அஸ்தமனத்தில் உதயம் - செல்வத்துரை ரவீந்திரன்

.
உடன்பிறந்த அண்ணனின் பார்வையில்
அருண். விஜயராணி என்ற பெண்ணிய ஆளுமை

           கனிவான பெற்றோர்கள் பாசமிக்க உடன் பிறப்புகள் அன்பான கணவர் இனிமையான மழலைச்செல்வங்கள்  வசதியான இல்லறம்... பிள்ளையாரின் அனுக்கிரகம்... "  இவ்வாறுதான் எங்கள் விஜயா தனது முதலாவது கதைத்தொகுதி கன்னிகாதானங்களின் என்னுரை என்னும் முன்னுரையைத் தொடங்கியிருந்தாள்.
குடும்பம் என்ற அச்சாணியில் நின்றவாறு தனது வாழ்க்கைச்சக்கரத்தை சுழற்றியவளுக்கு அறிவுதெரிந்த நாள் முதல் உரும்பராய் கற்பகப்பிள்ளையார்தான் குலதெய்வம்.
பின்னாட்களில் சத்திய சாயியில் நம்பிக்கைகொண்டு அவரை குருவாக ஏற்றபின் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அவரை முன்வைத்தே காரியமாற்றினாள்.




கற்பகப்பிள்ளையாருக்கே தனது முதல் நூலை சமர்ப்பணம் செய்தாள். அதனாலோ என்னவோ உடல் உபாதைகளுக்காக மருத்துவர் அவளை மச்சமாவது சாப்பிடப் பணித்தும், அந்தக் கட்டாயத்துக்காக ஏனோ தானோ என்று புசித்தாலும், மூச்சினை விடுவதற்கு சில தினங்களுக்கு முன்னால் பிள்ளையாரையும் தாயாரையும் கனவு கண்டு, அவர்கள் அழைக்கிறார்கள் எனத்தெரிந்துகொண்டோ என்னவோ, பிள்ளையார் கதை  தொடக்கத்தில் தான் விரதமில்லாவிட்டாலும் மச்சமில்லாமல் இருக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு,  பிள்ளையார் கதை காலத்திலேயே விடைபெற்றுவிட்டாள்.
விஜயாவின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும்.  கலை - இலக்கியம் - வானொலி -  பத்திரிகைகள் - இதழ்களிலிருந்த எழுத்து சார்ந்த தொடர்புகள் - இத்துறை சார்ந்தவர்களுடன் நீடித்த நட்புறவு - அதேசமயம் சமூகம் சார்ந்த அக்கறையான செயற்பாடுகளிலெல்லாம் பெற்றவர்களையும் குடும்பத்தையும் சகோதர உறவுகளையும் - அந்த உறவுகளினால் நீடித்த பந்தங்களையும் இணைத்துக்கொண்டே பயணித்தவள் என்பதுதான் அந்தப்புரிதல்.
உலகியல் அபிலாசைகளில் அக்கறை இருந்ததில்லை. பதவிகளுக்காகவோ, பெருமைகளுக்காகவோ அவள் அடித்துக்கொண்டதில்லை. அவள் வேண்டியதெல்லாமே தன்னைச்சுற்றி ஒரு பாசமான குடும்பமே. அது இரத்த உறவாகட்டும். கலை உலகாகட்டும், ஆன்மீகமாகட்டும், அந்த உறவுகளை அன்புடனும் ஆணித்தரமாகவும் பேணிவந்தாள். அந்தப்பண்புதான் அவளை தனியிடத்தில் வைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.
பொதுத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு பலதரப்பட்ட வாழ்க்கை - பொறுப்புகள் இருக்கும். சில சமயங்களில் அவை ஒன்றோடு ஒன்று போட்டியிடும்.
ஆனால், விஜயா அவைகளை சாதுரியமாக கடந்தாள். இலங்கையில் பிறந்த ஊரிலும் கொழும்பிலும் பின்னர் வெளிநாடுகளிலும் தனது வாழ்வைத்தொடர்ந்தபோதிலும் பெற்றோர், குடும்பம் சகோதர உறவுகள் என்ற அச்சாணியிலிருந்தே உலகைப்பார்த்தவர்.
