சீன ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம்
பாரிய பனிப் பொழிவு : 50 பேர் உயிரிழப்பு
கடலை கடக்க முயன்ற குடியேற்றவாசிகள் 33 பேர் பலி
சீன ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம்
25/01/2016 ஈரானுக்கு முக்கியத்துவம் மிக்க விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
ஈரானுக்கு எதிரான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டதையடுத்து அந்நாட்டிற்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெயரை சீன ஜனாதிபதி பெறுகிறார்.
மேற்படி சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகள் என்பன குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
600 பில்லியன் அமெரிக்க டொலராக வர்த்தகத்தை ஊக்குவித்தல் உள்ளடங்கலாக 17 உடன்படிக்கைகளில் சீன மற்றும் ஈரானிய ஜனாதிபதிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்குமிடையிலான தந்திரோபாய உறவுகள் தொடர்பில் பரந்தளவான உடன்படிக்கையொன்றில் தானும் சீன ஜனாதிபதியும் கைச்சாத்திட்டதாக ரோவ்ஹானி தெரிவித்தார்.
அத்துடன் விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம், கலாசாரம், சுற்றுலாத் துறை, பாதுகாப்பு, பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் மத்திய கிழக்கிலான ஸ்திரத்தன்மையின்மை என்பன குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
சீன ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது ஈரானிய உச்ச நிலைத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கமெய்னியையும் சந்தித்து உரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த ஒரு தசாப்த காலப் பகுதியில் ஈரானுக்கு விஜயம் செய்த முதலாவது சீன ஜனாதிபதியாக விளங்குகின்றார். நன்றி வீரகேசரி
பாரிய பனிப் பொழிவு : 50 பேர் உயிரிழப்பு
25/01/2016 கிழக்கு ஆசியாவெங்கும் இடம்பெற்ற பாரிய பனிப் பொழிவால் பலர் உயிரிழந்துள்ளதுடன் அந்தப் பிராந்தியத்திலான இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பனிப் பொழிவால் தாய்வானில் மட்டும் 50 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
தென் கொரியாவில் பனனிப்பொழிவால் விமானசேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் குறைந்தது 60,000 சுற்றுலா பயணிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
கடும் பனிப் பொழிவால் கொரிய சுற்றுலா தீவான ஜெயுவிலுள்ள விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம் ஹொங்கொங், தென் சீனா மற்றும் ஜப்பானிலும் கடும் பனிப் பொழிவு இடம்பெற்றுள்ளது.
தாய்வானில் உயிரிழந்தவர்களில் அநேகர் அந்நாட்டின் வடக்கு பிராந்திய நகர்களான தாய்பி, தவோயுவான் மற்றும் தென் நகரான கவோஹ்ஸியங் ஆகிய பிராந்தியங்களில் வசிக்கும் வயோதிபர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாய்வானின் வட பகுதியில் வழமைக்கு மாறான 4 பாகை செல்சியஸ் தாழ்ந்த வெப்பநிலை நிலவியுள்ளது.
தாய்வானின் தலைநகரில் உயிரிழந்தவர்களில் பலர் இருதய மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிராந்திய அதிகாரிகள் வயோதிபர்களை குளிரில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
தென் கொரியாவில் 500 க்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
ஹொங்கொங்கில் 3 பாகை செல்சியஸ் அளவான வெப்பநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அந்தப் பிராந்தியம் சுமார் 60 வருடங்களில் எதிர்கொண்ட மிகவும் தாழ்ந்த வெப்பநிலையாகும்.
ஜப்பானில் இந்தப் பனிப்பொழிவால் 600 க்கு மேற்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் இரத்துச் செய்யபட்டன.
அந்நாட்டில் மேற்படி பனிப் பொழிவால் குறைந்தது 5 பேர் பலியானதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தென் சீனாவில் குவாங்ஸொயு மற்றும் ஷென்ஸென் பிராந்தியங்களில் வழமைக்கு மாறான பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது. அதேசமயம் அந்நாட்டின் ஒகினாவா பிராந்தியத்தில் முதல் தடவையாக பனிப் பொழிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய கிழக்கு ஆசிய நாடுகளிலும் வெப்பநிலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
வியட்நாமில் ஹனோய் பிராந்தியத்தில் வெப்பநிலை 6 பாகை செல்சியஸாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது அந்தப் பிராந்தியம் கடந்த இரு தசாப்த காலத்தில் எதிர்கொண்ட மிகவும் தாழ்ந்த வெப்பநிலையாகும். நன்றி வீரகேசரி
கடலை கடக்க முயன்ற குடியேற்றவாசிகள் 33 பேர் பலி
31/01/2016 ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு பிரவேசிக்க முயற்சித்த குடியேற்றவாசிகளில் குழந்தைகள் உட்பட சுமார் 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி குடியேற்றவாசிகள் படகுமூலம் லெஸ்போஸ் தீவுக்கு செல்ல முயற்சித்ததாக அந்த நாட்டுக் காவற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 75 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பியவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் லெஸ்போஸ் தீவை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி