ஈழத்தமிழ் அன்னையின் தவில் இசைக்கலைச் சக்கரவர்த்தி திரு தட்சணாமூர்த்தி

.
இசைக்கலைச்   சக்கரவர்த்தி திரு தட்சணாமூர்த்தி அவர்களின் நினைவு விழா வெள்ளிக்கிழமை 25 03 2016 சிட்னியில்  இடம்பெற்றபோது இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன் ஆற்றிய உரை 

          இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்.

இவர் ஒரு அபூர்வப்பிறவி, கற்பனைச் சுரங்கம், தவில் வாத்திய ஏகச்சக்ராதிபதி, கடவுளின் அவதாரம், எட்டாவது உலக அதிசயம் இயற்கையிலேயே லயப்பிண்டமாகப் பிறந்துவிட்ட  இவரைப்போன்றதோர் தவில் மேதை இவ்வுலகில் இதுவரை தோன்றியதும் இல்லை இனித்தோன்றப்போவதும் இல்லை லயஞான குபேர பூபதி  என்றெல்லாம்  இசை உலகம் வர்ணிக்கும் திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் சிறந்து விளங்கும் இணுவையயம்பதியில் மிகச்சிறந்த தவில் வித்துவானாகிய திரு விஸ்வலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வனாக 26.8.1933 இல்  வந்துதித்தார். இவரைப் பற்றிய குறிப்புகளை “ஈழத்தமிழ் அன்னையின் இசைக்கலைச் சக்கரவர்த்தி” என்;ற தலைப்பில் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இணுவை அப்பர்  என்கின்ற தன்னுடைய நூலில் முதன் முதலிற் பதிவு செய்தவர் எனது தந்தையாகிய இணுவையூர் பண்டிதர் திரு கா. செ. நடராசா ஆவார்.



இதன்பிறகு 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள்” என்கின்ற நூலில் பிரம்மஸ்ரீ அ.ந.சோமஸ்கந்த சர்மா அவர்களும் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சீர் இணுவைத் திருவூர் என்ற நூலில் திரு மு.சிவலிங்கம் அவர்களும் பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  திரு தட்சணாமூர்த்தியின் வரலாற்றைää  கலைவாழ்வைப்  பல கோணங்களில் ஆராய்ந்து ஒரு கனதியான நூலாக உருவாக்கியவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தற்போது தமிழ்த்துறைத் தலைவராகக் கடைமை புரியும் இணுவிலைச் சேர்ந்த எனது தமையனார் கலாநிதி மகேஸ்வரன் அவர்கள் ஆவார் இந்நூலை 2007 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கம்  வெளியிட்டு வைத்துள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாதம் எனது குருநாதரும் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் பெறாமகனுமாகிய ஈழத்து வயலின் இசைமேதை திரு இராதாகிருஷ்ணனின் மறைவை ஒட்டி என்னால் எழுதப்பட்ட அவரது நினைவாஞ்சலிக் கட்டுரையிலும் திரு தட்சணாமூர்த்தி பற்றிய சில முக்கியமான விடயங்களை நினைவு கூர்ந்துள்ளேன்


இது தவிர இந்தியாவிலே தவில் உலகின் சக்கரவர்த்தி  நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நாட்டியத் தாரகை தஞ்சாவூர் பாலாம்பாள் தம்பதிகளின் மகனும் தவில் மேதை நீடாமங்கலம் சண்முகவடிவேல் அவர்களின் சகோதரருமாகிய கலாநிதி. பி. எம்.சுந்தரம் என்பவர். திரு பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் வழிகாட்டலை ஏற்று நாதஸ்வரää தவிற் கலைஞர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார் அவரது இருபது வருட அயராத உழைப்பினால் உருவாக்கம் பெற்றது “மங்கல இசை மன்னர்கள்” என்ற நூல் இந்த நூலில் தவில் மேதை தட்சணாமூர்த்தி பற்றிய மிக உயர்வான தனது கருத்துக்களையும் அவர் பற்றித் தான் அறிந்த அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்துள்ளார். திரு சுந்தரம் அவர்கள்.

