திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
நிழலாகத் தொடர்ந்துவரும்   நினைவுகளில்  கனடா ஸ்ரீரஞ்சனி  விஜேந்திரா
எழுத்தில்   தர்மத்தையும்   தார்மீகத்தை  வேண்டி  நிற்கும் பெண்ணியக்குரல்

                                              

" கனடாவுக்கு  வந்த  வயது  முதிர்ந்த  அம்மா  அன்பிருந்தும் நேரமின்மையால்  அல்லற்படும்  பிள்ளைகளின்  பாராமுகம்  கண்டு  இதென்ன  வாழ்க்கை  என்று  ஊருக்குப்  போய்விடுகிறாள். ஆனால்,  ஊரில்  பெரிய  காணியும்  வீடும்  இருந்தும்  கனடாவில் பேரப்   பிள்ளைகளைப்  பிரிந்து  வந்த  குற்ற  உணர்வு  நிம்மதியைக்  கெடுத்து  விடுகிறது.   முடிவில்  தங்கள்  விருப்பு வெறுப்புகளை  மூட்டை  கட்டி  வைத்துவிட்டு  அந்தத்  தாய் கனடாவுக்குத்  திரும்புகிறாள்   பேரப் பிள்ளைகளுக்காக!

இந்தக்  கதை  கனடாவில்  மனதுள்ளே  பொருமும்  எத்தனையோ தாய்மாருக்கு,  உங்கள்  குமுறலுக்கு  அர்த்தம்  இல்லை   என்று அறிவிக்க  ரஞ்சனியால்  எழுதப்பட்டிருக்கின்றது.   பணத்தை வைத்துப்  பயமின்றி  வாழலாம்!  ஆனால்  பாசத்தை   வைத்துத் தான்  பதறாமல்  வாழமுடியும்! "


என்று  சாலினி  என்பவர்  கனடாவில்  வதியும்  ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின்  நான் நிழலானால்  கதைத்தெகுப்பினை மதிப்பீடு செய்கிறார்.

பேரக்குழந்தைகளுடன்  வாழும்  வாழ்க்கை  காவிய  நயம் மிக்கது  என முன்னர்  எழுதியிருக்கின்றேன்.
எனது  மகளின்  இரண்டு  வயதுக்குழந்தையுடன்  ஒருநாள்  இரவு விளையாடிக்கொண்டிருந்தபொழுது,   அவள்   நடந்துவரும் அழகை ரசித்தேன்.   ஆனால்,  அவளோ  தன்னைப்பின்தொடரும்  நிழலை திரும்பித்திரும்பிப்  பார்த்து  ரசித்தாள்.   சிரித்தாள்.   அவளைப்பின்பற்றி தொடரும்   நிழல் பற்றி  அவளுக்கு எதுவும்  புரியவில்லை. அதனைக்காட்டி  "தாத்தா " என்று  விளித்தாள்.   அவளுக்கு  அது  என்ன  என்று   விளக்கவேண்டும்.
நானும்  அவளுடன்  நடந்து  எனது  நிழலையும்  அவளுக்கு காண்பித்தேன்.  அவள்  அட்டகாசமாகச்   சிரித்தாள்.   தொடர்ந்தும் அவ்வாறு   என்  கைபற்றி  நடந்து  திரும்பித்திரும்பி  நிழலைப்பார்த்து சிரித்தாள்.
அந்தக்கணம்  என்னை  கொள்ளைகொண்டுசென்றது.   இப்படி உலகெங்கும்   எத்தனையோ  தாத்தா,  பாட்டிமார்  தங்கள்  மனதை தமது   பேரக்குழந்தைகளிடம்  பறிகொடுத்துவிட்டு,   எங்கும்  அகன்று சென்றுவிட   முடியாமல்   கட்டுண்டு  கிடக்கின்றனர்.
நாம் எமது  நிழலைப் பார்த்து  என்றைக்காவது  சிரித்திருப்போமா---? நிழலுக்குள்  ஆயிரம்  அர்த்தங்கள்  இருக்கின்றன.   தென்னிந்தியாவில் ஒரு  நடிகர்  நிழல்களின்  பெயரில்  வாழ்கிறார்.   நிழல்கள்,  நிழல் நிஜமானால்   என்றெல்லாம்  படங்களும்  வெளியானது.
" இன்றும்  தாயகத்தின்  நினைவுகளிலேயே   அலைகிறார்கள். நனவிடைதோய்ந்துகொண்டிருக்கிறார்கள்."  என்று  புலம்பெயர்ந்து வாழும்  எமது  ஈழத்தமிழ்ப்படைப்பாளிகள்  பற்றி  விமர்சகர்களிடம் பொதுவான  குற்றச்சாட்டு  நீடிக்கிறது.( இதுபற்றிய விவாதத்தை கனடா பதிவுகள் கிரிதரன் தமது முகநூலில் தொடக்கியிருக்கும்  தருணத்தில்  ஸ்ரீரஞ்சனி  பற்றிய இந்தக்கட்டுரையை   எழுதநேரிட்டதும்   தற்செயலானது)

