திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
மொழியின்  தேவைகள்  மாறுபடும்  கோலம்
அரசியல்வாதிகளிடம்,   புலனாய்வாளர்களிடம், இராஜதந்திரிகளிடம்,   பேராசிரியர்களிடம், இலக்கியவாதிகளிடம்,     மொழிபெயர்ப்பாளர்களிடம் மொழியறிவின்        பயன்பாடு


                                       
வரிவடிங்கள்  இல்லாத  பல  மொழிகள்  உலக  நாடுகளில் வழக்கிலிருக்கின்றன.   குறிப்பாக  பழங்குடி  மக்களிடமும்  இந்திய மலைவாழ்  மக்களிடமும்  சில  ஆபிரிக்க  நாடுகளிலும் அவுஸ்திரேலியா  ஆதிவாசிகள்  சமூகத்தில்  சில  பிரிவுகளிலும் வழக்கிலிருக்கும்   மொழிகளில்  அவர்கள்  தாராளமாகப் பேசுவார்கள்.  ஆனால்,  அவற்றை  எழுதிக் காண்பிக்கச்சொன்னால் அதற்கு  வரிவடிவம்  இல்லை  என்பார்கள்.
இலங்கையில்   எனது  இலக்கிய  நண்பர்  மேமன்கவி  தாம்  பேசும் மேமன்மொழிக்கு  வரிவடிவம்  இல்லை  என்று  முன்பொருதடவை சொல்லியிருக்கிறார்.   நாம்  அவரை  மேமன்  என்று  செல்லமாக அழைப்போம்.

ஒருநாள்  மட்டக்குளியில்  இருக்கும்  அவருடைய  வீட்டைத் தேடிக்கண்டுபிடித்துச்சென்றபொழுது   அவர்  வீட்டுக்கதவு   தட்டி அங்கிருந்த  அவருடைய   சகோதரியிடம் "  மேமன்  இருக்கிறாரா ?"  என்று   கேட்டேன்.  அவர்களுக்குத்  தமிழும்  பேசத்தெரியும்.



" இங்கு  எல்லோருமே  மேமன்  சமூகத்தவர்கள்தான் "  என்றார்.
நான்  சுதாரித்துக்கொண்டு, "  மேமன்கவியை  பார்க்கவேண்டும் " என்றேன்.
அதற்கு  அவர்,  " எங்கட  பாபுவையா  விசாரிக்கிறீர்கள் ? " என்றார். எனக்கு  அப்பொழுதுதான்  மேமன்கவிக்கு  பாபு  என்றும்  வீட்டுப்பெயர்   இருப்பது  தெரியவந்தது.   அவருடைய  இயற்பெயர் ரஸாக்.   "  பாபு  கவிதை  எழுதுவது  தெரியும்.  ஆனால்,  தனக்கு மேமன்கவி   என்ற  பெயரை  எப்பொழுதிருந்து  வைத்திருக்கிறான் என்பதுதான்  தெரியாது "  என்று  அந்தச்சகோதரி  சென்னதை இப்பொழுது    நினைத்தாலும்  சிரிப்பு  வருகிறது.


Meman kavi

மேமன்கவி  வந்ததும்,   நடந்ததைச்சொன்னேன்.  அவர் சிரித்துக்கொண்டே,  "  மச்சான்  உன்வீட்டுக்கு  வந்து  நான்  தமிழன் இருக்கிறானா ?  என்று  கேட்டால்  எப்படி  இருக்கும் ? "  என்றார். நான்  தமிழ்க்கவி   என்ற  பெயரில்  எழுதவில்லையே  என்றேன்.
----------
இலங்கையில்   மொழிப்பிரச்சினை,  தேசிய  இனப்பிரச்சினையாக வடிவம்கொண்டு   இனவிடுதலைப்போராட்டம்  வரையில்  சென்று அழிவுகளைச் சந்தித்தது.
சிங்களம்   மட்டும்  சட்டம்,   ஸ்ரீ  எதிர்ப்பு  போராட்டம்,  தமிழ் - சிங்கள மொழிகள்  மீது  தார்  பூசும்  அட்டகாசம்  என்பனவே  பின்னாளில் இரண்டு   தரப்புக்கும்  இடையே   குரோதங்களை   வளர்க்கக்  காரணமாகியது.
