கவி விதை - 9 - காலம் - விழி மைந்தன்

.

வயல் வெளியின் முன்னால் , வாகை மரங்கள் வழிக்குக் குடை பிடிக்க, மாரி  வெள்ளம் வெள்ள   வாய்க்காலில் வழிந்தோடத், தலை நிமிர்த்தி நின்ற அந்தப் பாட சாலையில், அன்று 'உயர்தர மாணவர் விருந்து.'

புரோம் என்றும் போர்மல் என்றும் மேலை நாட்டுக் குழந்தைகள் அழைக்கும் அந்த நிகழ்வை, இந்த நாட்டு இளசுகள் 'சோஷல்' என்றன. 'தம்பி சொன்னதும் சரி' என்ற  வாத்தியாரின் சீடர்கள் வாயிலே அது 'சோசல்'.

வண்ண வண்ணப் பட்டுடுத்தி, வாசனைப் பூ மாலை வைத்து, சின்ன விழிகள் சிறகடிக்க, சிரித்துச் சிரித்துக் கதை பேசும் கன்னியர் கூட்டம்.

'சேட்டை' அயன் பண்ணி, அது சேட்டை  விடாமல் கால் சட்டைக்குள்ளே செருகி, அன்று விடிந்த பிறகு விழுந்தடித்து ஓடி இரவல் வாங்கிய கழுத்துப் பட்டியை இறுக்கமாக அணிந்து, 'கதைத்து விடு' என்று தள்ளிடும் நெஞ்சமும் கதைக்க வராமல் தடம்புரளும் நாக்குமாய்த் தத்தளிக்கும் காளையர் கூட்டம்.

மாலை பலவும், 'வாஸ்' கள்  பலப் பலவும்,சேலை பலவும், தெரிந்து எடுத்து வந்து, தென்னங்குருத்தும், செந்தாமரைப் பூவும், கன்னல் கரும்பும், பல கட்டுகளாய்க்  கொண்டு வந்து, நீண்ட இரவில் நெடிது  விழித்திருந்து அமராவதியென  அவர்கள் அலங்கரித்த கல்லூரி மண்டபம்.


'ப்ரோகிராம்' நடந்து கொண்டிருக்கிறது. கிண்டல் பேச்சுகளும் கிளிப் பிள்ளைச் சிணுங்கல்களும் காட்டுக் கூச்சல்களும்  கை கொட்டல்களும் மண்டபத்திற்கு வெளியே கேட்கின்றன.

ஒரு மாணவன் வெளியே வருகிறான்.

கண்களில் சுடர் விடும் அறிவொளி. ஆனால் கவலை தோய்ந்த முகம்.

வெளியே அடிக்கும் வயல் காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் பாடசாலைக் கொடியைப் பார்த்த படி நிற்கிறான்.

பாறையென வலிய  மனத்தவன் தான். ஆனால், இன்று எண்ண  அலைகள் மோதிச் சிதறுகின்றன அவன் மனத்தில்.

'கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள் இன்றைக்கு. 

கூட்டில் கிளிகள் எனக் கூடி வாழ்ந்தோம்; இன்று பிரிகிறோம்.

இந்தக் கல்லூரியில் கற்கும் இன்பம் இனி என்று வருமோ?

இன்னுமொரு வருடம் இருத்தலாகாதா, என் கல்லூரிக் காலம்?

காலை மணி அடிக்க, நிரை  நிரையாய்  அசையும் பாதங்களோடு இணைந்து நடக்கும் இன்பம்....

ஓராயிரம்  குரல்கள் சேர்ந்து இளங்காலைப் பொழுதில் இறைவனையும் எம் கல்லூரித் தாயையும் வாழ்த்திப் பாடும் சந்தோஷம்....

'இடைவேளை' நேரத்தில் இணை பிரியாத் தோழரோடு சங்கரப் பிள்ளை கடையில் மசால் வடையும் தேநீரும் வாங்கி அடித்துப் பறித்து உண்பதிலே வரும் திருப்தி....


போட்டிகள் வென்று வெற்றிக் கேடயத்தோடு  கல்லூரிப் பெயர் சொல்லிக் கத்திக் கொண்டு சைக்கிளிலே ஊர்வலமாய் வாசலிலே வந்து இறங்கும்  போது  வரும் நிறைவு...