ஸ்ரீரஞ்சனியின்  எழுத்துக்கள்  தாயகத்திற்கும்,  தான்  வாழும் கனடாவுக்கும்  இடையில்  பாலம்  அமைக்கின்றது.   இடைப்பட்ட  அந்த   வாழ்வு  நிழல்தான்.   நனவிடை  தோய்தல்  எழுத்துப்போல் நிழல்களில்  தோயும்  எழுத்துக்கள்  வரும்போலும்.

ஸ்ரீரஞ்சனியின்   அச்சிறுகதையில்  வரும்  பாட்டியை  இயந்திரமயமான   வாழ்வுக்கு   புலம்பெயர வைத்து,  சலிப்பாக்கியதும், தாயகம்  திரும்பிவரச்செய்துவிட்டுமீண்டும்  பேரக்குழந்தைகளின் ஆத்மா   கனடாவுக்கு  அழைத்து வந்துவிடுகிறது.
இவ்வாறு   நுட்பமாக  கதா  மாந்தர்களை   படைக்கும்  ஸ்ரீரஞ்சனியின்  தாயார்  தாயகத்தில்  மறைந்தபொழுது   பெற்று  வளர்த்த அந்தப்பொன்னுடலைச்சென்று  பார்க்க  முடியாமல்  போய்விட்ட துர்ப்பாக்கியசாலி  ஸ்ரீரஞ்சனி.எனக்கும்   அந்தத்துயர்  நேர்ந்தது.  அதனால்  அந்த  வலி   எனக்கும் தெரியும்.
ஸ்ரீரஞ்சனியின்   தாயார்  எனக்கும்  ஒருவகையில்  தாய்தான்.
எப்படி   என்று  கேட்கிறீர்களா...?
1960  களில்  ஸ்ரீரஞ்சினியின்  பெற்றோர்  திரு . சுப்பிரமணியம்,  திருமதி சிவஞானசுந்தரி  தம்பதியர் எனக்கு  ஆசான்களாக விளங்கியவர்கள்.    நீர்கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம்   செல்லும் பாதையில்  கொச்சிக்கடை   என்ற   ஊரின்  எல்லை   தொடங்கும் சந்தியில்,  இடதுபுறமாக  தோப்பு  என்ற   அழகிய தென்னஞ்சோலைகள்  நிரம்பிய  கிராமம்  வருகிறது.  அங்குள்ள மக்களால்   தமிழும்  பேசமுடியும்.

தோப்பிலிருந்து    ஒரு  A40  கார்  காலையிலேயே  புறப்பட்டு,  நீர்கொழும்பு  கடற்கரை  வீதியில்  அமைந்த  எமது  பாடசாலைக்கு வரும்.
அதில்  வரும்  ஆசிரியத்தம்பதிகளுடன்  ஒரு  குழந்தை  சீருடை தரித்துபுத்தகப்பையுடன்  ஒய்யாரமாக  நடந்துவரும்.   நாம்  அவள் நடைபார்த்து   சிரித்தால்,   முறைத்துப்பார்க்கும்.
நாம்  பார்க்காதுவிட்டால்,  நாம்  ஏன்  தன்னைப்பார்க்கவில்லை  என்று, முகத்தை  வேறு  கோணத்தில்  பரவசமாக  மாற்றிக்கொண்டு  கம்பீரமாக   தனது   வகுப்பறைக்குச்செல்லும்.

