தமிழ் சினிமா "மாலை நேரத்து மயக்கம்"


மாலை நேரத்து மயக்கம்


செல்வராகவன் என்று பெயர் போட்டதுமே திரையரங்குகளில் விசில் சத்தம் பறக்கின்றது. படம் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டவர் தான் செல்வராகவன். படைப்புக்கள் தோல்வியுற்றாலும், இவரின் முயற்சிகள் தோல்வியடையாது.
தன் தம்பி தனுஷ், ஆண்ட்ரியாவுடன் இணைந்து மாலை நேரத்து மயக்கம் என்ற படத்திற்கு பூஜை போட்டார். ஆனால், படம் ட்ராப் ஆக, இதே கதையை செல்வராகவன் எழுத்தில், அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ளார்.
கதைக்களம்
பாலகிருஷ்ணா எப்போதும் அப்பா பேச்சை மட்டும் கேட்டு வளர்ந்த பிள்ளை, அதற்கு அப்படியே நேர் எதிர் வாமிகா சுதந்திரமாக வளர்ந்தவர். ஆண், பெண் நட்பு பாகுபாடு இல்லாமல் இருப்பவர். பாலகிருஷ்ணாவோ பள்ளி, கல்லூரி என அனைத்திலும் ஆண்களுடம் படித்து பெண் என்பவள் படுக்கைக்கு மட்டும் தான் என்று எண்ணத்தில் இருப்பவர்.
காலம் இவர்கள் இருவரையும் தம்பதியினராக்க, வாமிகாவிற்கு துளி கூட இவருடன் வாழ இஷ்டம் இல்லை, நாட்கள் வாரங்களாக, வாரம் மாதங்களாக, மாதம் வருடமாக கூட மாறுகின்றது. இவர்கள் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆனால், வாமிகாவிற்கு மெல்ல பாலகிருஷ்ணா மீது காதல் உணர்வு வர தொடங்குகிறது. இவர்களின் திருமண நாள் அன்று, இருவரும் அதிகமாக குடிக்க, பாலகிருஷ்ணாவால் தன் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் பலவந்தமாக வாமிகாவை கற்பழிக்கின்றார். பிறகு இருவரும் விவாகரத்து வாங்கி பிரிய, மீண்டும் இவர்கள் இணைந்தார்களா? என்பதை மிகவும் உணர்ச்சிப் போராட்டங்களாக காட்டியுள்ளார் அறிமுக இயக்குனர் கீதாஞ்சலி செல்வராகவன்.
படத்தை பற்றிய அலசல்
செல்வராகவன் படங்கள் என்றாலே பெண்களுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கும், எந்த ஒரு இடத்திலும் பெண்களை தவறாக சித்தரிக்க மாட்டார். மேலும், அவர் எழுத்தில், அவரது மனைவியே இந்த படத்தை எடுத்ததால் என்னவோ, படம் முழுவதும் வாமிகா ராஜ்ஜியம் தான். பாலிவுட்டில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்.
தமிழுக்கு அறிமுகம் என்றாலும், மிகவும் அழுத்தமான கதாபாத்திரம், தன் விருப்பம் இல்லாமல் தொட்ட ஒரே காரணத்திற்காக தன் கணவரை வெறுத்து ஒதுக்கும் காட்சியிலும் சரி, பிறகு அவரை பிரிந்து அன்பிற்காக ஏங்கும் காட்சியிலும் சரி செம்ம ஸ்கோர் செய்கிறார்.
அதேபோல் பாலகிருஷ்ணா மிகவும் அப்பாவியாக மனைவி எப்போதாவது காதலிப்பாள் என்று காத்திருந்து, பிறகு ஒரு கட்டத்தில் தன் அரக்க குணத்தை காட்டும் போதும் அசத்துகிறார். ஆனால், பல இடங்களில் வாய்ஸ் உட்பட 7ஜி ரவி கிருஷ்ணாவை நியாபகப்படுத்துகின்றது.
அம்மா-மகள் இப்படியெல்லாம் பேசிப்பார்களா என்று எந்த ஆண்களுக்கும் புரிய வாய்ப்பில்லை, கண்டிப்பாக இந்த படம் பார்க்கும் போது புரியும். என்ன தான் கணவர் என்றாலும் விருப்பமில்லாமல் தன் மனைவியை தொட்டால் கூட அது கற்பழிப்பு தான் என்பதை மிக அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.
அதே நேரம் பாலகிருஷ்ணாவின் குரட்டை சத்தத்திலேயே தூங்கி தூங்கி, வாமிகா அவரை பிரிந்தவுடன் தூக்கமில்லாமல் தவிக்கின்றார். பிறகு முன்பு ரெக்கார்ட் செய்த குரட்டை சத்தத்தை யதார்த்தமாக கேட்க, வாமிகாவிற்கு தூக்கம் வருவது போன்ற காட்சிகள் எல்லாம் அக்மார்க் செல்வராகவன் டச்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, படம் முழுவதும் இரண்டு பேரை மட்டுமே பல இடங்களில் சுற்றி வருகின்றது, அதிலும் ஒரு அப்பார்ட்மெண்ட், சில ரெஸ்ட்ராண்ட், இவை அனைத்திலும் அவரால் முடிந்த உழைப்பை கொடுத்துள்ளார்.
அம்ரித் இசையில் மாலை நேரத்து மயக்கத்திலே பாடல் மிக இனிமை. பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார்.
க்ளாப்ஸ்
பாலகிருஷ்ணா, வாமிகாவின் யதார்த்த நடிப்பு. செல்வராகவனின் வசனங்கள்.
ஒரு ஆண் பெண்களுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது போல காட்சிகள்.
பல்ப்ஸ்
மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி படத்தில் பார்த்த பல காட்சிகளின் நியாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை.
இரண்டாம் பாதியில் அந்த பாரில் வரும் பாட்டு தேவை தானா..?, கிளைமேக்ஸ் கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு விலகி நிற்பது.
மொத்தத்தில் மாலை நேரத்து மயக்கம் கண்டிப்பாக ஒரு புது அனுபவத்தில் ரசிகர்கள் மயங்குவார்கள்.
ரேட்டிங்- 2.75/5  நன்றி cineulagam