இனிக்கும் எங்கள் தைப்பொங்கல் ! ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் )

.
         வாசலிலே கோலமிட்டு வடிவாகக் கல்லடுக்கி
         நேசமுடன் சேர்ந்தங்கே நினைவெல்லாம் இனிப்பாக்கி
         பாலோடுசர்க்கரையும் பக்குவமாய் சேர்த்தங்கே
         அரிசிகொண்டு பொங்கலிட்டு அகமகிழ்ந்து நிற்போமே !

        புத்தாடை உடுத்திடுவோம் மத்தாப்பும் கொழுத்திடுவோம்
        சொத்தாக மனத்தெண்ணி சுற்றமெலாம் தழுவிநிற்போம்
        அத்தனைக்கும் மேலாக அனைத்துப் பெரியோர்களையும்
        ஆசையுடன் அரவணைத்து அவராசி பெற்றுநிற்போம் !

        பட்டாசு வெடித்திடுவோம் பட்சணங்கள் செய்திடுவோம்
        இட்டமுடன் சேர்ந்தங்கே எல்லோர்க்கும் கொடுத்திடுவோம்
        நட்டநடு முற்றத்தில் நாமெல்லாம் சேர்ந்திருந்து
        கஷ்டமெலாம் போகவெண்ணி கடவுளிடம் வேண்டிநிற்போம் !

        இப்படிநாம் பொங்குவது இங்கல்ல எமதூரில்
        இங்குவந்த பின்னாலே எல்லாமே மாறியாச்சு
        பொங்கல்வந்து போனபின்பே பொங்கலையே தேடிடுவார்
        இங்குள்ளார் வாழ்க்கையிலே இதுவியல்பாய் இருக்கிறது !         எங்களூரில் பொங்கலுக்கு எப்போதும் விடுதலைதான்
         என்றுஇங்கு சொன்னாலும் எவர்க்குமது புரியாது
         சங்கடங்கள் பலவிருந்தும் சகித்துத்தான் ஆகவேண்டும்
         எங்களது வாழ்விப்போ இங்கன்றோ நடக்கிறது !

        என்றாலும் நாம்பொங்க என்றுமே விட்டதில்லை
        எமதுரத்தத்தோடு பொங்கல் இரண்டறவே கலந்துளது
        முற்றமதைத் தேடாமல் முழுமனதைத் திடமாக்கி
        குக்கரிலே பொங்கலிட்டுக் கொண்டாடி மகிழ்கின்றோம் !

         வேலையில்லா நாட்களிலே பொங்கல்தினம் வந்துவிடின்
         விரம்பிய வரம்கிடைத்த வெற்றியென நினைத்திடுவோம்
         வேலையுள்ள நாள்வந்தால் விரைவாகப் பொங்கிவிட்டு
         வேலைத்தளம் போய்நின்று வெள்ளையரின் முகம்பார்ப்போம் !

         வேலைவிட்டு  வந்தவுடன் விரைவாகக் குளித்துவிட்டு
         மாலைவேளை கோவில்சென்று மனந்தெளியக் கும்பிடுவோம்
         நாலுபேரை நாமழைத்து நன்றாகப் பொங்கலிட
         நாம்வாழும் சூழலிங்கே நமக்குத் துணையிருக்கவிலை !

       என்றாலும் பொங்குகின்றோம் இனிக்கட்டும் வாழ்வுவென
       மங்கலங்கள் வாழ்வில்வர பொங்கலைநாம் தொடருகின்றோம்
       தைத்திங்கள் வருவதைநாம் தவமாகக் கருதுகின்றேன்
       எத்திக்கு வாழ்ந்திடினும் இனிக்குமெங்கள் தைப்பொங்கல் !