காலைப்பிரார்த்தனை  முடிந்ததும்  எமது  வகுப்பறைக்கு  திரும்பினால்,   ஆங்கிலப்பாடம்  தவிர்ந்த  ஏனைய அனைத்துப்பாடங்களுக்கும்  ஒரே  ஒருவர்தான்  ஆசிரியர்.   அவருக்கு,  தமிழ்,  சமயம்,  குடியியல்,  பூமிசாத்திரம்,   சுகாதாரம்,  சரித்திரம்,  சித்திரம்,  கைவினை,  கணிதம்  யாவும்  தெரியும்.   அவரே  எமது  வகுப்பை  குத்தகை  எடுத்துக்கொண்ட  சுப்பிரமணியம்  ஆசிரியர்.   அத்துடன்  மிகவும் கண்டிப்பானவர்.    அடியும்  வாங்கியிருக்கிறோம்.

காலையில்  இடாப்பில்  பெயர்  அழைப்பதிலிருந்து,  மதியம் பாடசாலை  விடும்வரையில்  அவருடைய  குரல்தான்  அந்த  வகுப்பில்  ஒலித்துக்கொண்டிருக்கும்.  அவர் கேட்கும்  கேள்விகளுக்கு மாத்திரமே  நாம்   தயங்கித்தயங்கி  திருவாய்  மலர்ந்தருளுவோம்இடைவேளைக்குப்பின்னர்  வரும்,   ஆங்கிலப்பாட  ரீச்சர் திருமணமாகாத    செல்விதான்.  அதனால்  அழகாகவும்,  நாளுக்கு  ஒரு  சாரியும்  கண்ணாடியும்  அணிந்துவந்து,  கண்களுக்கு    விருந்தும் கல்விக்கு   ஆங்கிலமும்   தருவார்.    அவர்பெயர்  கௌரி.
ஆனால்,  ஆங்கிலப்பாடம்  தவிர்ந்து  முழுநேரமும்  எம்முடன் பொழுதை   செலவிடும்  அந்த  பல்கல்வி  வேந்தனான  வகுப்பு ஆசிரியர்   என்றும்  தூய  வெள்ளை  வேட்டி,  நஷனலுடன்  வந்து எமக்கு  அலுப்புத்தருவார்.   தினமும்  பலமணிநேரம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய  முகம்  என்பதால்  வரும் அலுப்புத்தான்.   ஆனால்,  பாடங்களை  கதைபோல்  சொல்லித்தரும் இயல்பு   அவரிடம்  குடியிருந்தது.
அவர்தான்  பின்னாளில்  படைப்பாளியாக  உருவான  ஸ்ரீரஞ்சனிக்கும் குழந்தைப்பருவத்தில்   கதைகள்  சொல்லி,  உண்ணவும்  உறங்கவும் வைத்தவர்   என்பதை  காலம் கடந்து  ஸ்ரீரஞ்சனியின்  நேர்காணலில் தெரிந்துகொள்கின்றோம்.எமது   பொழுதுகள் 1963 - 64  ஆம்   ஆண்டு  பாடசாலைக்காலத்தில் ஸ்ரீரஞ்சனியின்   பெற்றோரிடம்தான்  அதிகம்  செலவானது.
அதனால்தான்  ஸ்ரீரஞ்சனியின்  தாயாரும்  எனது  தாயார்தான் எனச்சொல்கின்றேன்.
1964  இல்  யாழ்ப்பாணத்தில்  அனுமதி  கிடைத்து புறப்பட்டவேளையில்   தரப்பட்ட    பிரிவுபசாரத்தின்போது  ஆசிரியர்கள் அனைவரதும்   கால்களைப்பணிந்து நான்  வணங்கியவர்களின்  வரிசையில்  ஸ்ரீரஞ்சனியின்   பெற்றோரும்  அடக்கம்.
---------------------------------
இருபது  ஆண்டுகளுக்குப்பிறகு,   கொழும்பில்  ஸ்ரீரஞ்சனியை   அவரின் பெற்றோர்களுடன்   சந்திக்கும்பொழுது,  நாம்   இருவருமே எழுத்தாளர்கள்  என்பதில்  அந்தப்பெற்றோர்  பெருமிதம்  அடைந்தனர்.
நான்   பத்திரிகையில்  துணை   ஆசிரியர்.   ஸ்ரீரஞ்சனி கொள்ளுப்பிட்டியில்  மெதடிஸ்ட்  மகளிர்  கல்லூரியில்  ஆசிரியை.
என்னவோ  தெரியவில்லை.   நான்  எனது  வாழ்நாளில்  சந்தித்த  பலர் என்னுடன்   தொடர்ந்து  இணைந்து  வருகிறார்கள். என்னைவிட்டுப்பிரிந்தவர்கள்,  நினைவுகளாக - நிழலாகத் தொடருகின்றார்கள்.  அதுதான்    எனது  ராசி பலன்.
-----------------------------------
தெல்லிப்பழை  மகாஜனா  மாணவி  ஸ்ரீரஞ்சனி  பேராதனை பல்கலைக்கழகத்தின்  விவசாய  விஞ்ஞான  பட்டதாரி.  இவர் படைப்பாளியாவதற்கு  தூண்டுகோலாக  இருந்தவரும்  இவர் கல்வியைப்  பெற்ற  படைப்பாளி  ஆசிரியைதான். அந்த  மூத்த படைப்பாளி  ஆசிரியையுடன்   இணைந்தும்  இலக்கியம்  படைக்கும் பாக்கியம்  பெற்றவர்   ஸ்ரீரஞ்சனி.