சிங்களமொழி   படிக்கமாட்டோம்   என்று  அரச  உத்தியோகத்தை துறந்தவர்களும்   இருக்கிறார்கள்.   இலங்கையில்  முன்பொரு காலத்தில்   எழுதுவினைஞர்  கோடீஸ்வரன்  என்ற  தமிழர்,  அரசுக்கு   எதிராக  தொடர்ந்த  அரசகரும  மொழி  தொடர்பான  வழக்கு  பிரசித்தம்.
தென்னிலங்கையில்   வாழ்ந்த  தமிழர்களும்  முஸ்லிம்களும்  மத்திய   நாட்டில்  வாழ்ந்த  மலையகத்தமிழ்  மக்களும்  சிங்களம் பேசக்கூடியவர்களாக   இருந்தனர்.   காரணம்,  அவர்கள்  சிங்கள மக்கள்  மத்தியில்  நெருக்கமாக  வாழ்ந்தனர்.
கலவர   காலத்தில்  மொழியின் பெயரால்  பெரிதும்  பாதிக்கப்பட்டதும் மலையகம்   மற்றும்  தென்னிலங்கையும்தான்.   1958, 1977, 1981, 1983   காலங்களில்  தமிழர்கள்  கப்பலேறிச்சென்று  கப்பலோட்டாத தமிழர்களானார்.

ஆனால்,  வடமராட்சியில்  தமிழர்கள் - கப்பலோட்டிய  தமிழர்கள் என்ற   பெயரும்  பெற்றனர்.
இன்று   இலங்கையில்  பல பாகங்களில்  தமிழ்  மாணவர்கள் சிங்களமும்  சிங்கள  மாணவர்கள்  தமிழும்  கற்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில்   நான்  சந்தித்த  இலங்கை   பெரும்பான்மை இனத்தவர்களிடத்தில்  தாம்  தமிழைக்கற்கவில்லையே  என்று கவலைப்படுவதை  காணமுடிந்தது.   அவர்கள்  சிங்கள அரசியல்வாதிகளையே    இதுவிடயத்தில்  தொடர்ந்து குறை கூறிவருகின்றனர்.


தெரிந்த   சில  தமிழ்  வார்த்தைகள்  அவர்களிடமிருந்து  பிறக்கும் பொழுது, "  கொஞ்சங்  கொஞ்சங்  தெரியும் "  என்று  கொஞ்சும் மொழியில்   பேசுவார்கள்.
இலங்கையில்   கம்பஹா  மாவட்டத்தில்  நாலந்தா  கல்லூரி  சிங்கள ஆசிரியர்கள்   சிலருக்கும்,   மினுவாங்கொடை  பிரதேசத்தில்  சில பௌத்த   பிக்குகளுக்கும்  மருதானையில்  தெமட்டகொட  வீதியில் அமைந்த   பெரிய  பௌத்த  விஹாரையிலிருந்த  சில  பௌத்த பிக்குகளுக்கும்  வாரவிடுமுறை  நாட்களில்  தமிழ்  கற்பித்த இனிமையான   அனுபவமும்  எனக்கு  கிட்டியிருக்கிறது.
சில   பௌத்த  பிக்குகள்  எனது  வீடுதேடியும்  வந்துவிடுவார்கள். வரும்பொழுது  எமக்கு  பரிசுப்பொருட்களும்  எடுத்துவருவார்கள். அவர்களுக்கு    எமது  தமிழ்  உணவு   மிகவும்  விருப்பம்.  ஆனால்,  அந்த   விருந்தோம்பலுக்காக  அவர்கள்  மதியம்  12   மணிக்கு   முன்பே   வருவார்கள்.   அவர்கள்  அதற்குப்பின்னர்  எதனையும் கடித்து   விழுங்கக்கூடாது  என்பது  பௌத்த  தர்மம்.
விக்கா  பதங்  சமாதி  ஹாமி.
இலங்கையில்   சில  சிங்கள  அரசியல்வாதிகள்  தமிழில் பேசுவதற்கும்    எழுதுவதற்கும்  பயிற்சிகளை   பெற்றனர்.   முன்னாள் ஜனாதிபதி   சந்திரிக்காவும்  தமிழ்  படித்தார்.   ஆனால்,  மேடைகளில் அவர்   பேசவில்லை.   முன்னாள்  ஜனாதிபதி  மகிந்த  ராஜபக்ஷவும் தமிழ்   கற்றார்.   தமிழ்ப்பிரதேசங்களுக்கு  சென்றவேளைகளில்  அவர் மேடையில்  தமிழ்  பேசினார்.