திரு தட்சணாமூர்த்திக்கு ஆறு வயதாகும் போதே தந்தையாராகிய திரு விஸ்வலிங்கம் அவர்கள் தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டார். இதன்பின் முறையாகக் குரு குலத்திற் பயிலவேண்டும் என்பதற்காக இணுவிலைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் சின்னத்தம்பியிடமும் பின்னர் யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும் கற்கவைத்தார். அத்தோடு திருப்தி அடையாது தன் மகனை ஒரு தவில் மேதையாகக் காண ஆசைப்பட்ட தந்தையாகிய விஸ்வலிங்கம் அவர்கள்   தட்சணாமூர்த்தியை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று  நாச்சியார் கோவில் இராகவப்பிள்ளை அவர்களிடம் தவிலைக் கற்றுக்கொள்ள வைத்தார் அப்போது தட்சணாமூர்த்திக்கு வயது ஒன்பது. சுமார் ஒன்றரை வருடங்கள்தான் அவரிடம் கற்றார். அதற்குள் ராகவப்பிள்ளைக்குத் தெரிந்து விட்டது தெட்சணாமூர்த்தி அசாத்திய மாணவன் என்பது எதைச் சொல்லிக்கொடுத்தாலும் அதற்குமேலே கற்றதை எடுத்துச்சென்று அலங்கரிக்கும் வண்ணம் திறமை படைத்த தட்சணாமூர்த்தியை உற்சாகப்படுத்தி உனக்குச் சொல்லிக்கொடுக்க இனி எதுவுமே பாக்கியில்லை ஒரு அபிப்பிராயம் காதிலே விழுவதற்குள்ளாகவே உன்கையில் அது ஓலித்துவிடும்படியான அளவுக்குக் கடவுளின் வரப்பிரசாதம் பெற்றுள்ள நீ இனி ஊருக்குத் திரும்பலாம் மகோன்னதமான பேரும் புகழும் வந்தடைய அதிக காலம் இல்லை என்று கூறி இலங்கைக்கு அனுப்பிiவைத்தார்

அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தவில் நாதஸ்வர வித்வான்கள் அங்கு ஆறு  மாதம் எட்டுமாதம் என்று தங்கிக் கச்சேரி செய்வது வழக்கம் இவ்வாறு யாழ்ப்பாணம் சென்று தட்சணாமூர்த்தியுடன்  தவில் வாசித்து விட்டு வந்த தன் தமையனார் நீடாமங்கலம் சண்முகவடிவேலைப் பார்த்து திரு சுந்தரம் அண்ணா தட்சணாமூர்த்தியுடன் வாசித்தீர்களே அனுபவம் எப்படி இருந்தது? என்று கேட்டாராம் அதற்குச் சண்முகவடிவேல் தட்சணாமூர்த்தியோடு யாராவது மனிசன் தவில் வாசிக்க முடியுமா? அசுரனாகப் பிறந்திருக்கிறான் தட்சணாமூர்த்தியின் ஒரு சொல்லுக்கு நான் காணமாட்டேன் ஏதோ நம் அப்பா செய்த புண்ணியம் அவர் பெயரைக் காப்பாற்றிக்கொண்டு வந்து விட்டேன் என்றாராம். அதைக் கேட்ட சுந்தரம் ஆடிப்போய்விட்டாராம். பின்னே ஆடாமல் என்ன செய்வார். அதுவரை நீடமங்கலம் சண்முகவடிவேல் வாசிக்கவருகிறார் என்றாலே தவில் உலகமே பயப்படுவார்களாம். அப்போ நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை வருகிறார் என்றால் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை அப்படி இருக்கத் தன் தமையனாரே அந்த வார்த்தையைச்சொன்னால்  எப்படி இருக்கும்?

நாச்சியார்கோவில் இராகவப்பிள்ளை அவர்கள் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் பதினொரு ஆண்டுகள் குருகுல வாசம் செய்து தவில் இசையைக் கற்றுக்கொண்டவர் ஆனால் திரு தட்சணாமூர்த்தியோ ஒன்றரை வருடங்கள் தான் நாச்சியார் கோவில் இராகவப்பிள்ளையிடம் கற்றிருக்கின்றார். பத்து பதினொரு வயதிலேயே மிகப் பெரிய வித்துவான்களோடு கச்சேரி செய்ய ஆரம்பித்து விட்டார். சற்று சிந்தித்துப் பாருங்கள் எந்த ஒரு கலையையோ கல்வியையோ ஒன்றரை வருடங்களில் கற்றுத் தேறுதல் அல்லது கற்று முடித்தல் என்பது சாத்தியப் படக்கூடிய ஒரு விடயமா?

