கவியரசு கண்ணதாசன் பார்வையில் 'காதல்'

.
தாய்மையின் குழைவும் தந்தையின் பரிவும் பூமியின் பொறுமையும் பொறுப்புள்ள புன்னகையும் துணை வாடத் தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ அங்கே வாழ்வதுதான் காதல்!

காமம் முன்னால் தள்ள, நாணம் பின்னால் இழுக்கும் நாடகமே காதலில் சுவை.

இளமைக் காதலுக்கு இதயமில்லை. நடுப்பருவக் காதலுக்கு இதயமே தலைவன்.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில் சொன்னவனே, அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்!



அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது, சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்... நிறையபேர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால், உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும்.
கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால், காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்!



கண்ணும் கண்ணும் பார்க்கின்றன. மனமும் மனமும் நினைக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்!

இளமையிலே காதல்தான் ஒவ்வோர் உயிருக்கும் முதற்கொள்கை.

சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க்களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.

நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு
இது தலைமை வகிக்கிறது.

படுகொலைகளிலே பாதியை இதுதான் விவசாயம் செய்கிறது. அரசியல் தலைவர்கள் பெறமுடியாத இடத்தைப்
பத்திரிகைககளின் மூலம் இது பெறுகிறது.

இது காதல்!

காதல் இரண்டு வகைப்படும். ஒன்று, தோல்வியுறுவது! மற்றொன்று, முப்பது வயதுக்கு மேல் வருவது!

இயற்கையை முறியடிக்க, எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள், காதலையும் முறியடிக்க முயன்றார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடும், அவர்களுக்கு காதல் இல்லாமலிருந்தால்!

கைகோர்த்துக்கொண்டு, கடற்கரைக்குப் போகும் காதல் நாகரிகம், வெகு விரைவில் காதலைக் கசப்பாக்கிவிடுகிறது.



நாம் மீண்டும் பழங்காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். தாழிட்ட கதவும் தடைப்பட்ட காதலுமாகத் தலைவனும் தலைவியும் போராடும் இலக்கியச் சுவைக்குத் திரும்பியாக வேண்டும்.

nantri www.blogger.com