ஆனால்,  இறுதியாக  நடந்த  ஜனாதிபதித் தேர்தலில்  அவர் தோற்றபின்னர் , தமிழ்ப்பிரதேசங்களை   அவர்  மறந்துவிட்டதாகத்தான் தெரிகிறது.
மக்கள்   விடுதலை  முன்னணி  முன்னாள்  தலைவர் ரோகணவிஜேவீரா,  தமிழ்  கற்க  முனைந்தார்.   ஜனாதிபதித் தேர்தலில்   அவர்  போட்டியிட்டபொழுது,  ரூபவாஹினி  தொலைக்காட்சியில்   தமிழிலும்  பேசி  தமது  கட்சிக்காக  பிரசாரம் செய்தார்    என்பதும்  குறிப்பிடத்தகுந்தது.
இலங்கை  வந்த  இந்தியப்பிரதமர்  மோடி  தமக்குத்  தெரிந்த  தமிழில் பாரதி  பாடலில்  சில  வரிகளைப்  பாடி  அங்கிருந்த  தமிழர்களை குதூகலிக்கச்செய்தார்.


அவுஸ்திரேலியா   கனடா,   மற்றும்  அய்ரோப்பிய  நாடுகளிலும் வெள்ளை   இனத்தைச்சேர்ந்த  அரசியல்  தலைவர்கள்  தமிழ்  மக்கள் சம்பந்தப்பட்ட   நிகழ்ச்சிகள் -  விழாக்களுக்கு  வந்தால்  அங்கிருக்கும்  தமிழர்களை  குதூகலிக்கச்செய்ய  வணக்கம்,   நன்றி என்ற  சொல்லை   மறக்காமல்  தெரிவித்து  கரகோஷம் பெற்றுக்கொள்வதையும்,    சிங்கள  மக்களிடம்  வந்து  பேசும் பொழுது அயூபோவன்,   ஸ்தூத்தி  எனச் சொல்வதையும்,   முஸ்லிம் மக்களிருக்கும்   மண்டபங்களில்  அஸ்ஸலாமு   ஆலைக்கும் எனச்சொல்வதையும்   அவதானித்திருப்போம்.
அமெரிக்க   ஜனாதிபதி  பராக்  ஒபாமா   கெய்ரோவுக்கு  சென்றபொழுது அங்கிருந்தவர்களை   அஸ்லாமு  ஆலைக்கும்  என்றே விளித்துப்பேசினார்.
-------
இதுஇவ்விதமிருக்க  முன்னொரு  காலத்தில்  எமது  தமிழ்மொழியை துறைபோக  கற்றுத்தேர்ந்தவர்கள்  என்று  நாம்   அறிந்தவர்கள் இத்தாலியரான   வீரமாமுனிவர்,   மற்றும்  இலங்கையில் மானிப்பாயில்    மருத்துவ  சேவையாற்றிய  அமெரிக்கப்பாதிரியார் சாமுவேல்  கிறீன்  ஆகியோர்.
இவர்களைப்போன்று  மற்றும்  ஒருவர்  ருஷ்யாவில் உக்ரேயினைச்சேர்ந்தவரும்   மாஸ்கோ   முன்னேற்ற  பதிப்பகத்தில் பணியாற்றியவருமான   தமிழ்  இலக்கிய  அபிமானி  கலாநிதி  விதாலி ஃபுர்ணிக்கா.   ஆரம்பத்தில்  அங்கு   கட்டிடத்தொழிலாளியாக இருந்த   இவர்,  அருகிலிருந்த  நூலகத்தில்  பாரதியின்  கவிதை நூலின்   ஆங்கில  மொழிபெயர்ப்பை  படித்துவிட்டு  தமிழ்நாட்டுக்கு வந்து  அறிஞர்  மு. வரதராசனிடம்  தமிழ்  கற்று  தனக்கு தமிழகப்பித்தன்  என்ற  புனைபெயரையும்  சூட்டிக்கொண்டவர்.
ஜெயகாந்தனின்   இனிய  நண்பர்.   ஜெயகாந்தனின்  சுந்தரகாண்டம் நாவலை    மட்டுமன்றி  மேலும்  சில  சிறுகதைகளையும்  ருஷ்ய மொழிக்கு   பெயர்த்தவர்.   ஜெயகாந்தன்  இவர்  பற்றிய  நினைவுகளை தமது  நட்பில்  பூத்த  மலர்கள்  நூலில்  விரிவாக   பதிவுசெய்துள்ளார்.