இந்த நிகழ்வு எனக்கு எதை ஞாபகப் படுத்துகிறது என்றால் ஸ்ரீராமர் அவதாரபுருஷர் வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் அவருக்குக் குருவாக இருந்துள்ளனர்  விஸ்வாமித்திரர் வேள்வி காக்க தசரதனிடம் இராமரைக் கேட்கிறார்   அவன் பாலகனாயிற்றே அவனை எப்படி அனுப்புவது என்று தசரதன் மறுக்கின்றான். அந்தப் பரம்பொருளைத் தான் பெற்ற பிள்ளையாக அறியாச் சிறுவனாக தசரதன் எண்ணுகின்றானே என்ற எண்ணம் விசுவாமித்திரைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. பின் வசிஸ்டரின் அறிவுரையின் படி அரை மனதாக இராமரை அனுப்ப ஒப்புக்கொள்கின்றார் தசரதன். தடாதகை வதம் முடித்து விஸ்வாமித்திரருடைய  வேள்வியினைக் காத்துப் பின் மிதிலைக்குச் செல்லும் வழியில் இராமரின் பாதம் பட்டதனால்; கல்லாகிக் கிடந்த அகலிகை உயிர் பெற்றெழுகின்றாள் அதைக்கண்டு ஆனந்தமடைந்தமடைகிறார் விஸ்வாமித்திரர் இதனை மை வண்ணத்து அரக்கி போரின் மழை வண்ணத்து அண்ணலே! உன்  கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் எனக் கம்பர் விஸ்வாமித்திரர் கூறுவதாகப்பாடுகின்றார். விஸ்வாமித்திரர் மூலமாக இராமரின் ஆற்றலை  தெய்வீகத்தை உன்னதத்தை உலகம் உணரத் தொடங்குகின்றது

இதே போலத்தான் தட்சணாமூர்த்தியினுள்ளிருந்த மேதைமைத் தன்மையை வெளிக்கொணரக் குருவாக இருந்து உந்துதல் அளித்தவரர்கள் நாச்சியார் கோவில் இராகவப்பிள்ளையும் திரு முல்லைவாயில் முத்துவீரப்பிள்ளையுமாவார்கள். அதற்குப் பக்கத் துணையாக இருந்தவர் நீடாமங்கலம் சண்முக வடிவேல் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம் தட்சணாமூர்த்தி மிகச்சிறுவனாக இருக்கும்போதே தனது செவிகள் உள்வாங்கும் இயற்கையின் அத்தனை ஒலிகளையும் தவிலிற் கொண்டு வரமுயற்சிப்பார் முயற்சித்து வெற்றியும் கண்டுள்ளார் என்று எனது குருநாதரும் திரு தட்சணாமூர்த்தியின் மூத்த சகோதரருமாகிய இணுவில் நாதஸ்வர வித்துவான் பல்லிசைக் கலைஞர் திரு உருத்திராபதி அவர்கள் கூறுவார். அவர் ஒரு பிறவி மேதை என்றும் அடிக்கடி கூறி மகிழ்வார்

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா உந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா என்ற பாடினாரே பாரதி அதே போலத் தட்சணாமூர்த்தி கேட்கும் ஒலியிலெல்லாம் லயத்தின் விந்தையினையே கேட்டிருக்கின்றார் இந்தப் பிரபஞ்சத்தின் ஒலிகள் எல்லாம் அவர் செவியிற் புகுந்து ஜதியாக,நடையாகக் கோர்வையாக ஊற்றெடுத்துப் பாய்கின்றதோ என்று அனைவரும் பிரமிக்கும்படி அவரது தவிற் கச்சேரிகள் அமைந்திருக்கின்றன. பிரபஞ்சலயமும் நாதப்பிரமமும் இணைந்ததே  தவில் மேதை தட்சணாமூர்த்தியின் வடிவம். அதனாற்தான் ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, மாத்திரைகள் வரும் நடை வழக்கில் இருக்க ஒரு அட்சரத்தில் பதினொன்று, பதின்மூன்று, பதினேழு மாத்திரைகள் வரும் வகையில் முதன் முதலில் வாசித்து இசையுலகை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றவர். எவ்வளவு நேரம் எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய கனமுடன் தௌ;ளத்தெளிவாக வாசிக்கும் திறன் அவருடையது. இசை உலகில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் 1975 ஆம் ஆண்டு வரை உள்ள காலப்பகுதி தட்சணாமூர்த்தி சகாப்தமாகவே இருந்துள்ளது.