அந்த அச்சாணியை நினைவுகளில் பதிந்துவிட்டு விடைபெறும்வேளையில் இறுதியாக என்னை அழைத்து, " எல்லோரையும்   சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்கள்" எனச்சொன்னவளிடத்தில்  ஆழமாக  வேரூன்றியிருந்தது  அந்த குடும்ப பாசம்தான்.
அந்தப்பாசம் உறவுகளையும் கடந்து விசாலமாக, கலை, இலக்கிய, பொதுவாழ்க்கையில் விஸ்தீரனமானது. அதன் தீவிரத்தை அவருடைய மறைவின்பின்னர் உணரமுடிகிறது.
சில நாட்கள் அவர்பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியானபொழுதும் மின்னஞ்சல்களில் வந்த அனுதாப வார்த்தைகளையும் பார்த்தபோது,  இதனைத்தான் அஸ்தமனத்தில் உதயம் என்போமா  என்றும் எண்ணுகின்றேன்.
இந்த முடிவு அவளைப் பொறுத்தவரையில் மற்றும் ஒரு  ஊற்றின்    தொடக்கமாகவே நான் கருதுகின்றேன்.
இலங்கையில் இளைய சகோதரியாக எங்களோடு வாழ்ந்தபொழுது, இலங்கை வானொலியின் மயில்வாகனம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், அப்துல் ஹமீட், யோகா தில்லைநாதன், சற்சொரூபவதி நாதன் ஆகியோருடன் எனக்கு பரிச்சியமும் நட்பும் இருந்தது. அவளுடைய ஆர்வத்தில் அவர்களை அறிமுகப்படுத்திவிட்டேன். அதுவரையில் பத்திரிகைகளுக்கு சிறுகதைகள் எழுதி வந்தவள், இவர்களது ஆதரவிலும் ஊக்கத்திலும் வானொலியில் இசையும் கதையும், விசாலட்சிப்பாட்டி என்ற தொடர்களினால் வானொலியில் ஒரு அங்கமானாள்.


அந்த அறிமுகங்களுடன் மணவாழ்வு வந்தது. அருணாவுடன் சவூதிக்கு பிரயாணமானாள். மத்திய கிழக்கில் இருந்து அங்குள்ள சர்வதேச வானொலிகளுடன் இணையவேண்டும் என்ற ஆர்வம். ஆனால், சில மாதங்களிலேயே குழந்தை ஜனித்ததால் இலங்கைக்கு திரும்பி வந்தாள். அவளது ஆக்கங்கள் எல்லாம் தாய்மை என்ற வட்டத்துக்குள் முடங்கின.
அதனைத்தொடர்ந்து வாழ்க்கைச்சமரில் அருணாவுடன் இலண்டன் வாசம். அங்கு பி.பி.சி. தமிழோசையிலும் தமிழ் இலக்கிய வட்டத்தில் லண்டன் முரசு, நவசோதியின் சிந்து போன்ற இதழ்கள் அவளை ஈர்த்தாலும் வாழ்க்கைப்போராட்டங்களும் மக்கட் செல்வமும் அவளை பங்களிப்புச்செய்ய நேரம் தரவில்லை.
அவுஸ்திரேலியாவுக்கு 1989 இன் தொடக்கத்தில் வந்தபொழுது, அக்கால கட்டத்தில் வந்த சிலரின் பரிச்சியத்தால்  இங்குள்ள நிலைமைகள் குறித்து அவளுக்கு ஆழ்ந்த அக்கறைதோன்றியது.
