கவிவிதை - 12 - --விழி மைந்தன்--

.
அடிமை 

என் பாட்டன் அடிமைத் தனத்திற்குப் பிறந்தான்.

நிலம் வெளுக்க முன் எழ வேண்டும்.

மழவராயரின் மாடுகளுக்குத் தீனி வைக்க வேண்டும்.

மழவராயரின் வயலில் உழ வேண்டும்.

உழுவது என்பது மாடுகளை ஓட்டி  மட்டும் அல்ல -  சில நேரம் மாடாகத் தன்னைப் பூட்டியும்!  அடிமைகளை நுகத்தில் பூட்டி உழுவது என்பது புத்தூர் மழவராயரின் பெருமைக்கு அடையாளம் அந்த நாளில்!

மழவராயரின் தோட்டத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.

மழவராயரின் வேலியை  அடைக்க வேண்டும்.

மழவராயரின் பல்லக்கைச் சுமக்க வேண்டும்.

மழவராயரின் நாயைக் குளிப்பாட்ட வேண்டும்.



இதுவெல்லாம் செய்த பிறகு, மழவராயரின் அடிமை கொடுக்கின்ற கஞ்சியை அடிமைக்கு அடிமையான இவன் வேலிப் புறமிருந்து குடிக்க வேண்டும்.

வாழ்க்கையில் என் பாட்டனுக்கு இருந்த சந்தோஷங்கள் மிகச் சில தான்.

ஆழ்ந்த  தூக்கம்...

வானத்தில் கீச்சிட்டுச் சுதந்திரமாகப் பறக்கிற கிளியையும், விடிகாலையில் கிணற்றடியில் மலர்கிற செவ்வரத்தம் பூவையும், நிலவில் தலையசைக்கும் பொன்னிற நெல்கதிர்களையும் பார்த்து ரசிக்கிற சில கணங்கள்....

கடும் கோடைக்குப்  பின் பெய்கிற முதல் மழையில் செம்மண் நிலம் கிளப்புகிற புழுதி வாசனையை முகர்கிற நிமிடங்கள்...

களைத்து  வீடு வருகிற போது  'அப்பு' என்று காலுக்குள் ஓடி வரும் தன்  குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்வது...

இவ்வளவு தான்!

ஊர்ச் சிவன் கோயிலில் மழவராயர்  சுவாமி தரிசனம் செய்து உள்ளம் உருகித் தேவாரம் பாடுகிற போது, எழுதப் படிக்கத் தெரியாதவனும் கோயிலுக்குள் போக முடியாதவனுமான என் பாட்டன் தூரவே நின்று தானும் வாய்க்குள் முணுமுணுப்பான்.

"யாமார்க்கும் குடியல்லோம். யமனை அஞ்சோம். நரகத்தில் இடர்ப்படோம். நடலை இல்லோம்!"

ஒரு முறை, யாரும் இல்லாத நேரம் கோயில் வாசல் படியில் கற்பூரம் கொளுத்தி விட்டான். அவனது கெட்ட  நேரம், இன்னொரு அடிமை மூலம் விடயம் 'கசிந்து' விட்டது. ஆல  மரத்தின் கீழ் ஊரைக் கூட்டி வழக்கு நடத்திய பிறகு, என் பாட்டனின் கையை வெட்டி விடும் படி மழவராயர் தீர்ப்பளித்து விட்டார்.

கையை வெட்டிய பிறகு, வைத்தியம் பார்க்க யாரும் இல்லாத நிலையில், இரத்தப் போக்கில் பாட்டன் செத்துப் போய்  விட்டான்.

கையை வெட்ட இழுத்துச் சென்ற போது, பாட்டியின் ஒப்பாரிகளுக்கு நடுவில் அவன் கத்தி விட்டுப் போனான்...


"திரும்பி வருவேன். இலட்ச லட்சமாய்க், கோடி கோடியாய்த்  திரும்பி வருவேன்!!!"


***

என் அப்பன் மாற்றத்திற்குப்  பிறந்தான்.

நாட்டிலும், ஊரிலும்!

காலங்கள் மாறத் தொடங்கியிருந்தன.

என் அப்பன் வளர்ந்து வந்த போது, மழவராயர்கள் மறையத் தொடங்கினார்கள்.

மழவராயரின் மகன் படித்த கல்லூரியில் இல்லா விட்டாலும், சின்னதொரு கிராமத்துப் பாடசாலையில் படிக்க முடிந்தது என் தகப்பனுக்கு.

பல்கலைக் கழகம் சென்று பராக்கிரமம் பண்ணா விட்டாலும், சின்னதொரு அரசாங்க வேலையில் சேர முடிந்தது.