தவில் வித்துவான்களாகிய முத்துவீராப்பிள்ளையும் சண்முகவடிவேல் அவர்களும் கவிஞராக இருந்திருந்தால் உன் நடைவண்ணம் அங்கு கண்டேன் ஜதிவண்ணம் இங்கு கண்டேன் என்று தான்   பாடியிருப்பார்கள். எத்தகைய தவிலைக் கொடுத்தாலும் தன்கையின் தன்மை என்ன? தவிலிற் பொருத்தப்பட்டுள்ள தோலின்தன்மை என்ன? தவிற்கட்டையின் நாதம் எத்தகையது? என்பதை கணநேரத்திற்குள் புரிந்து கொண்டு தவிலில் இனிய லயநாதத்தை ஏற்படுத்த அவரால் மட்டுமே முடியும். அவருடைய கற்பனைத் திறனுக்கும் லயஞானத்திற்கும் கரவேகத்திற் ஈடுகொடுக்கக் கூடிய யாரும் இந்தப் பூவுலகில் இல்லை என்பதே இசை விமர்சகர்களின் ஏகோபித்த கருத்து.

சென்னையில் தங்கக் கோபுரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் 1968 ஆம் ஆண்டு திருவாவடு ராஜரத்தினம்பிள்ளை நினைவுவிழாச்சபையினரால் கரூரில் தங்கக் கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும்ää 1959 ஆம் ஆண்டு தமிழிசைச்சங்கம் நடாத்திய இசை விழாவில் காரைக்குறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வரத்திற்குத்  திரு தட்சணாமூர்த்தியும் சண்முக வடிவேல் அவர்களும் தவில் வாசித்திருந்தார்கள்  தட்சணாமூர்த்தி வாசிக்கத் தொடங்கியதும் இசை மேதைகளாலும் இசைப்பிரியர்களாலும் நிறைந்து வழிந்தது மண்டபம். கரகோஷம் மண்டபத்தை அதிரவைத்த அந்த இரவு 12 மணியுடன் நேரடி அஞ்சலை நிறைவு செய்யும் அகில இந்திய வானொலி அன்றைய தினம் கச்சேரி முடியும்வரை அஞ்சலைச்செய்து கௌரவித்ததும் இந்திய இசை உலகில் திரு தட்சணாமூர்த்திக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.

இப்படித்தான் ஒரு தடவை தட்சணாமூர்த்திக்கு இணையாக யாரைச்சொல்லலாம் என்று வித்வான்களுக்கு இடையே ஒரு சர்ச்சை ஏற்பட்டதாம் இதைக் கேட்டுக்கொண்டிருந்த லயக்கணக்கில் அதி மேதை லயச்சுரங்கம் என்று எல்லோராலும் போற்றப்படும் முத்துவீராப்பிள்ளைக்கு விஸ்வாமித்திரரைப் போலவே கோபம் தலைக்கேறிவிட்டதாம். அட அவர் வாசிப்பதைப் புரிந்து கொள்வதற்கே இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை. இதில் ஒப்பீடு வேறா  எனப் பொரிந்து தள்ளிவிட்டாராம்.

கலைவிமர்சசரும் கர்நாடகசங்கீத இசையில் ஆழ்ந்த புலமையுடையவருமான தேனுகா என்பவர் தட்சணாமூர்த்தயின் வாசிப்பை உற்சாகம் பொங்கக் கூறுவாராம் அதனால் உந்துதலுக்கு உள்ளாகிய இணுவில் இயலிசைவாரிதி திரு வீரமணிஐயரின் உறவினரும் தற்போது இலண்டனில் வசித்துவரும் வெளியீட்டாளருமான திரு பத்மநாப ஐயர் தட்சணாமூர்த்தி பற்றிய  ஆவணப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற உறுதி பூண்டார். ஐந்து ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட அயராத முயற்சி புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒத்துழைப்போடு   திரு அம்ஷன்குமார் இயக்கத்தில் கண்ணுக்கு இனிய காணொளியாகிப் பண்டிதர் முதல் பாமரர் வரை தட்சணாமூர்த்தியின் பெயர்சொல்ல வைத்து விட்ட வெற்றியையும் அளித்து விட்டது.

