தவில் மேதை தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு சிட்னியில் விழா - செ.பாஸ்கரன்

.

ஒரு இசைக் கலைஞருக்கு விழா எடுப்பதும் உலகத் தமிழர்களால் அன்பு பாராட்டப் படுவது மென்றால் அது விசுவலிங்கம் தெட்சணாமூர்த்தி என்று அழைக்கப்படும் தவில் மேதை யாழ்ப்பாணம்  தெட்சணாமூர்த்தி அவர்களுக்குத்தான். 1933ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று இணுவில் என்கிற ஊரில் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவில் கூட மிகச்சிறந்த தவில் கலைஞராக போற்றப்பட்டவர். மிகப்பெரிய இசைக் கலைஞர்கள் எல்லோராலும் போற்றப்பட்ட ஈழத்து கலைஞர்.நல்ல கலைஞர்கள்  நல்ல கவிஞர்கள் நீண்டகாலம் வாழ்வதில்லை அதுபோல்  இவரும்  1975 மே 13  இல் தனது 41வது வயதில் மறைந்து விட்டார். 

ஈழத் தமிழர்களுக்கு பெருமை தேடித்தந்த தெட்சணாமூர்த்தி அவர்களை இன்று உலகெங்கும் உள்ளவர்கள் கொண்டாடுகின்றார்கள் அந்த வகையில் சிட்னி அவுஸ்ரேலியாவில் சென்ற  பெரிய வெள்ளிக்கிழமை தினமான 25.03.2016 அன்று தூங்காபி சமூக நிலையத்தில் காலை 9.00 மணிமுதல் 12.30 மணிவரை நினைவு விழா திரு.நவரட்ணம் ரகுராம் தலைமையில் இடம்பெற்றது.பிரபல ஆவணப்பட இயக்குநர் திரு அம்சன்குமார் இயக்கத்தில் உருவான ஆவணப்பட வெளியீடும் தவில் மேதை தெட்சணாமூர்த்தி அறக்கட்டளை பதிப்பித்த தவில் மேதை லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி  புத்தக  வெளியீடும் நினைவுரைகளும் இடம்பெற்றது.

நிகழ்வு குறித்த நேரத்திற்கு நாதஸ்வர இசைக் கச்சேரியுடன் ஆரம்பமானது . இந்த இசைக் நிகழ்வை அவுஸ்ரேலிய நாதஸ்வர தவில் கலைஞர்களான மாசிலாமணி சத்தியமூர்த்தி , சண்முகநாதன் ராகவன் , கனகசபாபதி  வைத்தீஸ்வரன் , சுப்பிரமணியம் முருகதாஸ் ஆகியோர் நிகழ்த்தி மங்கள கரமாக ஆரம்பித்து வைத்தார்கள். 

சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு வருகை தந்திருந்த அமரர்  தெட்சணாமூர்த்தி அவர்களின் மகன் உதயசங்கர் தெட்சணாமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். 
நிகழ்வை கலாநிதி பாலா விக்னேஸ்வரன் விளக்க உரையுடன் ஆரம்பித்து வைத்தார்.மங்கள விளக்கை  வானொலி மாமா நா.மகேசன் , திரு. வேலுப்பிள்ளை, நாதஸ்வர கலைஞா திரு சத்தியமூர்த்தி, சிட்னி ஆலய குருக்கள் மற்றும் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த சந்திரசேகர சர்மா ஆகியோர் ஏற்றிவைத்தார்கள் அதனைத் தொடர்ந்து ஹோம்புஷ் தமிழ்க்கல்விநிலைய மாணவிகள் தமிழ் வாழ்த்தை இசைத்தார்கள் ,தொடர்ந்து நித்திய கல்யாணி சத்தியமூர்த்தி தன்அழகிய குரலில் நிகழ்விற்கு பொருத்தமான பாடலான "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா"  என்ற பாடலை பாடினார். திருமதி தர்மவதி சந்திரதாஸ்  வரவேட்புரையை மிக நேர்த்தியாக வழங்கினார்.  திரு நவரட்ணம் ரகுராம் தன்னுடடைய தலைமையின் போது அமரர்  தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றிய பலவிடயங்களை  இடையிடையே விபரித்துக் கொண்டிருந்தது மிக நன்றாக இருந்தது. 

திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன் அவர்கள் ஞான குபேர பூபதி தெட்சணாமூர்த்தி  பற்றிய உரையினை  மிக அழகாக பல தகவல்களையும் தொகுத்து  ஆற்றியது மிகச் சிறப்பாக இருந்தது.
பல் வைத்திய கலாநிதி பாரதி அவர்கள் கவியால் வாழ்த்து பாடினார் , தமிழ் வல்லுநர் மயில்வாகனம்  தனபாலசிங்கம்  அவர்கள் தான் கண்ட தெட்சணாமூர்த்தியை இலக்கிய ஒற்றுமைகளோடு எடுத்துரைத்தார். தொடர்ந்து கானா பிரபா அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது அதில் இந்த நிகழ்விற்கு ஏறக்குறைய இருநூறு மக்கள் வருகை தந்திருப்பது மக்கள் தெட்சணாமூர்த்தி அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை எடுத்துக் காட்டுகின்றது என்றார். இறுவெட்டையும் நூலையும் முதலில் தெட்சணாமூர்த்தி அவர்களின் மகன் உதயசங்கர் தெட்சணாமூர்த்தி வெளியிட்டு வைத்தார் தொடர்ந்து  கனடாவில் இருந்து வருகை தந்திருந்த நாதஸ்வர கலைஞர் பஞ்சாபிகேசன் நாகேந்திரன், இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த நாதஸ்வர கலைஞர் பிச்சையப்பா ரஜீவன், இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த தவில் கலைஞர் பிரசன்னா நடராஜசுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள்.

இறுதியாக உதயசங்கர் தெட்சணாமூர்த்தி ,பஞ்சாபிகேசன் நாகேந்திரன் ,பிச்சையப்பா ரஜீவன் , பிரசன்னா நடராஜசுந்தரம் ஆகியோர் ஒரு அருமையான நாதஸ்வர தவில் கச்சேரியை வழங்கினார்கள். ஒரு மாபெரும் தவில் மேதையின் நினைவு  நிகழ்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவுற்றது. 

Chelliah Paskaran