மலைகள் நிறைந்ததும் மகா வலிவுள்ள நதியொன்று ஓடுகின்றதுமான ஊரிலே உத்தியோகம் கிடைத்தது.

நாலு மணிக்கு 'ரூமுக்கு' வந்து கால் மேல் கால் போட்டுப்  பத்திரிக்கை படிக்கவும் 'ரேடியோ' கேட்கவும் முடிந்தது.

வார இறுதியிலே, சந்தியில் இருந்த நானா கடையில் ஐந்து சதக் காசுக்கு வடையும் 'பிளேன்  டீ' யும் 'அடித்துக்' கொண்டு நண்பர்களோடு அளவளாவ முடிந்தது. 

அன்னையை மணந்த போது, ஆறு வாரங்கள் லீவு கிடைத்தது. அதற்குப் பிறகு ஊரோடு மாற்றம் கிடைத்தது.

'சும்மா' இருக்கிற நேரங்களில் 'செய்வம்' என்று  'வெளிக்கிட்ட' ஆயிரம் கண்டுத் தோட்டத்தில் நட்டமும் லாபமும் மாறி மாறிக் கிடைத்தது. 

மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வருகிற பழக்கம் வந்தது. வர முடியாத போது  'ஆளை' அனுப்பி எடுக்க முடிந்தது. 

அண்ணாவும் அக்காவும் நானும் தங்கையும் அப்பன் தோளில் ஏறித் திரிந்து வளர முடிந்தது.

'எங்களுக்குச் சந்தர்ப்பங்கள் காணாது. இல்லாட்டி நான் எங்கையோ போயிருக்க வேண்டிய ஆள்' என்று என் அப்பன் அடிக்கடி சொல்வதுண்டு.

'எங்கையோ எண்டால், எங்கை போய்  இருப்பியள்  அப்பா?' என்று சிறுவனாக இருந்த போது  ஒரு நாள் கேட்டேன். 

'வளர்ந்த பிறகு புரியும்  உனக்கு' என்று என் தகப்பன் சொன்னான்.

***

நான் சுதந்திரத்திற்குப் பிறந்தேன்.

விரும்பிய பாடசாலையில் படிக்கவும், விரும்பிய கோயிலில் தொழவும், விரும்பிய பெண்ணைக் 'கட்டவும்' கூட அனுமதி இருந்தது. யாரும் தடுக்கவில்லை. 

விரும்பிய நாடு ஒன்றில் வந்து வசிக்கலானேன். 

எங்கே போக விரும்பினேனோ அங்கெல்லாம் போனேன். 

விருப்பங்களைத் தேடி விரைந்ததால், கண்ணாடியையும் கடிகாரத்தையும் பார்க்க மறந்தேன். 

நிலம் வெளுக்க முன் எழுந்தேன்.

மடிக் கணனியைத் தூக்கிக் கொண்டு வேலைக்குச் சென்றேன்.

கட்டுரைகளும், மின் கடிதங்களும், 'பிரசண்டேஷன்' களும் வரைந்தேன்.

'மீட்டிங்குகளில்' குந்தி இருந்தேன்.

பாரிசுக்கும், டோக்யோ விற்கும், மொன்றியல் இற்கும் பறந்தேன். 'இகனமி' வகுப்பு 'பிசினஸ்' வகுப்பான போது  மகிழ்ந்தேன்.

பதவி உயர்வுக்குச் சண்டைகள் பிடித்தேன்.

ஆழ்ந்த தூக்கம் கிடைக்கவில்லை. தூங்கும் போதும்  'பிரசண்டேஷன்' கள்  கனவில் வந்தன.  அலாரம் கிரீச்சிடும் போது  கனவுகள் முறிந்தன.

வானத்தின் நீல நிறம் மறக்கலாயிற்று. பறவைகளின் பாடல்கள் காதில் விழவில்லை. மழை பெய்வதை நின்று ரசிக்க நேரமில்லை. மதியம் சாப்பிட்ட உணவு என்ன என்பது நினைவில் இருப்பதில்லை -  'லஞ்ச்  மீட்டிங்குகளில்' விழுங்கித் தொலைத்த ஏதோ  ஒன்று. 

காலையில் வேலை செல்லும் போது  தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் , வீடு திரும்புகையில் தூங்கி விடுகின்றன மறுபடி!

வார இறுதிகள் 'ஓவர் டைம்' உழைப்பதற்கான வழிகள். 

அன்றொரு நாள் என் பாட்டனைப் பற்றி எண்ணிய போது  உறைத்தது எனக்கு:

அவனுக்கிருந்த மகிழ்வுகள் பலவும் எனக்கில்லை என்று!

என் பாட்டன் மழவராயருக்கு அடிமை.

நான் யாருக்கு அடிமை?