சமூகப்பிரக்ஞை இன்மை, போட்டி, பொறாமை, புகழாசை, பணத்தாசை திறமைகளை மதிக்கத் தெரியாமை இவை அனைந்தும் நிறைந்த இந்த உலகத்தில் உண்மையும், நேர்மையும் உன்னதமான மாசற்ற உள்ளமும் செயலும் நிரம்பிய குணவான்கள் அறத்தைப் பேணுபவர்கள் இன்னும் இருக்கின்றார்கள் அமைதியாகச் செயற்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் என்ற உண்மை மனதை நெகிழ வைக்கின்றது தவில் வித்துவான் சண்முகவடிவேல் பி.எம் சுந்தரம் தேனுகா பத்மநாப ஐயர்  அம்ஷன் குமார் ஆகியோரின் இந்தச் செயல் வாழ்க்கை மீது மனித தர்மத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றது. சூரியனை மேகக்கூட்டங்கள் மறைப்பது போல உண்மையையும் திறமையையும் மறைக்கலாம் ஆனால் யாராலும் அவற்றைச் சாகடித்து விட முடியாது. என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு  தட்சணாமூர்த்திக்கு இந்த உலகம் நிறைந்த துயரங்களையே பரிசாக அளித்திருக்கின்றது எதிலும் பற்றற்றுத் துறவிபோல வாழ்ந்த அவர் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் மிகவும் கொடுமையானவை. ஆயினும் நாற்பது வருடங்கள் கழித்து இன்று இசை உலகம் முழுவதும் தட்சணாமூர்த்தியின் வித்துவப்புலமையைக் கொண்டாடுகின்றது காலத்தையும் வென்று இறவாப்புகழை எய்திவிட்டார் தட்சணாமூர்த்தி அவர்கள்.  

பாலக்காடு மணி ஐயர்  தட்சணாமூர்த்தியை  எட்டாவது உலக அதிசயம் என்றாரே ஏன்? மாலியின் புல்லாங்குழலிசை தேவகானம் மதுரை மணிஐயருடைய பாட்டு நாத லயப் பிரவாகம் வீணை தனம்மாள் கர்நாடக கங்கீதத்தின் சிகரம் உயிர்நாடி. நாதஸ்வரச்; சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்கள் பாரி என்கிற நாகஸ்வரத்தை உருவாக்கி அதற்குரிய சிறந்த சீவாளியைத் தயாரிக்கும் முறையையும் சொல்லித்தந்து நாதஸ்வரத்திற்கு ஜீவனை அளித்தவர். பாலக்காடு மணி ஐயர் அவர்கள் தன்னுடை வாசிப்புத் திறத்தால் மிருதங்கம் தனியாவர்த்தனத்தின் போது மக்களை எழுந்து செல்ல முடியாமற் கட்டிப் போட்டவர்;. தவில் சக்கரவர்த்தி நிடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனித் தவில் வாசிக்கும் முறையை அறிமுகப் படுத்தியவர் தஞ்சாவூர் கல்யாணராமன் விவாதி இராகங்களைப் பாடுவதில் வல்லவர் இன்னும் இதேபோல  நீடாமங்கலம் சண்முக வடிவேல் எம் எஸ் கோபாலகிருஷ்ணன் லால்குடி ஜி. ஜெயராமன் பாரமுரளிகிருஷ்ணா மென்டலின் ஸ்ரீனிவாஸ் இவர்ககைப் போல இன்னும் எத்தனையோ பேர் சங்கீத உலகில் ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் படைத்த ஜாம்பவான்களாகப் பிரகாசித்துள்ளார்கள். ஆயினும் இந்தச் சாதனைகள் எல்லாம் மனித முயற்சியினால் எட்டக்கூடியவை என்பதே இசை விமர்சகர்களின் கருத்து இவர்கள் யாரையும் உலக அதிசயம் என்று கூற யாருக்கும் தோன்றவில்லையே ஆனால் லயப்பிண்டமாகவே பிறந்துவிட்ட தட்சணாமூர்த்தியிடம் காணப்பட்ட கலைத்திறனும் அவருடைய கற்பனைத்திறனும் கரத்தின் வேகமும் லயஞானமும்   மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது. கற்பனையிலும் எட்ட முடியாதவை. இதனாலேயே தட்சணாமூர்த்தியை எட்டாவது உலக அதிசயம் என்றார் பாலக்காடு மணி ஐயர்.
                                                             
