கோணை நாயகன் கோயில் வந்தாலே - திருமலை மூர்த்தி

.


கோணை  நாயகன் கோயில் வந்தாலே
         
குறைகள் தீருமடி
    
கும்பிட்டு நிற்கும் கைகள் வேண்டிக்
         
கேட்பது சேருமடி

மோனை  எதுகைகள்  முத்துத்  தமிழினில்
         
கவியாய்  ஓடுமடி
    
மூன்று  பக்கமும்  மோதிடும் அலைகள்
         
அவன்புகழ்  பாடுமடி

ஏணையில் போட்டெனைத் தாலாட்டி வளர்த்த
         
அன்னையின்  உள்ளமடி
    
ஏழு  சுரங்களும்  அவனடி  தொழுதால்
         
நாவினில்  வெள்ளமடி

வானை யிடிக்கும் மலை மீதிருந்து
         
வரமருள்  தேசனடி
    
வணங்கிச் செல்பவர் வாழ்விருள் அகற்றி
         
வைத்திடும்   ஈசனடி .