புர்ணிக்கா  பிறப்பு  முதல்  இறப்பு  வரையில்  என்ற   தமது   நூலில் இந்திய  தொன்மங்கள்  பற்றியும்   தமிழக  வாழ்வில்  தாம்  பெற்ற அனுபவங்களையும்    எழுதியிருக்கிறார்.   சோவியத்தில்  பாரதி நூற்றாண்டு  விழா   கொண்டாடப்பட்ட வேளையில்  அந்தக்குழுவில் இணைந்திருந்து  சில  கட்டுரைகளும்  எழுதினார்.
இவருக்கு    இலங்கையிலும்  தமிழ்  நாட்டிலும்  பல  இலக்கிய நண்பர்கள்   இருக்கின்றனர்.   தலாத்து  ஓயா  கணேஷ்  அவர்களை உக்ரேயின்   மகாகவி  தராஷ்  செவ்சென்கோவ்  நூற்றாண்டு விழாவுக்கும்  அழைத்தவர்.
எனக்கும்   அவர்  இனிய  நண்பர்.  அவரை  1985  இல்  மாஸ்கோவில் சந்தித்தபொழுது,  இலங்கை  சோவியத் தூதரகத்தின்  தகவல் பிரிவில்    பணியாற்றிய  ஸ்ரோகன்   என்ற    அன்பருடன் தொடர்புகளை   ஏற்படுத்தித்தந்தார்.
அதற்கு   முன்னர்  அங்கு  நடந்த  இரண்டு   சுவாரஸ்யமான சம்பவங்களையும்   இங்கு  குறிப்பிடுதல்  பொருத்தமானது.
மாஸ்கோ   இஸ்மயிலோவா  ஹோட்டலில்  நாம்  தங்கியிருந்தோம். அப்பொழுது   சர்வதேச  இளைஞர்  மாணவர்  விழா  அங்கு நடந்துகொண்டிருந்தது.
156   நாடுகளின்  பிரதிநிதிகள்  கலந்துகொண்டோம்.   நான் முன்னெச்சரிக்கையாக   என்னை   ஒரு  தாவர  பட்சணி  என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.    அங்கிருந்த  விடுதியில்  சோவியத் வழிகாட்டித்தோழர்கள்   எனக்காக  பிரத்தியேகமாக  ஒரு  உணவு மேசையை   ஒழுங்குசெய்து  தந்தனர்.
மீன்மாமிசம்  எதுவும்  அற்ற   உணவுவகைகளே  மூன்று  வேளையும்   எனக்குத்தரப்பட்டது.   எம்முடன்  வந்த  சில  முஸ்லிம் பிரதிநிதிகளும்   எனது  மேசைக்கு  வருவதற்கு  விரும்பினர். அவர்களின்    மேசையில்  பன்றி  இறைச்சி  பரிமாறப்பட்டதும்  ஒரு காரணம்.
அன்று   ஒருநாள்  வெள்ளிக்கிழமை.   முஸ்லிம்  இளைஞர்கள் கவலை  தோய்ந்த  முகத்துடன்  இருந்தனர்.   அவர்கள்  அருகில்  வந்த   விஜயகுமரணதுங்கவிடம்  "  இன்று  வெள்ளிக்கிழமை. இலங்கையிலிருந்திருந்தால்   பள்ளிவாசலுக்கு  தொழுகைக்கு சென்றிருக்கலாம்.   இங்கு  என்ன  செய்வது ? " என்றனர்.
அதற்கு  அவர்,  "  கம்யூனிஸ்ட்  நாட்டில்  வந்து  பள்ளிவாசல் தேடவேண்டாம்.    நீங்கள்  தங்கியிருக்கும்  அறைகளிலிலேயே தொழுதுகொள்ளுங்கள் "   என்றார்.
அப்பொழுது   நாம்  முற்றிலும்  எதிர்பாராத  சம்பவம்  நடந்தது.