இதுவெல்லாம் என்று கிடைக்குமோ இனிமேல்?

கிடைப்பதெல்லாம் இழப்பதற்கும், இணைவதெல்லாம்  பிரிவதற்கும், கட்டுவதெல்லாம் உடைவதற்கும் என்றால் வாழ்வே வெறும் கனவும் நினைவும் தானா?"

இப்படியெல்லாம் அந்த இளைய நெஞ்சத்தில் எதிரொலிகள்!


கண்கள் சற்றே கலங்க, காலடியில் பார்க்கிறான்.


காசித் தும்பைச் செடிகள்.


பச்சையும் சிவப்பும், மஞ்சளும் ஊதாவும், வெள்ளையும் நீலமுமாய் விகசித்துப் பூத்திருக்கின்றன.

மேலே இருந்து இலைகள் சில விழுகின்றன.

நிமிர்ந்து பார்க்கிறான்.

வேப்ப மரம்.

கல்லூரி கட்டப் பட்ட காலத்திலேயே அங்கே  நிழல் பரப்பி நின்ற வேப்ப  மரம்.

வைத்தது யார், வயசு எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. 

பரந்து  விரிந்து நிற்கிறது பலப் பல தசாப்தங்களாய்.


'இந்த வேப்ப  மரம் போல, எப்போதும் இந்தக் கல்லூரியோடு வாழக் கூடாதா?" என்றுஎண்ணுகிறான்.


வேப்ப  மரம் பேசுகிறது.

"என்னைப் பார்த்துப் பொறாமைப் படுகிறாயா, மகனே? இது நல்ல வேடிக்கை.

நான் யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறேன் தெரியுமா? என் காலடியில் நிற்கும் இந்தக் காசித் தும்பைகளைப் பார்த்து.

ஒவ்வொரு கணமும் ஒரு புது வண்ணக் கோலம் கொள்கின்றன அவை.

பருவ காலங்கள் பற்றி அவைக்குத் தெரியாது. ஒரு மாரியில் மலர்கின்றன. அடுத்த மாரி வரும் முன் மடிந்து விடுகின்றன.

ஆனால், வாழும் ஒவ்வொரு கணமும் அர்த்தம் உள்ளதாய்  இருக்கிறது அவற்றுக்கு.

ஒவ்வொரு முறை காற்று வீசும் போதும் இதழ் சொரிகின்றன. ஒவ்வொரு மழைத் துளிக்கும் மகிழ்கின்றன. ஒவ்வொரு சூரிய உதயத்திலும் விகசிக்கின்றன.

வாழ்க்கை என்பது மட்டுப் படுத்தப் பட்டிருப்பதால், ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு ஸ்வரம்  பேசுகிறது.

இன்னொரு முறை கிடைக்காது என்று தெரிவதால், ஒவ்வொரு வினாடியையும் அனுபவிக்க முடிகிறது.

மீண்டும் வராது என்று புரிவதால், ஒவ்வொரு பொழுதும் விசேஷமாய் இருக்கிறது.

அது போலத் தான் உன் வாழ்வு.

திரும்பி வராத ஒரு கல்லூரிக் காலம்.  பிடித்து வைக்க முடியாத சில பல்கலைக் கழக வருடங்கள். மணந்த பிறகு மறுபடி மீட்க முடியாத ஒரு காதல் வாழ்க்கை. உலகம் யாவும் ஒரு பெருங்கனவு எனில், கனவிலும் கனவு என விரைந்து மறைவது அது.  ஒரு முதலிரவு. ஒரு தலைத் தீபாவளி.  குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் ஒரு காலம் -  நீ கேட்டாலும் மீண்டும் கிடைக்காத ஒரு இன்ப நேரம்.  இப்படியே....

ஒவ்வொரு கணமும் புதுமை உனக்கு.

ஒவ்வொரு சூரிய உதயமும், ஒவ்வொரு நிலவின்  வருகையும், ஒவ்வொரு பட்சியின் பாடலும், ஒவ்வொரு தென்றலின் வர்ஷிப்பும், ஒவ்வொரு ரோஜாவின் மலர்வும், ஒவ்வொரு பனித் துளியின் சில்லிப்பும் உன் இதயத்தோடு பேசுகின்றன.

