தமிழ் சினிமா - புகழ்






தமிழ் சினிமாவில் இளைஞர்களின் அரசியல் குறித்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மட்டுமின்றி ஒரு அரசியல் பிரமுகர் தவறு செய்தால் தட்டியும் கேட்க வேண்டும் என்ற கதைக்களத்தில் வெளிவந்துள்ள படம் தான் புகழ்.
ஜெய், சுரபி, RJ பாலாஜி, கருணாஸ் நடிக்க மணிமாறன் படத்தை இயக்கியுள்ளார்.

கதைக்களம்

தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் என்று தன் அப்பா, மாமா வளர்ப்பில் வளர்ந்தது மட்டுமின்றி ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக ஜெய் வலம் வருகிறார். சிறு வயதிலிருந்தே தன் ஊரில் இருக்கும் ஒரு மைதானத்தில் ஓடி ஆடி சந்தோஷமாக தன் நண்பர்களுடன் ஜெய் பொழுதை கழிக்கின்றார்.
கல்வி அமைச்சர் அந்த ஊரில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் உதவியுடன் அந்த மைதானத்தை கைப்பற்றி ஒரு பில்டிங் கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், ஜெய் அது நாங்கள் வாழ்ந்து, விளையாடி வரும் மைதானம் என கங்கனம் கட்டி போராடுகிறார்.
தன் விரலை வைத்து தன் கண்களையே குத்துவது போல், ஜெய்யின் நண்பருக்கு அரசியல் ஆசைகாட்டி மேலும், அவரின் பணத்தேவையை பூர்த்தி செய்து அந்த மைதானத்தை பிடிக்க பார்க்கின்றார்.
ஆனால், எத்தனை சோதனை வந்தாலும் அந்த மைதானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஜெய், இத்தனை பெரிய அரசியலை தாண்டி வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஏற்கனவே இதே சாயலில் சமீபத்தில் மெட்ராஸ், அஞ்சல ஆகிய படங்கள் வந்தாலும், 100 காதல் கதைகள் வந்தாலும் நாம் பார்க்க தான் செய்கின்றோம். அந்த வகையில் இதுபோல் நல்ல கருத்துக்களை கொண்ட படங்கள் ஒரே சாயலில் வந்தாலும் பார்ப்பதற்கு என்ன? என்று தான் தோன்றுகின்றது.
ஜெய் தன் திரைப்பயணத்திலேயே பெஸ்ட் கதாபாத்திரம் என்று கூறலாம், புகழாக ஊரில் எந்த அநியாயம் நடந்தாலும் போராடும் குணமுடையவராகவும், தன்னை கொலை செய்ய முயற்சித்தவன் உன் நண்பன் தான் என பலர் சொல்லியும் கேட்காமல் நட்பிற்கு மரியாதை கொடுக்கும் இடத்திலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
சுரபி படத்திற்கு எந்த விதத்தில் தேவைப்படுகிறார் என்று தெரியவில்லை, பல காட்சிகளில் ஒட்டாமல் ஏதோ காதல் காட்சிகள் தேவை என்பதற்காக வந்து செல்கின்றார். இதே வரிசையில் தான் RJ பாலாஜி, காமெடி எல்லாம் ஓரங்கட்டி கொஞ்சம் எமோஷ்னல் முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் செட் ஆகவில்லை பாஸ்.
ஒரு தவறு நடந்தால் கண்டிப்பாக இளைஞர்கள் தட்டிக்கேட்க வேண்டும், அது எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் தைரியமாக போராட வேண்டும் என்று ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குனர் மணிமாறனுக்கு ஒரு சல்யூட். ஆனால், இதை கமர்ஷியலாக எடுப்பதா? அல்லது ரியலிஸ்டிக்காக எடுப்பதா? என்பதில் கொஞ்சம் தடுமாறியுள்ளார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாக படப்பிடித்து அசத்துகின்றது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளனர்.

க்ளாப்ஸ்

நல்ல கதைக்களம், இதற்கு நன்றாக பொறுந்திய ஜெய் மற்றும் அவர் நண்பர்களின் கதாபாத்திரம். இவர்கள் அனைவரையும் விட லோக்கல் சேர்மனாக நடித்திருக்கும் வில்லன். பெரியதாக அதட்டலும் இல்லாமல், மேனரிசத்தில் கலக்கியுள்ளார். பல படங்களில் இனி வாய்ப்பு காத்திருக்கின்றது. ஜெய்யின் அண்ணனாக கருணாஸ், இத்தனை யதார்த்தமாக ஒரு அண்ணனை பார்த்திருக்க முடியாது. இனி கருணாஸிற்கு குணசித்திர கதாபாத்திரம் குவிய போகின்றது.
படத்தின் வசனம் பல இடங்களில் கைத்தட்ட வைக்கின்றது. அரசியலை விட வேறு எந்த தொழில் பணம் அதிகம் கிடைக்க போகின்றது. அரசியலுக்கு வாங்க, என்பது போல் பல வசனங்கள். போலிஸை வைத்துக்கொண்டே, போலிஸிற்கு தெரியாமல் மக்களுக்கு பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறுவது போன்ற காட்சியமைப்புக்கள் நகைச்சுவை தாண்டி நாட்டில் நடக்கும் விஷயத்தை அப்பட்டமாக காட்டுகின்றது.

பல்ப்ஸ்

முன்பே கூறியது போல் படத்தை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகின்றது.
படம் முழுவதும் யதார்த்தமாக சென்று கிளைமேக்ஸில் ஒரு மாஸ் ஹீரோ போல் ஜெய் நடந்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஜெய்யின் நண்பர் தன் பதவியை ராஜினாமா செய்தால், தன் சேர்மன் பதவி போய் விடும் என்று தெரிந்தும் கிளைமேக்ஸில் அவரை வில்லன் வெட்ட நினைப்பது என்ன லாஜிக்?
மொத்தத்தில் தவறுகளை தட்டிக்கேட்கும் இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ஜெய்யிற்கும் இந்த படம் புகழ் சேர்க்கும்.

ரேட்டிங்-2.75/5     நன்றி cineulagam