அருகில்   இருந்த  மேசையில்  உணவருந்திக்கொண்டிருந்த  எமது சோவியத்   வழிகாட்டித்தோழர்  ஒருவர்   எழுந்து  வந்துசிங்களமொழியில்,   "  தோழர்களே , இங்கே  பள்ளிவாசல்கள் இருக்கின்றன.   உங்களில்   எத்தனைபேர்  இருக்கிறீர்கள்.   வாருங்கள் அழைத்துச்செல்கின்றோம்"   என்று    சிங்களத்தில்  சொல்லிவிட்டு அகன்றார்.
விஜயகுமராணதுங்க,   எம்மைப்பார்த்து, "  இங்கு  சுவர்களுக்கும் செவிகள்.  இருக்கும்.  கவனம் "  என்று  மெதுவாகச்  சொன்னார்.
எமக்கு   அதுவரையில்  அங்கிருந்த  சோவித் வழிகாட்டித்தோழர்களுக்கு   சிங்களமும்  தெரியும்  என்பது தெரியாது.    தமிழும்   தெரிந்திருக்கலாம்.
ஒருநாள்  மாஸ்கோவில்   ஊர்வலம்  சென்றபோது , "  மீர்துர்ஷ்பா பெஸ்டிவல்,   சால்யூட்  பெஸ்டிவல் "  என்ற  சோவியத்  கோஷத்துடன்   நாம்   சென்றபோது,  இலங்கையிலிருந்து  வந்த சமமாஜக்கட்சிப்பிரதிநிதி   என்னைத்தேடிவந்து   ஒரு  செய்தி சொன்னார்.
அமெரிக்காவிலிருந்து  ஒரு  இளம்பெண்  வந்திருப்பதாகவும்.   நன்றாக  தமிழ்பேசத்தெரியும்  என்றும்  தமிழ்  தெரிந்த   ஒருவரைத்தேடுகிறார்   எனச்சொல்லிக்கொண்டு  என்னை   அவர்  நின்ற  இடத்துக்கு அழைத்துச்சென்று   அறிமுகப்படுத்தினார்.
என்.எம் வேர்போங்   என்ற   அந்த  அழகிய  அமெரிக்க  மங்கை, வாஷிங்டன்   நகர  மேயரின்  அலுவலகத்தில்  ஸ்டெனாவாக பணியாற்றுவதாக  தமிழில்  பேசி  அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்தும்   அந்த  ஊர்வலத்தில்  என்னுடன்  அழகிய  தமிழிலேயே பேசிக்கொண்டு  வந்தார்.
 அவருடைய  பேச்சுமொழி  1983  இல்  இலங்கை  வந்த ராஜம்கிருஷ்ணன்  பேசுவது  போன்று  அழகாக  இனிமையாக இருந்தது.    கலகலப்பாக  உரையாடிய  அந்த  அமெரிக்கப்பிரதிநிதி தமிழ்நாட்டில்   இரண்டு  வருடங்கள்  அமெரிக்கன்  கல்லூரியில் கற்றிருக்கிறார்.    அத்துடன்  மதுரையில்  பல  மாதங்கள்  கிராம மக்களுடன்   பழகியிருக்கிறார்.
அவரைப் பின்னர்   இலங்கை  அமைச்சர்கள்  சிலருக்கு அறிமுகப்படுத்தியபொழுது,  அவர்களுடனும்  அவர்  தமிழில் உரையாடத்தொடங்கிவிட்டதால் - அவர்கள்  சங்கடப்பட்டனர்.  "  தமக்கு தமிழ்   தெரியாது "   என்று  சர்வதேச   மொழியில்  பதில் சொன்னார்கள்.
அவர்கள்   அகன்றதும்"  இலங்கையில்  இரண்டு  மொழிகள்தானே இருக்கிறது.   எல்லோரும்  படிக்கலாம்தானே  " என்றார்  அந்த அமெரிக்க   யுவதி.
" அனைவரும்   படிக்கலாம்.  ஆனால்,  படிக்கவில்லை "  என்று சொல்லி   உதட்டைப்பிதுக்கினேன்.
அன்றையதினம்  அவரை  படம்  எடுப்பதற்கு  விரும்பினேன்.  ஆனால்,  வேண்டாம்   என்று  அவர்  மறுத்தது  எனக்கு  ஏமாற்றமாக  இருந்தது.
அதற்கான  காரணங்களை  நான்  பின்னர்  ஆழ்ந்து  யோசித்தேன்.