கி.பி 15 ஆம் நூற்றாண்டு முகலாயப் பேரரசில் அக்பருடைய அரசவையில் நவரத்தினங்களில் ஒன்றாக இருந்த தான்சேன் என்கின்ற கலைஞர் ஒரு பாடகர் வாத்தியக்கலைஞர் வாக்கேயகாரர். கர்நாடக சங்கீதம் ஹிந்துஸ்தானி இரண்டிலும் வல்லவர் சிந்துபைரவிää தர்பாரி கானடாää தர்பாரி தோடிää ராகேஸ்வரி இன்னும் பல ராகங்களை அறிமுகப்படுத்திப் பிரபல்யப்படுத்தியவர். அபுல் பஸல் என்ற அக்பரின் அரசவைப் புலவர் தான்சேனைப் பற்றி இவரைப்  போன்றதோர் சங்கீத வித்துவான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தோன்றியதில்லை இனியும் ஆயிரம் ஆண்டுகள் வரை தோன்றப் போவது இல்லை என்றுதான் பாடினார். ஆனால் இன்று தட்சணாமூர்த்தியைப் பாராட்டுபவர்களோ அந்தக் கலைவாணியே தட்சணாமூர்த்தியின் வடிவிற் பிறந்திருக்கிறாள் என்றும் அவரைப் போல ஒருவர் அவருக்கு முன்னும் தோன்றியது இல்லை இனியும் என்றைக்கும் தோன்றப் போவது இல்iலை என்று அதிசயிக்கின்றார்கள்.  

ஒரு சமூகத்திலிருந்து பிராந்தியத்திலிருந்து இனத்திலிருந்து நாட்டிலிருந்து மேற்கிளம்பும் ஒருவர் தன் கடுமையான உழைப்பினால் அறிவால் ஆற்றலால் ஆளுமையால் மேதமையால் தன் திறமையை நிலை நிறுத்தும் போது தன் இனத்திற்கு தன் சமூகத்திற்கு தன் பிராந்தியத்திற்கு தன் நாட்டிற்கு தான் சார்ந்த துறைக்கு உயர்வை மதிப்பை  தேடிக் கொடுக்கும்போது அவன் மிகுந்த கௌரவத்தை அடைகின்றான் தேவலோகத்தில் செல்வத்திற்கு அதிபதி குபேரன் அதே போல பூலோகத்தில் லயத்தில் ஞானம் அந்த ஞானத்திற் செல்வனாக  விளங்கும் குபேரன் லயஞானகுபேரபூபதி திரு தட்சணாமூர்த்தி அவர்கள். தவில் என்கின்ற வார்த்தையை உச்சரித்தால் தட்சணாமூர்த்தி என்கின்ற வார்த்தையும் சேர்த்தே உச்சரிக்க வேண்டும் என்கின்ற ஓர் அழியாத ஒரு உயர்வையும் மதிப்பையும் தமிழினத்திற்கும் இசை உலகிற்கும் தேடித்தந்துள்ளார். அத்தகைய பெருமைக்குரிய கலைஞரைப்பற்றி அவரது உயர்வினைப் பறைசாற்றும்  ஓர்நிகழ்வில் என்னையும் உரையாற்ற அழைத்த என் உயிர்த்தோழி தர்மவதி சந்திரதாஸிற்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

இறுதியாக உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்   அரசஆதரவு இன்மை உடல் உறுதி தளரும்போது இக்கலையை தொடர முடியாது போதல் சினிமாவின்மீதுள்ள சமூகத்தினரின் மோகம் நிறுவனங்களில்லாது பாரம்பரியப் பயில்வு மட்டுமே உள்ள கலை பாரம்பரியக் கலைகளைப் பயில வேண்டும்ää பேணவேண்டும்ää வளர்க்க வேண்டும் என்ற ஈடுபாடும்ää எண்ணமும்ää பற்றும் மக்களிடையே  குறைந்து கொண்டு போதல் இப்படிப் பல காரணங்களால் இந்த தவில் நாதஸ்வரக்கலை அழிந்து விடுமோ என்கின்ற அச்சம் இசை ஆய்வாளர்களிடம் தோன்றியுள்ளது. இத்தகைய ஒரு ஆபத்து இந்தக்கலைக்கு நேரக்கூடாது அதுவும் திரு தட்சணாமூர்த்தி பிறந்த வாழ்ந்த மண்ணில் அது ஒரு போதும் நிகழக்கூடாது. ஆகையால் தட்சணாமூர்த்தியின் பெயரால் ஒரு தவில் நாதஸ்வரப் பாடசாலை ஒன்றைத் தோற்றுவித்து அதன்மூலம் இக்கலையை வளர்த்தெடுக்க உங்களாலான ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.