அவுஸ்திரேலியாதான் இனி தனக்கு நிரந்தரமான வதிவிடம் என்ற தீர்மானத்துடன் ஏதும் செய்யவேண்டும் என்ற உந்துதல் அவளுக்கு ஏற்பட்டது. அச்சமயத்தில் நான் இங்கு இலங்கை தமிழ்ச்சங்கத்தில் இணைந்திருந்தேன். இலங்கையில் இனப்பிரச்சினை நெருக்கடிகளினால் தமிழர்கள் அகதிகளாக வந்துகொண்டிருந்த காலம். இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்றுபோல் அன்றும் கானல்நீர்தான். சங்கம் முழுமையாக ஈழம்பற்றிய   அரசியலில் இருந்தபோது, இங்குவந்த அகதிகளின் நலன்பற்றிய சிந்தனையிலும் அவர்களின் எதிர்காலம் குறித்த சட்டங்கள் பற்றிய ஆய்விலும் தமிழ் சமூகத்தின் பங்குபற்றியும்  ஈடுபட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தங்கை விஜயாவும் அவர் கணவர் அருணும், அவர்களின் இரண்டு குழந்தைகளும் இங்கு வந்துசேர்ந்தனர்.
இலங்கை அரசியல் பற்றிய அக்கறையைவிட இங்கு வாழப்போகின்ற எம்மவர்களின் அடையாளம் பற்றிய கேள்விகள்தான் விஜயாவிடத்தில் எழுந்தன. அக்காலங்களில் வந்த சில சாதாரண பெண்கள், இங்குள்ள காலாச்சார சூழ்நிலையில் வேலை தேடி அலைந்ததும் அந்தக்கலாச்சாரங்களால் மனமாற்றங்கள் கொண்டதும் விஜயாவைப்பாதித்தது.
இந்நிலையில் மெல்பனுக்கு விஜயா வந்த காலப்பகுதியில் இங்குள்ள எனது சில நண்பர்கள் மக்கள்குரல் என்ற கையெழுத்துப்பிரதியை தொடங்கியிருந்தனர்.
கணினியில் தமிழ் அறிமுகமாகியிருக்காத அக்காலத்தில் மக்கள்குரல் கையெழுத்துப்பிரதியாக வந்தது. அதனது முதலாவது வாசகர் வட்டச்சந்திப்பு மெல்பன் வை.டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடந்தபொழுது விஜயாவையும் அழைத்துச்சென்றேன். அங்குதான் அவர் முருகபூபதியை முதலில் சந்தித்தாள். அத்துடன் எனது நண்பர் நல்லையா சூரியகுமாரன், சிவநாதன், தருமகுலராஜா, பேராசிரியர் இலியேஸர் தம்பதிகள் மற்றும் என்னிடம் தமது அகதிவிண்ணப்பங்கள் சமர்ப்பித்த சில இளைஞர்கள், குடும்பத்தலைவர்களையெல்லாம் அவருக்கு அன்று அறிமுகப்படுத்தினேன்.
பின்னர் முருகபூபதியின் சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழா அதே மண்டபத்தில் 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடந்தபொழுது அதில்தான் தனது மெல்பன் கன்னிப்பேச்சை விஜயா நிகழ்த்தினாள். அன்று அந்த மண்டபத்தில் அவள் சந்தித்த இலக்கியவாதிகளின் பரிச்சயம் அவள் ஆழ்மனதில் ஊறிக்கிடந்த கலை, இலக்கிய தாகத்தை வெளிக்கொணரச்செய்தது.
அவ்வப்போது புகலிடத்தமிழர்களின் எதிர்காலம் அவர்களின் அடையாளம் பற்றியெல்லாம் என்னுடன் வாதிக்கும் விஜயா, எம்மவரின்  குழந்தைகள் பற்றியே அதிகம் கவலைகொண்டிருந்தாள். உரும்பராயில் தொடங்கிய அவளுடைய ஆன்மீக நம்பிக்கைகள் கொழும்பு, மத்திய கிழக்கு. இங்கிலாந்து எனத்தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிலும் வளர்ந்தமையால் எமது குழந்தைகளுக்காக வெள்ளிதோறும் தனது வீட்டிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் கூட்டுப்பிரார்த்தனைகளை நடத்துவதற்கு உந்து சக்தியானாள்.
அந்தப்பிரார்த்தனை   வாராந்த குடும்ப ஒன்றுகூடலாகவும் மாறியது. நவராத்திரிகாலத்தில் வீட்டில் கொலுவைத்து சரஸ்வதி பூசை செய்யும் மரபுக்கும் அவள். வித்திட்டாள். 1989 ஆம் ஆண்டு நண்பர் சிவநாதன் முன்னிலை வகித்த தமிழ்க் கலைமன்றம், கலைமகள் விழாவை நடத்தியபொழுது தனக்குத்தெரிந்த பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளை  அழைத்துவந்து  வித்தியாரம்பம் செய்துவைக்க அடிகோலினாள்.
