தமிழ் சினிமா - இறுதிச்சுற்று

தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போல் எப்போதாவது ஒரு முறை தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் வரும். அதிலும் பெண்களை மையப்படுத்தி ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்றால் அரிதிலும் அரிது. ஏற்கெனவே வட இந்தியாவில் சக் தே இந்தியா போன்ற படங்கள் வந்துள்ளது.

அதே பாணியில் சுதா இயக்கத்தில் நம் ஆல்டைம் பேவரட் மாதவன்,ரியல் பாக்ஸர் ரித்திகா நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் தான் இறுதிச்சுற்று.

கதைக்களம்

இந்தியாவின் நம்பர் 1 கோச் மாதவன், யாரை பார்த்தாலும் எரிந்து விழுவது, சிடுசிடு முகம், பத்து வாரத்தையில் எட்டு வார்த்தை கெட்ட வார்த்தை, நீ எவனா இருந்தா எனக்கென்ன என்று இருக்கும் ஒரு கதாபாத்திரம், இவரை பிடிக்காத பாக்ஸிங் குழு தலைவர் ஜாகிர்பொய்யான காரணத்தை கூறி சென்னைக்கு மாதவனை மாற்றுகிறார்.

ஆனால், செல்லும் இடத்தில் எல்லாம் சிறந்த மாணவர்களை உருவாக்கும் மாதவனுக்கு சென்னை ஒரு சவாலாக இருக்கின்றது. அங்கு லக்ஸ், மதி(ரித்திகா) என்று அக்கா, தங்கைகளை சந்திக்கின்றார். இதில் லக்ஸ் பாக்ஸர், மதி மீன் விற்கின்றார். இதில் மதியிடம் ஒரு பாக்ஸருக்கான குவாலிட்டி இருப்பதை அறிந்த மாதவன், அவருக்கு தினமும் 500 ரூபாய் கொடுத்து பாக்ஸிங் கற்க வர சொல்கிறார்.
தன் அக்காவிற்கு பாக்ஸிங்கில் வெற்றி பெற்று போலிஸ் வேலை வேண்டும் என்பதற்காக மதி வேண்டுமென்றே தவறான ஷாட்டுக்களை அடிக்க, அவரை போட்டியில் இருந்து வெளியேற்றுகின்றனர். இதை தொடர்ந்து மாதவன் தனக்காக எத்தனை கஷ்டப்படுகிறார் என்பதை ஒரு கட்டத்தை நாசர் வழியாக அறிகிறார் ரித்திகா.
பின் மீண்டும் மாதவனுடன் லக்ஸ் மற்றும் மதி இந்திய அளவில் ஒரு போட்டியில் கலந்துகொள்ள செல்கின்றனர். மாதவன் ரித்திகாவிற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க, இதை கண்டு லக்ஸ் கோபப்படுகிறார். வேண்டுமென்றே தன் தங்கையின் கையை பயிற்சியின் போது அடிப்பட செய்ய, போட்டியில் ரித்திகா தோற்கிறார்.
இதைக்கண்டு மாதவன் அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ள, இதன் பின் ரித்திகா என்ன ஆனார், மாதவன் விருப்பப்படி பெரிய பாக்ஸர் ஆனாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மேடி இஸ் பேக் என தமிழ்நாட்டு ரசிகர்கள் கைத்தட்டி விசிலடிக்கலாம். அதிலும் சாதாரணமான ரீஎண்ட்ரீ இல்லை, பாக்ஸருக்கான உடல்தோற்றம், தன் மனைவி வேறு ஒருவருடன் ஓடி போனதை எண்ணி எப்போதும் கோபமாக இருக்கும் முகம் என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அதிலும் ஜாகிருடன் அவர் பேசும் காட்சியில் எல்லாம் எத்தனை சென்ஸார் என்று கணக்கே இல்லை. இனி சாக்லேட் பாய் யாராவது சொன்னீங்க....என்று நம்மையே திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