இவரின்  கல்வி  மற்றும்  இலக்கிய  ஆசான்  கோகிலா  மகேந்திரன். முதல்   கதை  மனக்கோலம்  யாழ். ஈழநாடு  வாரமலரில் வெளியானது.   ஐந்து  பெண்படைப்பாளிகள்   இணைந்து  ஈழநாடுவில் தொடர்கதை  எழுதியபோது  இவரும்  அதில்  ஒருவர்.

பால்யகாலத்தில்,   தான்  ஒரு  மருத்துவராக  எதிர்காலத்தில் வரவேண்டும்   என்ற  கனவை  சுமந்துகொண்டிருந்த  ஸ்ரீரஞ்சனி, கனடாவில்   தனது  இரண்டாவது  மகள்  அபிராமி  ஊடாக  அதனை  நனவாக்கிக்கொண்டு  இலங்கையில் மேற்கொண்ட ஆசிரியப்பணியையும்  தொடர்ந்தவர்.
கனடாவுக்குச் சென்றபின்னர்  தொழில் தேடும் படலம்  குழந்தைகள் பராமரிப்பு - மொழிபெயர்ப்பு  - ஆசிரியப் பணிகள் -  பனிஉதிர்காலம்  - இயந்திரத்தனமான  வாழ்க்கை.  இப்படி பல காரணங்களுடன்  ஸ்ரீரஞ்சனி   எழுதுவதற்கு  நேரம்  தேடிப்போராடிக்கொண்டிருந்த  2007 ஆம்   ஆண்டு  இறுதியில் -  ஒரு  கடும்  குளிர்காலத்தில்  கனடாவை பனிசூழ்ந்திருந்தவேளையில்  அங்கு  சென்று  இவரை  கணவர் விஜேந்திராவுடன்  சந்தித்தேன்.  ஸ்ரீரஞ்சனி   இப்போது  தமிழ் ஆசிரியர். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - தமிழ் மொழி மதிப்பீட்டாளர் ( பாடசாலைச் சிறுவர்களின் மொழி அறிவு) ஆக வேலை செய்கின்றவர்.
பிரிந்தவர்  கூடினால்  பேசவும்  வேண்டுமோ.
என்னை  அங்கு பல  இடங்களுக்கும்  அழைத்துச்சென்றார்.
தொடர்ந்தும்  இலக்கியமே  பேசிக்கொண்டிருந்தமையால்- அண்ணா எவ்வாறு  எழுதுவதற்கும்  படிப்பதற்கும்  நேரம்  ஒதுக்குகிறீர்கள் " என்று  கேள்விகள்  பல  கேட்டார்.
ஆனால்,  அது  ஒரு  நேர்காணலுக்கான  முன்னேற்பாடு  என்பது அச்சமயத்தில்   தெரியாது.

அவர்  கரைச்செலுத்திக்கொண்டே  எமது  உரையாடலை  தனது மூளையில்   இயங்கும்  கணினியில்  சேகரித்துக்கொண்டார்  என்பதை பின்னர்  அவர்  எழுதிய  நேர்காணலில்தான்  அறிந்துகொள்ள முடிந்தது.
ஸ்ரீரஞ்சனி  என்னை  மட்டுமல்ல,   உதயன்  லோகேந்திரலிங்கம்  "அண்ணை  றைற் "கே. எஸ்.பாலச்ச்ந்திரன்,  என் கே. ரகுநாதன்மாலதி மைத்திரி , ஜெயமோகன்,   அவர்  மனைவி  அருண் மொழி ஆகியோரையும்   சந்தித்து  நேர்காணல்கள்  எழுதியவர்தான்.
கனடா  ஸ்காபரோவில்  அமைந்திருக்கும்  கனேடிய  தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்   ஒலிப்பதிவு கூடத்திற்கும் அழைத்துச்சென்றார்.   செல்லும்  வழியில்  இவருடைய  மற்றும்  ஒரு ஆசானும்   மூத்த  இலக்கியவாதியுமான  (அமரர்)  கனகசபாபதி சேரையும்   ஏற்றிக்கொண்டார்.