இவ்வாறு விஜயாவின் கலை, இலக்கிய வட்டம் படிப்படியாக வளர்ந்தது. இலங்கைத்தமிழ்ச்சங்கம் தீவிரமாக இலங்கை அரசியல் பற்றிய கரிசனையைக் கொண்டிருந்தமையினால்  இங்குள்ளோர் ஒரு தமிழ்க்கலாசார சூழ்நிலையில் வாழ கலாசாரப்பணிகளை முன்னெடுக்கவேண்டிய தேவை எமக்கும் நண்பர்களுக்கும் உருவாகியது.
இந்நிலையில் மெல்பனில் தமிழ் அகதிகள் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழர் ஒன்றியம் முதலான அமைப்புகள் ஒரே காலகட்டத்தில் தொடங்கின.
இவை மூன்றையும் ஒன்றிணைக்கவேண்டும் என்பது சிலரது விருப்பமாகவிருந்தபோதிலும் அது சாத்தியப்படவில்லை.
அவை மூன்றும் தனித்தனியாகவே இயங்கின. விஜயா முதலில் தமிழர் ஒன்றியத்தில் இணைந்து அதன் கலாசார செயலாளராக அங்கம்பெற்றாள். அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட அவுஸ்திரேலியா முரசு இதழின் ஆசிரியர் பொறுப்பும் ஏற்றாள்.
தமிழர் ஒன்றியம் 1990 முதல் இயங்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. கதம்பவிழா, கலைமகள் விழா, பாரதி விழா, நடன, நாடகப்பட்டறைகள், முத்தமிழ்விழா, மறைந்த எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சி, நூல்கள் இதழ்களின் கண்காட்சி என்பனவும் பேச்சுப்போட்டி ஆத்திசூடி, கொன்றைவேந்தன் நாவன்மைப்போட்டி என்பனவற்றையும் எமது தமிழர் ஒன்றியம் நடத்தியபொழுது திருமதி ரேணுகா சிவகுமாரன், சுமதி சத்தியமூர்த்தி முதலான அவருடைய தோழிகள் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள்.
விஜயாவின் முதலாவது சிறுகதைத்தொகுதி கன்னிகாதானங்கள் வெளியீடு மெல்பனில் நடந்த இரண்டாவது இலக்கிய நூல் வெளியீட்டரங்காகும்.
பாரதி பள்ளி, தமிழ் இலக்கிய கலைச்சங்கம், மெல்பன் தமிழ்ச்சங்கம் முதலான அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும்  பங்குபற்றிய விஜயா கலை, இலக்கியச்சங்கம் உருவாவதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் பெண்கள் அரங்கில் உரையாற்றியதுடன் அந்த எழுத்தாளர் விழா இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு முருகபூபதி உட்பட பலருடன் இணைந்து அந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரானாள்.
அத்துடன் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திலும் இணைந்து  செயற்பட்டாள். இவ்வாறு விஜயாவின் கலை, இலக்கிய பணிகளையெல்லாம் அருகிருந்து பார்த்துவந்த சந்தர்ப்பங்களில் ஏதும் பிரச்சினைகள் தலைதூக்கினால் என்னிடம் ஆலோசனைக்கு வருவாள்.
சமூகப்பணிகள் பலர் சம்பந்தப்பட்டவை. பல கருத்தியல்கள் சார்ந்தது. அதற்குள் தெளிவைத்தேடி நகர்ந்து கருமமாற்றல் வேண்டும். சிக்கலான விடயங்களையும் சாதுரியமாக கடந்து செல்லும் இயல்பு விஜயாவுக்கு இருந்தமையினால் பொது விடயங்களில் அவள் காண்பித்த அக்கறையை தமது படைப்பு இலக்கியத்துறையில் தாமதமாகவே காண்பித்தாள். எனினும் அவளுக்கு வானொலி ஊடகம் விருப்பத்துக்குரியதாகவும் இருந்தமையினால் அவற்றில் சில ஒலிச்சித்திரங்களை வழங்கினாள்.