ஏனென்றால் நீ மானுடன். எப்போது முடிவு என்று தெரியாதவன். ஆனால் இன்னும் நூறு வருடத்தின் பின் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தவன்.

உன் மனதில் உதிக்கும் சோகம் கூட அழுத்தமானதாய், அர்த்தமுள்ளதாய் இருக்கிறது. இனிப்பு உணவுகள் நிறைந்த விருந்தில் உறைப்புப் பண்டத்தையும் மனிதர் விரும்பி உண்பது போல. சோக முடிவை உடைய ஒரு ஷேக்ஸ்பியர் நாடகம் போல.


சுவையே இல்லாத உணவை என்னைப் போல் நீ உண்பதில்லை. முடிவே இல்லாமல் இழுபடும் சின்னத்திரை நாடகம் போல் உன் வாழ்க்கை இல்லை.


என்னைப் பார்.

இந்தக் கல்லூரியில் உன்னைப் போல் எத்தனை தலைமுறை மாணவர்களைப் பார்த்திருக்கிறேன்.

முத்து முத்தான சின்னச் சித்திரங்களாய் இங்கே வருகிறார்கள்.

இளைய மனிதர்களாய், எத்தனையோ பயங்களோடும், எதிர்பார்ப்புகளோடும், இன்ப நினைவுகளோடும், துன்ப வடுக்களோடும் வெளியேறுகிறார்கள்.

ஒவ்வோருமே விசேஷமானவர்கள்.

ஆனால் எனக்கோ, பெரும்பாலோர் முகங்கள் நினைவில் இல்லை.

இங்கே இப்படியே எப்போதும் நிற்கிறேன்.

ஒவ்வொரு காலையும் சலிப்போடு விடிகிறது.

ஒவ்வொரு மாலையும் சோர்வோடு வருகிறது.


காலம் என்பது பெரும் சுமை ஆகிவிட்டது, பழுத்தும் உதிராமல் என் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான இலைகளைப் போல.

சுமக்கச் சுமக்கக் கூடும் சுமை அது.

ஒவ்வொரு நாளும் ஒரு வதை ஆகிக் கொண்டு வருகிறது.

மரணம் என்பது இறைவன் மனிதனுக்குத் தந்த வரங்களில்  மிகப் பெரிய வரம்.

மரணம் என்பது ஒரு முடிவு.

முடிவுகள் பல இருக்கும் உன்னுடைய வாழ்வில் முடிவான முடிவாக வரப்போவது அது.

முடிவுகளை எப்போதும் ஏற்றுக் கொள்.

முடிவு ஒன்று இல்லாமல் எதுவும் மேன்மை பெறுவதில்லை.

ஒரு நாடகத்தையோ நாவலையோ வாசிக்கும் போது, அல்லது ஒரு சினிமாவைப் பார்க்கும்போது, அதன் முடிவு என்ன என்று தெரியாமல் அதன் தரத்தை நீ மதிப்பிட முடியாது.

முடிவு என்பது முழுமை.

முடிவு ஒன்று இருக்கும் என்று தெரிவது ஒரு மிகப் பெரிய நம்பிக்கை. இருக்கும் நேரத்தில் உன்னால் முடிந்த உச்சத்தைச் செய்வதற்கான உந்துதல்.

நீ மானுடன். உனக்கு இருக்கும் நேரம் நீண்டதல்ல. ஒவ்வொரு செயலிலும் உன்னால் முடிந்த உச்சத்தைச் செய்."

அவன் மௌனமாய் நின்றான். 

சில காசித் தும்பைப் பூக்களைப் பறித்துக் கொண்டு திரும்பிச் சென்றான்.

பிறகொரு நாள் வேப்ப மரம் பேசக் கேள்வியுற்றது, அவன் தன்  உயர்தரப் பரீட்சையிலே அந்த நாடு முழுவதிலும் முதன்மை பெற்றதாக. 

இப்போது அவன் அவ்வூரில் இல்லை.

எப்போதாவது ஒரு நாள், தான் கற்ற கல்லூரிக்கு வரும்போது அந்த வேப்ப  மர  நிழலில் வந்து நிற்கிறான்.

அந்த மரத்தின் மேல் அவனுக்கு மிகவும் பிரியம்.

ஆனால், ஐந்து நிமிடத்திற்கு மேல் நிற்க மாட்டான்.