அதுவரையில்  காரில்  இருவரின்  இலக்கியக்கச்சேரிதான் நடந்துகொண்டிருந்தது.   கனகசபாபதி  சேரும்  இணைந்ததும்  மூவர் கச்சேரியாக   மாறியது.

அவ்வேளையில்  ஸ்ரீரஞ்சினியின்  சிந்தனையில்  இலக்கிய  இரசாயன மாற்றம்   நிகழத்தொடங்கிவிட்டது.
அந்த   வானொலி  கலையகத்தில்  கிருஷ்ணலிங்கம்  என்ற ஒலிபரப்பாளர்  என்னை  சுமார்  ஒரு  மணிநேரம்  பேட்டி  கண்டார். அது   நேரடி  ஒலிபரப்பு.   எனது  இலக்கிய  சரிதையே  கனடா  வாழ் தமிழ்   நேயர்களிடம்  சென்றபொழுது,  ஸ்ரீரஞ்சனியின்  பெற்றோர் பற்றியும்   சில  வார்த்தைகள்  சொன்னேன்.   அதே   ஸ்காபரோ  ஊரில் எனக்கு  பால்ய  காலத்தில் ' ' னா 'ஆ ' வன்னா  அரிச்சுவடி சொல்லித்தந்த  பெரியரீச்சர்  அம்மா  திருமதி மரியம்மா திருச்செல்வமும்  தனது  மகள்   வீட்டிலிருந்து  அந்த   நிகழ்சியை கேட்டுக்கொண்டிருந்தார்   என்பது  பிறகுதான்  தெரியும்.
அந்தப்பேட்டியை  கலையகத்திற்கு   வெளியே  ஒரு  அறையிலிருந்து ஸ்ரீரஞ்சனியும்   சேரும்  கேட்டனர்.

பேட்டி  முடிந்து  வெளியே  வந்தபொழுது,  அந்த  நேரடி  ஒலிபரப்பு நேர்காணலில்  பலரையும்  குளிர்வித்த   எனக்காக  ஒரு  கப்பில்  சூடான  கோப்பியுடன் என் முன்னால்   ஸ்ரீரஞ்சனி  வந்து  நின்றார்.
" எந்தக்குறிப்பும்  கையில்  இல்லாமல்  விரல்நுனி  நகக்  கண்ணில்  தகவல்களை  வைத்துக்கொண்டு  எப்படிப்பேசுகிறீர்கள்---? " கண்கள்  வியப்பால்  மின்ன,  மீண்டும்  தனது  கேள்வி  கேட்கும் படலத்தை   தொடங்கினார்.

சுமார்  44  ஆண்டுகளுக்கு  முன்னர்  நீர்கொழும்பு  பாடசாலையில் முறைத்துப்பார்த்த  அந்தக்குழந்தையின்  கண்களா  கனடாவில்  இப்படி  மின்னுகிறது   என்று  நனவிடைதோய்ந்தேன்.
" அண்ணா,  உங்கள்  கனடா  பயணம்  என்னை  மீண்டும்  எழுதும் ஆசையைத்தூண்டியிருக்கிறது "  என்றார்.
அதற்காக  காலத்திற்கு  நன்றி சொல்லிக்கொண்டோம்.  அன்றைய தினம்  காலமும்  கணங்களும்  என்ற  தலைப்பு  எனக்குள்  பிறந்தது.
அவர்  முன்னர்  கற்ற  தெல்லிப்பழை  மகாஜனா  கல்லூரியின் நூற்றாண்டு   வந்தபொழுது  புலம்பெயர்ந்து  வாழும்  ஒவ்வொரு மகாஜனன்களும்  தமது  கல்லூரியின்  நூற்றாண்டை   முன்னிட்டு ஏதும்   நூல்கள்  எழுதி  கல்லூரிக்காக  சமர்ப்பணம்  செய்யவேண்டும் என்று  ரகுபதி  என்ற   ஆய்வாளர்  தெரிவித்ததையடுத்து  அடுத்தடுத்து மூன்று   நூல்களை  ஸ்ரீரஞ்சனி  வரவாக்கினார்.
(தொடரும்)