காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் - பேராசிரியர் கே. ராஜு

.

ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளத் தவறுகிறோம். இதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். சிலருக்குக் காலையில் பசி எடுப்பதில்லை. பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசரத்தில் காலை உணவைத் தவிர்ப்போர் பலர். பெண்களில் பலருக்கு காலையில் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லத் தயார்ப்படுத்துவது, சமையலை முடித்து கணவருக்குக் கொடுத்து அனுப்புவது போன்ற வேலைகளில் மூழ்கிவிடுவதால் காலை உணவுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. காரணங்களை அடுக்குவதை விடுத்து எப்படியாவது காலை உணவை  எடுத்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒருவர் வந்துவிட்டால் அவருக்கு அது சாத்தியமே. காலை உணவைத் தவற விடுபவர்கள் மதிய நேரத்தில் ஒரு பிடி பிடித்துவிடுவது வழக்கம். அல்லது இடையில் பசியைச் சமாளிக்க கேக், பிஸ்கெட் என ஏதாவதொரு நொறுக்குத் தீனி அல்லது காபி, டீ, குளிர்பானங்களை உட்கொண்டு பசியைச் சமாளிப்பதும் உண்டு. உடல்நலத்திற்கு உதவாத நொறுக்குத் தீனிகளோ பானங்களோ நீடித்த ஆற்றலைத் தர பயன்பட மாட்டா.







     நமது மூளை செயல்பட குளூகோஸ் அவசியம். நமது உடலுக்குத் தேவையான குளூகோசைத் தரவல்லது மாவுச்சத்து. இரவு உணவுக்கும் அடுத்த நாள் மதிய உணவுக்கும் உள்ள இடைவேளை நேரம் மிக அதிகம். உணவுக்குப் பிறகு அதிலிருந்து கிடைக்கும் குளூகோஸ் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைகொஜனாக சேமித்துவைக்கப்படுகிறது. காலையில் இந்த சேமிப்பு அநேகமாகக் கரைந்துவிடும். இழந்த சக்தியை மீண்டும் பெற காலையில் மாவுச்சத்தும் பிற ஊட்டச்சத்துக்களும் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது அவசியம். அன்று நாம் ஈடுபட உள்ள நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆற்றல் இந்த உணவிலிருந்தே கிடைக்கும். அது மட்டுமல்ல, ஊட்டச்சத்துள்ள காலை உணவு உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் , தாதுப்பொருட்கள் கிடைக்கவும் உதவிடும். காலை உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக மாற்றிக் கொண்டவர்கள் நாள் முழுதும் ஆற்றலுடன் இருப்பதோடு மனஅழுத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. மதிய உணவை அதிக அளவில் உள்கொள்ளும்போது உபரியாகக் கிடைக்கும் கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் நடக்க வேண்டிய வேதியியல் மாற்றங்களை தாமதப்படுத்தி விடும். எனவே, அதிக அளவில் மூன்று வேளைகள் உண்பதைவிட, முறையான இடைவேளைகளில் சிறிதளவு சத்தான உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.


நல்ல காலை உணவு என்பது அதிக அளவில் இட்லி, தோசை, பூரி வகையறாக்களை உட்கொள்வது என்பதல்ல.  அவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து நிரம்பிய உணவை எடுத்துக் கொண்டால் அது உடனே செரிமானம் ஆகிவிடாமல் நீண்ட நேரத்திற்கு சக்தியைத் தரக்கூடியதாக இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துப் பொருட்களை விட நார்ச்சத்து மிகுந்த மாவுச்சத்துப் பொருட்கள் நல்லது. பதப்படுத்தப்பட்ட ரவை, மைதா, ஒயிட் பிரெட், தீட்டப்பட்ட வெள்ளை அரிசி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்த்துவிட வேண்டும். தானியங்களால் ஆன சிற்றுண்டிகள், கோதுமைக் கஞ்சி அல்லது கூழ், ஓட்ஸ் தவிடு, பிரெட் சான்ட்விச் போன்றவை காலை உணவுக்கு ஏற்றவை.  உப்புமா எனில் அதோடு வெங்காயம், பட்டாணி, காரட், கருவேப்பிலை போன்றவற்றைச் சேர்க்கலாம். ரொட்டியோடு வெண்ணையை மட்டும் சேர்க்காமல், வெள்ளரி, தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து சான்ட்விச் தயாரிக்கலாம். மாவுச் சத்துப் பொருட்களோடு கொழுப்புச் சத்து குறைந்த பால், முட்டை, பதநீர், தயிர், மோர், பழங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது சிறந்த காலை உணவாக அமையும்.
(நன்றி : மார்ச் ட்ரீம் 2047 இதழில் ரிச்சா சாக்சேனா எழுதிய கட்டுரை).