விஜயாவுக்கு பாரதியிடத்திலும் அதனையடுத்து கண்ணதாசனிலும் அதிகம் ஈர்ப்பிருந்தது. திரையிசைப்பாடல்களில் பொதிந்திருக்கும் வாழ்க்கை பற்றிய சித்திரம், தத்துவ விசாரம், இயற்கையின் விநோதங்கள், ஆன்மீகம் குறித்த தேடல், இல்லறம் பற்றிய புரிதல் யாவற்றையும் ஆராய்ந்து ஒலிச்சித்திரங்களை எழுதி மெல்பன் வானொலிகளில் பேசினாள். சிட்னி வானொலிகளுக்கு தொலைபேசி வாயிலாக குரல்கொடுத்தாள்.
இவையெல்லாவற்றையும் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அன்று ஏற்பட்ட முருகபூபதியின் சந்திப்பு அண்ணா - தங்கையான இலக்கிய பாசமாக வளர்ந்தது. அவளை புடம்போட்டு மெருகேற்றி இலக்கிய வட்டத்திலும் பொதுப்பணிகளிலும் அவளது அஸ்தமன காலம் வரையில் பிரகாசிக்கவைத்ததற்கும் உதயத்திற்கும் அந்தப்பாசமே ஆணிவேர்.
விஜயா பற்றிய கண்ணோட்டம் சமூகத்தில் எவ்வாறு இருந்திருக்கிறது என்பதை அவளுடைய மறைவின் பின்னர் நடந்த வானொலி அஞ்சலி நிகழ்ச்சிகளிலும் வெளியான பதிவுகளிலும் இருந்துதான் உணர்ந்துகொண்டேன்.
அவளுடைய கதைகள் ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கும் செய்திகள் சொல்லப்படுகின்றன.
அற்பாயுளில் எம்மிடமிருந்து விடைபெற்றுள்ள விஜயாவின் பன்முகம் மீண்டும் உதயமாகியிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் விஜயாவின் வாழ்க்கை மேலே குறிப்பிட்ட அச்சாணியிலிருந்து பிசகிவிடாமல் சுழன்றிருக்கிறது என்பதையும் அறியமுடிந்திருக்கிறது.
ஒரு மனிதனுக்கோ, ஏன் மீனுக்குக் கூட எதிர்நீச்சல் என்பது கஷ்டமான விடயம்தான். வாழ்க்கையை ஓடும் நீரோட்டத்தின் பதையில் விட்டு விட்டால், அது வசதியானதும் எளிதானதும்தான்.  ஆனால், அந்த நீரோட்டம் எங்கே எப்படி கொண்டு சென்றுவிடும் என்பது புரியாது. எது என் மனதுக்கு சரியெனப்பட்டதோ, அதை குடும்ப அச்சாணிக்குள் நின்று அது தனக்கும் சரியெனப்பட்டதால் மெல்பன் வாழ்வு முழுவதும் எதிர்நீச்சலையே தனது மனச்சாட்சிக்காக அடித்துப்பழகிப்போனவள்.
அவள்  விட்டுச்சென்ற பணிகள் நிறையவுண்டு அவற்றை அவள்  நினைவாக முன்னெடுப்பதன்மூலம் அவளுடைய ஆத்மாவுக்கு நாம் மனநிறைவைத்தரலாம். அந்த எண்ணத்தை ஈடேற்றுவதற்கு இதுவரைகாலமும் அவளுக்கு பக்கபலமாக இருந்த கலை, இலக்கிய நேசர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாக சிந்தித்து செயலாற்றுவோம்.
----0---

(அமரர் அருண்.விஜயராணி நினைவாக அவுஸ்திரேலியா  மெல்பனில் நேற்று வெளியிடப்பட்ட  விஜயதாரகை இலக்கியத்தொகுப்பில்  இடம்பெற்ற விஜயராணியின் முத்த அண்ணன்  சட்டத்தரணி  செல்வத்துரை  ரவீந்திரன் எழுதிய கட்டுரை)