    இதுபோன்ற   மற்றும்  ஒரு  அனுபவம்தான்,   மாஸ்கோ முன்னேற்றப்பதிப்பகத்தின்   கலாநிதி  விதாலி ஃபுர்ணிக்கா   எனக்கு இலங்கையில்    இருப்பதாக  அறிமுகப்படுத்திய  சோவியத்தூதரக தகவல்   பிரிவு  அதிகாரி  தோழர்  ஸ்ரோகன்  சந்திப்பு. அவரை இலங்கை  வந்ததும்  சந்தித்து,  நான்  எடுத்த  பேட்டி,  வீரகேசரி பத்திரிகையில்   அச்சுக்குத்தயராகி  இறுதி  நேரத்தில்  நீக்கப்பட்டது. இதுபற்றி   எனது  சொல்ல மறந்த  கதைகள்  நூலில்  விரிவாக எழுதியிருக்கின்றேன்.
தூதரகங்களில்  பணியாற்றும்  வெளிநாட்டினர்  தமக்குத்தெரிந்த -பரிச்சியமுள்ள   மொழிகள்  பற்றி  வெளியில்   வாய்  திறக்கக்கூடாது என்பது   அவர்களுக்கு  தூதரகங்களில்  விதிக்கப்பட்ட  எழுதாத  சட்டம்  என்பது  எனக்கு  பின்னர்தான்  தெரியவந்தது.
அந்தச்சம்பவத்திற்கும்   மாஸ்கோவில்  என்னுடன்  அழகிய  தமிழில் பேசிய   அமெரிக்க  பிரஜையான   அந்த  இளம்பெண்ணுடான சந்திப்புக்கும்   இடையே  இருந்த  ஒற்றுமை  தெளிவாகியது.
தமது   தாய்மொழியை  தவிர்ந்த  மற்றும்  ஒரு  மொழியை  அரசியல் வாதிகள் , இராஜதந்திரிகள்,  பிற நாட்டு  வழிகாட்டிகள்  ஏன் தெரிந்து வைத்திருக்கிறார்கள்  ?  என்பதை  இந்தப்புள்ளிகளிலிருந்து  அவதானிக்க முடிகிறது.
சமகாலத்தில்   பரபரப்பாக  பேசப்படும்  தமிழினியின்  ஒரு  கூர்வாளின்  நிழலில்  நூலிலும்  ஒரு  அதிர்ச்சியான  தகவல் வருகிறது.
இலங்கையில்   2002   இல்   போர்  நிறுத்தம்  அறிவிக்கப்பட்டதையடுத்து    பிரபாகரனும்  அன்டன்  பாலசிங்கமும் நடத்திய   சர்வதேச  பத்திரிகையாளர்  சந்திப்பில் தென்னிலங்கையிலிருந்தும்   பல  தமிழ்சிங்கள,  ஆங்கில ஊடகவியலாளர்கள்    வந்தனர்  என்பது  பழைய  செய்தி.
போர்   முடிந்த  பின்னர்  தமிழினி  சரணடைந்த வேளையில்  சந்தித்த ஒருவர்     இராணுவ  அதிகாரி  சீருடையில்  வந்து  "  வணக்கம் தமிழினி "    எனச்சொல்லி  சரளமாக  தமிழில்  உரையாடியிருக்கிறார்.
இதுபற்றி   தமிழினியின்  வார்த்தைகளில்  பதிவாகியிருக்கும்  ஒரு பந்தியை  ( பக்கங்கள் 213 - 214)   இங்கு  தருகின்றேன்.
சரளமாக  தமிழில்  பேசக்கூடிய  அவர்,  பல  போராளிகள் பொறுப்பாளர்களுடன்,   போராட்டத்திற்குச்சார்பான  ஒருவர்  என்ற தோரணையுடன்,   மிக  இலகுவாக  நட்புரிமையுடன்  பழகிய ஞாபகங்கள்   வந்தன.   அதுமட்டுமல்லாமல்  2004  ஆம்   ஆண்டில் முதல்  பெண்  மாவீரரான  2  ஆம்  லெப்.  மாலதியின்  நினைவுநாள் நிகழ்வுகள்   மிகவும்  எழுச்சியாகக்  கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது,   இவரும்  கலந்துகொண்டு  அனைவரோடும் தன்னை   ஊடகவியலாளர்  என  அறிமுகப்படுத்திக்கொண்டு   மிக இயல்பாக   பல  விடயங்கள்  பற்றியும்  உரையாடியதும்  நினைவுக்கு வந்தது.   அந்த  இராணுவ  புலனாய்வு  அதிகாரி  எவ்வளவு சாதுரியமாகப்  புலிகளின்  புலனாய்வுப்பிரிவினரின்  கண்களில் மண்ணைத்தூவிவிட்டுக்   கிளிநொச்சியின்  சந்துபொந்துகளில்   உலவித்திரிந்தார்  என்பதைப் பெரும்  திகைப்போடு   நினைத்துப்பார்த்தேன்."