படத்திற்கு கண்டிப்பாக எல்லோரும் மாதவனுக்காக சென்றாலும் மீண்டும் இந்த படத்தை பார்க்க கண்டிப்பாக ரித்திகாவிற்காக தான் செல்வார்கள். பஞ்சாபி பெண், ரியல் பாக்ஸரை சுதா, வடசென்னை குப்பத்து பெண்ணாக காட்டியுள்ளார். காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கின்றார். மாதவன் சிடு மூஞ்சி என்றால், அதை விட பெரிய கோபக்காரியாக அவருக்கே செம்ம போட்டியாக கலக்குகிறார்.
பின் மாதவனுடன் ஏற்படும் காதல் அதை அவரிடம் கூறி ‘எனக்கு டர் இல்லை, உனக்கு இன்ன அல்லு’ என்று கூறும் காட்சியெல்லாம் தியேட்டரே அதிர்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மாதவனை மிஞ்சிவிட்டார். (கண்டிப்பாக இதற்காக மாதவன் கோபித்துக்கொள்ள மாட்டார்).
படத்தில் மாதவன் உதவியாளராக வரும் நாசர், முதலில் மாதவனை திட்டி, பிறகு அவர் குணம் தெரிந்து நீ நல்லவன்யா என்று பாராட்டுவது என பல காட்சிகளில் மனதில் பதிகிறார். பாக்ஸிங் உயர் அதிகாரியாக வரும் ராதாரவியும் ஒரு சில காட்சிகள் என்றாலும் சிறப்பாக செய்துள்ளார். அதிலும் நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு இப்படி ராதாரவியும், நாசரையும் ஒரே காட்சியில் பார்ப்பது செம்ம ரகளை தான்.
ஜாகிரின் கதாபாத்திரம், இந்தியாவில் 100 கோடி பேர் இருந்தும் இதுப்போன்ற ஒரு சிலரின் பாலிடிக்ஸால் தான் சிறந்த ஸ்போர்ட்ஸ் பிளேயர்க்ளை உருவாக்க முடியவில்லை என்பதை அழுத்தமாக காட்டுகின்றது. அப்படியே மீறி விளையாட பெண்களை அனுப்பினால், அவர்களின் தேவைகளை புரிந்துக்கொண்டு பாலியல் தொந்தரவுக்கு உட்படுவதையும் மிக தைரியமாக நடு மண்டையில் அடித்தது போல் கூறியிருக்கிறார் சுதா.
அதிலும் ‘இந்தியாவில் நல்ல பாக்ஸர் வரவேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும், அதற்கு முதலில் பாலிடிக்ஸ் வெளியே எடுங்க’ என்ற அருண் மதிஷ்வரன் வசனங்கள் தூள். அதேபோல் மாதவன், ஜாகிரை பார்த்து சென்ஸார் வார்த்தையுடன் அவ்ளோ தாண்ட நீ என்று சொல்லும் இடமெல்லாம் ஒவ்வொரு ரசிகனின் மனதில் இருந்து வரும் கைத்தட்டல்.

க்ளாப்ஸ்

மாதவன் -ரித்திகாவின் கதாபாத்திரம், இருவரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். முதலில் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே சுதாவிற்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்.

படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ரசிக்க வைக்கின்றது. எப்போதும் போதையில் இருக்கும் ரித்திகாவின் தந்தையாக காளிவரும் காட்சியெல்லாம் சிரிப்பு சரவெடி தான். வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு சவுக்கார் பேட்டையில் என் மானத்தை விற்று விட்டேனே என்று தன் மனைவியிடம் புலம்பும் காட்சியிலும் சரி, தன் மகள் வெற்றி பெற வேண்டும் என ஸோத்திரத்தை தோத்திரம் என்று சொல்லும் காட்சியிலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்றாலும், பின்னணி இசையில் ருத்ரதாண்டவம் தான். சிவகுமார் விஜயின் ஒளிப்பதிவும் சென்னை ஹிசார் பகுதிகளை அப்படியே கண்முன் கொண்டு வருகின்றது.

பல்ப்ஸ்

மிகவும் ரியாலாக பாக்ஸிங் குறித்து காண்பித்திருப்பதால், பாக்ஸிங் தெரிந்தவர்களுக்கு அதெல்லாம் புரியும், சாதாரண சினிமா ரசிகர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை, அதை கொஞ்சம் விவரித்திருக்கலாம். மற்றபடி ஏதும் இல்லை.

மொத்தத்தில் இந்த இறுதிச்சுற்றில் சுதா, மாதவன், ரித்திகா மூவரும் பல சினிமா கமர்ஷியலை நாக் அவுட் செய்து வென்றுள்ளனர்.
நன்றி cineulagam