும்  முகச்சவரம்  செய்து பளிச்சான  முகத்துடன்  இருப்பார்.   அவர்  முகத்தில்  மந்திரப்புன்னகை தவழ்ந்துகொண்டிருக்கும்.
நான்   அவரை   சந்திக்காத   இறுதிக்காலத்தில்,  அவர்  தாடியும் வளர்த்து  யோகி போன்று  காட்சியளித்த  படங்களைத்தான் பார்த்திருக்கின்றேன்.   சித்தம்  போக்கு  முருகையன்  போக்கு எனக்கூறும்   வகையில்  இறுதிக்காலத்தில்   வாழ்ந்து   மறைந்துள்ளார். அவர்   இறப்பதற்கு  இரண்டு  வருடங்களுக்கு  முன்னர்தான் இலங்கையின்   சாகித்திய  ரத்னா  விருது  அவருக்கு   வழங்கப்பட்டது.   மல்லிகை,  தாயகம்,  ஞானம்  ஆகிய  இதழ்கள் அவரை   அட்டைப்பட  அதிதியாக  கௌரவித்துள்ளன.
அவருடைய  படைப்புகள் : கவிதை - காவியம்
ஒருவரம்  - நெடும்பகல் -  அது-அவர்கள்  - மாடும் கயிறு அறுக்கும் - நாங்கள் மனிதர்  -  ஒவ்வொரு  புல்லும்  பூவும்  பிள்ளையும்  - ஆதிபகவன்.
பா  நாடக  நூல்கள் :   வந்து சேர்ந்தன -  தரிசனம்  -  கோபுரவாசல்  -வெறியாட்டு  -  மேற்பூச்சு  -  சங்கடங்கள்  -
மேடை நாடகங்கள் :  கடூழியம் -   அப்பரும் சுப்பரும்
திறனாய்வு  நூல்கள்:   ஒருசில  விதி  செய்வோம்  -  இன்றைய உலகில் இலக்கியம்    -  கவிதை நயம்   ( பேராசிரியர்  கைலாசபதியுடன் இணைந்து எழுதியது )
இவற்றில்  அப்பரும்  சுப்பரும்  என்ற  நாடகம்  இதுவரையில் மேடையேறவில்லை  என்ற  கவலையையும்  ஒரு  நேர்காணலில் முருகையன்   தெரிவித்துள்ளார்.
இலங்கையின்  பராளுமன்ற  அரசியலை  அங்கதச்சுவையுடன் சித்திரித்த   இந்நாடகத்தை    மேடையேற்ற   ஏதோ  தயக்கம்   இதுவரையில் நீடிப்பதாக   அறியக்கிடைக்கிறது.   எவராவது  முருகையன்   நினைவாக  அந்தப்பிரதியை  தேடி  எடுத்து அரங்காற்றுகைசெய்ய  முன்வரல்   வேண்டும்   என்று   அவர்    மறைந்து ஏழு    ஆண்டுகளின்   பின்னர்   கேட்டுக்கொள்கின்றேன்.
---0---