-----------
கடந்த  2015  ஆம்   ஆண்டு  பெப்ரவரி  மாதம்  எமது  இலங்கை மாணவர்   கல்வி  நிதியத்தின்  பணிகளுக்காக  இலங்கை சென்றபொழுது,   மட்டக்களப்புக்கும்  வந்திருந்தேன்.   அங்கு வெளியாகும்  மகுடம்  இதழின்   சார்பில்  நடத்தப்பட்ட  சந்திப்பில் சிங்கப்பூரில்   லிபரல்  கலைக்கல்லூரியில்  பணியாற்றிக்கொண்டிருந்த   அமெரிக்க யேல் பல்கலைக் கழக மானிடவியல்   பேராசிரியர்  பேர்னாட்  பேட்   அவர்களின்   அழகு   தமிழ்   உரையை  கேட்கும்  சந்தர்ப்பம்  கிடைத்தது.
 பேராசிரியை சித்திரலேகா   மௌனகுரு   தலைமையில்  நடந்த அந்தச்சந்திப்பில்,  நண்பர்  மௌனகுரு  என்னை   அவருக்கு அறிமுகப்படுத்தினார்.   தமிழ்நாட்டில்தான்  இவர்  தமிழ்  கற்றார். அங்கு   திருநேல்வேலி  மனோன்மணியம்  சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்   தமிழ்  நாட்டின்  மேடைப் பேச்சுத்தமிழை   தமது   கலாநிதி  பட்ட  ஆய்வுக்கு  ஆய்வுசெய்தவர்.   திருநெல்வேலித் தமிழில்  சரளமாகப்  பேசுவார்.   அண்மையில்  அமெரிக்காவில்  தமது 58   வயதில்   இவர்   காலமானது  தமிழ்  உலகிற்கு  பேரிழப்பு.   இவர் பற்றிய   நினைவுகளை   அண்மையில்  பேராசிரியர்  மௌனகுரு எழுதியிருக்கிறார்.
இவ்வாறு  தமிழை  காரணகாரியம்  நிமித்தம்  கற்றுத்தேர்ந்தவர்கள் பலர்   எம்மிடையே   வாழ்கிறார்கள்.
ஆனால்,  அவர்கள்  ஏன்  கற்றார்கள் ?  எதற்காக இந்தத்தொன்மையான   மொழியைப்பேசினார்கள்  ? என்பதை அவர்களின்   வாழ்வும்  பணிகளிலிருந்தும்  தெரிந்துகொள்ள முடிகிறது.
இங்குதான்   அரசியல்வாதிகளிடம்,   புலனாய்வாளர்களிடம், இராஜதந்திரிகளிடம்,   பேராசிரியர்களிடம்,   இலக்கியவாதிகளிடம், மொழிபெயர்ப்பாளர்களிடம்    உறைந்திருக்கும்  மொழியறிவின் நோக்கத்தின்  தாற்பரியமும்  புலனாகிறது.
பாரதிக்கும்   கார்ல் மார்க்ஸ_க்கும்    தமது  தாய்மொழி  தவிர்ந்து பிறமொழிகள்   சிலவும்  தெரியும்.
புலம்பெயர்ந்த   ஈழத்தமிழர்களில்  பலருக்கு  இன்று  தமிழில் எழுதுவதே    சிரமமாக  இருப்பதை  அவதானிக்க  முடிகிறது.   தமிழில் எழுதவேண்டிய    தேவைகளை  இன்றைய  நவீன  சாதனங்கள் குறைத்துவிட்டன.
தமிழில்   கடிதம்  எழுதி  ஊருக்கு  அனுப்பும்  காலம் மலையேறிவிட்டது.    பதில்களும்  வருவதில்லை.   முகநூலும் ஸ்கைப்பும்   அந்த  இடத்தை   ஆக்கிரமித்துவிட்டன.
எல்லாம்   தேவைகளின்  நிமித்தமாகிவிட்டதுதான்  காலத்தின்கோலம்.

----0----